சுதந்திரக் காற்று,
வெளிச்சம்,
கற்றலுக்கான சூழல் இவைகள் நிறைந்த
இடமே பல்கலைக்கழகம் ஆகும் - பெஞ்சமின் டிஸ்ரேலி
இதில் வலியுறுத்தப்படும் அனைத்து இலக்கணங்களும் இல்லாத
வளாகங்களாகவே தமிழகப் பல்கலைக்கழகங்கள் காட்சி அளிக்கின்றன. தமிழகத்தில்
இருபதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இருந்தாலும்,
30 சதவீத இளைஞர்களுக்கே இன்று
உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கிறது. பெரும் பகுதி இளைஞர்களுக்கு உயர்கல்வி இன்று
மறுக்கப்படுகிறது. படித்து முடித்தவர்களில் பெரும்பகுதியினருக்கு வேலையும்
மறுக்கப்படுகிறது. இதுதான் இன்றைய இந்தியா. பல்கலைக்கழகங்களில் ஊழல் புரையோடிப்போயுள்ளது.
துணைவேந்தர் நியமனத்திலேயே ஊழல் துவங்கிவிடுகிறது. துணைவேந்தர் பதவி
வெளிப்படையாகவே ஏலம் விடப்படுகிறது. சாதிவாரியாகவும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தின்
தலைமைப் பீடமே கறை பட்டிருப்பதால் அதன் அனைத்து நடவடிக்கைகளும் தரம் தாழ்ந்துள்ளன.
ஆசிரியர், அலுவலர்
பணிநியமனங்களில் லஞ்சம் தாண்டவமாடுகிறது. இவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை
மீட்டெடுக்க மாணவர்களிடம் கையேந்துகின்றனர்.
மத்திய பல்கலைக்கழகங்களின் தலைமையிடங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்.
ஆதரவாளர்களால் நிரப்பப்படுகின்றன. கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்ட
இப்பல்கலைக்கழகங்களில் ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடமில்லாமல் போயுள்ளது. மாநில
அரசுகளின் அதிகார வரம்புகளின் கீழ் இருந்த கல்வி எமர்ஜன்சி காலத்தில் பொதுப்பட்டியலுக்கு
மாற்றப்பட்டது. இப்போது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கல்வியை தன்வயப்படுத்தம்
நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் இளநிலை, முதுநிலை படிப்புகளின் மாணவர்
சேர்க்கையை மத்தியப்படுத்துவது பல குழப்பங்களுக்கும் இட்டுச்சென்றுள்ளது. இதனால்
மாநிலங்களின் உரிமைகள் பறிபோயுள்ளன. உயர்கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருந்து தன்னை
முற்றிலும் விடுவித்துக் கொண்டு கல்வியை இந்திய மற்றும் அந்நிய தனியார்
நிறுவனங்களிடம் விட்டுவிடுவது என்ற முடிவில் மோடி அரசு முந்தைய காங்கிரஸ் அரசையும்
மிஞ்சியுள்ளது. இதனால் பல்கலைக்கழகங்கள் கல்வி வியாபாரிகளின் லாப வேட்டைக்கான
களங்களாக மாறிப்போயுள்ளன. உயர்கல்வி காப்பாற்றப்பட வேண்டுமானால் தனியார்மயம்
கைவிடப்பட வேண்டும். பல்கலைக்கழக அமைப்புகளில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும். இக்கோரிக்கைகளை
மையப்படுத்திய ஆசிரியர் இயக்கங்கள் வலுப்பெறும் காலம் வரப்போவது எப்போது?
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.