வைரமுத்துவின் கவிதை
ஒன்று உண்டு. காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஒளிவட்டம்
தெரியும் என்று தொடங்கும் அந்தக் கவிதை காதலிப்பதன் சுகமான
சங்கடங்களைச் சொல்லியிருக்கும். அதே போல் இன்றைய
காலகட்டத்தில் முகநூல் போன்ற ஊடகங்களில் கருத்துப்
போராளியாக இருப்பவர்களின் சங்கடங்களை விவரித்துப் போராளியாக இருந்து பார் என்று எழுதினால்
பொருத்தமாக இருக்கும்.
சமூக ஊடகப் போராளியின்
முதல் அடையாளம் அவர்களின் இணையதள முகநூல் பக்கத்தின் முகப்பில் இருக்கும் புகைப்படம்.
அதுதான் அவர்களது விசிட்டிங்க் கார்டு . புகழ்பெற்ற போராட்டக்காரரின் புகைப்படத்தை
வைக்க வேண்டும். அவரைப் பற்றி ஏதாவது நாலு (இல்லை இரண்டு) விஷயங்கள் கேள்விப்பட்டிருந்தால்
போதும். சே குவாரா, மார்டின் லூதர் கிங், மா சே துங் என்று
கூகுளில் தேடி வைக்க வேண்டும். சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை போன்ற விஷயங்களில்
ஆர்வமுள்ள போராளி என்றால் இருக்கவே இருக்கிறார் அப்துல்
கலாம். இல்லையென்றால் வெடிக்கும் எரிமலை , துடிக்கும் இதயம், கடிக்கும் நாய் என்று
ஏதேனும் பூடகமான படங்களை வைக்கலாம்.
முக்கியமாக ஏதேனும் பொன்மொழியை
அந்தப் புகைப்படத்தின் அடியில் பொறிக்க வேண்டும். அந்தப்
பொன்மொழி அவர்கள் சொன்னதாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தீர்களேயானால் நீங்கள் போராளி
ஆகமுடியாது. பொன்மொழி ஏதும் கிடைக்கவில்லை என்றால் ஆட்டோக்களின் பின்பக்கம், அரசுப் பேருந்துகளின் முன்பக்கம் தேடலாம். (குறிப்பு : நாம் இருவர் நமக்கிருவர், கரம் சிரம் புறம் நீட்டாதீர்கள்
என்பவையெல்லாம் பொன்மொழிகள் ஆகா).
பொன்மொழிகளும் பொருத்தமாக இருக்கவேண்டும்
என்றில்லை. ஒருமுறை குடிகாரர் ஒருவரிடம் ஏன் குடியை
நிறுத்தமாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் நான் என்ன செய்ய? நான் வேண்டாம் என்றாலும் என் நண்பர்கள் வந்து என்னைத்
தூண்டி விடுகிறார்கள் என்று சொல்லிவிட்டு மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா
விடுவதில்லை என்ற மாசேதுங்கின் மகத்தான பொன்மொழியை உதிர்த்தார். மாவோ இதைக்
கேட்டிருந்தால் சவப்பெட்டிக்குள் மண்டையை முட்டிக் கொண்டிருப்பார்.
மிகமிக முக்கியமான விஷயம் கருத்துச் சொல்வது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன்
வெளியேறியது, கச்சா எண்ணை விலை குறைந்தது தொடங்கி ஏற்காட்டில்
ஏடிஎம் ஒன்றில் ஏசி வேலை செய்யவில்லை,
ஆற்காட்டில் ஒரு
ஆட்டுக்குட்டிக்கு ஐந்து குட்டிகள் பிறந்தன என்று எல்லா விஷயங்களுக்கும்
கருத்துச் சொல்லியே ஆகவேண்டும். குறிப்பாக எல்லோரும் சொல்லும் கருத்துக்கு எதிரானதொரு
கருத்தாக இருக்க வேண்டும். காகம் கருப்பு என்று எல்லோரும்
சொன்னாலும் அது கருப்பல்ல மிகக் குறைந்த வெண்மை (இருளென்பது மிகக்குறைந்த
வெளிச்சம் என்பது போல) என்று வாதிட வேண்டும்.
அடுத்து சினிமா விமர்சனம் செய்வது. ஆஸ்கார்
விருது பெற்ற திரைப்படமானாலும் சரி, ஆறுபேர்கள் கூட
பார்த்திருக்காத திரைப்படமாக இருந்தாலும் சரி, எல்லாத்
திரைப்படங்களுக்கும் விமர்சனம் எழுத வேண்டும். அதுவும் கதை
விவாதம் தொடங்கியது முதல் படபூஜை, ஆடியோ ரிலீஸ், போஸ்டர் ஒட்டுவது என்று என்று எல்லா
நிலைகளிலும் கருத்துச் சொல்லவேண்டும்.
முக்கியமாக மிகவும் பாராட்டுக்களைப்
பெற்ற திரைப்படத்தைக் குப்பை என்று ஒரே வார்த்தையில்
விமர்சித்துவிட்டுச் சில வெடிகுண்டுகளை வீசவேண்டும். அதேபோல் இயக்குநராலேயே முழுமையாகப்
பார்க்கமுடியாத திரைப்படம் ஒன்றை தலையில் வைத்துக்
கொண்டாடவேண்டும். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு குறியீடு இருப்பதாகக்
கூறவேண்டும். படம் முடிந்து பத்து நிமிடம் கழித்துத்தான்
திரைக்கதையிலேயே ஒரு திருப்பம் இருக்கிறது என்று திகிலூட்ட வேண்டும்.
எந்த விஷயத்தைச் சொல்வதாக இருந்தாலும்
எளிமையாகக் கூறிவிடக் கூடாது. நாம் சொல்ல வருவது மக்களுக்கு எவ்வளவுக்கெவ்வளவு
(நாய் குரைக்கும் ஓசை போல் இருக்கிறதே இந்தச் சொல்)
மக்களுக்குப் புரியாமல் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு (அடுத்த தெரு நாயின் பதில்)
நாம் பிரபலமாக இருக்கிறோம் என்று
அர்த்தம். வாழைப்பழத் தோல் வழுக்கும் என்று நேரடியாகச் சொல்லக்
கூடாது. மாறிவரும் சமூக அமைப்புகளின் பல்வேறு கூறுகளின் முரணியக்கமாக
வேளாண்மைத் துறையில் விளைவிக்கும் விளைபொருளான
வாழைப்பழத்தின் மீதான நுகர்வுக்
கலாச்சாரச் செயல்களின் எதிர்வினையாக விளையும் வாழைப்பழத்தின் தோல் மீது ஒரு
மனிதன் புறவெளி நிகழ்வுகளில் முழுப்
பிரக்ஞையின்றி அகவயமாகத் தூண்டப்பட்ட கவனச் சிதறலால் கால்களை வைக்கும்போது
புவியீர்ப்பு விசையின் ஈர்ப்பினால் சமநிலை குலைந்து விழுந்து
விடுவான் என்று ஜிலேபி சுற்ற வேண்டும்.
இப்படியெல்லாம்
இருந்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கையாக சமூக ஆர்வலர் (சண்முக ஆர்வலர் அல்ல-அதற்கு
விபூதியும் பஞ்சாமிர்தமும்தான் கிடைக்கும்) என்ற இணையற்ற பட்டத்துடன் டிவி சேனல்களில்
தோன்றி அனல்பறக்கும் விவாதங்களில் ஈடுபட்டு
தீயணைப்புத்துறையையே திகைக்க வைக்கலாம். ஒருநாள் இணையப் போராளியாக இருந்துபார்த்தால்தான்
அதன் வலிகள் தெரியும். இது எல்லாம் மெய்நிகர் உலகில்
மட்டும்தான்.
நிஜவாழ்வில் போராட்டம்
என்றால் அது எங்கேயோ ஈரோடு பக்கம், தூத்துக்குடிப் பக்கம்
இருக்கு என்று ஓடிவிட வேண்டியதுதான். இது போலி போராளிகளைப்
பற்றி மட்டுமே.
(9443321004 –ramsych2@gmail.com)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.