Showing posts with label செல்வகதிரவன். Show all posts
Showing posts with label செல்வகதிரவன். Show all posts

Sunday, August 13, 2017

பார்த்த முகங்கள் - செல்வகதிரவன்


 




வெளியீடு : தமுஎகச மானாமதுரை கிளை, 10 குலாலர் தெரு, மானாமதுரை 630 606 விலை ; ரூ. 80

எழுத்தாளர் செல்வகதிரவன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு `பார்த்த முகங்கள்’ இருபத்தி மூன்று சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. இச்சிறுகதைகள் சமுதாயத்தை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்துகின்றன. கதைக்களங்கள் பெரும்பாலும் மானாமதுரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளாகவே காட்டப்பட்டுள்ளதும் கதையாசிரியரின் இயல்பான கதை சொல்லும் உத்திக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. கதைகளின் அளவான நீளம் கதையாசிரியரின் கதை சொல்லும் நேர்த்தியை எடுத்துக் காட்டுகிறது. பெரும்பாலான கதைகளின் கதை மாந்தர்கள் நேரடியாக உரையாடுவதால், தேவையற்ற வார்த்தை மற்றும் வர்ணனைப் பிரயோகங்களை கதையாசிரியர் தவிர்த்திருப்பது சோர்வின்றி வாசிக்க வாசகர்களுக்கு உதவுகிறது. ஓவ்வொரு கதைக்கான கருவையும் நமது அன்றாட வாழ்க்கையில் நிகழ்வனவற்றிலிருந்து தேர்வு செய்திருப்பது கதையின் ஓட்டத்தோடு நம்மையும் இணையாக ஒன்ற வைத்து கதை மாந்தரோடு அடையாளப்படுத்தி ஆசுவாசப்பட வைக்கிறது  உதாரணமாக, இயற்கை நிகழ்வுகள், பார்த்த முகங்கள் போன்ற கதைகள் மூட நம்பிக்கைகளை சாடுகின்றன. பல சிறுகதைகளில் பெண்ணுரிமைக்கான முன்மொழிவுகள் அழுத்தமாக முன்வைக்கப்படுகின்றன. இச்சிறுகதைகள் வண்ணக்கதிர், செம்மலர், புதிய ஆசிரியன், இளைஞர் முழக்கம், தினமணி கதிர், தங்க மங்கை போன்ற இதழ்களில் வெளிவந்திருப்பவை. பல படைப்புகள் பரிசுகளை வென்றிருப்பவை. மொத்தத்தில் `பார்த்த முகங்கள் சிறுகதைத் தொகுப்பு வாசித்து, நேசிக்கத் தக்க படைப்பாகும்.

- கவிஞர் சாகித்யா சேவியர் (செல் : 9659033444)

Thursday, August 10, 2017

பாராட்டு விழா - செல்வகதிரவன்


அந்த வர்த்தக சங்கக் கூட்டத்தில் ஆச்சரியமான முடிவு ஒன்று எடுத்திருந்தார்கள். ஆம். திரைப்பட பாடலாசிரியர் நந்தவன சந்தன மன்னருக்கு பாராட்டு விழா நடத்துவது என்பதே அந்த முடிவு.

நகரத்தில் சேராத அதே நேரத்தில் கிராமம் என்று சொல்ல முடியாத பேருர் மானாமதுரை. ஊருக்குள் பலசரக்குக் கடை, நகைக்கடை, ஜவுளிக்கடை, தேனீர்க்கடை, உணவகம் இப்படி எண்ணற்ற வியாபார மையங்கள் இருக்கின்றன. அரசு அலுவலகங்கள் மட்டுமல்ல கல்வி நிலையங்கள், வங்கிகள் ஏராளமாய் இயங்குகின்றன. மானாமதுரை வர்த்தக சங்கம் நீண்ட காலமாக இங்கு உள்ளது. இருபது பேர்களோடு ஆரம்பித்த இந்த வர்த்தக சங்கம் இன்று நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களோடு உறுதியாக நிற்கிறது. சொல்லிக்கொள்வது மாதிரி சாதனை எதுவும் இவர்கள் நிகழ்த்தாவிட்டாலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை முறையாக கூட்டம் போட்டு விடுவார்கள். கூட்டத்தில் ஏதாவது கோரிக்கைகள் மீது தீர்மானங்கள் போட்டு மாவட்டக் கலெக்டர், மத்திய மாநில அமைச்சர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைப்பார்கள். அனுப்பும் தீர்மானங்கள் கிணற்றுக்குள் போட்ட கல்லாகும் என்று தெரிந்திருந்தாலும் அதற்காக கவலைப்படுவதில்லை. தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு போய்க்கொண்டேஇருக்கும்.

தேர்தல் முடிந்ததும் பதவிக்கு வருகிற சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், பேருராட்சித் தலைவர் முதலியோருக்கு தவறாது ஒரு பாராட்டு விழா நடத்தி எளிய விருந்திற்கும் ஏற்பாடு செய்வார்கள். கூட்டங்கள் நடக்கும்போது டிபன் வழங்கும் பொறுப்பை யாராவது வசதியான வர்த்தகர் ஏற்றுக் கொள்வார். பிற செலவுகளை உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்வார்கள். மாதந்தோறும் வசூலாகும் சிறு துளியான சந்தாத் தொகை பெரு வெள்ளமாகி வங்கியில் தேங்கிக் கிடக்கிறது. சும்மா கிடக்கிற இந்தப் பணத்தை ஏதாவது செலவழித்தால் என்ன? சங்க உறுப்பினர்களில் சில வாலிபர்களிடம் இந்த எண்ணம் ஏற்பட்டது.

பேங்க்ல சங்கப் பணம் ஏகப்பட்டது இருக்கே.. நம்ம பேர் சொல்ற மாதிரி எதாவது பெரிய நிகழ்ச்சி நடத்தினா என்ன?

ஆமா..ஆமா.. நல்ல யோசன நம்மகிட்ட நன்கொடை வாங்கி எத்தன பேரு கலை நிகழ்ச்சி, பொதுக்கூட்டம்னு நெறைய நிகழ்ச்சி நடத்துறாங்க.. நாம பணத்த வச்சுக்கிட்டு பேசாம இருந்தா எப்படி? ஊரெ மெச்சுகிற மாதிரி பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடத்துவோம். ஆன்மீக நிகழ்ச்சி நடத்தலாமா?

யாரு கேப்பா?

பட்டி மன்றம்?

அதைவிட சினிமா டி.வி. சம்மந்தப்பட்ட ஆட்கள வச்சு கூட்டம் நடத்தினா கூட்டம் அலைமோதும்.

எந்த நடிகர் நடிகையைக் கூப்பிடுவது.. யாரு மூலம் கூப்பிடுவது..?

பலரும் பலவிதமாகப் பேசி குழம்பி, குழப்பி, பிறகு தெளிவாகி ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

திரைப்படக் கவிஞர் நந்தவன சந்தன மன்னர் நம்ம ஊர்க்காரர். பத்து வருசமா சினிமாவுல இருக்கார். ஐயாயிரம் பாட்டுக்கு மேல் எழுதி இருக்காரு. இந்த வருசம் அவருக்கு நம்ம ஊர்ல ஒரு பாராட்டு விழா நடத்துவோம். அடுத்தடுத்து அவர வச்சு பெரிய நடிகர் நடிகைகளை நம்ம ஊருக்கு கூட்டி வருவோம்...இப்படி ஒரு முடிவை எடுத்தனர்.

நந்தவன சந்தன மன்னரை தொடர்புகொண்டதில் சம்மதம் சொல்லி தேதியையும் கொடுத்து விட்டார்.விழா நடத்த மானாமதுரையில் பெரிய மண்டபம் கிடையாது. வீதியில் நடத்தினால் நன்றாக இராது. அதனால் அந்த தனியார் கல்லூரியில் நடத்துவது, கல்லூரி விளையாடு மைதானத்தில்  கொட்டகை போடுவது, கல்லூரி மாணவ மாணவிகளையும் கலந்து கொள்ள வைத்து இதுவரை கவிஞர் இப்படியொரு கூட்டத்தைக் காணாத நிலையை உருவாக்குவது என்கிற வகையில் விழாவை நடத்திட திட்டமிடப்பட்டது. மாவட்டக் கலெக்டர் மட்டுமல்ல, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரும் இந்த பாராட்டு விழாவிற்கு வருகை தர ஒப்புதல் வழங்கினர். விழா வேலைகள் மும்முரமாக நடந்தன. மானாமதுரை நகரம் இதுவரை கண்டிராத அளவில் மேடை கொட்டகை வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டு அமர்க்களப்பட்டது. விழா மாலை ஐந்தரைக்கு என்ற போதிலும் நான்கு மணிக்கே ஜனங்கள் வரத் தொடங்கி விட்டார்கள். கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடன் துள்ளிக் குதித்து ஓடிவந்தார்கள். மாணவிகள் வரும்பொழுது மாணவர்கள் வராமல் இருப்பார்களா..?

மாணவர்களும் கும்பலாக ஆஜராகி வருகின்ற மாணவிகளைப் பார்த்து கிண்டலடிக்க மாணவிகளும் கிண்டலாய் பதிலடி கொடுக்க சிரிப்பும் உற்சாகமும் கரைபுரண்டோடியது.
கட்டழகே கட்டழகே கட்டிப் பிடிக்கவா? வெட்ட வெளியில் உனக்கு விரிப்பு விரிக்கவா? நான்கு மாணவர்கள் கோரசாக இந்தப் பாடலை மாணவிகளை நோக்கிப் பாடினர். இவர்கள் பாடுவதைக் கேட்டு எந்த மாணவியும் கோபப்படவில்லை. முகம் சுளித்துக் கூட தங்கள் எதிப்பைக் காட்டிக் கொள்ளவில்லை. கலகலவென சிரித்தவாறு அரங்கை நோக்கிச் சென்றனர். ஆனால் இதனைக் கேட்டு அங்கு காவலுக்கு நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷ்ணமானார். அருகில் நின்ற காவலர்களை அழைத்தார். இந்தப் பசங்களை வேன்ல ஏத்தி ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் கவனிக்க உத்திரவிட்டார்.

பாராட்டு விழா தொடங்கியது. பிரமுகர்கள் முழங்கினார்கள். கவிஞர் ஒரு வார்த்தை வங்கி எந்த சூழலுக்கும் ஏற்றபடி பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர். பக்திப் பாடலாக இருந்தாலும் சரி.. படப்பாடலாக இருந்தலும் சரி இவரிடம் வசீகர வரிகள் அருவியாய் கொட்டும். காலியாகாத வார்த்தை கஜானா இவருடையது. கவிஞரிடம் எப்போது போய்ச் சேர்வோம் என்று தேசீய விருது ஏங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படியாக கவிஞர் நந்தவன சந்தனமன்னர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்தார். அதே வேளையில் காவல் நிலையத்தில்...

எவ்வளவு திமிர் இருந்தா பொம்பளப் பிள்ளைகளப் பாத்து கட்டழகே.. கட்டிப் பிடிக்கவா.. விரிப்பு விரிக்கவான்னு பாடுவீங்க?

அந்த மாணவர்களின் மெலிந்த உடம்புகளில் லத்தி விளையாடியது. அடிக்கிற போலீஸாருக்கும் சரி, அடிவாங்கிற மாணவர்களுக்கும் சரி இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் நந்தவன சந்தன மன்னர் என்பது தெரியாது.

(99445 09530 –selvakathiravan54@gmail.com)



Tuesday, December 6, 2016

சும்மா(வா) இருக்கா! --- செல்வகதிரவன்

தினேஷ் ஸ்கூலுக்கு நேரமாச்சு. அப்பாவுக்கு டாடா சொல்லிட்டுக் கிளம்பு!

அப்பா, டாட்டா!

டாட்டா..

ஒண்ணாம் வகுப்புப் படிக்கும் பையனின் புத்தகப் பையை வலது கையில் எடுத்துக் கொண்டு பையனின் பிஞ்சு விரலை இடது கையால் பிடித்தபடி தெருவில் இறங்கினாள் பிரேமா. எதிரே வருகிற தெரிந்த பெண்மணிகளைப் பார்த்து புன்முறுவல் பூத்தவாறு மகனுடன் நடந்தாள்.

அரசாங்க ஆபீசுல கிளார்க்குன்னு பேரு.. ஒரு டூவீலர் வாங்க முடியல.. சாண் ஏறினா முழம் வழுக்கிற கதையாத்தான் நெலம இருக்கு. தெனமும் இவன ஸ்கூல்ல கூட்டிக் கொண்டி விடுறதும் திரும்பக் கூட்டி வர்றதும் பெரிய வேலையா இருக்கு. டூவீலர்  இருந்தா காலையில மட்டுமாவது அவரக் கொண்டிவிடச் சொல்லலாம். சாயங்காலம் நாம சமாளிச்சுக்கிடலாம்.

இப்ப காலைல பையன ஸ்கூல்ல நீங்க விட்டிட்டு வாங்கன்னு பல தடவ சொல்லியாச்சு. மனுசன் அசையமாட்டேங்கிறாரு.. எண்ண அலைகள் பிரேமாவின் மனதுக்குள் மோதிக் கொண்டிருந்தன.

பள்ளிக்கூடம் வந்ததும் மத்தியானம் மிச்சம் வைக்காம சாப்பிடு என்று வழக்கமான அறிவுரையைச் சொல்லி மகனை பள்ளிக்குள் அனுப்பிக் கையசைத்து அவன் வகுப்பறைக்குள் நுழையும்வரை பார்த்துவிட்டுப் புறப்பட்டாள் பிரேமா. செய்தித்தாளை வரி விடாமல் வாசித்துக் கொண்டிருந்த கணேசன் இவள் வீட்டுக்குள் வந்தவுடன் பிரேமா.. நேரமாச்சு இன்னக்கி சீக்கிரம் ஆபீஸ் போகணும் என்று அவசரப்படுத்தினான். உஷ் என்று ஒரு நிமிட நேரம் கூட உட்காராமல் வேலைகளைத் தொடர்ந்தாள் பிரேமா.

கணேசன் குளிப்பதற்கு விளாவிய வெந்நீர் வாளியை குளியலறையில் வைத்து குளித்த பிறகு உடுத்த கைலி, பனியன், ஜட்டி வகையறாக்களை எடுத்துக் கொடுத்து காலை டிபன் தயார் செய்து லஞ்சுக்கு கேரியரில் சாப்பாடு நிரப்பி அலுவலகம் போகும்போது போட வேண்டிய பேண்ட் சட்டை முதலியனவற்றை தேர்வு செய்து வைத்து பம்பரமாகச் சுழன்றாள்.

மொபைல எடுத்துக்கிட்டிங்களா? ஆபீஸ் சாவிய மறந்திடாதிங்க..

ம்ம்..

லோன்லயாவது டூவீலர் வாங்கப் பாருங்க. இங்கருந்து காந்தி சிலை பஸ் ஸ்டாப்புக்கு நடந்து.. பஸ்ஸைப் பிடித்து காலேஜ் ஸ்டாப்ல இறங்கி அங்கிருந்து ஆபீசுக்குப் போக எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கு?

வாங்கலாம், வாங்கலாம்.. மாதப் பட்ஜட் இடிக்குமேன்னு யோசிக்கிறேன்.. சரி பிரேமா போய்ட்டு வாரேன். அயர்ன் பண்ண பேண்ட் சர்ட் ஒண்ணுதான் இருக்கும் போல.. இன்னக்கி சாயங்காலம் ஒரு ரிசப்சனுக்குப் போகணும். ரெண்டு உருப்படியத் துவச்சு அயர்ன் பண்ணி வை. மறந்திடாதே..

சரிங்க பண்ணிடுறேன். யாருக்கு ரிசப்சன்..?

ஆபீசரோட தங்கைக்கு கல்யாணம். இன்னக்கி ரிசப்சன்.. நீயும் வர்றியா..?

இல்லங்க. தினேசை வீட்டுப் பாடம் எழுத வைக்கணும் நீங்க போயிட்டு வாங்க..

கணேசனை வழியனுப்பிவிட்டு கதவைச் சாத்திவிட்டு வந்தாள் பிரேமா. இடைவிடாத  வேலைகளால் களைப்பு அவளைக் கவ்விப் பிடித்திருந்தது. குளிப்பதை ஒத்தி வைத்துவிட்டு அடுப்படிக்குள் போய் இட்லிகளை எடுத்து வைத்து சாப்பிடத் தொடங்கினாள். சாப்பிட்டு முடிந்ததும் உடம்பிலும் மனதிலும் ஒருவிதத் தெம்பு வந்து ஒட்டியது. ஃபேனை முழு வேகத்தில் சுழலவிட்டு சேரில் அமர்ந்தவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டு பாமா தினேசம்மா ரேசன்ல சீனி போடுறாங்க வாங்க வாரிங்களா? என்று குரல் கொடுத்தாள். இதோ வந்திட்டேன்.. ரேசன் கார்டையும் பிளாஸ்டிக் வாளியையும் எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு பாமாவுடன் ரேசன் கடைக்குப் புறப்பட்டாள். ரேசன் கடையில் பெண்கள் வரிசை நீளமாக நின்றது. நிற்க சோம்பல்பட்டால் அவ்வளவுதான். அப்பறம் சீனி என்னக்கி போடுவாங்கன்னு சொல்ல முடியாது. அதனால் மெல்ல மெல்ல நகர்ந்த வரிசையில் தானும் நகர்ந்து ஒரு வழியாக சீனி வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர ஒன்றரை மணிநேரம் ஓடிப் போயிற்று. நேரம் ஒன்றரை போனாலும் இந்த மாத சீனி வாங்கிட்டோம் என்று மனதுக்குள் சந்தோசப் பூ பூக்கத் தொடங்கும்போது அடுத்த அழைப்பு காதுகளில் விழுந்தது.. என்ன பிரேமா இன்னக்கி சந்தைங்கிறத மறந்திட்டியா? சந்தைக்கு வரலையா..? எதிர்த்த வீட்டு சித்ரா குரல் கொடுத்தாள். அன்று சந்தை நாள் என்கிற நினைவு அப்போதுதான் அவளது நினைவிற்கு வந்தது.

வெயில் வெளுத்து வாங்குது.. சந்தைக்குப் போய்ட்டு வந்து குளிக்கலாம் என்கிற முடிவோடு கட்டைப்பை, மணிபர்சு, செல்ஃபோன் இத்தியாதிகளுடன் சந்தைக்குக்  கிளம்பினாள். சந்தையில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து காய்கறி, பழம் வாங்கிக்கொண்டு வீடு வருவதற்கும் மணி ஒன்றைத் தொடுவதற்கும் சரியாக இருந்தது. குளித்துவிட்டு மதிய உணவை உண்டு முடித்தாள். அடுப்படியை சுத்தம் செய்யும் போதுதான் சரியாக எரியாத கேஸ் அடுப்பை இன்று சர்வீஸ் செய்யக் கொண்டு வரச்சொன்ன சங்கதி ஞாபகத்திற்கு வந்தது. சமையலறையைச் சரி செய்து விட்டு கேஸ் அடுப்பைத் தூக்கிக் கொண்டு போனாள். சர்வீஸ் சென்டர் அடுத்த தெருவில் என்ற போதிலும் ஒற்றை ஆளாக அடுப்பை எடுத்துப் போவது சிரமமாகத்தான் இருந்தது. நல்லவேளை, சர்வீஸ் சென்டரில் வேறு வாடிக்கையாளர்கள் இல்லை. ஒரு மணி நேரம் கடையிலேயே காத்திருந்து சர்வீஸ் செய்த அடுப்போடும் ஒருவிதமான அலுப்போடும் வீடு வந்தாள்.

தினேசின் பள்ளி நான்கு மணிக்கெல்லாம் விட்டுவிடுவார்கள். பள்ளியில் இருந்து அவன் வெளியில் வரும்போது வாசலில் அம்மா நிற்க வேண்டும். ஐந்து நிமிடம் தாமதமானாலும் அழுது விடுவான். அதனால் வீட்டைவிட்டு மூன்றரைக்கே புறப்பட்டு விடுவாள். இப்போதும் மணி மூன்றரை ஆகிவிட்டது. கதவைப் பூட்டிவிட்டு மகனைக் கூட்டிவரக் கிளம்பினாள். நான்கரை மணி வாக்கில் வீட்டுக்கு வந்து தினேசுக்கு பிஸ்கட் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது கணேசன் வந்துவிட்டான். எப்போதும் ஆறு மணிக்கு வருகிற கணேசன் இன்று வரவேற்பு நிகழ்ச்சிக்கு போவதற்காக பெர்மிசனில் சீக்கிரம் வந்துவிட்டான்.

பிரேமா பேண்ட் சர்ட் தொவச்சு அயர்ன் பண்ணி வச்சிட்டியா?

இல்லிங்க இன்னைக்கி ஒரே வேல..

என்ன வேல வெட்டி முறிச்ச? நாந்தான் காலையிலேயே சொல்லிட்டுப் போனேனே..  இப்ப ஃபங்சனுக்கு எதப் போட்டிட்டுப் போறது?

அதான் ஒரு பேண்ட் சாட் அயர்ன் பண்ணி ரெடியா இருக்கில்ல?

நாளைக்கும் அதையே ஆபீசுக்குப் போட்டிட்டுப் போகச் சொல்றியா.. கோபத்தில் வெடித்தான்.

ரெண்டு பேண்ட் சர்ட்ட இப்ப தொவச்சிடுறேன்.. ஃபேனுக்கு கீழ சேர்ல போட்டா காஞ்சிடும். காலைல அயர்ன் பண்ணித் தர்றேன்.

வர வர நீ சொல்றதக் கேக்கிறதே இல்ல.

ஏற்கனவே அயர்ன் செய்து வைத்திருந்த உடையை அணிந்துகொண்டு கொடுத்த தேநீரைக் கூடக் குடிக்காமல் கோபமாக வெளியேறிவிட்டான் கணேசன்.

மகன் தினேசை வீட்டுப் பாடம் எழுத வைத்துவிட்டு கணவன் காலையில் உடுத்துவதற்காக பேண்ட் சர்ட்டை துவைக்கத் தொடங்கினாள் பிரேமா.

அதே நேரம் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில்..

என்ன கணேசன் ஒங்க ஒய்ஃபைக் கூட்டிட்டு வரலையா?

இல்ல சார்..

அவுங்க என்ன ஒர்க் பண்றாங்களா?

இல்ல சார், வீட்டுல சும்மாதான் இருக்காங்க..

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை

ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை

என்ற கந்தர்வனின் கவிதை வரிகள் ஆண்களின் மனங்களில் தைப்பதெப்போ?

(99445 09530 –selvakathiravan54@gmail.com)
 

 

Tuesday, October 4, 2016

பாலம் - செல்வகதிரவன்

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வந்த கார்த்திகேயன் இளைஞர் குழுவில் இணைந்தான். இந்த இளைஞர் குழு கடந்த பல வருடங்களாக கண்ணகி தெருவில் இயங்கி வருகின்றது. தெருப் பிரச்சனைகள், கோயில் விசேடங்கள் முதலியனவற்றில் குழுவில் உள்ள இளைஞர்கள் செயல்படுவார்கள்.

”பிள்ளையார் சதுர்த்தி வரப்போகுதே. இன்னமும் ஒண்ணும் பண்ணாம இருக்கோம்..”

“சாயங்காலம் பாரதி அச்சகம் போயி ரசீது புக் அடிக்க ஆர்டர் கொடுத்திடலாமா..?”

”இந்தத் தடவ பெரிய பிள்ளையார் பொம்ம செஞ்சிடுவோம்.. “

”நல்ல பக்திப் பாட்டுக் கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணலாம்.. “

இப்படி ஒவ்வொருவரும் வரப்போகிற விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது குறித்து அவரவர் அபிப்ராயங்களை அள்ளி வீசினார்கள்.

“தெருவில் ரெண்டு பிள்ளையார் கோயில் இருக்கு. அந்த கோயிலுக்குச் சொந்தக்காரங்க பெரியளவில கொட்டக போட்டு மைக்செட் வச்சு அர்ச்சகரக் கூப்பிட்டு பூஜை செஞ்சு எல்லாருக்கும் சுண்டல் கொழுக்கட்ட விநியோகம் பண்ணப் போறாங்க. அப்பறம் எதுக்கு நாம வேற வசூல் பண்ணி பெரிய அளவுல பிள்ளையார் பொம்ம வாங்கி, கொட்டகயில வச்சு, அதுக்கு ஒரு அர்ச்சகரப் பிடிச்சு நைவேத்யம் வகையறா பண்ணணும்? வேற எதாவது உருப்படியான காரியம் நம்ம பேர் சொல்ற மாதிரி செய்யலாமே.. என்று தனது கருத்தை தைரியமாக எடுத்து வைத்தான் கார்த்திகேயன்.

வேற என்னத்த உருப்படியாப் பண்றது என்கிற தினுசில் பலரும் நினைத்தாலும். கார்த்திகேயன் கருத்தில் இருந்த நியாயத்தை யாராலும் நிராகரிக்கவும் முடியவில்லை.

”சரி உருப்படியான காரியம் பண்ணலாம். என்ன பண்ணலாமுன்னு நீயே சொல்லு” என்று பந்தை அவனிடமே திருப்பி விட்டார்கள்.

“அடுத்தாப்பில வரப்போறது மழைகாலம். இந்த வருசம் நல்ல மழை பெய்யும்னு சொல்றாங்க. மழை தொடர்ந்து பேஞ்சா ஆத்தில தண்ணி வரும். ஆத்தில தண்ணி வந்துச்சுன்னா நம்ம தெருக்காரங்க, பள்ளிக்கூடம் போற பிள்ளைங்க, அக்கறைக்கு வேலைக்குப் போற ஆளுக, ரயில்வே ஸ்டேசன் பஸ் ஸ்டாண்டு போறவுங்க எல்லாம் பாலம் சுத்தித்தான் போறோம். ரெண்டு கிலோ மீட்டரு சுத்திப் போகணும்.. அப்படிப் போகும்போது நம்ம கஷ்டத்துக்கு வழியே பொறக்காதான்னு பொலம்பிட்டு போயிட்டு தண்ணி வத்தின உடனே அப்படியே மறந்திடுறோம். அதனால நம்ம தெருவுக்கு நேர பாலங்கட்ட முயற்சி பண்ணலாம். “

”என்ன செய்யலாம்? எப்படிமுயற்சிக்கலாம்?” - பந்து பழையபடி கார்த்திகேயன் திடலுக்கே வந்து சேர்ந்தது.

“இப்போதைக்கி நம்ம தெருவில வீடு வீடா கையெழுத்த வாங்கி கலெக்டர்கிட்ட மனுக்கொடுப்போம்.. எம்.எல்.ஏ, சேர்மனப் பாப்போம்.. பஞ்சாயத்து ஆபிசு முன்னாடி ஒரு அடையாள உண்ணாவிரதம் இருப்போம். போகப் போக என்ன செய்யலாம்னு யோசிப்போம்..”

மனதிற்குள் தயக்கம் இருந்தாலும் வெளிப்படையாக இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள் இளைஞர் குழுவினர்.

அந்த நகரை ஆறு மிகச் சரிபாதியாகப் பிரித்தது. நகரின் தொடக்கத்தில் ஊரை  இணைக்கக் கூடிய ஆத்துப் பாலம் இருக்கிறது. சிறிதும் பெரிதுமான முந்நூறு வீடுகளை உள்ளடக்கிய கண்ணகி தெருவில் இதுவரையில் ஆஸ்பத்திரி இல்லை. பகுதி நேரமாய்க் கூட வந்துபோகிற மருத்துவரில்லை . ஆட்டோ நிலையம் கிடையாது. எல்லாவற்றுக்கும்  கருக்குள்தான்  வரவேண்டும்.. சில விசயங்களுக்கு ஆற்றைக் கடந்து அக்கரை போகவேண்டும். அங்குதான் மேனிலைப் பள்ளி, பேருந்து நிலையம், ரயில்வே ஜங்சன், வங்கிகள் இருக்கின்றன.

சட்டசபைத் தேர்தல் வருகிறபோது களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் வாக்குறுதியை வாரி வழங்கிடுவார்கள்.. ”எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தால் கண்ணகி  தெருக்காக ஆற்றில் பாலம் கட்ட ஆவன செய்வேன். ”

பாராளுமன்றத் தேர்தல் வரும்போதும், பஞ்சாயத்துத் தேர்தல் சமயத்திலும் வார்த்தைகள் மாறாமல் இதே பல்லவியைத்தான் பாடுவார்கள்.

தேர்தல் முடியும்.. வெற்றி பெற்றவர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா நோய் தொற்றிக் கொள்ளும்.

பாலத்தின் அவசியத்தை வலியுறுத்தி விரிவான கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டது. ஜனங்களின் கையெழுத்துக் கேட்டுப் போனபோது நல்ல வரவேற்பு தென்பட்டது. ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஆவலுடன் கையெழுத்துப் போட்டார்கள்.

மனுநீதி நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அத்தோடு வேலை முடிந்தது என்றில்லாமல் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்திற்கு நாள் குறித்தார்கள்.

உண்ணாவிரதப் பந்தல் நிரம்பி வழிந்தது. கண்ணகி தெருவின் வாலிபர்கள் மட்டுமல்ல, நடுத்தர வயதினர், மாணவர், பெண்கள் என்று திரளாக வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். நகரத்தின் நாலாபக்கமும் இந்த உண்ணாவிரதமே பேசும் பொருளாயிற்று. நகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சார்ந்த பாலமுருகன், பாரதிசத்யா, தேவதாஸ், சங்கர் ஆகியோர் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து ஆதரவுக் கரம் நீட்டினார்கள்.

கோககோலா நிறுவனம் நமது ஆற்றின் நீரை எடுத்து லாப வேட்டை நடத்த வந்தது. பதினோரு மாதங்கள் தொடர்ந்து மக்களைத் திரட்டிப் போராடி அவர்களை அடித்து விரட்டியவர்கள் நாம். அதுபோல் விடாமல் போராடினால் பாலம் பெறுவது பெரிய காரியமில்லை. இன்று விதைக்கப்பட்ட போராட்ட விதைகள் வீணாகாது. வெகுவிரைவில் வெற்றிக் கனியை விழச் செய்யும். ஆற்றுக்குள் பாலம் உருவாக   நம்மவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒற்றுமைப் பாலமும் உருவாக வேண்டும்... உரைவீச்சுகள் தொடர்ந்தன.

கார்த்திகேயனின் நிறைவுரை விடாது செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்கிற நம்பிக்கைப் பூவை கண்ணகி தெரு வாலிபர்கள் மனதில் மட்டுமல்ல வந்திருந்தோர் அனைவரின் மனதிலும் பூக்கச் செய்தது.

                                                   -99445 09530- selvakathiravan54@gmail.com




Friday, August 5, 2016

விசித்திரங்கள் - சிறுகதை

அகிலாஆனந்த் தம்பதியர் மானாமதுரைக்கு வந்திருக்கிறார்கள். ஆம். திருமணம் முடிந்து வரவேற்பு மறுவீடு இரண்டாம் மறுவீடு முதலிய விசேடங்கள் நடந்த பிறகு புருசனுடன் பிறந்த வீடு வந்திருக்கிறாள் அகிலா. வீடு கலகலப்பாக காட்சியளித்தது. கவனிப்புக்கள் விருந்து ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.

“அகிலா.. தர்மராஜ் மாமா நீங்க வந்தா அவங்க கிராமத்துக்கு  உங்களக் கூட்டிக் கிட்டு வரச்சொன்னாரு நாளைக்கு ஏந்தலுக்கு போய்ட்டு வருவோமா..? “

“கிராமத்துக்குப் போக அவுங்க என்ன சொல்றாங்களோ..?

“கிராமம்னா ஆரம்பகால பாரதிராஜா படத்துல காட்டுற கிராமம் மாதிரி இருக்கும்னு நெனச்சுக்கிடப் போறாரு மாப்பிள்ள. இன்னக்கி எல்லாக் கிராமங்களுக்கும் டவுண் பஸ், மினி பஸ் போகுது. எல்லா கிராமத்திலயும் பன்னெண்டாம் வகுப்பு வரைக்கும் பள்ளிக்கூடம் இருக்கு. டுவீலர், செல் எல்லாரும் வச்சிருக்காங்க“சரிப்பா ஒங்க மாப்பிள்ளையக் கேக்குறேன்..”

தர்மராஜ், சௌமியனுக்கு கல்லூரியில் படித்த காலங்களில் இருந்து  நண்பர். தபால் துறையில்
பணியாற்றி பணி ஓய்விற்குப் பின் பூர்வீக கிராமமான ஏந்தலில் செட்டில் ஆகியிருக்கிறார். மகள் திருமணமாகி கோவையில் இருக்கிறாள். மகன் சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பாக்கிறான். நகர வாழ்க்கை ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விட்டதால.. அவரும் மனைவியும் பிறந்த மண்ணிற்குத் திரும்பி விட்டார்கள்.

நாளொன்றுக்கு நான்கு முறை ஏந்தல் கிராமத்திற்கு மானா மதுரையில் இருந்து பேருந்து போய் வருகிறது. சௌமியன், அவரது மனைவி, புதுமணத் தம்பதியர் ஆகிய நான்கு பேர்களும் பத்து மணி பஸ்ஸில் ஏந்தலில் இறங்கினார்கள். ஏற்கனவே அலைபேசி வாயிலாக தகவல் சொல்லி இருந்ததால் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார் தர்மராஜ்.

வீட்டிற்குப் போய் தேநீர் அருந்தி விட்டு ஏந்தல் கிராமத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள்.  தர்மராஜ் மனைவிக்கு மதியச் சாப்பாடு தயாரிக்கும் வேலை இருந்ததால் அவள் வரவில்லை.

இந்த வருடம் போதுமான மழை பெய்ததால் கிராமம் பசுமையாகத் தென்பட்டது. நிறைமாதக் காப்பிணியாய் ஊர்க்குளம் நிரம்பி இருந்தது. ஏந்தல் பெயருக்கேற்றபடி சின்ன ஊராக இருந்தாலும் அங்கு பெரிய பெருமாள் கோயில், தேவாலயம், மசூதி முதலிய வெவ்வேறு மத வழிபாட்டுத் தலங்கள் இருந்தன. ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு வங்கி, அஞ்சலகம் ஆகிய அரசு சார்ந்த அலுவலகங்களும் இயங்கின. ஆரம்பப் பள்ளியும் மிகப் பெரிய விளையாட்டு மைதானத்தை உள்ளடக்கிய மேனிலைப் பள்ளிக்கூடமும் பிரம்மாண்டமாய்த் தென்பட்டன. சாதி மதங்கள் வெவ்வேறாக இருந்தபோதிலும் ஒருவருக்கொருவர் முறை சொல்லி விளிக்கும் அன்னியோன்யம் ஜனங்களிடம் வெளிப்பட்டது.

கண்மாய்க் கரை கடந்து வயல் வரப்புக்கள் தாண்டி பம்ப்செட் பக்கம் போனார்கள். வெள்ளிக் கற்றையாய் பம்ப்செட் பைப்பில் இருந்து தண்ணீர் வேகமாய் தொட்டியில் விழுந்து வாய்க்கால் வழியாக நெற்பயிர்களுக்குப் பாய்ந்தது.

“குளிங்களேன்... குளியல் சொகமா இருக்கும் “ச்சே, ஒரே வெட்டவெளி. அங்கங்க ஆம்பிளைங்க நடமாட்டம் வேற தெரியிது இதுல போய் எப்பிடி பொம்பளைங்க குளிக்க முடியும்?”

சௌமியனின் மனைவி சங்கீதா கறாராகச் சொல்லவும் குளிக்கலாம் என்ற மனதிற்குள் துளிர்த்த ஆசைக்கு அணை போட்டுவிட்டாள் அகிலா. ஆண்கள் மட்டும் ஆசை தீரக் குளித்தார்கள். வேலியோரம் காய்த்திருந்த வெள்ளரிக்காய், கண்மாய்க் கரையில் வெட்டிக்  கொடுத்த நொங்கு முதலியனவற்றை சுவைத்துவிட்டு இரண்டு மணி வாக்கில் தர்மராஜ் வீட்டுக்கு வந்தார்கள். திருப்தியான விருந்தை முடித்து ஒரு மணி நேரம் உறங்கி எழுந்து  மாலைத் தேநீர்  பருகிவிட்டு ஐந்தரைப் பேருந்தில் மானாமதுரை வந்து சேர்ந்தார்கள். மறுநாள் மதுரையிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற விசித்திரம் போனார்கள். சென்னை கிஷ்கிந்தா மாதிரி ஐம்பது ஏக்கர் பரப்பளவில் எங்கு பார்த்தாலும் செயற்கை நீர் வீழ்ச்சிகளால் வடிவமைக்கப்பட்ட சுற்றுலா மையம் அது.

விடுமுறை தினத்தில் ஜனங்கள் இங்கு வந்து குமிந்து விடுவார்கள். நபர் ஒன்றுக்கு ஐநாறு ருபாய் கட்டணம் என்ற போதிலும் வருகிற கும்பல் குறையவில்லை. கார்களிலும் வேன்களிலும் வந்தவண்ணம் இருந்தனர். ஐநாறு ருபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு இங்கு குளிப்பது அபத்தம் என்று எண்ணுபவர்தான் சௌமியன். இருந்தாலும் பிரிய மகள் பிரியப்படும்போது மறுக்க மனதில்லை.

நான்கு பேர்களுக்கும் ரெண்டாயிரம் ருபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தார்கள். ஏந்தல் கிராமத்தில் வெட்ட வெளியா இருக்கு.. ஆம்பளைங்க நடமாட்டம் இருக்கு என்று பம்ப்செட்டில் குளிக்கத் தடை போட்ட சங்கீதா இங்கு உற்சாகமாய்க் குளிக்கத் தொடங்கினாள். வெட்ட வெளிகள், அங்கங்கே ஆண்களின் கழுகுப் பார்வைகள் பற்றியெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. விதவிதமான நீச்சல் குளங்கள், வித்தியாசமான நீர்வீழ்ச்சிகளில் நேரம் போவது தெரியாமல் குளித்தார்கள். ஒரு கட்டத்தில் சோர்வு ஆக்கிரமிக்க, பசி வயிற்றைக் கிள்ள, தண்ணீரில் இருந்து வெளியேறினார்கள்.

சாப்பாடு வெளியில் இருந்து கொண்டு வரக் கூடாது என்பது நிர்வாகத்தின் நிபந்தனை. அதனால் உள்ளே இயங்கும் உணவு விடுதிக்குள் நுழைந்தார்கள். பிரியாணி மட்டுமே இருந்தது. சுவை குன்றி இருந்தபோதிலும் பசி, ருசி அறியவில்லை. அதன் பிறகு அங்கிருந்த பல விதமான ராட்டினங்கள், ஜெயிண்ட் வீல் வகையறாக்களில் பொழுதைப் போக்கிவிட்டு ஐந்து மணிவாக்கில் விசித்திரத்தை விட்டு வெளியேறினார்கள். அங்கிருந்து டவுன் பஸ் ஏறி மதுரை வந்து, மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால் போய்விட்டு இரவு டிபனை மதுரையிலேயே முடித்துவிட்டு வீடு வந்து சேர இரவு எட்டரையாகிவிட்டது. அலைந்த அலுப்பில் அனைவரும் படுக்கையில் விழுந்து விட்டார்கள்.

சௌமியனுக்குத் தூக்கம் வரவில்லை. அன்றைய செலவு கணக்கை எழுதிப் பார்த்தார். மொத்தச் செலவு தொகை ஐயாயிரத்தைத் தொட்டது.

“என்னதான் சிக்கனமாச் செலவளிச்சாலும். மாசச் செலவு ஐயாயிர ருபாய்க்கு வந்திடுது. எதக்
கொறைக்கிறதுன்னு தெரியல. வெலவாசி தீயா இருக்கு.. என்ன பண்றது” என்று காலையில் வாசல் தெளிக்கும் அம்மா வருத்தம் தோய்ந்த குரலில் புலம்பியது சௌமியன் நினைவில் வந்து
நிழலாடியது.
- செல்வகதிரவன் (9944509530- selvakathiravan54@gmail.com)