Sunday, September 10, 2017

ஒரு மெய்யாவது சொல் மன்னா?

அந்தக் காலங்களில் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை ஒலிபரப்பைத் தொடர்ந்து கேட்டவர்களுக்குத் தெரியும், சில போட்டிகள் நடக்கும். அதில் சுவாரசியமான ஒன்று, தொடர்ந்து மூன்று நிமிடங்கள் பேச வேண்டும். ஒரே சொல்லை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.. என்று சொல்லிவிட்டு, நீங்கள் பேசவேண்டிய தலைப்பு தொலைபேசி, ஆனால் தவிர்க்க வேண்டிய சொல், பேசுதல் என்பார்கள். இப்போதைய சூழலில் நினைத்துப் பார்த்தால், பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரும் இத்தகைய போட்டிகளில் வெல்ல முடியாது என்று தோன்றுகிறது. தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் ஆட்சி. சொன்ன சொல்லை மீண்டும் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. (`அச்சே தின் தான் ஏற்கெனவே எல்லோருக்கும் வந்தாயிற்றே! ), நடந்து கொண்டிருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி. தவிர்த்துக் கொண்டிருக்கும் சொல்  ஜனநாயகம்!

அடுத்த தலைமுறை மாணவர்கள் - இப்போது நடந்துகொண்டிருக்கும் நிலவரங்களை எடுத்துப் பின்னாளில் வாசித்தால், தேச பக்தி, சுதந்திரம், விடுதலைப் போராட்டம், மக்களாட்சி எல்லாவற்றையும் முற்றிலும் அதனதன் எதிர்ப்பொருளில் புரிந்து கொண்டுவிடுவார்களோ என்பதை நினைக்கும் போதே நடுக்கமாக இருக்கிறது. 71-வது சுதந்திரதினக் கொடியேற்றி வைத்து பிரதமர் ஆற்றியுள்ள உரையை, ஒரு பாமர இந்தியனாகக் கவனித்துப் பார்த்தால் மெய் சிலிர்த்துப் போகிறது. மெய்யென்ன, மற்றவர்கள் பேசும் பொய்களும் கூட சிலிர்த்துப் போகும்! `..உண்மை இல்லை பொய் உரை இலாமையால் (கோசல நாட்டின் பெருமை) என்று பாடிய கம்பனை அநேகமாக தேச விரோதக் குற்றச்சாட்டில் சிறையிலடைக்க வேண்டி இருக்கும். குப்பன் சுப்பன் உள்பட குடிமக்கள் 29 கோடி பேருக்கு வங்கிகளில் ஜன்தன் கணக்கு தொடங்கியாயிற்று. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் வந்து குவிந்துவிட்டதால் ஏழை எளிய மக்களுக்கு கடன் திட்டங்கள் பாய்ந்து சென்று கொண்டிருக்கின்றன. விவசாயிகள் பிரச்சினை கிட்டத்தட்ட தீர்த்து முடித்தாயிற்று (மூன்று லட்சத்திற்கு மேலான விவசாயிகள் தாமாகத் தங்களது பிரச்சினையிலிருந்து விடுதலை பெற உலகிலிருந்தே விடுதலை பெறுவது என்ற ஒரு வழியைத் தேர்ந்து எடுத்தது போக!). முத்தலாக் பிரச்சினையால் பாதிப்புற்று எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு பிரதமர் ஆதரவு உண்டு (காலகாலமாக மதுராவில் கொண்டு தள்ளப்படும் இந்து விதவைப் பெண்கள் பற்றி மூச்!). ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்குத் தோட்டாக்களால் அல்ல, அவதூறுகளாலும் அல்ல, அன்பு அரவணைப்பால் தீர்வு கண்டுகொண்டிருக்கிறார் பிரதமர் (இராணுவத்தின் பெல்லட் ரவைகளால் துளைக்கப்பட்ட இளைஞர்கள், கண்பார்வை இழந்தவர்கள் எல்லோரும் கண் பார்வையிலிருந்து விலகிப் போகக் கடவது!). தேசத்தை அச்சுறுத்தும் இடதுசாரி தீவிரவாதம், பயங்கரவாதம் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டது அவரது ஆட்சி. (வலதுசாரி அடிப்படை வாதிகள், இந்துத்துவ வெறியர்கள் அடித்துத் தூள் கிளப்புங்கள், நடப்பது நம்ம ஆட்சி!). லஞ்சம், ஊழல் எல்லாம் தூக்கி எறியப்பட்டு தூய்மையான ஆட்சிகள் நிறுவப்பட்டு விட்டன( சில மாநிலங்களில் பணிவதற்கு இழுத்தடித்து வருகின்றனர், பேரம் இன்னும் முற்றுப்பெறவில்லை, முடிந்தவுடன் அவர்கள் மீதுள்ள கறைகளும் கழுவப்பட்டிருக்கும்!). 2018 ஜனவரி ஒன்றாம் தேதி இதுவரை இல்லாதது போலிருக்கும் (எச்சரிக்கை அல்லது ஜாக்கிரதை!). கொள்ளை அடித்தவர்கள், கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள், ஊழல் பேர்வழிகள் நிம்மதி இழந்து உறங்க முடியாமல் தவிக்கின்றனர் (உண்மை தான், தொடர்ந்து மக்கள் சேவையில் இருப்போர் எப்படி உறங்க முடியும், கொள்ளையை திடீர் என்று நிறுத்தினால் ஆட்சிக்கு எப்படி உதவ முடியும்!). தேசம் மாறிக் கொண்டிருக்கிறது, மாற்றத்தை நோக்கி மேலும் போய்க் கொண்டிருக்கிறது (மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம் பற்றியெல்லாம் பேசுவது தேசவிரோதம்). நாம் நேர்மையின் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் (வரலாறுகளை மாற்றி எழுதி விட்டோம். கோட்ஸேவுக்கு கோயில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். பல கிரிமினல் பேர்வழிகளை நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் கொண்டு சென்றுவிட்டோம்). முக்கியமாக, இந்தத் தேசத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை, எல்லோரும் சமம் என்பதை உறுதிப்படுத்தி விட்டோம் (எல்லோரும் `ஜியோ என்று உரத்த குரலில் ஓங்கிச் சொல்லுங்கள். அம்பானி, அதானி எல்லோரும் அம்மா உணவகத்தில் காலையிலேயே வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள், பாவம், எத்தனை இரவுகள்தான் பட்டினியால் தவிப்பார்கள்! ).

பிரதமரின் முழு உரை, மெய்யை முழு உறை போட்டு மூடி வைத்தது போல் இருக்கிறது. தப்பித்தவறிக் கூட உண்மையை உளறிவிடக் கூடாது என சங்கல்பம் எடுத்துக் கொண்டு ஆற்றப்பட்ட எழுச்சியுரை. ஆகஸ்ட் 10-11 தேதிகளில் 24 மணி நேரத்திற்குள் மட்டும் கோரக்பூர் பிஆர்டி மருத்துவ மனையில் மரித்த குழந்தைகளின் எண்ணிக்கை 30. எழுபது குழந்தைகளுக்குமேல் அந்த வாரத்தில் இறந்தது குறித்து ஒற்றை வரி, ஒரே ஒரு கண்ணீர்த்துளி அவரிடமிருந்து புறப்படக் கொடுத்து வைக்கவில்லை அந்தக் குழந்தைகளுக்கு! கோசாலைகளை விழுந்து விழுந்து பராமரிக்கும் தேவேந்திரர்கள் ஆட்சியில் அற்ப மானுடக் குழந்தைகளது ஆயுள் அத்தனை முக்கிய விவாதப் பொருளாகி விடாது. 2014 தேர்தலை சந்திக்கும்போது தாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் குறித்து மட்டுமல்ல, அடுத்தடுத்துத் தாங்கள் செய்துவரும் அறிவிப்புகளைக் குறித்தும்கூடக் கிஞ்சிற்றும் கவலை கொள்ளாத ஆட்சியாளர்களை எதிர்கொண்டிருக்கின்றனர் இந்திய மக்கள். இன்னொன்றையும் மறந்துவிடக் கூடாது. எந்தக் கொள்கை அமலாக்கத்தை வெறுத்து மக்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராக வாக்களித்தனரோ, அந்தக் கொதிப்பில் குளிர்காய்ந்து பெற்ற வெற்றியில் ஆட்சி அமைத்துவிட்டு அதே கொள்கைகளையே மேலும் வேகத்தோடு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. விலைவாசி பற்றி இப்போது யாரும் எங்கும் கேட்க முடியாது. ஜி எஸ் டி வந்தபிறகு விலைவாசி குறைந்துவிட்டது.. பிரதமர் சொன்னால் நம்புங்கள் !

ஆதார் அறிமுகத்தை எதிர்த்து எதிர்வரிசையில் இருந்தபோது முழங்கியவர்கள் பாஜக தலைவர்கள். ஆட்சிக்கு வந்தபிறகு ஆதார் அட்டையோடு விடவில்லை, அதை சமையல் எரிவாயு இலக்கத்தோடு இணைக்கச் சொன்னார்கள். வங்கிக்கணக்கோடு இணைக்கச் சொன்னார்கள். குடிமக்களை எண்களால் அடையாளப்படுத்தி எல்லாக் கணக்கு வழக்குகளோடும் இணைப்பது மாதிரி ஒரு பாவ்லா காட்டிவிட்டு, எலும்பும் சதையுமான மனிதத் திரளை அவரவர் வாழ்வாதாரத்தின் பிடியிலிருந்து துண்டித்துக் கொண்டிருக்கின்றனர். ரேஷன் அட்டை உண்டு, பொருள்கள் வாங்க அனுமதி கிடையாது. சமையல் எரிவாயு கணக்கு உண்டு, மானியம் கிடையாது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளிடம் திரும்ப வந்து குவிந்த பணக்கற்றைகளை இன்னும் ரிசர்வ் வங்கி எண்ணி முடிக்கவில்லை. கறுப்புப்பண பறிமுதல் பற்றிய பேச்சே இல்லை. புதிய ரூபாய்த்தாள்கள் மதிப்பில் கள்ள நோட்டுக்களை அடித்த புகாரில் கேரளத்தில் பாஜக ஆட்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கணக்கில் வராத பழைய நோட்டுக்களை கோடிக்கணக்கில் வைத்திருந்த புகாரில் சிக்கிய ஆட்கள் பற்றி மேற்கொண்டு செய்திகள் கிடையாது. கொடூரமான பாலியல் வன்கொடுமை குற்றங்களைப் புரிந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ள போலி சாமியார் ராம் ரஹீம் சிங், மத்திய ஆட்சியாளர்களோடு எத்தனை நெருக்கமாக இருந்து வந்திருக்கிறான் என்பது அம்பலமாகி உள்ளது. அவனது ஆதரவுக் குண்டர்படை அரியானா, பஞ்சாப் மற்றும் தில்லி மூன்று மாநிலங்களிலும் நிகழ்த்தியுள்ள வன்முறை திட்டமிடப்பட்டது என்பது மட்டுமல்ல மாநில ஆட்சியின் காவல் துறை அதை வேடிக்கை பார்த்தது, குற்றவாளிக்கு வலிக்காத வண்ணம் பாதுகாப்போடு சொகுசு பங்களாவில் `சிறை வைக்க ஏற்பாடு செய்தது, கோடிக்கணக்கில் அமைச்சர்கள் அவனுக்கு இதுகாறும் நிதி வழங்கிப் பெருமை கொண்டது எல்லாமே தேசத்தை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

ஜனநாயகம் என்பது மக்களுக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதைக் குறிப்பதாகும். அந்த அச்சமே ஆட்சியை நெறிப்படுத்தும் என்பதாகும். அதுவே மக்கள் நலனுக்கு முன்னுரிமையும், நீதி - நேர்மை – ஒழுக்கத்திற்கு உத்தரவாதமும் வழங்கும் என்பதாகும். அதிகாரத்தை உண்மை வயப்படுத்தி, உண்மைக்கு அதிகாரம் வழங்குவதாகும். அதாவது மெய் சொல்லல் நல்லதப்பா என்ற பாவேந்தரின்
வரிகளின் விளக்கமாகும். வாய் வலிக்க ஓயாமல் பொய்யே பேசி வரும் குடியரசு வேந்தர், ஒரே ஒரு மெய்யாவது பேசட்டும். பேசுவாரா?
                                                                                                                                   -sv.venu@gmail.com / 94452 59691



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.