Monday, September 5, 2016

கறுப்புச் சட்டத்திற்கு எதிரான அறப்போராட்டம்


 சென்ற இதழில் காஷ்மீர் பற்றியெறிவது பற்றி தலையங்கத்தில் எழுதியிருந்தோம். மத்திய அரசின் வறட்டுத்தனமான அணுகுமுறை காரணமாக அங்கே பிரச்சனை மேலும் தீவிரமாகியிருக்கிறது. ஒரு பகுதியில் உள்ள 36 காவல் நிலையங்களில் மூன்றில் மட்டுமே காவலர்கள் உள்ளனர். மற்ற நிலையங்களில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் காவல் நிலையத்தை விட்டே ஓடிவிட்டனர். மூன்று நிலையங்களில் காவலர்களுக்கு ராணுவம் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை. இராணுவத்தின் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) கோர தாண்டவம் ஆடி சின்னாபின்னமாகியிருக்கும் இன்னொரு மாநிலம் மணிப்பூர். தடா, பொடா, மிசா போன்ற கறுப்புச் சட்டங்களை எல்லாம்விடக் கொடூரமான இச்சட்டம், வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளிலும் கடந்த அறுபதாண்டுகளாக அமுல்படுத்தப்படுகிறது. இக்கொடிய சட்டத்தை விலக்கிக் கொள்ள மத்திய அரசுக்கு மனம் வரவில்லை. இந்திய இராணுவமும் இதை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. ஏன்? சந்தேகப்படும் எவரையும் கண்ட இடத்திலேயே சுட்டுக் கொல்லலாம். அல்லது கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தலாம், பாலியல் வன்முறையில் ஈடுபடலாம்; யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்கிறது இச்சட்டம். இச்சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி ஜீவன்ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் ஆலோசனையையும் இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய இராணுவத்தின் இத்தகு அச்சுறுத்தலுக் கும், அடக்குமுறைக்கும் எதிராக பதினாறு ஆண்டுகளாக இடைவிடாது உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தியவர் இரோம் ஷர்மிளா எனும் மணிப்பூர் வீராங்கனை. காந்திய தேசத்தில் காந்திய வழிமுறைப் போராட்டங்கள் செல்லுபடியாகா என்ற யதார்த்த நிலையை உணர்ந்த அவர் தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு, புதிய ஆயுதத்தைக் கையேந்தியுள்ளார். வரவிருக்கும் மணிப்பூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார். இருபதாண்டுகளுக்கும் மேலான சிறை வாழ்க்கைக்குப் பின் தேர்தலில் போட்டியிட்டு தென் ஆப்பிரிக்காவின் குடியரசுத் தலைவரான நெல்சன் மண்டேலாவைப் போலவும் மியான்மரில் ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்து, வெற்றி பெற்று, இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள மற்றுமொரு வீரப்பெண்மணி ஆங் சான் சூ கி  போலவும் இரோம் ஷர்மிளா தேர்தலில் வெற்றிபெற்று இராணுவத்தின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மணிப்பூரை விடுவிக்கட்டும் என வாழ்த்துகிறோம்.
ஆசிரியர் குழு



 

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.