Friday, August 5, 2016

யாருக்கான உலகமயம் இது - நவீன தாராளமயத்தின் 25 ஆண்டுகள்

பாலத்தின் மீது சத்தத்தோடு ரயில், கீழே மௌனமாக மணல்... (எப்போதோ படித்த புதுக்கவிதை) புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு வெள்ளிவிழா எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடுமையான நெருக்கடியை தேசம் சந்திக்க இருந்த நேரத்தில், 1991ல் பிரதமர் பி. வி. நரசிம்மராவும், அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங்கும் எடுத்த மிகத் துணிச்சலான நடவடிக்கைகளை புளகாங்கிதத்துடன் நினைவு கூர்கின்றனர் காங்கிரஸ் கட்சியின் அறிவுஜீவிகள். மிகப் பெரிய யானை தனது சங்கிலிகளை அறுத்தெறிந்து சுதந்திரமாக நிற்பது போன்ற ஓவியங்களை ஆட்சியாளர்கள் வெளியிட்டு மகிழ்ந்த நாட்கள் அவை. கட்டுப்பாடுகள் நொறுக்கப்பட்டன என்பதுதான் அப்போது அவர்களது தீம் சாங்! யார் வேண்டுமானாலும்   தொழில் தொடங்கலாம், லைசென்ஸ் ராஜ் ஒழிந்தது... தொழிற்சாலைகளை தேவையில்லாமல் ஆய்வாளர்கள் நேரில் சென்று கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்க மாட்டார்கள்... இன்ஸ்பெக்டர் ராஜ் ஒழிந்தது... இனிமேல் வளர்ச்சி, வளர்ச்சி, மேலும் வளர்ச்சிதான் என்று பாடிக் கொண்டிருந்தனர்.

1991ல் பட்ஜெட் உரையினூடே மன்மோகன் ஒரு சலுகையை அறிவித்துவிட்டு, இடதுசாரிகளைப் பார்த்து, இதுவும் WB தரப்பில் வந்த நிர்பந்தம் தான்...நான் குறிப்பிடுவது மேற்கு வங்கத்தை, உலக வங்கியை அல்ல, என்று அத்தனை நக்கல் அடித்தார் ! ஆனால், அடுத்தநாள், அவரது பட்ஜெட் அறிவிப்புகள் பலவற்றை, கிட்டத்தட்ட அதே சொற்களில் வழங்கப்பட்டிருந்த உலக வங்கி அறிக்கையின் வாசகங்களோடு ஒப்பிட்டு நாளேடுகள் அம்பலப்படுத்தி இருந்தன. மக்களுக்கும், உழைப்பாளருக்கும் இருந்த பாதுகாப்புகளைத் தகர்த்துவிட்டு முற்றிலும் பன்னாட்டு நிதி மூலதனத்தின் கட்டுப்பாட்டுக்குள் பொருளாதாரத்தைப் பலியிடும் பட்ஜெட் என்பதை அப்போதே இடதுசாரிகள் ஆழமான முறையில் வேதனையோடு விமர்சித்திருந்தனர். ஆனால் உலகமயத்தை உற்சாகமாக வரவேற்றன கார்பொரேட் ஊடகங்கள்.


அடடா... உலகமயத்தால் எத்தனை எத்தனை நன்மை... ஒரு தொலைபேசி இணைப்புக்கு விண்ணப்பம் கொடுத்துவிட்டு மாதக் கணக்கில் காத்திருப்போம், இரண்டு மூன்று கார்களை விட்டால் வேறு பிராண்ட் கிடையாது, அழுக்கடைந்த நமது கடைகள் எங்கே, ஜொலிக்கும் இப்போதைய மால்கள் எங்கே, அலைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள், நினைத்த நேரத்தில் நினைத்த மனிதரோடு பேசும்  இந்த சுதந்திரம் சும்மா கிடைத்ததா, உள்ளங்கையில் உலகைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டதே உலகமயம்....என்று நடுத்தர வர்க்கத்தின் உற்சாகக் கூவல் கேட்கத்தான் செய்கிறது. உண்மை என்ன?

மேலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நலன்களும் பலன்களும் கீழிறங்கும் எனும் டிரிக்கிள் டௌன் தத்துவத்தைச் சொன்னார்கள் உலகமயத்தின் ஆதரவாளர்கள். போட்டியினால் சந்தையில் விலைகள் குறையும் என்றனர். வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் தொழில் வளர்ச்சி என்றனர். வாழ்க்கைத் தரம் உயரும் என்றனர். ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தேசத்தின்  நிலைமை என்ன......

உலகமயம் என்ற சொல்லை உழைப்பாளி மக்களின் பிரதிநிதிகளே முதலில் முன்வைத்தவர்கள்... உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதே 1848ல் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையின் உரத்த பிரகடனம். உலகின் அனைத்து செல்வங்களும் இயற்கைக்கும் உழைப்புக்கும் பிறந்த குழந்தைகளே என்பர் சமூக விஞ்ஞானிகள். ஆனால் நம் மீது திணிக்கப்படுவது வேறு விதமான உலகமயமாக்கல். மூலதன சுரண்டலின் உலகளாவிய வடிவம் அது. உழைப்பை உறிஞ்சுவோரின் லாபவெறியில் இருந்து படைக்கப்படும் உலகமயமாதல் அது. அதன் நீட்சியே தனியார் மயமும், தாராளமயமும் - இந்த முக்கொள்ளையின் வெள்ளிவிழாதான் இப்போது பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருப்பது! அதன் தலையில் இடி விழ !

தன்னைப் பெருக்கிக் கொண்டே இருப்பதுதான் மூலதனத்தின் ஓயாத செயல்பாடு. அதற்கேற்ற சந்தை விரிவாக்கம்தான் அதன் பொருளாதாரக் கட்டமைப்பு. அதன்கீழ் உலகைக் கொண்டு வந்து நிறுத்துவதே அதன் அரசியல் உத்தி. அதன் அடிமைகளாக மக்களைக் கொண்டு ஆழ்த்துவதே   அதன் சமூக உள்ளடக்கம். அதை நோக்கிய பக்தி உச்சாடனம் அதன் பண்பாட்டு முழக்கம். இந்தப் பொறியில் சிக்குண்டு கிடக்கின்றன பல உலக நாடுகள். நமது நாட்டையே எடுத்துக் கொண்டால், ஆட்சியாளர்கள் ஒருவரை அடுத்தவர் விஞ்சும் வண்ணம் தாராளமய சந்தைப் பொருளாதார அமலாக்கத்தில் தீவிரமாக இருப்பதைப் பார்க்கிறோம்.

எல்லாவற்றையும் தனியாருக்கு சலுகை விலையில் விற்பது என்ற அதிர்ச்சி சூத்திரம். எல்லாவற்றையும் இறக்குமதி செய்யலாம்  என்று உள்ளூர் சந்தையைத் திணறடித்தது. நாணய மதிப்பைக் குறைத்து ஏற்றுமதிக்குக் கிடைக்க வேண்டிய வருவாயைக் குறைத்து, இறக்குமதிக்கு இரட்டிப்பு விலை கொடுக்க வைத்தது தாராளமயம். ஒரு பக்கம் கிடு கிடு என்று டாலர் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்ல, ஏதுமற்றோர் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்து கொண்டே போனது. பட்டினி, வறுமை, வருவாய் ஏற்றத்தாழ்வுப் பள்ளத்தாக்கு பெரிதாகிக் கொண்டே சென்றது என தாராளமய பொருளாதாரத்தின் சாதனை மகத்தானது.

இன்னொருபக்கம் எங்கும் எதிலும் பரவிய அராஜக ஊழல். பல லட்சம் கோடியாக விவரிக்கப்படும் இந்த ஊழலில் சிக்கியுள்ள பணமனைத்தும் கொண்டு நாடு முழுவதும் இலவசக் கல்வியும், சாலை, குடிதண்ணீர், போக்குவரத்து வசதிகளும், மருத்துவமனைகளும் உறுதி செய்திருக்க முடியும். மாறாக, எல்லாவற்றுக்கும் விலை கொடுத்தழ மக்களை நிர்பந்தித்துவிட்டு கொள்ளையை அனுமதிக்கின்றனர் ஆட்சியாளர்கள். கார்பொரேட் கும்பல்களும், பன்னாட்டு  ஏகபோக நிறுவனங்களும் உள்நாட்டு இயற்கை வளங்களை சூறையாடத் துடிக்கின்றன.


காடு வௌஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும்தானே மிச்சம் என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அசாத்திய வரிகளைக் காட்சிப்படுத்திய உலகமயம்தான் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியது. கிராம மக்களை வேலை தேடி நகரங்களை நோக்கி இடம் பெயரச்செய்து கொண்டிருக்கிறது. கல்வி, சுகாதாரம், மருத்துவம் எதுவுமே காசு உள்ளோர்க்கு மட்டுமே என்பதை வாழ்க்கைப் பாடமாக ஏற்க வைத்துவிட்டது உலகமயம். ஏற்றத்தாழ்வின் அடுத்த முனையில் நுகர்வோர்மய போதையில்  பெருகும் சமூகக் குற்றங்கள், பண்பாட்டு வெளியில் அதிகரிக்கும் விபரீத சிக்கல்கள், உறவு முறைகள் விரிசல் வெடிப்புகள் இவையும் உலகமயத்தின் உபயங்களே!

மன்மோகன் சிங் ஆட்சிக்கு வேகம் போதாது, எங்கள் கைவரிசையைப் பாருங்கள் என்று பாஜக
தலைமையிலான ஆட்சியின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கொக்கரிக்கிறார். பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, தனியார்மயம் ஆகியவற்றின் மூலம் தேச உடைமையின் மூலம் சாதாரண
மக்களுக்குச் சென்றடைந்த பலன்களையும் மறுத்து கார்பொரேட் உலகின் தாகத்திற்கு நிதித்துறையை வேட்டைக்காடாக ஆக்கவே துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள். எதிர்வரும் ஜூலை 29 அன்று வங்கித்துறை முழுவதும் நடைபெற இருக்கும் 10 லட்சம் ஊழியர் அதிகாரிகள் அனைத்துச் சங்கங்களின் ஐக்கிய மேடையின் வேலைநிறுத்தம் அதற்கு எதிரான கலகக்குரலே..

தொழிலாளர் சட்டங்களுக்குச் செய்யப்படும் மோசமான திருத்தங்கள், தனியார்மயம், பொது சொத்து விற்பனை, உணவு நெருக்கடி, உள்ளிட்ட தாக்குதல்களுக்கு எதிராக 10 கோடி உழைப்பாளி மக்கள் செப் 2 அன்று ஒரு நாள் தேசம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தத்தில் இறங்க இருக்கின்றனர்.

உலகமயக் கொடுமைகளுக்கு எதிராக ஒன்றுபடும் உழைப்பாளி மக்களை சாதி, இன, மத, மொழி வேறுபாடுகளால் பிளந்து வேறுபடுத்தி உள்ளுக்குள் மோதலை உருவாக்கும் வேலையில் சங் பரிவார சக்திகள் மும்முரமாக இருக்கின்றன. உலகமயமும், வகுப்புவாதமும் கைகோத்து நிற்கும் விசித்திர அபாயக் கூட்டணி அது. இந்த இரட்டை ஆபத்துகளுக்கு எதிராகத் திரளவேண்டிய மக்களை ஒன்றுபடுத்த அறிவார்ந்த விழிப்புணர்வும், தெளிவான தத்துவப் பார்வையும், உறுதியான போராட்ட இயக்கங்களும் மேலாதிக்கம் தேவைப்படும் காலமிது. உலகளாவிய அளவில் நிதி மூலதனத்திற்கு எதிராகப் போராடும் மக்களோடு இந்திய மக்களும் கருத்தால் இணைய வேண்டிய உண்மையான உலகமயப் பார்வையை முன்னெடுக்க வேண்டிய நேரமிது. ஒட்டு மொத்த மக்களது உண்மையான வளர்ச்சிக்கான மாற்றுப் பாதையும் அதுவே.


(94452 59691 –sv.venu@gmail.com).




0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.