1929-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் செயல்படுத்தப் பட்ட கல்வித் திட்டம்தான் விடுதலை பெறும் வரையில் இருந்தது. அதன்படி முதன்மொழி ஆங்கிலம். தாய்மொழியோ வட்டார
மொழியோ கட்டாயமில்லை. வடமொழியையும் இரண்டாம் மொழியாகக் கற்கலாம். சுதந்திரம் அடைந்தபிறகு சென்னை
மாகாணத்தில் 1948-ஆம் ஆண்டு சீர்திருத்தப்பட்ட கல்வித்திட்டம்
வெளியிடப்பட்டது. தாய்மொழி அல்லது வட்டார மொழி முதன் மொழியாயிற்று. ஆங்கிலப் பாடத்திற்கு ஒதுக்கப்பட்ட 12 பிரிவேளைகள் 6 ஆகக் குறைக்கப்பட்டது. தாய்மொழிவழிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. நகர்ப்புறங்கள் சிலவற்றில் இருந்த
ஆங்கிலவழி வகுப்புகளில் சேர்ந்திட கடுமையான நிபந்தனைகள் இடப்பட்டன. ஒரு பிரிவு மட்டுமே ஆங்கிலவழி வகுப்பு அனுமதிக்கப்பட்டது. வட்டாரமொழிவழி வகுப்புகள் கட்டாயமாக இருக்க வேண்டும். ஆங்கிலவழி வகுப்பில் சேர்ந்திட தாய்மொழி வட்டார மொழியல்லாதும், பெற்றோர் மாநிலம் விட்டு மாறுதலுக்கு உட்படுபவர் ஆகவும், பேச்சு மொழியாக மட்டும் தெரிந்திருக்காது தம் தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்தவராகவும் தொடக்கக் கல்வியும் ஆங்கிலவழியில் பெற்றிருப்பவராகவும் உள்ளவரே ஆங்கிலவழி வகுப்புகளில் சேர அனுமதிக்கப்பட்டனர். இந்த நிபந்தனைகள் ஆங்கிலவழி வகுப்புச் சேர்க்கையை வெகுவாகக்
கட்டுப்படுத்தின. மேலும் ஆங்கிலவழி வகுப்பில் சேர அரசின் ஆணையும்
பெறவேண்டும். ஒரு அமைச்சர் தன் மகனை ஆங்கிலவழி வகுப்புகளில் சேர்க்க தம் முன்னோர் திப்பு சுல்தானின் கீழ் குறுநில மன்னராக
இருந்தார் என்று கூறி இடம் பெற்றதும் உண்டு! இன்று ஆங்கில மோகம் தமிழினைச் சீரழித்து வருகிறது.
1948 கல்வித் திட்டத்தின் அடுத்த சிறப்பு வரலாறு, புவியியல் என்று தனிப் பாடங்களாகக் கற்பிப்பதை மாற்றி இரு பாடங்களையும் இணைத்து சமூகவியல் என்ற பெயரில் இந்தியாவில் முதன் முதலாகக் கொணர்ந்தது. அரசர்கள், போர்கள், ஆண்டுகள் என்று படித்த
வரலாறு மனிதகுல வரலாறாக அறியப்படும் உயர்ந்த நோக்கோடு இப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வரலாறையும் புவியியலையும் இணைத்துக் கற்பதே மனித வரலாறாகும். எடுத்துக்காட்டாக,
மேட்டுப்பாளையம் தொடங்கி
ராஜபாளையம் வரையில் அமைந்த கரிசல் மண்ணில் தெலுங்கு பேசுவோர் எங்கிருந்து வந்தனர், ஏன் வந்தனர், வந்த இடத்தில் பிறரோடு எப்படி சேர்ந்து வாழ்கின்றனர் என்று அறிவதே சமூகவியல். படையெடுப்புகளா, பஞ்சமா, கரிசல் மண்ணில் வாழ்ந்தவர்
வளமான நிலங்களை விட்டு கரிசல் மண்ணையே தேர்ந்தெடுத்ததேன் என்று அறியச் செய்வது சமூகவியல். போர்கள் மக்களை இடம்பெயரச் செய்யும் என்ற படிப்பினை முக்கியமாகக் கருதப்பட்டது. பாடத்திட்டத்தில் சில நூல்கள்
குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றில். ஒன்று சி.ஈ.எம். ஜோட் எழுதிய
புகழ் பெற்ற நூல் மனித நாகரீக வரலாறு (History of civilisation). புதிய அணுகுமுறையில் பாடநூல் எழுதும் ஆற்றல் கொண்ட ஆசிரியர்கள் இல்லாததும், பன்னோக்குத் திறன் வகுப்பறை
ஆசிரியர்களிடம் இல்லாததும் சமூகவியல் பாடத்திட்டத்தின் உயர்
நோக்கங்களை முறியடித்தன. பாடநூல்கள் வரலாறு, புவியியல் எனத் தனித்தனிப் பகுதிகளாக
எழுதப் பெற்றன.. இன்றுவரை அதுவே தொடர்கின்றது.
அப்பாடத்திட்டத்தில் மொழிக் கற்றலுக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டது. நூலகப் பயன்பாடு வலியுறுத்தப்பட்டது. ஆறாம் வகுப்பிலிருந்து ஒவ்வொரு
மாணவரும் ஒரு ஆண்டில் குறைந்தது ஆறு தாய்மொழி நூல்களையும், ஆறு ஆங்கில நூல்களையும் படிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. நான் கிராமப்புறத்தில்
பணியாற்றியபொழுது பல மாணவர்கள் பத்து புத்தகங்கள் படித்ததைக் கூடப் பார்த்துள்ளேன். பொது நூலகத்தைத் தவிர வகுப்பு
நூலகங்களும் இயங்கின. மாணவர் தாமாகப் படிக்கத் தகுந்த நூல்கள் வகுப்புவாரியாக வெளிவந்தன. அதே போல வகுப்பறை
நூலகத்திற்கு மாணவர் நூல் நன்கொடையும் அளிப்பர். ஆசிரியர் இயக்கமொன்றின் ஆய்வுப் பிரிவு விருப்பப்பட்ட சில பள்ளிகளில் நூலக மையக் கல்வித் திட்டத்தைச் (Library
Centred learning) செம்மையாக செயல்படுத்தியது. பாடநூல்களினின்று மாறுபட்ட
பார்வையுடன் எழுதப்பெற்ற நூல்களையும் வெளியிட்டார்கள். ஆசிரியர் கற்றலுக்குத் துணைபுரிபவர் என்றிருக்க மாணவர்
தாமே கற்க முற்பட்டது இத்திட்டத்தின் சீரிய விளைவு. இது வகுப்பறைக்
கற்றலில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது. இத்திட்டத்தினை
கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும்
என்ற எதிர்பார்ப்புதான் பொய்த்துப் போனது.
மற்றொரு புதிய முயற்சி குடிமைப் பயிற்சி (Citizenship
training). நாட்டுப் பற்றை வளர்க்கவும், சமூகத்தில் நல்ல குடிமகனாக விளங்கிடவும் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பள்ளி மாணவர் பாராளுமன்றம் மட்டுமின்றி வகுப்பிலும் மாணவர்க்குத் தலைமைப் பண்பு பெற்றிட வாய்ப்புகள் தரப்பட்டன. இன்று அப்பயிற்சி இல்லை.
ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியிலும் முதல் மூன்று ஆண்டுகள் வேளாண்மை, தச்சு வேலை, நெசவு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கைத்தொழிலினைக்
கற்றுக் கொடுக்க வேண்டும். நான் பல்லடத்தில் இருந்தபொழுது வேளாண்மைத் தொழிலில் சக்கரைவள்ளி, கேரட், முள்ளங்கி போன்றவற்றை அவ்வட்டாரத்தில் முதன் முறையாகப் பயிர் செய்தோம். மூன்று ஆண்டுகள் எடைமிக்க முட்டை, சேவல், மிக அதிக முட்டை ஆகியவற்றில் பள்ளியின் கோழிப்
பண்ணை மாநில அளவில் பரிசுகள் பெற்றது. அவிநாசிப் பள்ளியில் நூற்கோர்ப்புப் (book
binding) பிரிவின் மூலமாக அப்பள்ளி மாணவர்க்கு
மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் இருந்த தொடக்கப்பள்ளிகளுக்கும்
நோட்டுப் புத்தகங்கள் தயார் செய்து கொடுத்தது. பள்ளிப்படிப்பின் கடைசி
மூன்று ஆண்டுகளில் ஒரு விருப்பச் செயல் ஒன்றினைக் (hobby) கற்க
வகை செய்தல் வேண்டும். இன்று தேர்விற்குரிய பாடங்களைத் தவிர
பிற செயல்பாடுகள் முடக்கப்பட்டு விட்டன.
உடல், உள்ளம், உணர்வு
ஆகியவை மூன்றையும் வளர்ப்பதே 1948-ஆம் ஆண்டு பாடத்திட்டத்தின் நோக்கமாகும். அவ்வகையில்
உடற்கல்விக்கு சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பள்ளி நேரத்தில் வாரம் இரு பிரிவேளைகளும், பள்ளி நேரத்திற்கப்பால் இரண்டு பிரிவேளைகளும் கட்டாய உடற்கல்விக்கு ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தது 5 ஏக்கர் விளையாட்டுத்திடல் இருந்தால்தான் பள்ளி தொடங்கவே அனுமதியளிக்கப்பட்டது. மாணவர் திடலை முழுமையாகப் பயன்படுத்துவர். மாலை 6 மணி
வரை மைதானம் முழுவதும் மாணவர் நிரம்பியிருப்பர். ஆசிரியர்களும் மாலை
விளையாட்டுகளில் பங்கேற்பர். இன்று பெரும்பான்மையான மெட்ரிக் பள்ளிகளில் விளையாட்டுத் திடல் இல்லாமலே அங்கீகாரம்
பெறுகின்ற நிலையைக் காண்கின்றோம். திடல் உள்ள
பள்ளிகளிலும் மாலை விளையாட்டுகள் நின்றுவிட்டன. பள்ளி முடிந்தவுடன் தனிப் படிப்பிற்கு ஓட வேண்டுமல்லவா..?
கற்பித்தலில் செவி-கண்
கருவிகளின் (audio - visual) பயன்பாட்டைக் கல்வித் திட்டம் வற்புறுத்தியது. ஒவ்வொரு
பள்ளியிலும் வானொலி, 35மிமீ மற்றும் 16 மிமீ புரொஜெக்டர்கள் ஆகியவை வாங்கப்பட வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டது. திருச்சி வானொலியின் கல்வி நிகழ்ச்சிகளை மாணவர்
வெட்டவெளியில் உட்கார்ந்து கேட்பர். நிகழ்ச்சி பற்றிய கருத்து நிலையத்திற்கு அனுப்பப்படும். பாடங்களையொட்டிய மென்பொருள்களை வாங்கவும் அனுமதிக்கப்பட்டது. அது தவிர பொதுக் கல்வி இயக்குனர் அலுவலகம், பிரிட்டிஷ்
கௌன்சில், அமெரிக்கத் தூதரகத்தினின்றும் திரைப்படம்
உள்ளிட்ட மென்பொருள்கள் பெறப்பட்டு திரையிடப்படும். டிக்கன்ஸ் நாவல்கள், மேரி க்யூரி
வரலாறு போன்ற ஆங்கிலப் படங்களையும் மாணவர்கள் திறந்த வெளியில் உட்கார்ந்து
மிகுந்த ரசனையோடு பார்ப்பார்கள். ஆங்கிலத் துணைப்பாடமாக இருந்த கதைகளின் திரைப்படங்கள் வாடகைக்கு எடுத்துத் திரையிடப்படும். புதிய செவி-கண் கல்விக் கருவிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இயக்குநரகத்தில் செவி-கண் கல்வி
அதிகாரி ஒருவரும் இருந்தார். அது
ஒரு கனாக் காலம் என்றே சொல்ல வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக மாணவரது பள்ளிக் கல்வியின் இறுதி
மூன்றாண்டு பாடம் மட்டுமின்றி பிற திறன் வளர்ச்சியையும் பதிவு செய்த எஸ்.எஸ்.எல்.சி சான்றுத் தொகுப்பு நிறுத்தப்பட்டது ஏற்க இயலாது. சென்னைத் தலைமையாசிரியர்கள்
அப்பதிவேடுகளைப் பராமரிக்க நிறைய காலம் தேவைப்படுகின்றது என வாதிட்டனர். விளையாட்டு
உட்பட ஒரு மாணவரது பன்முக வளர்ச்சியை அறிய உதவும் ஒரு அடையாளத்தைக் கைவிட்டது ஒரு தவறான முடிவு என்பது என்னுடைய
கருத்து..
இக்கட்டுரையில் ஒரு சிலவற்றையே
மையப்படுத்தியுள்ளேன். பள்ளிகளின் சுதந்திர இயக்கம் தடை செய்யப்பட்டு தலைமையாசிரியர்களுக்கு எம்.ஈ.ஆர். வழங்கியுள்ள அதிகாரங்களைக் கல்வி இயக்ககம் பறித்துக் கொண்டதும் புதிய
முயற்சிகள் மேற்கொள்ளாது சொன்னதைச் செய்து விட்டுப்
போவோம் என்ற மனப்பான்மயை வளர்த்துள்ளது.
(044-23620551
/ rajagopalan31@gmail.com)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.