உத்தரப் பிரதேசம், கோரக்பூரில் எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாத காரணத்தால் மரணம் அடைந்துள்ள செய்தி நெஞ்சைப் பதறவைக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தேவைப்பட்ட நிதி ஆதாரத்தை அளிக்காததால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பழியிலிருந்து தப்பிக்க யோகி ஆதித்யநாத் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். குழந்தைகளின் மரணத்திற்கு மூளைக்காய்ச்சல்தான் காரணம் என்று சாதிக்கிறார். கிழக்கு உத்தர பிரதேசத்தின் மிக முக்கியமான இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். இருப்பினும் அதற்கேற்ற வசதிகள் ஏதும் இல்லாமலேயே மருத்துவர்கள் சமாளித்து வந்துள்ளனர்.
யோகி ஆதித்யநாத் கோரக்பூர் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருபதாண்டுகள் இருந்துள்ளார். தன் தொகுதி யிலிருக்கும் மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்ய இவர் தவறியுள்ளார் என்பது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. கோசாலைகள் அமைப்பதற்கு நாற்பது கோடி நிதி வழங்கிய முதலமைச்சருக்கு குழந்தைகள் உயிரைக் காப்பாற்ற அக்கறை இல்லாமல் போனது ஏன்? அவசரமாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு அரசுக்கு ஆதரவான அறிக்கையை அதே அவசரத்தில் சமர்ப்பித்துள்ளது. மருத்துவ மனையில் தவறுகள் ஏதும் நடக்கவில்லையென்றும், மரணத்திற்குக் காரணம் வருடாவருடம் வரும் தொற்றுநோய்தான் என்றும் சொல்லி குழந்தைகள் இறப்பை நியாயப்படுத்தியுள்ளது. தன் சொந்தச் செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கி குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர் கஃபில்கான் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அராஜகத்தின் உச்சம்.
விடுதலை அடைந்து எழுபதாண்டுகளுக்குப் பின்னும் நம்முடைய அரசுகளால் மிகச் சாதாரண மருத்துவ வசதிகளைக் கூடக் கொடுக்க முடியாமலிருப்பது வெட்கக்கேடானது. இந்தியாவைவிடப் பின்தங்கிய நாடுகள் கூட மக்களின் ஆரோக்கியம் குறித்து நம்மைவிட அக்கறையோடு செயல்படுகின்றன. மனித உயிர்களைத் துச்சமென மதிக்கும் கொடுமை இந்தியாவில்தான் கோலோச்சுகிறது. பொதுசுகாதாரத்தை முற்றிலும் தனியார்களிடம் தள்ளிவிடும் போக்கினைக் கைவிட்டு,
அரசு மருத்துவ மனைகளைப் பலப்படுத்திட வேண்டும் என்ற சமூகப் பார்வையை மத்திய மாநில அரசுகள் பெறுவதற்கு நாம் செய்யப்போவது என்ன என்ற கேள்வியை நாம் மக்கள் முன் வைக்கிறோம்.
-ஆசிரியர் குழு
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.