Showing posts with label செப்டம்பர். Show all posts
Showing posts with label செப்டம்பர். Show all posts

Sunday, September 10, 2017

ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா - பிரேம பிரபா

மாலை ஐந்து மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருந்தது. சொல்லி வைத்தாற்போல் ஒவ்வொருவராக மேடம் குல்கர்னி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். பருமனான உடல் வாகு. வயதிற்கு மீறிய தளர்ச்சி. வழக்கமான முதுமைக்கால மருத்துவப் பிரச்சினைகள். சராசரி நடுத்தரவர்கத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியைப் போல கணவர் வினோத்தின் ரிட்டயர்மெண்ட் பணத்தை எதிர்பார்த்து, ஏராளமான கனவுகளுடன் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்தான் நம் மேடம் குல்கர்னி.

முதலில் வந்தவரின் பெயர் ராமானுஜம். வயது ஐம்பதிற்கு மேல். ஒரு தனியார் கம்பெனியில் தலைமைக் கணக்கராக இருக்கிறார். ஓரளவிற்கு வசதியானவர். இருக்கும் சேமிப்பை வைத்து கொஞ்சம் கடனும் வாங்கி ஒரு சிறிய வீட்டை கட்டிக்கொண்டார். மற்றவர்களைப் போல மாதம் பிறந்தால் வாடகைக்கு என ஒரு தொகையை அவர் எடுத்து வைக்க வேண்டியதில்லை. வரவேற்பறையில் வினோத் குல்கர்னிக்காக காத்திருக்கும் ராமானுஜம், கழுத்துப் பக்கம் அடிக்கடி தெரிந்த பூணூலை லேசாகத் தளர்த்தி சட்டைக் காலரின் கீழ் தள்ளிவிட்டுக்கொண்டே அன்றைய செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார்.

அடுத்து வந்தவர் அரவிந்த் சேகல். ஒடிசலான உருவம். பார்ப்பதற்கு மிகவும் வெகுளியாகத் தெரிந்தாலும் பண விஷயத்தில் மிகவும் கறாரான பேர்வழி. “என்ன விலைவாசி! வேர்க்கடலையை வறுத்தா ஒரு விலை, வறுக்காட்டி ஒரு விலை சொல்றான்” என்று புலம்பிக்கொண்டே ராமானுஜம் அருகில் வந்தமர்ந்தார்.

பிளாக் டீயுடன் அங்கு வந்த மேடம் குல்கர்னி எல்லாரும் வந்திட்டீங்களா
என்று கேட்டுக்கொண்டே டிரேயில் இருந்து ஒவ்வொரு கோப்பையாக எடுத்து டீப்பாயில் வைத்தார். அவருடனேயே வந்த வினோத் வறுத்த நிலக்கடலையை சரிசமமாக இரண்டு பிளாஸ்டிக் தட்டங்களில் வைத்தார். ராமானுஜம் நிலக்கடலையை சிறிது எடுத்துத் தன் உள்ளங்கைகளில் தேய்த்து ஊதி வாயில் போட்டுக்கொண்டார்.

அப்போது அங்கு வந்த அனுப் பானர்ஜி நாந்தான் இன்னைக்கும் லேட்டா என்று கேட்டுக்கொண்டே மேடம் குல்கர்னியைப் பார்த்துச் சிரித்தார். அப்போதுதான் ராமானுஜமும், அரவிந்த் சேகலும் வழக்கத்திற்கு மாறாக மேடம் குல்கர்னி நெற்றியில் இருக்கும் பெரிய அளவு பிந்தியையும், தங்க வளையலுக்குப் பதிலாக கைகள் நிறைய கண்ணாடி வளையல்களையும் எதேச்சையாக கவனித்தார்கள். அனுப் பானர்ஜி தலையில் அணிந்திருக்கும்
காந்திக் குல்லாயை மிகுந்த அக்கறையுடன் இரண்டாக மடித்துத் தன் தொடையில் வைத்து கை நிறைய நிலக்கடலையை எடுத்துக்கொண்டார். என்ன விலைவாசி, ஒரு நாள் போவதே பெரும்பாடா இருக்கு என்று குறைப்பட்டுக்கொண்டே பிளாக் டீயை சத்தம் போட்டு உறிஞ்சிக் குடித்தார்.

அடுக்களையில் தனி ஆளாகப் போராடிக்கொண்டிருந்த மேடம் குல்கர்னி கணவரை அழைத்து “வினோத், ரெண்டு தெரு தாண்டி இருக்கும் பிலால்ஜி கடையிலே லூசிலே ரெண்டு கிலோ பச்சரிசி வாங்கிட்டு வாங்க. அப்படியே ஒரு கப் தயிரும், அவலும் வாங்க மறந்திடாதீங்க” என்று அவரின் ஒப்புதலிற்குத் துளியும் காத்திருக்காமல் துணிப் பையை கணவரின் கைகளில் திணித்தார். “வினோத் ஒண்ணு சொல்ல மறந்திட்டேன். சோம்பேறித்தனப்பட்டு பக்கத்திலே இருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலே வாங்கிட்டு வந்தீங்களோ...” கண்களை அகல விரித்து உருட்டி வினோத்தை ஒரு நொடி நிலைகுலைய வைத்தாள் மேடம் குல்கர்னி.

வினோத் கேட்டைத் திறந்து வேளியே போகும் சமயம் ஒரு இளவயது சாமியார் கழுத்தில் ஏராளமான ருத்ராட்ச மாலைகளுடனும் நெற்றியில் தேவையான பரப்பளவிற்கு அதிகமாக விபூதியை பூசிக்கொண்டு நின்றிருந்தார். அவர் கையில் மண் பாத்திரத்துடன் நிற்பதைப் பார்த்த வினோத் குல்கர்னி தன் பைஜாமாவில் இல்லாத சில்லரைகளைத் துளாவினார். வெகு அலட்சியமாக வினோத்தைக் கடந்து அந்த சாமியார் உரிமையுடன் உள்ளே சென்று மேடம் குல்கர்னியை சைகையால் அழைத்தார். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு “தொடர்ந்து மூன்று சனிக்கிழமை இந்த நெல்லிக்கனியை வெற்றிலையில் வைத்து மடித்து உங்கள் குல தெய்வத்தை வழிபடுங்கள்” என்று கூறி மேடம் குல்கர்னியின் கைகளில் ஒரு குறிப்பிட்ட விசையுடன் ஒவ்வொன்றாக மூன்று நெல்லிக் கனிகளை போட்டார். தடுமாறியபடி மூன்று நெல்லிக்கனிகளையும் கீழே விழாமல் மிகுந்த பயபக்தியுடன் கேட்ச் பிடித்த மேடம் குல்கர்னி அவரை வணங்கி அரவிந்த் சேகலை செய்கையால் ஒரு நூறு ரூபாய் கொடுக்குமாறு அவசரப்படுத்தினாள். சேகலும் தன் பையிலிருந்து நூறு ரூபாயை அரை மனதுடன் நீட்டினார். அனைத்தையும் கவனித்த வினோத் வாய்விட்டு பலமாகச் சிரிக்க மேடம் குல்கர்னி தன் ஓரப்பார்வையால் வினோத்தை சுலபமாக மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தாள். அப்போது வீட்டிற்குள் ஒரு ஆடு ஓடி வந்ததைப் பார்த்த ராமானுஜம் சப்தம் போட்டு அலறினார். ஆட்டுப்பாலிலே டீ போட்டு குடிச்சிருக்கீங்களா ராமானுஜம் என்று மேடம் குல்கர்னி கேட்க அவர் அருவருப்புடன் உதட்டைப் பிதுக்கினார். “பாலோட விலை போற போக்கைப் பாத்தா இனிமே ஒவ்வொருத்தர் வீட்டிலேயும் ஒரு ஆடு வளக்கவேண்டி வரும் ராமானுஜம். எதுக்கும் வினோத்திடம் இப்பவே கொஞ்சம் டிரெய்னிங்க் எடுத்துக்கோங்க” என்று மேடம் குல்கர்னி கண் சிமிட்டிச் சிரிக்க ஒரு கையில் பையுடனும், மறு கையில் தொன்னையுடனும் வீட்டிற்குள் நுழைந்தார் வினோத்.புளியோதரையின் மணம் அனைவரின் நாசியையும் துளைத்தது. கடைக்குப் பக்கத்திலே இருக்கும் கோயில்லே கொடுத்தாங்க. அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு என்று சாட்சிக்கூண்டில் நின்று கொண்டு குறுக்கு விசாரணையின்போது பிராசிக்கியூட்டரிடம் தயக்கத்துடன் பொய் சாட்சி சொல்லும் நபரைப் போல குல்கர்னி மேடத்தின் கண்களை நேரடியாகப் பார்க்காமல் ஒப்பித்தார். ராத்திரிக்கு சென்னா, பன்னீர், உருளை, தக்காளி போட்டு சப்ஜி வெச்சிடவா என்று மேடம் குல்கர்னி தன் கணவரின் தோளில் சரிந்த ஹியரிங்க் எய்டை சற்று அழுத்தி அவரின் காதில் வைத்து மீண்டும் கேட்க சூப்பர், அதையே வெச்சிடு என்று தனக்கு அபூர்வமாக அளிக்கப்பட்ட சுதந்திரத்தை அளவாக உபயோகித்தார்.

இதுவரை கதையை பொறுமையுடன் கூறிக்கொண்டிருந்த வேதாளம் கதையை இத்துடன் நிறுத்தி மூன்று கேள்விகளை மன்னன் விக்கிரமாதித்யனிடம் கேட்டது : “விக்கிரமா, இது வரை நீ கேட்ட கதையில் வந்த ஆறு பேருடைய பொதுப் பிரச்சினை என்னவாக இருக்கும்?”

சிறிதும் யோசிக்காமல் விக்ரமாதித்யன் கூறினான். வேறென்ன? இந்தியாவில் ஏறும் விலை வாசிதான்.

இதைக் கேட்ட வேதாளம் இந்தக் கதையில் கையாளப்பட்டிருக்கும் பொருட்களின் பொதுவான தன்மை என்ன என்று தன் அடுத்த கேள்வியைக் கேட்டு ஊரே அலறும்படி சிரித்தது. சற்றே நிலை தடுமாறிய விக்ரமாதித்யன் உடனே தன்னை சுதாரித்துக்கொண்டு இந்தக் கதையில் வரும் அனைத்துப் பொருட்களுக்கும் வரி உண்டு. என்று மெலிதாகச் சிரித்தான்.

விக்ரமனின் பதிலால் மிகவும் திருப்தி அடைந்த வேதாளம் தன் மூன்றாவது கேள்வியைக் கேட்டது : “அவன் மகுடம் தரித்த அரசனாக இருக்கவேண்டும். எனினும்யாசித்தே தன் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய கையறு நிலையில் இருக்கவேண்டும். அந்த அரசனின் பெயர் என்ன?.“

இந்தக் கேள்விக்கு விக்ரமனால் சரியான பதிலைக் கூறமுடியாது என்று எண்ணிய வேதாளம் தன் பிடியை லேசாகத் தளர்த்தியது. ஓரு அரசன் என்ன, லட்சக்கணக்கான அரசர்களை என்னால் பட்டியலிடமுடியும் என்று விக்ரமன் கூற வேதாளம் திகைப்புடன் விக்ரமனின் பதிலிற்காக ஆர்வத்துடன் காத்திருந்தது.

“ஜனநாயகம் என்ற மகுடத்தை தலையில் சுமந்துகொண்டு இன்றளவும் காவிரி நீருக்கும், கிருஷ்ணா நீருக்கும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் கையறு நிலையில்தானே இன்றளவும் இருக்கிறார்கள் அப்பாவித் தமிழ் நாட்டு மக்கள், இல்லை மன்னர்கள்” என்று தன் மூன்றாவது கேள்விக்கும் சரியான பதிலை அளித்தான் விக்ரமன்.

“வீரம் மட்டும் உன் கூட பிறந்ததில்லை, விவேகமும்தான் என்று உன்னுடைய தெளிவான மற்றும் சாமர்த்தியமான விடையினால் நீ நிரூபித்து விட்டாய் விக்ரமாதித்தா” என்று கூறிவிட்டு     மௌனத்தைக் கலைத்த மன்னனின் தோளில் இருந்து பறந்து மீண்டும் தான் குடியிருந்த முருங்கை மரத்திற்கே சென்று சேர்ந்தது வேதாளம்.
                                        9790895631-premaprabha.premkumar@gmail.com



ஒரு மெய்யாவது சொல் மன்னா?

அந்தக் காலங்களில் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை ஒலிபரப்பைத் தொடர்ந்து கேட்டவர்களுக்குத் தெரியும், சில போட்டிகள் நடக்கும். அதில் சுவாரசியமான ஒன்று, தொடர்ந்து மூன்று நிமிடங்கள் பேச வேண்டும். ஒரே சொல்லை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.. என்று சொல்லிவிட்டு, நீங்கள் பேசவேண்டிய தலைப்பு தொலைபேசி, ஆனால் தவிர்க்க வேண்டிய சொல், பேசுதல் என்பார்கள். இப்போதைய சூழலில் நினைத்துப் பார்த்தால், பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரும் இத்தகைய போட்டிகளில் வெல்ல முடியாது என்று தோன்றுகிறது. தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் ஆட்சி. சொன்ன சொல்லை மீண்டும் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. (`அச்சே தின் தான் ஏற்கெனவே எல்லோருக்கும் வந்தாயிற்றே! ), நடந்து கொண்டிருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி. தவிர்த்துக் கொண்டிருக்கும் சொல்  ஜனநாயகம்!

அடுத்த தலைமுறை மாணவர்கள் - இப்போது நடந்துகொண்டிருக்கும் நிலவரங்களை எடுத்துப் பின்னாளில் வாசித்தால், தேச பக்தி, சுதந்திரம், விடுதலைப் போராட்டம், மக்களாட்சி எல்லாவற்றையும் முற்றிலும் அதனதன் எதிர்ப்பொருளில் புரிந்து கொண்டுவிடுவார்களோ என்பதை நினைக்கும் போதே நடுக்கமாக இருக்கிறது. 71-வது சுதந்திரதினக் கொடியேற்றி வைத்து பிரதமர் ஆற்றியுள்ள உரையை, ஒரு பாமர இந்தியனாகக் கவனித்துப் பார்த்தால் மெய் சிலிர்த்துப் போகிறது. மெய்யென்ன, மற்றவர்கள் பேசும் பொய்களும் கூட சிலிர்த்துப் போகும்! `..உண்மை இல்லை பொய் உரை இலாமையால் (கோசல நாட்டின் பெருமை) என்று பாடிய கம்பனை அநேகமாக தேச விரோதக் குற்றச்சாட்டில் சிறையிலடைக்க வேண்டி இருக்கும். குப்பன் சுப்பன் உள்பட குடிமக்கள் 29 கோடி பேருக்கு வங்கிகளில் ஜன்தன் கணக்கு தொடங்கியாயிற்று. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் வந்து குவிந்துவிட்டதால் ஏழை எளிய மக்களுக்கு கடன் திட்டங்கள் பாய்ந்து சென்று கொண்டிருக்கின்றன. விவசாயிகள் பிரச்சினை கிட்டத்தட்ட தீர்த்து முடித்தாயிற்று (மூன்று லட்சத்திற்கு மேலான விவசாயிகள் தாமாகத் தங்களது பிரச்சினையிலிருந்து விடுதலை பெற உலகிலிருந்தே விடுதலை பெறுவது என்ற ஒரு வழியைத் தேர்ந்து எடுத்தது போக!). முத்தலாக் பிரச்சினையால் பாதிப்புற்று எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு பிரதமர் ஆதரவு உண்டு (காலகாலமாக மதுராவில் கொண்டு தள்ளப்படும் இந்து விதவைப் பெண்கள் பற்றி மூச்!). ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்குத் தோட்டாக்களால் அல்ல, அவதூறுகளாலும் அல்ல, அன்பு அரவணைப்பால் தீர்வு கண்டுகொண்டிருக்கிறார் பிரதமர் (இராணுவத்தின் பெல்லட் ரவைகளால் துளைக்கப்பட்ட இளைஞர்கள், கண்பார்வை இழந்தவர்கள் எல்லோரும் கண் பார்வையிலிருந்து விலகிப் போகக் கடவது!). தேசத்தை அச்சுறுத்தும் இடதுசாரி தீவிரவாதம், பயங்கரவாதம் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டது அவரது ஆட்சி. (வலதுசாரி அடிப்படை வாதிகள், இந்துத்துவ வெறியர்கள் அடித்துத் தூள் கிளப்புங்கள், நடப்பது நம்ம ஆட்சி!). லஞ்சம், ஊழல் எல்லாம் தூக்கி எறியப்பட்டு தூய்மையான ஆட்சிகள் நிறுவப்பட்டு விட்டன( சில மாநிலங்களில் பணிவதற்கு இழுத்தடித்து வருகின்றனர், பேரம் இன்னும் முற்றுப்பெறவில்லை, முடிந்தவுடன் அவர்கள் மீதுள்ள கறைகளும் கழுவப்பட்டிருக்கும்!). 2018 ஜனவரி ஒன்றாம் தேதி இதுவரை இல்லாதது போலிருக்கும் (எச்சரிக்கை அல்லது ஜாக்கிரதை!). கொள்ளை அடித்தவர்கள், கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள், ஊழல் பேர்வழிகள் நிம்மதி இழந்து உறங்க முடியாமல் தவிக்கின்றனர் (உண்மை தான், தொடர்ந்து மக்கள் சேவையில் இருப்போர் எப்படி உறங்க முடியும், கொள்ளையை திடீர் என்று நிறுத்தினால் ஆட்சிக்கு எப்படி உதவ முடியும்!). தேசம் மாறிக் கொண்டிருக்கிறது, மாற்றத்தை நோக்கி மேலும் போய்க் கொண்டிருக்கிறது (மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம் பற்றியெல்லாம் பேசுவது தேசவிரோதம்). நாம் நேர்மையின் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் (வரலாறுகளை மாற்றி எழுதி விட்டோம். கோட்ஸேவுக்கு கோயில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். பல கிரிமினல் பேர்வழிகளை நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் கொண்டு சென்றுவிட்டோம்). முக்கியமாக, இந்தத் தேசத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை, எல்லோரும் சமம் என்பதை உறுதிப்படுத்தி விட்டோம் (எல்லோரும் `ஜியோ என்று உரத்த குரலில் ஓங்கிச் சொல்லுங்கள். அம்பானி, அதானி எல்லோரும் அம்மா உணவகத்தில் காலையிலேயே வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள், பாவம், எத்தனை இரவுகள்தான் பட்டினியால் தவிப்பார்கள்! ).

பிரதமரின் முழு உரை, மெய்யை முழு உறை போட்டு மூடி வைத்தது போல் இருக்கிறது. தப்பித்தவறிக் கூட உண்மையை உளறிவிடக் கூடாது என சங்கல்பம் எடுத்துக் கொண்டு ஆற்றப்பட்ட எழுச்சியுரை. ஆகஸ்ட் 10-11 தேதிகளில் 24 மணி நேரத்திற்குள் மட்டும் கோரக்பூர் பிஆர்டி மருத்துவ மனையில் மரித்த குழந்தைகளின் எண்ணிக்கை 30. எழுபது குழந்தைகளுக்குமேல் அந்த வாரத்தில் இறந்தது குறித்து ஒற்றை வரி, ஒரே ஒரு கண்ணீர்த்துளி அவரிடமிருந்து புறப்படக் கொடுத்து வைக்கவில்லை அந்தக் குழந்தைகளுக்கு! கோசாலைகளை விழுந்து விழுந்து பராமரிக்கும் தேவேந்திரர்கள் ஆட்சியில் அற்ப மானுடக் குழந்தைகளது ஆயுள் அத்தனை முக்கிய விவாதப் பொருளாகி விடாது. 2014 தேர்தலை சந்திக்கும்போது தாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் குறித்து மட்டுமல்ல, அடுத்தடுத்துத் தாங்கள் செய்துவரும் அறிவிப்புகளைக் குறித்தும்கூடக் கிஞ்சிற்றும் கவலை கொள்ளாத ஆட்சியாளர்களை எதிர்கொண்டிருக்கின்றனர் இந்திய மக்கள். இன்னொன்றையும் மறந்துவிடக் கூடாது. எந்தக் கொள்கை அமலாக்கத்தை வெறுத்து மக்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராக வாக்களித்தனரோ, அந்தக் கொதிப்பில் குளிர்காய்ந்து பெற்ற வெற்றியில் ஆட்சி அமைத்துவிட்டு அதே கொள்கைகளையே மேலும் வேகத்தோடு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. விலைவாசி பற்றி இப்போது யாரும் எங்கும் கேட்க முடியாது. ஜி எஸ் டி வந்தபிறகு விலைவாசி குறைந்துவிட்டது.. பிரதமர் சொன்னால் நம்புங்கள் !

ஆதார் அறிமுகத்தை எதிர்த்து எதிர்வரிசையில் இருந்தபோது முழங்கியவர்கள் பாஜக தலைவர்கள். ஆட்சிக்கு வந்தபிறகு ஆதார் அட்டையோடு விடவில்லை, அதை சமையல் எரிவாயு இலக்கத்தோடு இணைக்கச் சொன்னார்கள். வங்கிக்கணக்கோடு இணைக்கச் சொன்னார்கள். குடிமக்களை எண்களால் அடையாளப்படுத்தி எல்லாக் கணக்கு வழக்குகளோடும் இணைப்பது மாதிரி ஒரு பாவ்லா காட்டிவிட்டு, எலும்பும் சதையுமான மனிதத் திரளை அவரவர் வாழ்வாதாரத்தின் பிடியிலிருந்து துண்டித்துக் கொண்டிருக்கின்றனர். ரேஷன் அட்டை உண்டு, பொருள்கள் வாங்க அனுமதி கிடையாது. சமையல் எரிவாயு கணக்கு உண்டு, மானியம் கிடையாது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளிடம் திரும்ப வந்து குவிந்த பணக்கற்றைகளை இன்னும் ரிசர்வ் வங்கி எண்ணி முடிக்கவில்லை. கறுப்புப்பண பறிமுதல் பற்றிய பேச்சே இல்லை. புதிய ரூபாய்த்தாள்கள் மதிப்பில் கள்ள நோட்டுக்களை அடித்த புகாரில் கேரளத்தில் பாஜக ஆட்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கணக்கில் வராத பழைய நோட்டுக்களை கோடிக்கணக்கில் வைத்திருந்த புகாரில் சிக்கிய ஆட்கள் பற்றி மேற்கொண்டு செய்திகள் கிடையாது. கொடூரமான பாலியல் வன்கொடுமை குற்றங்களைப் புரிந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ள போலி சாமியார் ராம் ரஹீம் சிங், மத்திய ஆட்சியாளர்களோடு எத்தனை நெருக்கமாக இருந்து வந்திருக்கிறான் என்பது அம்பலமாகி உள்ளது. அவனது ஆதரவுக் குண்டர்படை அரியானா, பஞ்சாப் மற்றும் தில்லி மூன்று மாநிலங்களிலும் நிகழ்த்தியுள்ள வன்முறை திட்டமிடப்பட்டது என்பது மட்டுமல்ல மாநில ஆட்சியின் காவல் துறை அதை வேடிக்கை பார்த்தது, குற்றவாளிக்கு வலிக்காத வண்ணம் பாதுகாப்போடு சொகுசு பங்களாவில் `சிறை வைக்க ஏற்பாடு செய்தது, கோடிக்கணக்கில் அமைச்சர்கள் அவனுக்கு இதுகாறும் நிதி வழங்கிப் பெருமை கொண்டது எல்லாமே தேசத்தை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

ஜனநாயகம் என்பது மக்களுக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதைக் குறிப்பதாகும். அந்த அச்சமே ஆட்சியை நெறிப்படுத்தும் என்பதாகும். அதுவே மக்கள் நலனுக்கு முன்னுரிமையும், நீதி - நேர்மை – ஒழுக்கத்திற்கு உத்தரவாதமும் வழங்கும் என்பதாகும். அதிகாரத்தை உண்மை வயப்படுத்தி, உண்மைக்கு அதிகாரம் வழங்குவதாகும். அதாவது மெய் சொல்லல் நல்லதப்பா என்ற பாவேந்தரின்
வரிகளின் விளக்கமாகும். வாய் வலிக்க ஓயாமல் பொய்யே பேசி வரும் குடியரசு வேந்தர், ஒரே ஒரு மெய்யாவது பேசட்டும். பேசுவாரா?
                                                                                                                                   -sv.venu@gmail.com / 94452 59691