தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தால் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் சரிவை சந்தித்து
வருகிறது. ஆளும் கட்சிக்குள் எண்ணற்ற கோஷ்டிகள். அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள அவை இணைந்தாலும் மனதளவில் இணையப்
போவதில்லை. மக்கள் நலப்பணிகளிலும் அரசு நிர்வாகத்திலும் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பற்றி ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. உற்பத்தித் துறைகளில் கடந்த 2016 ஏப்ரல் தொடங்கி 2017 மார்ச் வரையிலான நிதியாண்டு காலத்தில் வெறும்
1.65 சதவீத வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது. இது தமிழகப் பொருளாதாரத்தில் மிகப் பெரும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
ஆனால் இதே சமயத்தில் உற்பத்தித் துறைகளில் ஆந்திரா 10.36 சதவீதமும் தெலுங்கானா 7.1 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வேகமான வளர்ச்சி இந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் யாரிடம் அனுமதி வாங்குவது.. யார் யார் லஞ்சம் கேட்பார்கள் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே நிலவுவதால் இங்கே
முதலீடு செய்ய அவர்களிடையே தயக்கம் நிலவுகிறது.
தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்வதாகவும் ரிசர்வ் வங்கியின்
அறிக்கை எச்சரிக்கிறது. இந்திய அளவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில்
சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தாலும் தற்போது ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் தமிழகம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்களித்த மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
இந்தத் தேக்கநிலை முடிவுக்கு வருவது எப்போது?
(தொடர்புக்கு 94421
26516)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.