2016 ஜூன் 26 ஞாயிறன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி வானொலி உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியது: கணக்கில் காட்டாத சொத்து, பணம் வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன் வந்து விவரங்களை வெளியிட அரசு செப்டம்பர் 30ஆம்தேதியை இறுதிக் கெடுவாக நிர்ணயித்துள்ளது. அபராதம் மட்டும் செலுத்துவதுடன் இந்த கணக்கில் வராத பணம் என்ற சுமையிலிருந்து அவர்கள் வெளிவந்து விடலாம். கணக்கில் காட்டப்படாத வருவாயின் ஆதாரம் குறித்து எந்தவிதக் கேள்வியும் விசாரணையும் இல்லை என்று நான் ஏற்கனவே உறுதி
அளித்திருக்கிறேன். எனவே வெளிப்படையாக இயங்குவதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பு என்று இதனால்தான் நான் கூறி வருகிறேன். நாட்டு மக்களுக்கு நான் கூறுவது என்னவெனில் இந்த வாய்ப்பு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை உள்ளது. இதையே கடைசி வாய்ப்பாகக் கருதுங்கள். செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு பிரச்சனையில் சிக்குபவர்களுக்கு அரசிடமிருந்து எந்த ஓர் உதவியும் கிடைக்காது. மேலும் வங்கிகளில் வாங்கிய கடன்களையும் செலுத்த வேண்டிய வரிகளையும் தாமதமாகாமல் செலுத்துங்கள்.
இதுகுறித்து நாடு முழுவதும் உள்ள அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள், மோடியின் எச்சரிக்கை, கணக்கில்
காட்டாமல் பல ஆயிரம் கோடிகளை குவித்து வரும் ரிலையன்ஸ்
அம்பானி, அதானி குழுமம் மற்றும் கடன் செலுத்தாமல் ஓடிப்போன சாராய அதிபர் விஜய் மல்லையாவிற்கு பொருந்துமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ரிலையன்ஸ் (முகேஷ் குழுமம்) ரூ..1,87,070 கோடியும் ரிலையன்ஸ் அம்பானி ரூ. 1,21,000 கோடியும், அதானி குழுமம் ரூ. 96,000 கோடியும் எஸ்ஸார் குழுமம் ரூ.1,01,461 கோடியும், ஜேபி குரூப் ரூ.75,000 கோடியும் லான்கோ குழுமம் ரூ.47,102 கோடியும், வீடியோகான் ரூ.45,400 கோடியும் வங்கிகளில் வாங்கியுள்ள கடன்கள்.
இந்தக் கார்ப்பரேட்டுகள் அனைத்தும் மோடி ஆட்சிக்கு வந்தபின்னர், முன்பிருந்ததை விட ஏராளமாக பலஆயிரம் கோடி சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளன. இதில் அம்பானியின் ரிலையன்ஸ் நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி ஐடி துறையிலும், பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறையிலும் குவித்துள்ளது பல ஆயிரம் கோடிகளாகும். மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து மதிப்பினை இதுவரை எந்த அரசின் துறையினாலும் அறிய முடியவில்லை .
குஜராத்தில் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவிலும் கால்பதித்துள்ள அதானியின் கம்பெனிகள் சுரங்கத் தொழிற்சாலைகள் மற்றும் கப்பல் துறைமுகம் ஆகியவற்றில் குவிக்கப்பட்ட வருவாய்க்கு எந்த கணக்கும் கிடையாது. எந்த வருமான வரியும் கிடையாது. அதுபோல் மோடியின் நண்பர் கார்ப்பரேட் சாமியார் ராம்தேவிற்கு
சொந்தமான பதஞ்சலி நிறுவனம் தொடங்கிய சில ஆண்டுகளுக்குள்ளாகவே நாடு முழுவதும் உள்ள சந்தைகளைப் பிடித்துள்ளது. ராம்தேவிற்கு சொந்தமாக ஒரு தீவே உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். இவர்களுக்கு மோடியின் எச்சரிக்கை பொருந்துமா என்பதே அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் கேள்வி.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.