Showing posts with label ச.மாடசாமி. Show all posts
Showing posts with label ச.மாடசாமி. Show all posts

Saturday, November 5, 2016

புதிய கல்விக் கொள்கை – ஆதாரமான இரண்டு இலக்குகளைக் காணோம்!

வாழ்க்கைத் திறன்கள் (Life Skills), மதிப்புக் கல்வி (Value Education) என்று இந்தக் கல்விக் கொள்கை பேசும்போது, இவ்வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது என்ன என்ற சந்தேகம் வருவது இயல்பானது. Value, Moral, Ethics, Culture, என்று கல்விக்கொள்கை முழங்குகையில் – இவற்றைப் பாடத்திட்டத்தில் இணைப்பதாகச் சொல்லுகையில்- சிலர் மத்தியவர்க்கப் புளகாங்கிதங்களுக்கு ஆளாகலாம். வார்த்தைகளுக்கு ஒற்றை அர்த்தமா என்ன?...

Moral -என்பது சிலருக்குச் சமூக சிந்தனை; வேறு சிலருக்கு அது கடவுள் நம்பிக்கை. Moral Education என்றால் சாமி கதைகளைச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

பண்பாடு என்பது மானுடவியலாளர்க்கு- கூடி வாழும் வாழ்க்கை; அவ்வாழ்க்கை வழி  உருவாகும் உறவுகள்; உரையாடல்கள்; பழக்க வழக்கங்கள். வர்ணாசிரமவாதிகளுக்குப் பண்பாடு என்பது - பேதங்கள்; பிரிவுகள்; வன்மங்கள்!

தேசப்பற்று என்பது சிலருக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சேவை; வேறு சிலருக்கு- தேசப்பற்று என்பது மதம் சார்ந்த வன்முறை; வன்முறைக்கான வாய்ப்பு.  ஒவ்வொருவருக்கும் ஓர் அர்த்தம்; மகாத்மாவுக்கு ஓர் அர்த்தம்; கொலைகாரனுக்கு வேறோர் அர்த்தம். அரசின் கையில் இருப்பது யாருடைய டிக்ஷனரி என்று நமக்குத் தெரியாதா?.....

இக்கல்விக் கொள்கையில் பாடத்திட்டம் பற்றி எத்தனை கூப்பாடு?... யாருடைய பாடத்திட்டம்? ஏற்கனவே சில மாநிலங்களின் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் நேருவை நீக்கி காந்தியின் கனத்தைக் குறைத்தாயிற்று. இந்த லட்சணத்தில் சமூக அறிவியலில் ஒரு பகுதி இந்தியா பூராவும் பொதுப் பாடத்திட்டத்தில் வருமாம். எந்தப் பகுதி?

சுதந்திரப் போராட்ட வரலாறா?...

வேதக் கல்வியையும், குருகுலக் கல்வியையும் கொண்டாடித் தொடங்கும் போதே கல்விக்கொள்கையின் கோணல் பாதை தெரிந்து விடுகிறது. Rich Heritage, Glorious Past, Great Tradition என்று கல்விக்கொள்கை திரும்பத் திரும்பக் கூத்தாடுகிறது. காலங்காலமாய், பாகுபாடுகளைச் சுமந்து அழுந்தியவர்களுக்குத்தானே Glorious Past இன் லட்சணம் தெரியும்! இந்தியாவின் பழம்பெருமை வேறு; அதை வைத்து அரசியல் பண்ணும் உங்கள் பழம்பெருமை வேறு. கோவில்களும் கலைகளும் இந்தியாவின் பழம்பெருமை என்றால் அங்கெல்லாம் சாதியைக் கொண்டு போய் பலரையும் விலக்கி வைத்தது உங்களின் பழம் பெருமை. தமிழகத்தின்  பழம்பெருமை திருக்குறள் என்றால் திருவள்ளுவருக்கு ஒரு சாதி கற்பித்து அவர் சிலையைச் சாக்கில் கட்டி வீதியில் எறிவது உங்கள் பழம்பெருமை!

வேதக்கல்வியில் தொடங்கும் கல்விக்கொள்கை இந்தியக் கல்வியைச் சர்வதேசமயமாக்கும் (internationalization) திட்டத்தில் போய் முடிகிறது. சர்வதேசம் என்ற வார்த்தையைத் திருப்பிப் போட்டால் வியாபாரம்! ஆக, வேதத்தில் தொடங்கி  வியாபாரத்தில் முடிகிறது கல்விக்கொள்கை. பழமைவாதத்துக்கும் வர்த்தகத்துக்கும் இடையே கூட்டு! அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து அதன் கல்விக்கொள்கை வேறுபட்டிருக்காது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?,,,

கல்விக்கொள்கை 13 நோக்கங்களை முன்வைக்கிறது. இந்தியா இன்று அதிகம் எதிர்நோக்கும் இரு நோக்கங்கள் அவற்றில் இல்லை.
1) பொதுப்பள்ளிகள்- அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் நோக்கம்
2) தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கொள்ளையைத் தடுக்கும் நோக்கம்.

இவை இரண்டும் ஆதாரமானவை.

அக்கறையையும் அரசியல் உறுதியையும் கோருபவை. இவை அரசின் இலக்குகளில் இல்லை!

(aruvi.mli@gmail.com – 9444164836 )

(ஜூலைஆகஸ்ட் விழுது இதழில் பேரா.. மாடசாமி எழுதிய கட்டுரையிலிருந்து சில வைரவரிகள்)


Tuesday, October 4, 2016

கல்வியா, அரசியலா?

புதிய கல்விக் கொள்கை மீதான விமர்சனம் அரசியல் ரீதியாக உள்ளது.. கல்வி சார்ந்து வரவில்லை எனச் சிலர் பேசுவதும், அப்படிப் பேசுவோர் நடுநிலையாளர் போல தங்கள் முகத்தை வைத்துக்கொள்வதும் ஒரு வேடிக்கை..!

கல்விக் கொள்கையில் இல்லாத அரசியலா..?

ஒருபுறம், வர்ணாசிரம நஞ்சு கலந்த பழமையைக் கொண்டாடியும்  மறுபுறம் சர்வதேச நவீன வர்த்தகத்துக்குக் கடை விரித்தும் கல்விக் கொள்கையில் ஒரு நாடகம் நடக்கிறதே! அந்த நாடகத்தின் கரு என்ன?

அது கல்வியா? அரசியலா?

ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் குழந்தைகள் தொழிலாளிகள் ஆவதும், கடத்தப்படுவதுமான அவமானம் தொடரும் நாட்டில், 5ஆம் வகுப்பிலேயே தேர்வு வைத்து வடிகட்டிப் பிள்ளைகளைப் பள்ளியை விட்டுத் துரத்த நினைப்பது... கல்வியா?அரசியலா?

பல்வேறு சூழலில்-பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுடன் பிள்ளைகள் இங்கு வளர்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவர்க்கும் தேசிய அளவில் ஒரே விதமான பாடத்திட்டமாம்! இந்த மூர்க்கத்தனமான யோசனையின் பின்னணி என்ன? அது கல்வியா? அரசியலா?

கல்வி குறித்த புதிய புரிதல்களால் உலகம் முழுக்க வெளிச்சம் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கல்விக் கொள்கை மட்டும் வேலைவாய்ப்புக்கான திறன்கள் குறித்து வறட்டுத்தனமாய்க் கூப்பாடு போட்டு, மொழி, வரலாறு போன்ற கலைப் பாடங்களுக்கு எதிராகக் கத்தியைத் தீட்டுகிறதே! இது கல்வியா?
அரசியலா?

கல்வி வேறு அரசியல் வேறா?....

கல்வியில் இல்லாத அரசியல் வேறு எங்கிருக்கிறது?
 பேரா. ச.மாடசாமி


Friday, August 5, 2016

பெரும் பெரும் வார்த்தைகள். ஆனால்........... - ச.மாடசாமி

சென்ற ஆண்டு ( ஏப்ரல் 2015) வெளிவந்த ஓர் கல்வி அறிக்கை இப்படித் தொடங்குகிறது......

1947இல் துர்காதேவி விடுதலை பெற்றாள்(சுதந்திரம்). 1991இல் லட்சுமி விடுதலை பெற்றாள் (தாராளமயம்). 2015 இல் சரஸ்வதி விடுதலை பெறுவாள் (பல்வேறு கல்வி அமைப்புகளை ஒழிப்பதன் மூலம்).

பஜனை மொழியில் எழுதப்பட்ட இந்த அறிக்கை, AICTE, UGC போன்ற அமைப்புகளை ஒழித்துக் கட்டும் முகமாக வெளியிடப்பட்டது. இந்தியாவை உலகின் `ஜெகத்குரு என்றும் இந்த அறிக்கை வர்ணிக்கிறது. இப்போது வந்திருக்கும் புதிய கல்விக் கொள்கை 2016இன் பயணமும் இதே பாதையில்தான்.

வேதக்கல்வியைப் போற்றியும், பாகுபாடுகளின் ஊற்றுக் கண்ணான குருகுலக் கல்வியைப் பாராட்டியும் தொடங்குகிறது இக்கல்விக் கொள்கை. Rich Heritage, Glorious Past, Great Tradition - என்று கல்விக் கொள்கை பொங்கி வழியும்போது... இந்த வார்த்தைகள்-ஒரு வலை என்பதும், ஒரு வஞ்சகம் என்பதும் நமக்குப் புரியாதா?...

`பண்பாடு என்ற பெயரில் பழைய அழுக்கு மூட்டைகள் நம் தலையில் ஏறும் என்ற உண்மை நமக்குத் தெரியாதா?...

1968இல் இந்திரா காந்தி அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் பொதுப்பள்ளி குறித்த குரல் ஓங்கி ஒலித்தது. அடுத்து 1986இல் ராஜீவ்காந்தி அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் மாதிரிப் பள்ளி போன்ற மேட்டிமை சார்ந்த யோசனைகள் இருந்தபோதும், பொதுப்பள்ளிக்கான குரலும் சேர்ந்து ஒலித்தது.

இன்று என்ன நிலை?...
எளிய, சிறிய அமைப்புகளை `வலுவற்றவை எனக் குற்றஞ் சாட்டி மூடிவிடுவது, பதிலுக்குச் சர்வ அதிகாரமும், மதச்சார்பும் கொண்ட ஒற்றைப் பேரமைப்பை உருவாக்குவது- என்ற திட்டத்தை நோக்கித்தான் இன்றைய அரசின் கல்விக் கொள்கை நகர்கிறது.

இந்தக்கல்விக் கொள்கை பெருங் குரலெடுத்துப் பேசும் Composite Schools, Skill Schools போன்ற யோசனைகள் எளிய பள்ளிகளின் மரணத்தை இப்போதே அறிவிக்கவில்லையா?....

பெரும் பெரும் வார்த்தைகள். ஆனால் எல்லா ஆபத்துகளும் நுட்பங்களுக்குள் ஒளிந்து கிடக்கின்றன. Devil is in the devil.... தொடர்ந்து பேசுவோம்..
முனைவர் ச. மாடசாமி, முகநூலில்