Friday, August 5, 2016

விசித்திரங்கள் - சிறுகதை

அகிலாஆனந்த் தம்பதியர் மானாமதுரைக்கு வந்திருக்கிறார்கள். ஆம். திருமணம் முடிந்து வரவேற்பு மறுவீடு இரண்டாம் மறுவீடு முதலிய விசேடங்கள் நடந்த பிறகு புருசனுடன் பிறந்த வீடு வந்திருக்கிறாள் அகிலா. வீடு கலகலப்பாக காட்சியளித்தது. கவனிப்புக்கள் விருந்து ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.

அகிலா.. தர்மராஜ் மாமா நீங்க வந்தா அவங்க கிராமத்துக்கு  உங்களக் கூட்டிக் கிட்டு வரச்சொன்னாரு நாளைக்கு ஏந்தலுக்கு போய்ட்டு வருவோமா..? “

கிராமத்துக்குப் போக அவுங்க என்ன சொல்றாங்களோ..?

கிராமம்னா ஆரம்பகால பாரதிராஜா படத்துல காட்டுற கிராமம் மாதிரி இருக்கும்னு நெனச்சுக்கிடப் போறாரு மாப்பிள்ள. இன்னக்கி எல்லாக் கிராமங்களுக்கும் டவுண் பஸ், மினி பஸ் போகுது. எல்லா கிராமத்திலயும் பன்னெண்டாம் வகுப்பு வரைக்கும் பள்ளிக்கூடம் இருக்கு. டுவீலர், செல் எல்லாரும் வச்சிருக்காங்கசரிப்பா ஒங்க மாப்பிள்ளையக் கேக்குறேன்..

தர்மராஜ், சௌமியனுக்கு கல்லூரியில் படித்த காலங்களில் இருந்து  நண்பர். தபால் துறையில்
பணியாற்றி பணி ஓய்விற்குப் பின் பூர்வீக கிராமமான ஏந்தலில் செட்டில் ஆகியிருக்கிறார். மகள் திருமணமாகி கோவையில் இருக்கிறாள். மகன் சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பாக்கிறான். நகர வாழ்க்கை ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விட்டதால.. அவரும் மனைவியும் பிறந்த மண்ணிற்குத் திரும்பி விட்டார்கள்.

நாளொன்றுக்கு நான்கு முறை ஏந்தல் கிராமத்திற்கு மானா மதுரையில் இருந்து பேருந்து போய் வருகிறது. சௌமியன், அவரது மனைவி, புதுமணத் தம்பதியர் ஆகிய நான்கு பேர்களும் பத்து மணி பஸ்ஸில் ஏந்தலில் இறங்கினார்கள். ஏற்கனவே அலைபேசி வாயிலாக தகவல் சொல்லி இருந்ததால் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார் தர்மராஜ்.

வீட்டிற்குப் போய் தேநீர் அருந்தி விட்டு ஏந்தல் கிராமத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள்.  தர்மராஜ் மனைவிக்கு மதியச் சாப்பாடு தயாரிக்கும் வேலை இருந்ததால் அவள் வரவில்லை.

இந்த வருடம் போதுமான மழை பெய்ததால் கிராமம் பசுமையாகத் தென்பட்டது. நிறைமாதக் காப்பிணியாய் ஊர்க்குளம் நிரம்பி இருந்தது. ஏந்தல் பெயருக்கேற்றபடி சின்ன ஊராக இருந்தாலும் அங்கு பெரிய பெருமாள் கோயில், தேவாலயம், மசூதி முதலிய வெவ்வேறு மத வழிபாட்டுத் தலங்கள் இருந்தன. ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு வங்கி, அஞ்சலகம் ஆகிய அரசு சார்ந்த அலுவலகங்களும் இயங்கின. ஆரம்பப் பள்ளியும் மிகப் பெரிய விளையாட்டு மைதானத்தை உள்ளடக்கிய மேனிலைப் பள்ளிக்கூடமும் பிரம்மாண்டமாய்த் தென்பட்டன. சாதி மதங்கள் வெவ்வேறாக இருந்தபோதிலும் ஒருவருக்கொருவர் முறை சொல்லி விளிக்கும் அன்னியோன்யம் ஜனங்களிடம் வெளிப்பட்டது.

கண்மாய்க் கரை கடந்து வயல் வரப்புக்கள் தாண்டி பம்ப்செட் பக்கம் போனார்கள். வெள்ளிக் கற்றையாய் பம்ப்செட் பைப்பில் இருந்து தண்ணீர் வேகமாய் தொட்டியில் விழுந்து வாய்க்கால் வழியாக நெற்பயிர்களுக்குப் பாய்ந்தது.

குளிங்களேன்... குளியல் சொகமா இருக்கும் ச்சே, ஒரே வெட்டவெளி. அங்கங்க ஆம்பிளைங்க நடமாட்டம் வேற தெரியிது இதுல போய் எப்பிடி பொம்பளைங்க குளிக்க முடியும்?”

சௌமியனின் மனைவி சங்கீதா கறாராகச் சொல்லவும் குளிக்கலாம் என்ற மனதிற்குள் துளிர்த்த ஆசைக்கு அணை போட்டுவிட்டாள் அகிலா. ஆண்கள் மட்டும் ஆசை தீரக் குளித்தார்கள். வேலியோரம் காய்த்திருந்த வெள்ளரிக்காய், கண்மாய்க் கரையில் வெட்டிக்  கொடுத்த நொங்கு முதலியனவற்றை சுவைத்துவிட்டு இரண்டு மணி வாக்கில் தர்மராஜ் வீட்டுக்கு வந்தார்கள். திருப்தியான விருந்தை முடித்து ஒரு மணி நேரம் உறங்கி எழுந்து  மாலைத் தேநீர்  பருகிவிட்டு ஐந்தரைப் பேருந்தில் மானாமதுரை வந்து சேர்ந்தார்கள். மறுநாள் மதுரையிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற விசித்திரம் போனார்கள். சென்னை கிஷ்கிந்தா மாதிரி ஐம்பது ஏக்கர் பரப்பளவில் எங்கு பார்த்தாலும் செயற்கை நீர் வீழ்ச்சிகளால் வடிவமைக்கப்பட்ட சுற்றுலா மையம் அது.

விடுமுறை தினத்தில் ஜனங்கள் இங்கு வந்து குமிந்து விடுவார்கள். நபர் ஒன்றுக்கு ஐநாறு ருபாய் கட்டணம் என்ற போதிலும் வருகிற கும்பல் குறையவில்லை. கார்களிலும் வேன்களிலும் வந்தவண்ணம் இருந்தனர். ஐநாறு ருபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு இங்கு குளிப்பது அபத்தம் என்று எண்ணுபவர்தான் சௌமியன். இருந்தாலும் பிரிய மகள் பிரியப்படும்போது மறுக்க மனதில்லை.

நான்கு பேர்களுக்கும் ரெண்டாயிரம் ருபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தார்கள். ஏந்தல் கிராமத்தில் வெட்ட வெளியா இருக்கு.. ஆம்பளைங்க நடமாட்டம் இருக்கு என்று பம்ப்செட்டில் குளிக்கத் தடை போட்ட சங்கீதா இங்கு உற்சாகமாய்க் குளிக்கத் தொடங்கினாள். வெட்ட வெளிகள், அங்கங்கே ஆண்களின் கழுகுப் பார்வைகள் பற்றியெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. விதவிதமான நீச்சல் குளங்கள், வித்தியாசமான நீர்வீழ்ச்சிகளில் நேரம் போவது தெரியாமல் குளித்தார்கள். ஒரு கட்டத்தில் சோர்வு ஆக்கிரமிக்க, பசி வயிற்றைக் கிள்ள, தண்ணீரில் இருந்து வெளியேறினார்கள்.

சாப்பாடு வெளியில் இருந்து கொண்டு வரக் கூடாது என்பது நிர்வாகத்தின் நிபந்தனை. அதனால் உள்ளே இயங்கும் உணவு விடுதிக்குள் நுழைந்தார்கள். பிரியாணி மட்டுமே இருந்தது. சுவை குன்றி இருந்தபோதிலும் பசி, ருசி அறியவில்லை. அதன் பிறகு அங்கிருந்த பல விதமான ராட்டினங்கள், ஜெயிண்ட் வீல் வகையறாக்களில் பொழுதைப் போக்கிவிட்டு ஐந்து மணிவாக்கில் விசித்திரத்தை விட்டு வெளியேறினார்கள். அங்கிருந்து டவுன் பஸ் ஏறி மதுரை வந்து, மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால் போய்விட்டு இரவு டிபனை மதுரையிலேயே முடித்துவிட்டு வீடு வந்து சேர இரவு எட்டரையாகிவிட்டது. அலைந்த அலுப்பில் அனைவரும் படுக்கையில் விழுந்து விட்டார்கள்.

சௌமியனுக்குத் தூக்கம் வரவில்லை. அன்றைய செலவு கணக்கை எழுதிப் பார்த்தார். மொத்தச் செலவு தொகை ஐயாயிரத்தைத் தொட்டது.

என்னதான் சிக்கனமாச் செலவளிச்சாலும். மாசச் செலவு ஐயாயிர ருபாய்க்கு வந்திடுது. எதக்
கொறைக்கிறதுன்னு தெரியல. வெலவாசி தீயா இருக்கு.. என்ன பண்றது என்று காலையில் வாசல் தெளிக்கும் அம்மா வருத்தம் தோய்ந்த குரலில் புலம்பியது சௌமியன் நினைவில் வந்து
நிழலாடியது.
- செல்வகதிரவன் (9944509530- selvakathiravan54@gmail.com)



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.