Friday, August 5, 2016


இரு வேறு செய்திகளை ஒரே நாளில் படித்தபோது மனிதன் மிருகமானதையும் மிருகம் மனிதனானதையும் உணர முடிந்தது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி  துறையில் பணி புரியும் சுவாதி படுகொலை செய்யப்படுகிறார். அருகில் நின்ற யாரும் அதனைத் தடுக்கவோ அல்லது கொலை செய்துவிட்டு ஆயுதமின்றி ஓடும் வாலிபரைப் பிடிக்கவோ, குறைந்தபட்சம் சத்தம் போடவோ கூட முயற்சிக்கவில்லை.

அதே நாளில் பழநியில் கார் மோதி இறந்த குட்டிக் குரங்கை சக குரங்குகள் காப்பாற்ற   மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய செய்தியும் வெளியானது. அடிபட்டு நடுரோட்டில் இறந்த குட்டியை மற்ற குரங்குகள் எழுப்பிப் பார்க்கின்றன. ரோட்டில் வாகனங்கள் வந்து கொண்டே இருந்ததனால் குட்டியை சக குரங்குகள் தூக்கிக் கொண்டு அருகிலுள்ள கோவில் படிக்கட்டில் வைத்து ஒவ்வொரு குரங்காக அதனை எழுப்ப முயற்சித்த நிகழ்வை நாளிதழில் படித்தபோதே கண் கலங்கியது.

சுவாதியை உடனடியாக யாராவது மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றிருந்தால் பிழைத்திருப்பார் என்பது மருத்துவர்கள் மற்றும் மனித நேயம் உள்ளவர்களின் கருத்து. நமது ஆதி மூதாதையரான குரங்குகள் செய்த வேலையைக் கூட மனிதன் செய்யத் தவறியதால்  இங்கு மிருகமான குரங்கு மனிதனாகவும் மனிதன் மிருகமாகவும் மாறிவிட்டதைக் காண முடிகிறது.

பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்கின்றன அறநூல்கள். ஆனால் சுவாதியைக் காப்பாற்ற நினைக்கக் கூடாத அளவிற்கு மனித நெஞ்சம் மரத்து விட்டது. சுவாதியைக் கொலை
செய்தபோது தடுக்கத் தவறிவிட்டாலும்வெட்டுப்பட்ட சுவாதியைக் காப்பாற்றவாவது யாராவது
முயற்சித்திருக்கலாமே... மனிதம்மரணித்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.

மரணித்து விட்ட மனிதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. வீட்டிலும் பள்ளியிலும் கூறப்பட்ட அறத்தை உணர்த்தும் கதைகளை இன்று கேட்க முடியவில்லை. பிஞ்சிலேயே மனதைப் பக்குவப்படுத்த வழி செய்த நீதிபோதனை வகுப்புகள் இன்று இல்லை. படிப்பது, பார்ப்பது, கேட்பது எல்லாவற்றிலும் வன்முறையும் கலாச்சார சீரழிவுகளுமே நிறைந்து காணப்படுகின்றன. இவைகளில் இருந்து நம் பிள்ளைகளை மீட்டு மீண்டும் மனிதநேயம் மிக்கவராக வளரச் செய்ய நீதிபோதனை / அறநெறி/ மனிதநேய வகுப்புக்களைத் தொடங்க வேண்டும். மதிப்பெண்ணுக்கு இணையாக மனித மாண்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இல்லையேல் நமக்கு கொடுமைகள் ஏதாவது நடக்கும்போது தடுக்க வேறு யாரும் முன்வர மாட்டார்கள்


 (9442055358 - valluvan335@gmail.com)


0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.