Showing posts with label puthiya asiriyan. Show all posts
Showing posts with label puthiya asiriyan. Show all posts

Wednesday, December 7, 2016

இந்தக் கேள்விக்கு இது விடையில்லையே .......அறிவுக்கடல்

ஊரெங்கும் இதே பேச்சு... என்பதுகூடத் தவறுதான். எல்லோருக்கும் இதே வேலை...  என்பதுதான் சரியாக இருக்கும். எல்லோரும் நோட்டு மாற்றுகிற வேலையில்தான் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் நோட்டு மாற்றுவது என்பது ஒருசட்ட விரோதமான தொழில். அதாவது கள்ளநோட்டை மாற்றுவது. தன் உழைப்பில் தான் சம்பாதித்த பணத்தை - நோட்டு மாற்றுவதற்காக வங்கிகளின் வாசலில் வரிசையில் நிற்கும் வேலைதான்

இன்றைக்கு...!ரொம்பச் சிரமமாக இருக்கு... என்று சொன்னால், கறுப்புப் பணத்தை  ஒழிப்பதற்காகப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். உடல்நிலை சரியில்லை என்றால், சரியில்லாதவருக்குத்தானே ஊசி போடவோ, அறுவை சிகிச்சையோ செய்வார்கள்; கறுப்புப் பணம் என்றால் கறுப்பாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கிற, அதற்குத் தொடர்பே இல்லாத எளிய மக்கள் ஏன் சிரமப்படவேண்டும் என்று கேட்டால், எல்லையில் வீரர்கள் குளிரில் நாட்டைக் காக்கவில்லையா என்கிறார்கள்.

இந்தக் கேள்விக்கு இது விடையில்லையே... என்றால், இத்தாலிக்கார சோனியாவை ஆளவைக்கப் பார்க்கிறீர்களா என்கிறார்கள். நாம் எப்போது அப்படிச் சொன்னோம்? நான் உழைத்துச் சம்பாதித்த என் பணத்தை செல்லத்தக்கதாக்க, அதாவது செலவு செய்ய உகந்ததாக்க நான் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டும் என்றால் என் உழைப்புக்கு என்ன மரியாதை என்பது மட்டும்தான் நம் கேள்வி. வங்கியில் வாங்கி ஏமாற்றிய ரூ.9 ஆயிரம் கோடியுடன் மல்லையா இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டார். அங்கே இந்திய ரூபாய் செல்லுமா? அப்படியானால், அவரது கறுப்புப் பணம் பணமாகவா இருக்கும்? ஆக, மிகமிகப் பெரும்பகுதி கறுப்புப்பணம் என்பது பணமாக - இந்தியப் பணமாக இருப்பதில்லை. சொத்தாகவோ, வெளிநாட்டு வங்கிகளில் டாலராகவோதான் உள்ளது. அது சொத்தாக மாறும்வரைதான் கறுப்புப்பணமாக உள்ளது. சொத்தை வாங்கச் செலவு செய்யப்பட்டு சொத்துக்கு உரியவர் வழியாக மீண்டும் புழக்கத்திற்கு வரும்போது அது கறுப்புப் பணமாக இருப்பதில்லை.

உதாரணமாக, ஒருவர் தவறான வழியில் ஈட்டிய பணத்தில் ஒரு புதிய வீடு வாங்குகிறார். அந்த வீட்டைக் கட்டி விற்றவர், கட்டிடம் கட்டிய கொத்தனாருக்கும், சித்தாளுக்கும் அதிலிருந்து கூலி தந்தால் அந்தத் தொழிலாளியின் கையில் இருப்பது கறுப்புப்பணமா? இப்போது கைப்பற்றவேண்டியது எதனை? அந்த வீட்டையா, அல்லது அந்தத் தொழிலாளியின் கையிலிருக்கிற பணத்தையா?ஆனால், மோடி அரசு தற்போது செய்வது என்ன? கொத்தனாரையும் சித்தாளையும் வரிசையில் நிறுத்தியதோடு, கையில் மையும் வைத்துவிட்டு, ஓடிப்போன மல்லையாவின் கடனையும் தள்ளுபடி செய்துள்ளது. தாக்குதல் துல்லியமானதாகத்தான் இருக்கிறது, ஆனால் இலக்கு எளிய மக்களாக இருக்கிறார்கள்! என்ன சம்பாதித்தாலும் கூலித் தொழிலாளர்களின் கூலியில் பெரும்பகுதி அடுத்த நாளே கடைகளுக்கு வந்துவிடும். அப்படிச் செலவு செய்ய முடியாமல், தான் உழைத்து ஈட்டிய கூலியைச் செலவு செய்ய இயலாமல் தவிக்கிறார்கள்.
மாற்றித்தர, ஒரு ரூ.1000 நோட்டுக்குப் பதில் 10 ரூ.100 நோட்டுக்களும், ஒரு ரூ.500 நோட்டுக்குப் பதில் 5 ரூ.100 நோட்டுக்களும் தேவை என்பது டீக்கடைக்காரருக்கும் தெரிந்த கணக்குத்தான். நம்மை ஆளும் டீக்கடைக்காரருக்கு ஏன் தெரியவில்லை? உண்மையில் இது ஏதோ தெரியாமல், தவறுதலாகச் செய்யப்பட்டதல்ல! வெளிநாட்டு கறுப்புப்பணம், ஆளுக்கு ரூ.15லட்சம் என்று விடாமல் கத்திக்கொண்டிருப்பவர்களை அடக்க, ஏதோ நடக்கிறது என்று தோற்றம் ஏற்படுத்த, ஊசி போடுமாறு மருத்துவரை வற்புறுத்தும் நோயாளிக்கு வெறும் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஊசிமூலம் ஏற்றி நம்ப வைக்கிற மருத்துவர் போல, நம்மை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள்.

ராணுவ வீரர்கள் தியாகம் செய்யவில்லையா என்கிறார்கள். அந்த ராணுவ வீரர்களின் மனைவி, தந்தை போன்றோரும் வரிசையில்தான் நிற்கிறார்கள், அவர்களுக்கும் இதே தொகைதான், இதே மைதான் என்பதை மறந்து விடாதீர்கள். எப்போதுமே வெட்கப்பட வேண்டிய செய்திகளைப் பெருமையுடன் பேசுவது பாஜக பரிவாரங்களின் வழக்கம். தங்களது ஆட்சியில் கார்கிலில் ஊடுருவி விட்டார்கள் என்று வெட்கப்படுவதற்கு பதில், விரட்டி விட்டதாகப் பெருமை பேசியவர்கள்! இன்றும் மக்களைச் சிரமப்படுத்தியதையும் பெருமையாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் எந்தக் குரலுக்கும் மோடி
பதிலளிக்கவில்லை. ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் அவரவரின் கற்பனைத்திறனுக்கேற்ப பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே கேள்விக்குத் தொடர்பில்லாத பதில்கள்!

(நன்றி : தீக்கதிர்)


நான் கண்காணிக்கப்படுகிறேன் – பா. ரஞ்சனி


சமீபத்தில் சமூக வலைதளங்களில் பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிர வங்கியில் காசாளராகப் பணியாற்றும் பிரேமலதா ஷிண்டே என்ற ஒரு பெண் ஊழியர் பற்றிய ஒரு  செய்தி வெளியானது. அவர் மிக மந்தமாகப் பணியாற்றி வருவதாக விமரிசித்து, அதை வீடியோ எடுத்து ஒருவர் வெளியிட்டார். அதைப் பற்றி பலவிதமான கருத்துகள் வெளியாகின. எழுத்தாளர் ஜெயமோகன் அவர் கீரை ஆய்வதற்குக் கூடத் தகுதி இல்லாதவர் என மிக மோசமாக அப்பெண்ணைப் பற்றி விமர்சித்து, முகநூலில் பதிவு செய்தார். பலத்த கண்டனங்களுக்குப் பிறகு அதை நீக்கி விட்டு, பெயரளவில் மன்னிப்புக்கோரி பதிவிட்டார். பொதுத்துறை ஊழியர்களைப் பற்றி, பொதுமக்களிடம் அவதூறு பரப்புதல் மட்டுமல்ல, ஒரு பெண் ஊழியரைப் பற்றி குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாத வார்த்தைகளை முகநுலில் பதிவு செய்யும் போக்கு, எந்த வகையிலும் நியாயமல்ல.. காலம்காலமாக புரையோடிப்போன ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் இப்படி அழுக்கான வார்த்தைகளாய் வெளி வருகின்றன.. இந்த சம்பவம் குறித்து சக ஊழியர்கள், வங்கியில் உள்ள நண்பர்கள், தோழியர் எனப் பலரிடம் என் ஆதங்கத்தை, கோபத்தை வெளிப்படுத்தினேன். அதன் நீட்சியாக புதிய ஆசிரியன் வாசகர்களிடமும்..

எப்படி வந்தது..
என்னை நானே அந்த வீடியோவில் சொல்லப்பட்ட வங்கிக் கவுண்டரில் நிற்பவளாகக் கற்பனை செய்து கொண்டேன்.. காசாளர் மெதுவாய் செயல் பட்டால், கூட்டநெரிசல், எனது அவசரம் ஆகியவற்றை மனதில் கொண்டு அவரிடம் சற்று சீக்கிரமாய் வாங்குங்கள் என்று சொல்வேன்.. பொறுத்துப் பார்ப்பேன்.. சரியாகவில்லை என்றால், சம்பந்தப்பட்ட உயரதிகாரியிடம் புகார் செய்வேன்.. இதுதானே, யாராய் இருந்தாலும், கோபம் வந்தால் செய்யக் கூடியது.. ஆனால், ஒரு பணியிடத்தில் பெண் ஒருவரின் செயல்பாட்டை எந்தக் குற்ற உணர்ச்சியும் இன்றி வீடியோ எடுக்கும் தைரியம் எப்படி வந்தது? அந்த அதிகாரம் யார் அளித்தது? இந்த சம்பவத்தில் நடந்தது போல தாங்களே அதிகாரத்தைக் கையில் எடுக்கும் ஆதிக்கப் போக்கு ஆபத்தானது..

தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்கில், வீடியோ எடுக்கும் போன் எத்தனை சந்தோஷங்களுக்கு வழி வகுக்கிறது.. குழந்தைகளையும் பேரக் குழந்தை களையும் கண்டுகளிக்க, நட்பை வலுப்படுத்த, பொருட்களை வாங்க விற்க, தகவல் பரிமாற்றத்துக்கு என பயன்பாட்டின் பட்டியல் நீண்டு செல்கிறது.. எனினும், மனப்பிறழ்வு கொண்ட, வக்கிர எண்ணங்களின் வடிவமாக இருப்பவரிடம் இந்த தொழில்நுட்பம் சிக்கும்போது பிரச்சினை எழுகிறது..

எங்கெங்கு காணினும்..
இந்த குறிப்பிட்ட சம்பவம் என்னை ஒரு கணம் என் தினசரி வாழ்வைத் திரும்பிப் பார்க்க வைத்தது.  நான் அன்றாடம் சென்று வரும் இடங்களில் எங்கெல்லாம் நான் கண்காணிக்கப்படுகிறேன்.. உங்கள் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன என்ற அறிவிப்புப் பலகைகள் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், மருத்துவமனை, வங்கிகள், அரசு அலுவலகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் என்று எல்லா இடங்களும் சிசிடிவி காமிராக்களின் கட்டுப்பாட்டில் வந்து விட்டன. கடவுளின் இடத்தில் காமிராக்கள் என்று சமீபத்தில் படித்த கட்டுரை நினைவுக்கு வருகிறது.. அலுவலகத்தின் நடை பாதையில் நடக்கும் போதுகூட, காமிரா கண்காணிக்கிறது என்ற பிரக்ஞையுடன் நடையின் சுதந்திரம் மட்டுப்படத்தான் செய்கிறது.. சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்தவும், திருட்டு மற்றும் வழிப்பறிகளைக் குறைக்கவும்தான் சிசிடிவி காமிராக்கள் அமைக்கப்படுகின்றன என்று சொன்னாலும், எனக்கென்னவோ உலகமயத்தின் நீண்ட கரங்கள் என் அலுவலக நடை பாதை வரை ஆதிக்கம் செலுத்துவதாகவே உணர்கிறேன்..

(b.ranjani@licindia.com)


கரும்பலகை என்ன வர்ணம் – மு.ராஜபிரபு



கரும்பலகை என்பது ஒரு வகுப்பறையின் முதுகெலும்பு மட்டுமல்ல, அது ஆணிவேர், ஆதாரம். ஒரே ஒரு கரும்பலகை மட்டும் இருந்தால் அந்த இடம் வகுப்பறையாகிவிடும் என்பார்கள். பள்ளியின் ஆதாரம் கரும்பலகை என்பதை உணர்ந்தே 1986ல் புதிய தேசிய கல்விக்கொள்கையில்கூட அடிப்படை வசதி களை மேம்படுத்தும் திட்டத்திற்கு கரும்பலகைத் திட்டம் எனப் பெயரிட்டார்கள். ஆரம்பகாலத்தில் போதிய அறைகள் இல்லாத அரசுப்  பள்ளி களில் ரூசோசொன்னதைப் போல மரங்களுக்கு நடுவில் மூன்று கால்களுடன் கரும்பலகை பயன்படுத்தப்பட்டது. பலகையில் கருப்பு வர்ணம் பூசியதால் அதற்குக் கரும்பலகை என பெயரிட்டார்கள்.

பின்னர் சுவரில் வர்ணம் பூசியும், பின்னர் இரண்டு உருளைகளுக்கு இடைப்பட்ட கருப்புத் துணியும் பயன்படுத்தப்பட்டன. அந்த சுவரில் கருமை வர்ணம் பூசுவது ஒரு கலை. பள்ளி மாணவத் தலைவனுக்கு இந்த வித்தை கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். நன்றாக வெந்து முடித்த கரித்துண்டை எடுத்துக் கொண்டு அதனுடன் ஊமத்தங்காயும் அதன் இலையும் சேர்த்து, தண்ணீர் சிறிதளவு விட்டு அரைத்து எடுத்தால் கிடைக்கும் கரும்பலகையின் வர்ணம்.

1990க்கு பின்னர் பதின்மபள்ளிகள்  தங்களை தனித்துவமாகக் காட்டிக் கொள்ள எடுத்துக் கொண்ட ஆயுதமாக கரும்பலகையின் நிறத்தை மாற்றி அமைத்தன. வெள்ளை நிறப் பலகையில் கருப்பு (அ) சிவப்பு நிறத்தில் எழுதியும், பச்சை நிறப் பலகையில் வெள்ளை நிறத்தில் எழுதியும், இப்போது ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் மின்னணுப் பலகையும்  பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல புதிய தொழில்நுட்பங்கள் பதின்ம பள்ளியில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இன்றும் எங்கோ ஒரு கிராமத்து பள்ளியில் மூன்று சிறுவர்கள் கரிக்கட்டையை அரைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, இந்த கரி யாருக்கு என்பதுதான் இப்போதைய கேள்வி.

(தொடர்புக்கு : 9159797071)

Tuesday, December 6, 2016

செல்லுமோ..... செல்லாததோ........ - டாக்டர் ஜி.ராமனுஜம்


ஒவ்வொரு முறையும் ஏதேனும் டாபிக் இல்லாமல் கார்டூனிஸ்டுகளும் என்னைப் போன்ற கட்டுரையாளர்களும் லேசாகத் திகைக்கும் போதெல்லாம் கண்கண்ட தெய்வமாகக் கைகொடுப்பவர்கள் நமது அரசியல்வாதிகள். தற்போது வாராது வந்த மாமணியாக ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு. செல்வதனால்தான் அதைச் செல்வம் என்பார்கள். இப்போது செல்லாது என அறிவித்தால் என்னென்று அழைப்பது?.

அறிவிப்பு வந்தவுடன் எல்லோருக்கும் பணத்தை நிறம் மாற்றுவதே முக்கிய வேலை ஆகிவிட்டது. பல வருடங்களுக்கு முன் க்ளினிக் ஆரம்பித்த புதிதில் என்னை ஏதோ மிகவும் பிசியான மருத்துவர் என்று நினைத்துக் கொண்டு எப்படியாவது அப்பாயின்மெண்ட் வேண்டும், அதுவும் முதல் டோக்கனாக வேண்டும் என்று சிலர் கெஞ்சுவதுண்டு. அலறி அடித்துக் கொண்டு ஒரு மணி நேரம் முன்பே நோயாளிகள்   க்ளினிக்கிற்கு வந்து காத்திருந்து, பேச்சுத் துணைக்கு ஒரு விற்பனைப் பிரதிநிதி கூட இல்லாமல் வெறுத்துப் போய் நான் உள்ளே வரும் போது ஒரு மாதிரி பார்வை பார்க்கவும் நான் சமாளித்துக் கொண்டு இன்னிக்கு வேற யாருக்கும் அப்பாயின்மெண்ட் கொடுக்கல (யாராவது கேட்டாதானே) எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு என்று சமாளித்தது உண்டு. அதேபோல் இப்போதும் காற்றாடுகிறது. மோடி எஃபெக்ட்? இத்தனைக்கும் என் ஃபீஸ் 500 இல் பாதி கூடக் கிடையாது. 500 , 1000, 1500 ரூபாய் நோட்டாக இருந்தாலும் பரவாயில்லை. கொடுங்க. யாராச்சும் வாங்கப்பா. தனியா இருக்க பயமா இருக்கு என்று சொல்லலாம் போலிருக்கிறது.

அப்படியும் அபூர்வமாகச் சிலர் சில்லறை மாற்றுவதற்காக க்ளினிக்கிற்கு வருகிறார்கள். 500 ரூபாய் கொண்டு போனால் 500 ரூபாய் முழுவதுக்கும் பெட்ரோல் போடவேண்டும் என்று பங்குகளில் சொல்வதுபோல் என் க்ளினிக்கிற்கு 500 ரூபாய் கொண்டு வருபவர்களுக்கு கட்டாயம் 500 ரூபாய்க்கும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என்று அறிவிக்கலாமா என்றும் தோன்றியது. ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்பாக என்னையும் ஒரு (ப்ளாக்) பணக்காரனா மதித்து ஒருவர் டாக்டர்! 10 தான் கமிஷன். எத்தன எல் னாலும் குடுங்க மாத்திடலாம்என்று ஒருவர் கேட்டார். நெஞ்சம் 56 இஞ்ச் பூரித்தது. அண்ணன்கிட்டதானே கேட்கற... சி யாவே கேக்க வேண்டியது தானே?என்ற வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வந்தது. (அவருக்குக் கொடுக்க பழைய 500 ரூபாய் நோட்டு ஒன்று கூட இல்லை என்பது வேறு விஷயம்).

அதைவிடக் கொடுமை புது 2000 ரூபாய் நோட்டைப் பற்றிய வதந்திகள். சேட்டிலைட் சிப் இருக்கிறது.. தானே வருமான வரி அலுவலகத்திற்குத் தகவல் போகும்.. புது 2000 ரூபாய் நோட்டை யாரும் பெட்ரூம்ல வச்சிராதீங்க.. ஹைடெக் காமிரால்லாம் பொருத்தப்பட்டிருக்காம்.. பிரதமர் இனிமே ரூபாய் நோட்டுக்கள் செல்லாதுன்னு அறிவிக்க வேண்டியதில்லை. ஐந்து வருடத்துக்குள் வங்கியில் ஒப்படைக்க வேண்டும். ஏனென்றால் ஆட்டோமேட்டிக்காக ஐந்து வருடங்கள் கழித்து வெடித்துச் சிதறிவிடப் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது... என்றெல்லாம் அலப்பரையான செய்திகள் வந்தன. கடைசியில் சாயம் போகும் லாட்டரி சீட்டுப் போல இருந்த 2000 ரூபாயைப் பார்த்ததும் கறுப்புப் பணத்தை ஒழிக்கறது இருக்கட்டும். மொதல்ல இந்த பிங்க் கலர் பணத்த ஒழிங்க ஜி. அசிங்கமா இருக்கு என்று சொல்லலாம் போல் இருக்கிறது.

எது எப்படியோ பத்து நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் தற்செயலாக பத்தாயிரம் ரூபாய்க்கு நூறு ரூபாய்களாகக் கொடுத்துவிட்டு என்னிடமிருந்து ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டார், எடுத்துச் செல்ல சிரமமாக உள்ளது என்று. ஒவ்வொரு முறை செல்போன் அடிக்கும் போதும் அவர்தானோ என பக்கென்றிருக்கும். வாழ்க நீ எம்மான்! இன்னும் எதிலெல்லாம் ஆயிரம் செல்லாதோ தெரியவில்லை.

எனக்குப் பிடித்த சில பாடல்கள் :
1. பத்து நூறு தாமரை மொட்டுக்களே- அலைகள் ஓய்வதில்லை
2. இருபது ஐம்பது நிலவே வா - அடிமைப் பெண் என்றும் ஆழ்வார்கள் பன்னிருவர்  இயற்றிய பாடல்களின் தொகுப்பு நாற்பது நூறு திவ்யப்ரபந்தம் என்று நாமகரணம்  செய்யப்படுவதாக வைகுந்தத்தில் பாம்பணையில் துயில் கொண்ட பெருமாள் அறிவிப்பு.

விஷ்ணு சஹஸ்ரநாமம் இனி விஷ்ணு தச சத நாமம் என்று அழைக்கப் படும் என்றெல்லாம் அறிவிப்புக்கள் வரக்கூடுமோ என்ற பயமில்லாமலும் இல்லை. ரூபாய் நோட்டுக் களேபரம் கொஞ்சம் குறைந்த மாதிரித் தோன்றிய போது கைகளில் மை வைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது.

மை பற்றிய செய்தி வந்ததும் வைத்த ஐந்து நிமிடங்களில் அழிந்து விடும் கறுப்பு கறுப்பு   தயாரித்தவர் கைது- இப்படி இன்னும் பத்து நிமிஷத்துல செய்தி வந்து விடுமே என்ற அச்சமும் இல்லாமலில்லை. பேங்கிங் செக்டார் பேங்கிங் செக்டார் என்பார்களே, அது பேங்க் + இங்க் தானே? எனக் கேட்கும்படி ஆகிவிட்டது. மையை எல்லாம் அழிச்சிடுவாங்க. பேசாம பழுக்கக் காய்ச்சின இரும்புக் கம்பியால சூடு போடுங்க எஜமான் என்று யாரும் ஐடியா கொடுக்காமல் இருக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன் நான் ரஹீமின் தோஹா (நம்மூர் கண்ணிகள் மாதிரி இரு வரிகளிலானது) ஒன்றை மொழி பெயர்த்துப் போட்டிருந்தேன்.

மூலம் : ரஹிமன் தேக்கி படேன் கோ, லஹு ந தீஜியே டாரி...

ஜஹான் காம் ஆவத் ஸுயி கஹான் கரை தர்வாரி

அடியேனின் மொழிபெயர்ப்பு வலியதைக் கண்டதும் எளியதை இகழேல்! வாள் செய்ய முடியுமா ஊசியின் செயலை..?

வாள் -500, 1000. ஊசி 50 , 100. பூனைக்கொரு காலம் வந்தால் எலிக்கும் ஒரு காலம் வரத்தானே செய்யும்?

(9443321004-ramsych2@gmail.com)



கல்லூரிக்காலம் - சி.சந்திரபாபு

பேராசிரியர் நம்பி ஆரூரன் அப்படியொன்றும் கண்டிப்பானவர் அல்ல. எந்த நேரத்தில் எந்த சந்தேகம் கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் முகம் கோணாமல் விளக்கம் கொடுப்பவர். அதனால் மாணவச் சமுதாயத்திற்கு அவர்மேல் ஒரு தனி மரியாதை.


ஒருநாள் கல்லூரி வளாகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பிரபாகரனை மாணவ மாணவிகளின் முன் கண்மண் தெரியாமல் அடித்துத் துவைத்துவிட்டார். அவன் ஒரு பெண்ணை மிகவும் கீழ்த்தரமான கொச்சை வார்த்தைகளால் வர்ணிக்க அதைக் கேட்டு மனம் உடைந்த அப்பெண் அழுதுகொண்டு அவமானப்பட்டதைக் கண்ணுற்றதால்தான் அவர் அவ்வாறு நடந்து கொண்டார்.

செய்தது தவறாக இருந்தாலும் அனைவரின் முன் தண்டனை பெறுவது மாணவச் சமுதாயத்திற்கு தன்மானப் பிரச்சனையல்லவா.. பேராசிரியர்களின் அறைபக்கம் மணவர்கள் ஆவேசத்துடன் திரண்டனர். அந்த சமயத்தில் பேராசிரியர் நம்பி ஆரூரனுக்கும் பேராசிரியர் அரவிந்தனுக்கும் வாக்குவாதம் நடப்பதைப் பார்த்து மாணவர்கள் நிதானித்தனர்.

விளைவுகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை அரவிந்தன்.. நான் அந்தப் பையனை அடித்தது தவறுதான். ஆனால் அந்தப் பெண்ணை அவன் எவ்வளவு அநாகரிகமாக வர்ணித்தான் தெரியுமா? அதான் உணர்ச்சிவசப்பட்டு அடித்துவிட்டேன் என்றார் நம்பி ஆரூரன். மேலும், 10 ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என்  மகளை சக மாணவர்களுக்கு முன்னால் ஒருவன் கேலி செய்தான். அந்த அவமானம் தாங்காமல் அவள் தற்கொலை செய்து கொண்டாள். எனது மனைவி இன்றளவும் சித்தபிரமை பிடித்து தன்னிலை அறியாமல் உள்ளாள் என்று கூறிக் கொண்டு சென்றவரால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் நாதழுதழுத்தது.

பிரபாகரன் பேராசிரியரின் அறைக்குள் நுழைந்தான். பேராசிரியரின் காலில் விழுந்து கதறினான். மன்னிக்க வேண்டி மன்றாடினான்.

அவனைக் கட்டித் தழுவி முதுகில் தட்டிக் கொடுத்தார் நம்பி ஆரூரன். அனைவரின் கண்களிலும் கண்ணீர் துளிகள் ததும்பின.

(தொடர்புக்கு : 9940070734)

மெட்ரிக் ஆசிரியர்களுக்கு விடுதலை கிடைக்குமா? – ச.சீ.இராஜகோபாலன்



இங்கிலாந்தில் வாழும் ஒரு இந்தியர் சென்னையில் நடத்தும் சர்வதேசப் பள்ளியில் முதல்வரும், இரண்டு ஆசிரியர்களும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, எக்காரணத்தையும் கூறாது பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். இரண்டு ஆண்டுகட்கு முன் அடையாரில் உள்ள ஒரு சி.பி.எஸ்.ஈ. பள்ளியிலும் இதே போன்ற நிகழ்வு ஏற்பட்டது. ஆனால் பெற்றோர்கள், மாணவர்களது ஒன்றுபட்ட போராட்டத்தால் நிர்வாகம் தன் ஆணையைத் திரும்பப்பெற்றது. தனியார் உதவி பெறும் பள்ளியில் ஒரு கடைநிலை ஊழியரைக் கூட இவ்வாறு பணி நீக்கம் செய்ய இயலாது. அவர்களுக்கு அரணாக அமைந்திருப்பது தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தல்) சட்டமாகும்.

மெட்ரிக், சி.பி.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ இன்னோரன்ன பல இந்நாட்டு, வெளி நாட்டு வாரியங்களோடு இணைந்த பள்ளிகளில் பணியாற்றுவோர்க்கு எவ்விதப் பணிப்பாதுகாப்பும் கிடையாது. தலைமேல் தொங்கும் கத்தியுடன் ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகின்றனர். அந்தந்த வாரியங்களோ, அரசோ, பெரும்பாலான ஆசிரியர் இயக்கங்களோ இப்பள்ளிகளில் நடைபெறும் அத்துமீறல்களைக் கண்டு கொள்வதில்லை. இப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கென்று அமைப்பேதும் கிடையாது. கிட்டத்தட்ட கொத்தடிமைகளாகத்தான் பணியாற்றுகின்றனர். மெட்ரிக் பள்ளிகள் ஆய்வுக் குழுவின் பொது விசாரணையின் பொழுது நிர்வாகங்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களை அனுப்பித் தாங்கள் நல்ல சூழலில் மகிழ்ச்சிகரமாகப் பணியாற்றுவதாகக் கூற வைத்தனர். ஒரு பெண் ஆசிரியர் அளவிற்கதிகமாக தன் நிர்வாகத்தைப் புகழ்ந்து தள்ளினார். உங்கள் சம்பளம் என்ன என்று கேட்டதற்கு ரூ.2000 என்றார். அரசுப் பள்ளியில் எவ்வளவு என்று தெரியுமா என்ற கேள்விக்கு ரூ.6000 என்றார். அரசுப் பள்ளியில் வேலை கிடைத்தால் அங்கு செல்வீர்களா என்று கேட்டதற்கு இல்லை போகமாட்டேன் என்றார். நிர்வாகிதான் அங்கிருந்தாரே!

மேலும் வினவியதற்கு வேலையில்லாமல் இருந்த எனக்கு ஒரு வேலை கொடுத்ததற்கு நன்றியுடையவராக இருப்பேன். என் குடும்பச் செலவிற்கு என் ஊதியம் ஓரளவு உதவுகின்றது என்றார். இந்த மன நிலையைப் பரவலாக அவ்வாசிரியர்களிடம் பார்க்க முடிந்தது. இத்தருணத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தல்) சட்டம் வந்த பின்னணியைப் பார்ப்பது பயன்தரும்.

ஆங்கிலேயர் காலந்தொட்டு அரசு, உள்ளாட்சி, தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு வெவ்வேறு பணிநிலைகள் இருந்தன. ஊதிய விகிதங்களும் வேறுபட்டன. அரசு ஆசிரியர்களின் ஊதிய விகிதங்கள் அதிகமாகவும், அதற்கடுத்து உள்ளாட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கும், கடைநிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் இருந்தனர். ஊதிய விகிதம் மட்டுமல்ல, விடுப்புவிதிகளும் மாறுபட்டன. உள்ளாட்சி, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. உள்ளாட்சிப் பள்ளிகளும், எல்லா தனியார் பள்ளிகளும் அரசு மானியம் பெறுபவை. இவ்வேறுபாடுகள் களையப்பட வேண்டுமென்பது ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்தது. 1955-ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஆனால் அரசு ஊழியர்க்கான ஓய்வூதியத்தை விட மிகக் குறைவு. மேலும் உச்ச வரம்பு வைத்ததால் கிடைக்கப்பெற்ற ஓய்வூதியம் வாழ உதவாது.. ஒரு ஓய்வு பெற்ற உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஓய்விற்குப் பின் ஒரு விடுதியில் கணக்கெழுதி வாழ்ந்தார் என்றால் அத்திட்டத்தின் குறையை அறிந்து கொள்ளலாம். இரண்டாம் ஊதியக் குழு (1971) அனைத்து ஆசிரியர் களுக்கும் ஒரே ஊதியம், விடுப்பு விதிகள், ஓய்வூதியம் எனப் பரிந்துரைத்தது. சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்கும் முனைப்பில் இருந்த கலைஞர் அக்குழுவின் அறிக்கையை முழுமையாக ஏற்றார். தேர்தல் வாயிலாக உள்ளாட்சி, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு விழுந்த லாட்டரிச் சீட்டு கிடைத்தது.

ஊதிய சமத்துவம் கிடைக்கப்பெற்றது இரண்டாம் ஊதியக் குழு கொடுத்த பரிசே. அதனைக் கேட்டு எப்போராட்டமும் நடைபெற்றதில்லை. ஆனால் பணிப் பாதுகாப்பிற்காகத் தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டே இருந்தன. தனியார் உதவி பெறும் பள்ளிகள் சேவை நிலையினின்று வெகுவாக விலகிவிட்டன. ஊதியத்தைக் குறைத்துக் கொடுத்தல், மகப்பேறு விடுப்பு எடுத்தால் பதிலி ஆசிரியரது ஊதியத்தைத் தர வேண்டியது ஆசிரியர் பொறுப்பு (முறைப்படி பதிலி ஆசிரியர் நியமனம் செய்திருந்து அரசு மானியம் கிடைத்தாலும்), பணி நீக்கம் செய்தல் போன்ற பல்வேறு உரிமை மறுப்புகளுக்கும் உள்ளாகினர். பெண் ஆசிரியர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. எம்.ஈ.ஆர் என்ற கல்வி விதிகளில் ஆசிரியர்- நிர்வாகம் இடையிலான பணி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அதற்குச் சட்ட  அடிப்படை இல்லாததால் பல வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையிலிருந்து விடுபட மாஸ்டர் ராமுண்ணி தலைமையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன  எஸ்.ஐ.டி.யூ. வழக்கம் போல வேண்டுகோள்கள் விடுத்துக் கொண்டிருந்தது. மேலவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியப் பிரதிநிதிகள் எழுப்பிய குரலைத் தொடர்ந்து இயக்குநர் முனைவர் எம்.டி.பால் தலைமையில் ஒரு குழுவை அன்றையக் கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அமைத்தார். அக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கேட்டது. ஒவ்வொரு கூட்டத்திலும் பெண் ஆசிரியர்களின் அவலக் குரல் ஒலித்தது.

எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற அவர்களது ஒருமித்த வேண்டுதல் குழுத்தலைவரை உலுக்கியது என்று சொன்னால் மிகையாகாது. அக்குழு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கென தனிச் சட்டம் இயற்றப் பரிந்துரைத்தது. அதன் விளைவு தான் மேலே கூறப்பட்ட சட்டம். இச்சட்டம் உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமின்றி உதவிபெறாப் பள்ளிகளுக்கும் பொருந்தும். பல்கலைக் கழகத்துடன் இணைந்த மெட்ரிக் பள்ளிகளுக்கு விலக்களிக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தினின்று மெட்ரிக் பள்ளிகளை அரசு மேற்கொண்டதால் அவற்றிற்கும் பொருந்தும். இது குறித்து பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சர் ஆர்.வேலு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவினைத் திரும்பப்பெற்றது மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளின் சக்தியை  எடுத்துக் காட்டுகின்றது.

34 மெட்ரிக் பள்ளிகளை எடுத்துக் கொண்ட அரசு மாநில வாரியத்தோடு இணைக்காது தனி வாரியம் அமைத்தது ஒரு பெரும் தவறு. அவற்றைத் தனித்து வைத்திருந்தால் பல்கலைக்கழகத்தின் இணைப்பு விதிகளையே பின்பற்றியிருக்கலாம். தனி வாரியத்தில் புதிய பள்ளிகளை இணைத்தது தனியார் ஆங்கிலவழிக் கட்டணப் பள்ளிகள் பெருகிடவே உதவியது. மெட்ரிக் வாரியத்திற்கான விதிகளை உருவாக்கும் பொறுப்பும் அப்பள்ளிகளுக்கே விட்டது ஒரு வினோதம். அவர்கள் உருவாக்கிய விதிகளையே மீறி பள்ளிகள் செயல்படுவதைத் தடுக்க இயலவில்லை. ஆசிரியர் ஊதியம், விடுப்பு, ஓய்வுகாலப் பயன்கள் ஆகியவை மாநில அரசு ஊழியர்க்கு உள்ளதற்குக் குறையாமல் இருக்க வேண்டுமென்ற விதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

மெட்ரிக் பள்ளி ஆய்வுக் குழுவும் அவ்விதிகளை வற்புறுத்தாது நீர்க்கச் செய்தது. அதனால் அதன் உறுப்பினராக இருந்த நான் அவ்வறிக்கையை ஏற்க மறுத்துக் கையெழுத்திட மறுத்துவிட்டேன். மெட்ரிக் ஆசிரியர்கள் தமக்கென்று ஒரு அமைப்பினை ஏற்படுத்தும் சக்திபடைத்தவர்கள் அல்லர். எனவே அவர்களுக்காகக் குரல் எழுப்ப வேண்டிய கடமை பிற ஆசிரியர் சங்கங்களுக்கு உண்டு. முதலில் தம் சங்க உறுப்பினர் தகுதியை அவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு மெட்ரிக் பள்ளியிலும் ஒரிரு ஆசிரியர்களாவது இயக்க உணர்வோடு இருப்பார்கள். ஏற்கனவே உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சங்க விதிகளில்  மெட்ரிக், சி.பி.எஸ்.ஈ. பள்ளி முதல்வர்களும் உறுப்பினராகத் தகுதி உண்டு. மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் சார்பாக அரசிற்கும் கல்வித் துறைக்கும் விதிகளைப் பின்பற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை மெட்ரிக் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த அறிவிக்கை வெளியிட அரசை வற்புறுத்த வேண்டும். சட்டத் திருத்தம் தேவையில்லை. மெட்ரிக் பள்ளி விதிகளைச் செயல்படுத்த   பள்ளிக் கல்விச் செயலரையும், மெட்ரிக் இயக்குநரையும் தொடர்ந்து கேட்டுக் கொள்வதோடு அத்துமீறல்களை அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

திரு. வேலு கைவிட்ட மனுவைப் உயிர்ப்பித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். இதே போன்று சி.பி.எஸ்.ஈ. மற்றும் பிற வாரியங்களோடு இணைந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு பெற்றுத் தர வேண்டும். இவை நம் இனத்தவர்க்கு ஆற்றிட வேண்டிய அடிப்படைக் கடமை என்பதை ஆசிரிய சங்கங்கள் உணர்ந்து செயல்பட்டால் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க முடியும்

(044-23620551 – rajagopalan31@gmail.com) 




போனஸ் - மலர்மதி

தீபாவளி முடிந்து மறுநாள். இரவு முழுக்க வெடித்த பட்டாசுக் குப்பைகள். துப்புரவுத் தொழிலாளிகள் தெருவைச் சுத்தப்படுத்திவிட்டு தீபாவளி இனாம் கேட்டனர். தெருவாசிகள் தங்களால் இயன்றதை அளித்தனர். வாசலில் குரல் கேட்டு வெளியே வந்தான் ஆசைத்தம்பி.

ஐயா.. தீபாவளி இனாம்...

உங்களுக்குத்தான் அரசாங்கம் சம்பளம் கொடுக்குதே, பிறகு எதுக்கு இனாம்?” என்றான் ஆசைத்தம்பி எரிச்சலுடன்.

எங்களுக்கு எல்லாரும் வருஷாவருஷம் தீபாவளி இனாம் தர்றது வழக்கம்தானே ஐயா?”

அப்படிக் கொடுத்துத்தான் உங்களைக் கெடுத்து வெச்சிருக்காங்க. போய் வேலையைப் பாருங்க என அவர்களைத் துரத்தினான்.


மறுநாள்.. தான் வேலை பார்க்கும் அலுவலக மேலாளரிடம் சென்று, சார்...

இந்த வருடம் தீபாவளி போனஸ் தரவில்லையே.. என நினைவூட்டினான் ஆசைத்தம்பி.

செய்யற வேலைக்கு மாசாமாசம் சம்பளம் வாங்கறீங்க. எல்லா வருஷமும் போனசை எதிர்பார்க்காதீங்க. போய் ஒழுங்கா வேலையைப் பாருங்க என்று விரட்டினார் மேலாளர்.

நாங்க செஞ்ச வேலைக்குத்தானே போனஸ் கேக்கறோம் என மெல்ல இழுத்தான் ஆசைத்தம்பி.


விருப்பமில்லேன்னா வேலையை விட்டுப் போயிருங்க. வெளியே ஆயிரத்தெட்டு பேர் காத்துக்கிட்டிருக்காங்க. என எரிந்து விழுந்தார் மேலாளர்.

சும்மா(வா) இருக்கா! --- செல்வகதிரவன்

தினேஷ் ஸ்கூலுக்கு நேரமாச்சு. அப்பாவுக்கு டாடா சொல்லிட்டுக் கிளம்பு!

அப்பா, டாட்டா!

டாட்டா..

ஒண்ணாம் வகுப்புப் படிக்கும் பையனின் புத்தகப் பையை வலது கையில் எடுத்துக் கொண்டு பையனின் பிஞ்சு விரலை இடது கையால் பிடித்தபடி தெருவில் இறங்கினாள் பிரேமா. எதிரே வருகிற தெரிந்த பெண்மணிகளைப் பார்த்து புன்முறுவல் பூத்தவாறு மகனுடன் நடந்தாள்.

அரசாங்க ஆபீசுல கிளார்க்குன்னு பேரு.. ஒரு டூவீலர் வாங்க முடியல.. சாண் ஏறினா முழம் வழுக்கிற கதையாத்தான் நெலம இருக்கு. தெனமும் இவன ஸ்கூல்ல கூட்டிக் கொண்டி விடுறதும் திரும்பக் கூட்டி வர்றதும் பெரிய வேலையா இருக்கு. டூவீலர்  இருந்தா காலையில மட்டுமாவது அவரக் கொண்டிவிடச் சொல்லலாம். சாயங்காலம் நாம சமாளிச்சுக்கிடலாம்.

இப்ப காலைல பையன ஸ்கூல்ல நீங்க விட்டிட்டு வாங்கன்னு பல தடவ சொல்லியாச்சு. மனுசன் அசையமாட்டேங்கிறாரு.. எண்ண அலைகள் பிரேமாவின் மனதுக்குள் மோதிக் கொண்டிருந்தன.

பள்ளிக்கூடம் வந்ததும் மத்தியானம் மிச்சம் வைக்காம சாப்பிடு என்று வழக்கமான அறிவுரையைச் சொல்லி மகனை பள்ளிக்குள் அனுப்பிக் கையசைத்து அவன் வகுப்பறைக்குள் நுழையும்வரை பார்த்துவிட்டுப் புறப்பட்டாள் பிரேமா. செய்தித்தாளை வரி விடாமல் வாசித்துக் கொண்டிருந்த கணேசன் இவள் வீட்டுக்குள் வந்தவுடன் பிரேமா.. நேரமாச்சு இன்னக்கி சீக்கிரம் ஆபீஸ் போகணும் என்று அவசரப்படுத்தினான். உஷ் என்று ஒரு நிமிட நேரம் கூட உட்காராமல் வேலைகளைத் தொடர்ந்தாள் பிரேமா.

கணேசன் குளிப்பதற்கு விளாவிய வெந்நீர் வாளியை குளியலறையில் வைத்து குளித்த பிறகு உடுத்த கைலி, பனியன், ஜட்டி வகையறாக்களை எடுத்துக் கொடுத்து காலை டிபன் தயார் செய்து லஞ்சுக்கு கேரியரில் சாப்பாடு நிரப்பி அலுவலகம் போகும்போது போட வேண்டிய பேண்ட் சட்டை முதலியனவற்றை தேர்வு செய்து வைத்து பம்பரமாகச் சுழன்றாள்.

மொபைல எடுத்துக்கிட்டிங்களா? ஆபீஸ் சாவிய மறந்திடாதிங்க..

ம்ம்..

லோன்லயாவது டூவீலர் வாங்கப் பாருங்க. இங்கருந்து காந்தி சிலை பஸ் ஸ்டாப்புக்கு நடந்து.. பஸ்ஸைப் பிடித்து காலேஜ் ஸ்டாப்ல இறங்கி அங்கிருந்து ஆபீசுக்குப் போக எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கு?

வாங்கலாம், வாங்கலாம்.. மாதப் பட்ஜட் இடிக்குமேன்னு யோசிக்கிறேன்.. சரி பிரேமா போய்ட்டு வாரேன். அயர்ன் பண்ண பேண்ட் சர்ட் ஒண்ணுதான் இருக்கும் போல.. இன்னக்கி சாயங்காலம் ஒரு ரிசப்சனுக்குப் போகணும். ரெண்டு உருப்படியத் துவச்சு அயர்ன் பண்ணி வை. மறந்திடாதே..

சரிங்க பண்ணிடுறேன். யாருக்கு ரிசப்சன்..?

ஆபீசரோட தங்கைக்கு கல்யாணம். இன்னக்கி ரிசப்சன்.. நீயும் வர்றியா..?

இல்லங்க. தினேசை வீட்டுப் பாடம் எழுத வைக்கணும் நீங்க போயிட்டு வாங்க..

கணேசனை வழியனுப்பிவிட்டு கதவைச் சாத்திவிட்டு வந்தாள் பிரேமா. இடைவிடாத  வேலைகளால் களைப்பு அவளைக் கவ்விப் பிடித்திருந்தது. குளிப்பதை ஒத்தி வைத்துவிட்டு அடுப்படிக்குள் போய் இட்லிகளை எடுத்து வைத்து சாப்பிடத் தொடங்கினாள். சாப்பிட்டு முடிந்ததும் உடம்பிலும் மனதிலும் ஒருவிதத் தெம்பு வந்து ஒட்டியது. ஃபேனை முழு வேகத்தில் சுழலவிட்டு சேரில் அமர்ந்தவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டு பாமா தினேசம்மா ரேசன்ல சீனி போடுறாங்க வாங்க வாரிங்களா? என்று குரல் கொடுத்தாள். இதோ வந்திட்டேன்.. ரேசன் கார்டையும் பிளாஸ்டிக் வாளியையும் எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு பாமாவுடன் ரேசன் கடைக்குப் புறப்பட்டாள். ரேசன் கடையில் பெண்கள் வரிசை நீளமாக நின்றது. நிற்க சோம்பல்பட்டால் அவ்வளவுதான். அப்பறம் சீனி என்னக்கி போடுவாங்கன்னு சொல்ல முடியாது. அதனால் மெல்ல மெல்ல நகர்ந்த வரிசையில் தானும் நகர்ந்து ஒரு வழியாக சீனி வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர ஒன்றரை மணிநேரம் ஓடிப் போயிற்று. நேரம் ஒன்றரை போனாலும் இந்த மாத சீனி வாங்கிட்டோம் என்று மனதுக்குள் சந்தோசப் பூ பூக்கத் தொடங்கும்போது அடுத்த அழைப்பு காதுகளில் விழுந்தது.. என்ன பிரேமா இன்னக்கி சந்தைங்கிறத மறந்திட்டியா? சந்தைக்கு வரலையா..? எதிர்த்த வீட்டு சித்ரா குரல் கொடுத்தாள். அன்று சந்தை நாள் என்கிற நினைவு அப்போதுதான் அவளது நினைவிற்கு வந்தது.

வெயில் வெளுத்து வாங்குது.. சந்தைக்குப் போய்ட்டு வந்து குளிக்கலாம் என்கிற முடிவோடு கட்டைப்பை, மணிபர்சு, செல்ஃபோன் இத்தியாதிகளுடன் சந்தைக்குக்  கிளம்பினாள். சந்தையில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து காய்கறி, பழம் வாங்கிக்கொண்டு வீடு வருவதற்கும் மணி ஒன்றைத் தொடுவதற்கும் சரியாக இருந்தது. குளித்துவிட்டு மதிய உணவை உண்டு முடித்தாள். அடுப்படியை சுத்தம் செய்யும் போதுதான் சரியாக எரியாத கேஸ் அடுப்பை இன்று சர்வீஸ் செய்யக் கொண்டு வரச்சொன்ன சங்கதி ஞாபகத்திற்கு வந்தது. சமையலறையைச் சரி செய்து விட்டு கேஸ் அடுப்பைத் தூக்கிக் கொண்டு போனாள். சர்வீஸ் சென்டர் அடுத்த தெருவில் என்ற போதிலும் ஒற்றை ஆளாக அடுப்பை எடுத்துப் போவது சிரமமாகத்தான் இருந்தது. நல்லவேளை, சர்வீஸ் சென்டரில் வேறு வாடிக்கையாளர்கள் இல்லை. ஒரு மணி நேரம் கடையிலேயே காத்திருந்து சர்வீஸ் செய்த அடுப்போடும் ஒருவிதமான அலுப்போடும் வீடு வந்தாள்.

தினேசின் பள்ளி நான்கு மணிக்கெல்லாம் விட்டுவிடுவார்கள். பள்ளியில் இருந்து அவன் வெளியில் வரும்போது வாசலில் அம்மா நிற்க வேண்டும். ஐந்து நிமிடம் தாமதமானாலும் அழுது விடுவான். அதனால் வீட்டைவிட்டு மூன்றரைக்கே புறப்பட்டு விடுவாள். இப்போதும் மணி மூன்றரை ஆகிவிட்டது. கதவைப் பூட்டிவிட்டு மகனைக் கூட்டிவரக் கிளம்பினாள். நான்கரை மணி வாக்கில் வீட்டுக்கு வந்து தினேசுக்கு பிஸ்கட் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது கணேசன் வந்துவிட்டான். எப்போதும் ஆறு மணிக்கு வருகிற கணேசன் இன்று வரவேற்பு நிகழ்ச்சிக்கு போவதற்காக பெர்மிசனில் சீக்கிரம் வந்துவிட்டான்.

பிரேமா பேண்ட் சர்ட் தொவச்சு அயர்ன் பண்ணி வச்சிட்டியா?

இல்லிங்க இன்னைக்கி ஒரே வேல..

என்ன வேல வெட்டி முறிச்ச? நாந்தான் காலையிலேயே சொல்லிட்டுப் போனேனே..  இப்ப ஃபங்சனுக்கு எதப் போட்டிட்டுப் போறது?

அதான் ஒரு பேண்ட் சாட் அயர்ன் பண்ணி ரெடியா இருக்கில்ல?

நாளைக்கும் அதையே ஆபீசுக்குப் போட்டிட்டுப் போகச் சொல்றியா.. கோபத்தில் வெடித்தான்.

ரெண்டு பேண்ட் சர்ட்ட இப்ப தொவச்சிடுறேன்.. ஃபேனுக்கு கீழ சேர்ல போட்டா காஞ்சிடும். காலைல அயர்ன் பண்ணித் தர்றேன்.

வர வர நீ சொல்றதக் கேக்கிறதே இல்ல.

ஏற்கனவே அயர்ன் செய்து வைத்திருந்த உடையை அணிந்துகொண்டு கொடுத்த தேநீரைக் கூடக் குடிக்காமல் கோபமாக வெளியேறிவிட்டான் கணேசன்.

மகன் தினேசை வீட்டுப் பாடம் எழுத வைத்துவிட்டு கணவன் காலையில் உடுத்துவதற்காக பேண்ட் சர்ட்டை துவைக்கத் தொடங்கினாள் பிரேமா.

அதே நேரம் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில்..

என்ன கணேசன் ஒங்க ஒய்ஃபைக் கூட்டிட்டு வரலையா?

இல்ல சார்..

அவுங்க என்ன ஒர்க் பண்றாங்களா?

இல்ல சார், வீட்டுல சும்மாதான் இருக்காங்க..

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை

ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை

என்ற கந்தர்வனின் கவிதை வரிகள் ஆண்களின் மனங்களில் தைப்பதெப்போ?

(99445 09530 –selvakathiravan54@gmail.com)