Friday, August 5, 2016

மோடி மனம் வைப்பாரா


காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்; ஒண்டர்புல் காஷ்மீர் என்று இதயவீணை திரைப்படத்தில் காஷ்மீரின் அருமை பெருமை களைப் பாடியாடிக் கொண்டாடுவார் எம்.ஜி.ஆர். ஆம்; பனி படர்ந்த மலையின் மடியில் அமைந்திருக்கும் காஷ்மீர் இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து என்று போற்றப்படுகிறது. ஆனால், நாடு விடுதலை பெற்ற நாளிலிருந்து காஷ்மீர் துயரங்களின் தேசமாகவே தொடர் கிறது. பிரிவினையின்போது இந்தியாவுடன் இணைந்த காஷ்மீர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370ன் அடிப்படையில் தனி அந்தஸ்து பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. ஜம்மு, காஷ்மீர், லடாக் எனும் மூன்று எழில்மிகு பகுதிகளைக் கொண்ட இந்த அழகிய பள்ளத்தாக்கு, இன்று இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான பகைமையின் அடையாளமாகிவிட்டது. காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் காஷ்மீர் விடுதலை பெற்றுத் தனி நாடாகப் பிரிந்துபோக வேண்டும் என்று நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். ஆயுதந்தாங்கிப் போராடிவரும் பல அமைப்புகளில் ஒன்று ஹிஜ்புல் முஜாகிதீன். இதன் தலைவர்களில் ஒருவரான புர்ஹான் வானி என்ற இளைஞர் இந்தியப் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதே இன்றைய வன்முறையின் தொடக்கப் புள்ளி. இதுவரை 45 பேர் பலியாகியுள்ளனர். 3400 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காஷ்மீரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் கொடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தச் சூழலில் மத்திய அரசும் காஷ்மீர் மாநில அரசும் இப்பிரச்சனையை இராணுவத்தின் துணை கொண்டு மட்டுமே தீர்க்க முனைவது அதை மேலும் சிக்கலாக்கவே உதவும். அனைத்துத் தரப்பு மக்களையும் கூட்டி அர்த்தமுள்ள பேச்சு வார்த்தையை உடனே துவக்கிட வேண்டும். கலகக்காரர்களை அடக்கிட காவல்துறை பிரயோகித்த பெல்லட் குண்டுகளால் பலரும் கண்கள் பாதிக்கப்பட்டு பார்வை இழந்துள்ளனர். இவர்களுக்குரிய மருத்துவச் சிகிச்சையும் இன்றைய உடனடித் தேவை. காஷ்மீர் மாநிலத்தில் அமலாக்கப்பட்டு வரும் இராணுவத்திற்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பது காஷ்மீர் மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இதையும் மத்திய அரசு உடனே நிறைவேற்றிட வேண்டும். காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை விலக்கிட வேண்டும் என்ற சங் பரிவாரங்களின் அடாவடிப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.. மோடி மனம் வைப்பாரா?

ஆசிரியர் குழு


0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.