Showing posts with label கற்க கற்பிக்க. Show all posts
Showing posts with label கற்க கற்பிக்க. Show all posts

Sunday, September 10, 2017

கோரக்பூர் கொடூரம்

உத்தரப் பிரதேசம், கோரக்பூரில் எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாத காரணத்தால் மரணம் அடைந்துள்ள செய்தி நெஞ்சைப் பதறவைக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தேவைப்பட்ட நிதி ஆதாரத்தை அளிக்காததால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பழியிலிருந்து தப்பிக்க யோகி ஆதித்யநாத் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். குழந்தைகளின் மரணத்திற்கு மூளைக்காய்ச்சல்தான் காரணம் என்று சாதிக்கிறார். கிழக்கு உத்தர பிரதேசத்தின் மிக முக்கியமான இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். இருப்பினும் அதற்கேற்ற வசதிகள் ஏதும் இல்லாமலேயே மருத்துவர்கள் சமாளித்து வந்துள்ளனர்.

யோகி ஆதித்யநாத் கோரக்பூர் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருபதாண்டுகள் இருந்துள்ளார். தன் தொகுதி யிலிருக்கும் மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்ய இவர் தவறியுள்ளார் என்பது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. கோசாலைகள் அமைப்பதற்கு நாற்பது கோடி நிதி வழங்கிய முதலமைச்சருக்கு குழந்தைகள் உயிரைக் காப்பாற்ற அக்கறை இல்லாமல் போனது ஏன்? அவசரமாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு அரசுக்கு ஆதரவான அறிக்கையை அதே அவசரத்தில் சமர்ப்பித்துள்ளது. மருத்துவ மனையில் தவறுகள் ஏதும் நடக்கவில்லையென்றும், மரணத்திற்குக் காரணம் வருடாவருடம் வரும் தொற்றுநோய்தான் என்றும் சொல்லி குழந்தைகள் இறப்பை நியாயப்படுத்தியுள்ளது. தன் சொந்தச் செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கி குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர் கஃபில்கான் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அராஜகத்தின் உச்சம்.


விடுதலை அடைந்து எழுபதாண்டுகளுக்குப் பின்னும் நம்முடைய அரசுகளால் மிகச் சாதாரண மருத்துவ வசதிகளைக் கூடக் கொடுக்க முடியாமலிருப்பது வெட்கக்கேடானது. இந்தியாவைவிடப் பின்தங்கிய நாடுகள் கூட மக்களின் ஆரோக்கியம் குறித்து நம்மைவிட அக்கறையோடு செயல்படுகின்றன. மனித உயிர்களைத் துச்சமென மதிக்கும் கொடுமை இந்தியாவில்தான் கோலோச்சுகிறது. பொதுசுகாதாரத்தை முற்றிலும் தனியார்களிடம் தள்ளிவிடும் போக்கினைக் கைவிட்டு, அரசு மருத்துவ மனைகளைப் பலப்படுத்திட வேண்டும் என்ற சமூகப் பார்வையை மத்திய மாநில அரசுகள் பெறுவதற்கு நாம் செய்யப்போவது என்ன என்ற கேள்வியை நாம் மக்கள் முன் வைக்கிறோம்.
                                                                                                              -ஆசிரியர் குழு

Tuesday, August 8, 2017

கற்க கற்பிக்க

கருத்துப் பிரச்சாரமே கூடாதா?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் கருத்து சுதந்திரத்தை உத்திரவாதப் படுத்தும் உன்னதமான சட்டம். ஆனால், சமீப காலமாக தமிழக அரசு உரிமைகளுக்காப் போராடுபவர்களை எல்லாம் குண்டர் சட்டம் எனப்படும் கருப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து விசாரணையின்றி சிறையிலடைக்கிறது. மத்திய மாநில அரசுகள் குண்டர் சட்டம் போன்ற தடுப்புக் காவல் சட்டங்களை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது போன்ற காலனிய காலச் சட்டங்கள் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் விற்போர், பாலியல் குற்றவாளிகள்,மணல்-கிரானைட் கடத்துவோர் போன்ற பயங்கரக் குற்றவாளிகளுக்கும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்போருக்கும் எதிராக மட்டுமே பயன்படுத்திடக் கொண்டுவரப்பட்டது குண்டர் சட்டம். இச்சட்டத்தின்படி ஒருவரை விசாரணைகள் ஏதுமின்றி, பிணையில் வெளிவரமுடியாமல், ஓராண்டுவரை சிறையிலடைக்கலாம். இச்சட்டத்தை கருத்துரிமைப் போராளிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவது இயற்கை நீதிக்குப் புறம்பானதாகும். ஈழப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திட மெரினாவில் திரண்டிருந்த மே பதினேழு இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அறவழியில் போராடிய பேராசிரியர் ஜெயராமனும், சேலத்தில் இத்திட்டத்திற்கு எதிராகத் துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த காரணத்திற்காக மட்டுமே கல்லூரி மாணவி வளர்மதியும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி 2009-ல் போடப்பட்ட வழக்கு ஒன்றில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். போராட்டத்தைத் தூண்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மிரட்டுகிறார் தமிழக முதல்வர். இந்தித் திணிப்புக்கும் சனாதன அதர்மங்களுக்கும் எதிராகப் போராடிய பெரியார், அண்ணா போன்ற திராவிட இயக்க முன்னோடிகள் மக்களிடையே போராட்டத்தைத் `தூண்டியவர்கள்தாம் என்பதை யாராவது அவரிடம் எடுத்துச் சொன்னால் நல்லது. அவரது இலக்கணப்படி ஊழியர் களிடையே போராட்டத்தைத் `தூண்டிவிடும் தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவருமே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டியவர்களே. குற்றவாளிகளுக்கும், மனித உரிமைப் போராளிகளுக்கும் இடையிலிருக்கும் வேறுபாட்டை விளக்கி நீதிமன்றம் தமிழக அரசுக்கு பாடம் கற்பிப்பது நல்லது.
                                                                                                   -ஆசிரியர் குழு

Friday, July 28, 2017

ஊழல் சேற்றில் உயர்கல்வி

சுதந்திரக் காற்று, வெளிச்சம், கற்றலுக்கான சூழல் இவைகள் நிறைந்த இடமே பல்கலைக்கழகம் ஆகும் - பெஞ்சமின் டிஸ்ரேலி

இதில் வலியுறுத்தப்படும் அனைத்து இலக்கணங்களும் இல்லாத வளாகங்களாகவே தமிழகப் பல்கலைக்கழகங்கள் காட்சி அளிக்கின்றன. தமிழகத்தில் இருபதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், 30 சதவீத இளைஞர்களுக்கே இன்று உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கிறது. பெரும் பகுதி இளைஞர்களுக்கு உயர்கல்வி இன்று மறுக்கப்படுகிறது. படித்து முடித்தவர்களில் பெரும்பகுதியினருக்கு வேலையும் மறுக்கப்படுகிறது. இதுதான் இன்றைய இந்தியா. பல்கலைக்கழகங்களில் ஊழல் புரையோடிப்போயுள்ளது. துணைவேந்தர் நியமனத்திலேயே ஊழல் துவங்கிவிடுகிறது. துணைவேந்தர் பதவி வெளிப்படையாகவே ஏலம் விடப்படுகிறது. சாதிவாரியாகவும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் தலைமைப் பீடமே கறை பட்டிருப்பதால் அதன் அனைத்து நடவடிக்கைகளும் தரம் தாழ்ந்துள்ளன. ஆசிரியர், அலுவலர் பணிநியமனங்களில் லஞ்சம் தாண்டவமாடுகிறது. இவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை மீட்டெடுக்க மாணவர்களிடம் கையேந்துகின்றனர்.


மத்திய பல்கலைக்கழகங்களின் தலைமையிடங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களால் நிரப்பப்படுகின்றன. கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்ட இப்பல்கலைக்கழகங்களில் ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடமில்லாமல் போயுள்ளது. மாநில அரசுகளின் அதிகார வரம்புகளின் கீழ் இருந்த கல்வி எமர்ஜன்சி காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இப்போது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கல்வியை தன்வயப்படுத்தம் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் இளநிலை, முதுநிலை படிப்புகளின் மாணவர் சேர்க்கையை மத்தியப்படுத்துவது பல குழப்பங்களுக்கும் இட்டுச்சென்றுள்ளது. இதனால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோயுள்ளன. உயர்கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக் கொண்டு கல்வியை இந்திய மற்றும் அந்நிய தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிடுவது என்ற முடிவில் மோடி அரசு முந்தைய காங்கிரஸ் அரசையும் மிஞ்சியுள்ளது. இதனால் பல்கலைக்கழகங்கள் கல்வி வியாபாரிகளின் லாப வேட்டைக்கான களங்களாக மாறிப்போயுள்ளன. உயர்கல்வி காப்பாற்றப்பட வேண்டுமானால் தனியார்மயம் கைவிடப்பட வேண்டும். பல்கலைக்கழக அமைப்புகளில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும். இக்கோரிக்கைகளை மையப்படுத்திய ஆசிரியர் இயக்கங்கள் வலுப்பெறும் காலம் வரப்போவது எப்போது?

Tuesday, December 6, 2016

ரஷ்யப் புரட்சியும் சோசலிசமும்


உலக வரலாற்றின் முக்கியமான திருப்பு முனையாக அமைந்த ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு தொடங்கியிருக்கிகிறது. 1917ல் லெனின் தலைமையில் ரஷ்யாவின் பொல்ஷ்விக் கட்சி நடத்திய புரட்சி ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்து மக்கள் ஆட்சியை மலரச் செய்தது. பின்னர் ஐக்கிய சோவியத் சோசலிஸ்ட் குடியரசாகப் பரிணமித்து, அளப்பரிய சாதனைகளைச் செய்து உலகைப் பிரமிக்க வைத்தது ரஷ்யா. குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு என்றும் யுகப்புரட்சி என்றும் ரஷ்யப் புரட்சியை வரவேற்று வாழ்த்திப் பாடினார் பாரதியார். சோசலிசத்தின் கீழ் உலகிலேயே முதன்முறையாக குடிமக்கள் அனைவருக்கும் உணவு, உடை, கல்வி, இருப்பிடம், வேலை போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டன. இலக்கிய உலகில் ரஷ்யப் படைப்புகள் உருவாக்கிய வரலாறு ஈடு இணை இல்லாதது. இலக்கியம் மட்டுமல்ல, நாடகங்கள், கலைகள், திரைப்படங்களும் வளம் பெற்றன. அறிவியல் வளர்ந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் பிரமிக்கத்தக்க சாதனைகள் அரங்கேறின. மக்கள் நல அரசுக்கு ஓர் எடுத்துக் காட்டாக இருந்த ரஷ்யாவில் மலர்ந்தது புதிய உலகம் மட்டுமல்ல, புதிய மனிதனும்தான். இரண்டாம் உலகப் போரில் இரண்டு  கோடி மக்களைப் பலி கொடுத்து ரஷ்யாவின் செஞ்சேனை ஆற்றிய  வீரஞ்செறிந்த தியாகத்தினால் ஹிட்லரின் பாசிசம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இது உலக நாடுகளுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது. காலனிய நாடுகள் புத்துயிர் பெற்றுப் போராடி தங்களின் சுதந்திரத்தைப் பெற்றனர். பனிப்போர் காலத்தில் வளரும் நாடுகளுக்கு ரஷ்யா பாதுகாவலனாக இருந்து அவற்றின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவிகள் செய்தது. ரஷ்யாவின் உதவி பெற்று முன்னேறிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஏகாதிபத்திய நாடுகளின் தொடர்ந்த சதியாலும், சோவியத் ரஷ்யாவில் பின்னர் பொறுப்புக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் செய்த தவறுகளினாலும் சோவியத் யூனியன் வீழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த சோசலிச அரசுகளும் சரிந்து விழுந்தன. இத்துடன் வரலாறே முடிவுக்கு வந்துவிட்டது. சோசலிசம் வீழ்த்தப்பட்டு விட்டது. இனி முதலாளித்துவத்திற்கு மாற்று இல்லை என்று சில வரலாற்றாசிரியர்கள் இன்றும் சித்தரிக்கின்றனர். முதலாளித்துவத்தின் இன்றைய நெருக்கடிக்கு சோசலிசம்தான் தீர்வு என்பதைக் காண மறுக்கின்றனர். கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்திக்கொண்டு சோசலிசம் முன்னேறும் என்பதில் மனிதசக்தியில் நம்பிக்கை கொண்டோருக்கு ஐயம் இல்லை.

ஆசிரியர் குழு

Saturday, November 5, 2016

கௌரவப்பிரச்சனையா, வாழ்வாதாரப் பிரச்சனையா?

கௌரவப்பிரச்சனையா, வாழ்வாதாரப் பிரச்சனையா?

`நடந்தாய் வாழி காவிரி என்ற தலைப்பில் தி.ஜானகிராமனும், சிட்டி சுந்தராஜனும் இணைந்து ஒரு பயண நூல் எழுதியிருக்கிறார்கள். காவிரியின் பிறப்பிடத்திலிருந்து அது கடலில் கலக்குமிடம் வரை அவர்கள் மேற்கொண்ட பயணத்தை அழகுடன் விவரித்திருப்பார்கள். மலையில் பிறந்து, நிலத்தில் பாய்ந்து, கடலில் கலப்பதுதான் நதியின் இயல்பு. அதன் குறுக்கே எப்போது அணையைக் கட்டுகிறோமோ அப்போதே பிரச்சனை தொடங்கிவிடுகிறது. உலக நாடுகள் பலவற்றிலும் நதிநீரைப் பகிர்ந்துகொள்வதில் எந்தப் பிரச்சனையும் எழுவதில்லை. பாகிஸ்தானுடனும் வங்காள தேசத்துடனும் கூட நம்மால் நதிநீரைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் இரண்டு மாநிலங்களுக்கு இடையில் மட்டும் இத்தனை சர்ச்சைகள் ஏன்? காவிரிப் பிரச்சனை பலவழிகளிலும் அரசியலாக்கப்பட்டதே காரணம். காவிரிப் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் கர்நாடக அரசியல் கட்சிகளின் நோக்கம் என்றாலும் கூட அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றாக குரல் கொடுக்கின்றனர். இங்கே அதே அரசியல் ஆதாயம் தேடுவதுதான் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் நோக்கமானாலும் ஒன்றுபட்டு நிற்காமல், ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர். காவிரிப் பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கி, பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படவிருந்த நேரத்தில் மோடி அரசு பல்டி அடித்தது. வழக்கு முடியும்வரை வேடிக்கை பார்த்த அரசுக்கு திடீரென நாடாளுமன்றம் என்ற ஓர் உயர்மட்ட அமைப்பு இருப்பது நினைவுக்கு வந்துவிட்டது. ஜல்லிக்கட்டுப் பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீற முடியாது என்ற பாஜக, தற்போது பிளேட்டை மாற்றிப் போடுகிறது. காவிரிப் பிரச்சனை பாஜக, காங்கிரசிடையே பகடைக்காயாக உருட்டப்படுகிறது. இவ்விரு கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனை கர்நாடாகா-தமிழக மக்களின் நேரடி மோதலாக மாறிவிட்டது. இரு மாநிலங்களிலும் இருக்கும் இனவெறி அரசியல் கட்சிகள் வன்முறையைத் தூண்டி வேடிக்கை பார்க்கின்றன. காவிரிப் பிரச்சனையை கௌரவப் பிரச்சனையாகப் பார்க்காமல் இரு மாநில மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையாகப் பார்க்கும் விவேகம் அரசியல் கட்சிகளுக்கு என்று வருகிறதோ அன்றுதான் இந்தப் பிரச்சனை தீரும். தகராறு ஒருபுறம் இருக்க, கிடைக்கின்ற நீராதாரத்தைச் சேமித்துப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டியதும் உடனடி முக்கியத்துவம் பெறுகிறது.


ஆசிரியர் குழு


Tuesday, October 4, 2016

அமெரிக்காவின் இளைய கூட்டாளியா இந்தியா?

ஜவஹர்லால் நேரு, மார்ஷல் டிட்டோ, கமால் அப்துல் நாஸர் ஆகிய மூவரும் 1950களில் உலக நாடுகளின் கவனத்தை அதிகம் ஈர்த்த தலைவர்கள். உலக நாடுகளை அணி சேரா அமைப்பின் கீழ் ஒன்று திரட்டி வெற்றி கண்டதால் கிடைத்த கவனம் அது.  அமெரிக்கா அல்லது சோவியத் யூனியன் பின்னால் திரண்டு இரு துருவங்களாக நிற்க வாய்ப்பு இருந்தபோது, இத்தலைவர்கள் பெரும்பாலான நாடுகளை இரு அணிகளிலும் சேர்ந்திடாமல், நடுநிலை வகிக்க வைத்தனர். ஆனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை ஒரு துருவ உலகமாக மாற்றிடவும், உலக நாடுகளின் அரசுகளையெல்லாம் தங்களின் கைப்பாவைகளாக மாற்றிடவும் எத்தனித்து வருகிறது. பனிப்போர் முடிவுற்ற பின்னரும் நேட்டோ அமைப்பைக் கலைத்திடாமல் உலக நாடுகளை நேட்டோவின் இராணுவ பலத்தைக் கொண்டு அச்சுறுத்தும் விதமாகவும் செயல்படுகிறது.

தன் அணி சேராக் கொள்கையைக் கைவிட்டுவிட்டு அமெரிக்காவுடன் கேந்திரமான உறவை இந்தியா உருவாக்க முயல்வது நமது அயல்துறைக் கொள்கையில் மோடி அரசு செய்ய முனையும் அடிப்படை மாற்றம். தற்போது அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இனி அமெரிக்க விமானப் படையும், கப்பல் படையும் எரிபொருள் நிரப்புதல் போன்ற சேவைகளுக்கு இந்திய விமான தளங்கள் மற்றும் கப்பல்படைத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அமெரிக்காவுடன் கூட்டாளி என நாம் பெருமையடித்துக் கொண்டாலும் அது உண்மையில் அமெரிக்காவின் இளைய பங்காளி என்றுதான் பொருள். அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு அடிபணிவது என்பதுதான் பொருள். இந்தியாவின் தன்னாளுமையுடன் சமரசம் செய்து கொண்டு தன்னுடைய சுயாட்சி உரிமையை அமெரிக்காவின் காலடியில் சரணடைய வைப்பதாகத்தான் பொருள். இதற்கு மாறாக, பிரிக்ஸ், சார்க், ஷாங்காய் போன்ற கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தி எந்த நாட்டுக்கும் வால்பிடிக்காத, சுதந்திரமான அயல் உறவுக் கொள்கையை உருவாக்குவதே இந்தியாவின் நலனுக்கு உகந்ததாக இருக்கும். உலகில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட பகைமை அரசியலை வளர்த்திடும் அமெரிக்காவின் வழி சென்றிடாமல், உலக நாடுகளிடையே நட்பை வளர்த்து அமைதியை நிலைநாட்ட இந்தியா முயல்வதுதான் நமது எதிர்கால நலனையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள உதவும்.

-ஆசிரியர் குழு


Monday, September 5, 2016

கறுப்புச் சட்டத்திற்கு எதிரான அறப்போராட்டம்


 சென்ற இதழில் காஷ்மீர் பற்றியெறிவது பற்றி தலையங்கத்தில் எழுதியிருந்தோம். மத்திய அரசின் வறட்டுத்தனமான அணுகுமுறை காரணமாக அங்கே பிரச்சனை மேலும் தீவிரமாகியிருக்கிறது. ஒரு பகுதியில் உள்ள 36 காவல் நிலையங்களில் மூன்றில் மட்டுமே காவலர்கள் உள்ளனர். மற்ற நிலையங்களில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் காவல் நிலையத்தை விட்டே ஓடிவிட்டனர். மூன்று நிலையங்களில் காவலர்களுக்கு ராணுவம் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை. இராணுவத்தின் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) கோர தாண்டவம் ஆடி சின்னாபின்னமாகியிருக்கும் இன்னொரு மாநிலம் மணிப்பூர். தடா, பொடா, மிசா போன்ற கறுப்புச் சட்டங்களை எல்லாம்விடக் கொடூரமான இச்சட்டம், வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளிலும் கடந்த அறுபதாண்டுகளாக அமுல்படுத்தப்படுகிறது. இக்கொடிய சட்டத்தை விலக்கிக் கொள்ள மத்திய அரசுக்கு மனம் வரவில்லை. இந்திய இராணுவமும் இதை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. ஏன்? சந்தேகப்படும் எவரையும் கண்ட இடத்திலேயே சுட்டுக் கொல்லலாம். அல்லது கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தலாம், பாலியல் வன்முறையில் ஈடுபடலாம்; யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்கிறது இச்சட்டம். இச்சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி ஜீவன்ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் ஆலோசனையையும் இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய இராணுவத்தின் இத்தகு அச்சுறுத்தலுக் கும், அடக்குமுறைக்கும் எதிராக பதினாறு ஆண்டுகளாக இடைவிடாது உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தியவர் இரோம் ஷர்மிளா எனும் மணிப்பூர் வீராங்கனை. காந்திய தேசத்தில் காந்திய வழிமுறைப் போராட்டங்கள் செல்லுபடியாகா என்ற யதார்த்த நிலையை உணர்ந்த அவர் தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு, புதிய ஆயுதத்தைக் கையேந்தியுள்ளார். வரவிருக்கும் மணிப்பூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார். இருபதாண்டுகளுக்கும் மேலான சிறை வாழ்க்கைக்குப் பின் தேர்தலில் போட்டியிட்டு தென் ஆப்பிரிக்காவின் குடியரசுத் தலைவரான நெல்சன் மண்டேலாவைப் போலவும் மியான்மரில் ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்து, வெற்றி பெற்று, இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள மற்றுமொரு வீரப்பெண்மணி ஆங் சான் சூ கி  போலவும் இரோம் ஷர்மிளா தேர்தலில் வெற்றிபெற்று இராணுவத்தின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மணிப்பூரை விடுவிக்கட்டும் என வாழ்த்துகிறோம்.
ஆசிரியர் குழு