குஜராத்தில் கல்லூரி மாணவி ஜார்னா ஜோஷி சொந்தக்காரர் வீட்டுக்குப்
போனார். வீட்டை ஒட்டியிருந்த தொழிற்சாலையில் விதவிதமான சத்தங்கள். 10, 15 வயதுகளில் உள்ள நிறைய சிறுமிகளை வண்டிகளில் அங்கே அதிகாலையில் அழைத்துவருவதும் இரவில் அங்கிருந்து அழைத்துச் செல்வதுமாக இருந்திருக்கிறார்கள். ஜார்னாவுக்குச் சந்தேகம் வந்தது. நேரே போய் அந்தத்
தொழிற் சாலையில் வேலை கேட்டுச் சேர்ந்தார். அது கப் அன்ட் சாஸர்கள் தயாரிக்கும் ஆலை. கடும் வெப்பத்தில் ஈவுஇரக்கமின்றிச் சிறுமிகளை வேலை வாங்கியிருக்கிறார்கள். ஜார்னா இதுபற்றி முதல்வர் அலுவலகம் தொடங்கி எல்லா அரசு அலுவலகங்களுக்கும் புகார்களை அனுப்ப ஆரம்பித்தார். கடைசியாக, அரசு தலையிட்டது. 11 சிறுவர்களும் 100 சிறுமிகளும் மீட்கப்பட்டனர். இதன் விளைவாக, பாராட்டு மட்டுமல்ல; ஜார்னாவுக்கு அடி, உதையும் கிடைத்தது. ரௌடிகளை வைத்துத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஜார்னா அசரவில்லை. உயிரோடு இருக்கும்வரை அநீதிக்கு எதிராகப் போராடுவேன் என்கிறார். உலகில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 22 கோடி குழந்தைத் தொழிலாளர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் இந்தியர்கள். 2011 இந்திய மக்கள்தொகைக் கணக்குப்படி 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் 43 லட்சம் பேர். இந்திய அரசியல் சாசனம் தீங்கு விளைவிக்கும் தொழில்களில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்கிறது. 1986-ல் குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. 2014-ல் அமெரிக்கா, குழந்தைகளின் உழைப்பால் உருவாகும் பொருட்களைப் பட்டியலிட்டு, அதைத் தயாரிக்கும் 74 நாடுகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தடைவிதித்தது. அதில் இந்தியாவும் ஒன்று. பீடி, செங்கல், பட்டாசு, தோல் பொருட்கள் தயாரிப்பு இப்படி 23 வகையான பொருட்கள் உற்பத்தியில் இன்னமும் குழந்தைகள் தங்களை வந்து ஜார்னா போன்ற அக்காக்கள் மீட்பார்கள் என்று காத்திருக்கிறார்கள்.
( நன்றி : த. நீதிராஜன், தி இந்துவில் எழுதிய கட்டுரை)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.