Monday, September 5, 2016

நூல் வெளியீட்டு விழா



குஜராத் ஃபைல்ஸ் என்ற ஆங்கில நூலை எழுதியவர் ரானா அயூப். .வீரமணி அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூலின் வெளியீட்டு விழா பாரதி புத்தகாலயமும் இந்திய சமூக விஞ்ஞானக் கழகமும் இணைந்து ஆகஸ்ட் 17 அன்று சென்னையில் நடத்தப்பட்டது.

வெளீயிட்டு விழா பற்றி அறிந்துகொள்வதற்கு முன் நாம் நூலாசிரியர் ரானா அயூபைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர். குஜராத்தில் 2002ல் அரங்கேற்றப்பட்ட மதக்கலவரங்கள், இஸ்லாமிய மக்கள் மீதான திட்டமிட்ட வன்முறைகள், அவற்றின் பின்னணியில் ஆளுங்கட்சியினருக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இருந்த பங்கு ஆகியவை குறித்து அவர் எழுதிய குறிப்புகளின் தொகுப்பே குஜராத் கோப்புகள் என்ற இந்நூல். மைதிலி தியாகி என்ற மாற்றுப் பெயரில், வெளிநாட்டிலிருந்து ஆவணப்படம் எடுக்க வந்திருக்கும் பெண்ணாக மாறி, குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட வேண்டிய மதவெறியர்களை துணிச்சலாக நேரில் சந்தித்து, அவர்கள் வாயிலிருந்தே உண்மைகளை வரவழைத்து இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார் ரானா என்ற இந்த இளம் பெண். இவர் எழுதிய கட்டுரைகளால் இன்றைய பாஜக தலைவர் அமித் ஷா அன்று கைது செய்யப்பட்டார். இன்றைய மத்திய ஆட்சியாளர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற மனநிலையோடு பதிப்பகங்கள் இந்தப் புத்தகத்தை வெளியிட மறுத்த நிலையில், ரானா தன் சொந்தப் பொறுப்பிலேயே நண்பர்களிடம் கடன் பெற்று புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் பெண்ணின் வீரதீரச் செயல்களைக் கேட்டபோது மெய்சிலிர்த்தது. வெளியீட்டு விழாவுக்கு ரானா அயூபும் வந்திருந்தது விழாவுக்கு மெருகூட்டியது.

தமுஎகச தலைவர் . தமிழ்ச்செல்வன் (ரானா எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட பிறகு) :
அரசாங்க எந்திரம் மதவெறி மயமாக்கப்படுவதில் குஜராத் ஒரு முன்மாதிரி மாநிலமாக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மைகள் நாட்டு மக்களுக்குத் தெரியவர வேண்டும். இந்தப் புத்தகத்தின் செய்திகளை மக்களிடையே பரப்புரை செய்கிற கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது,

பத்திரிகையாளர் ஞாநி :
2019ல் பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வருமானால், இப்போது ஒலிக்கிற எதிர்ப்புக் குரல்களும் அப்போது எழ முடியாத நிலைமை ஏற்பட்டு, இந்தியா எளிதில் மீள முடியாத பாதாளத்தில் விழுந்துவிடும். அதைத் தடுப்பதற்கான போராட்டத்திற்கு ஒரு அறிவாயுதமாக ரானாவின் புத்தகம் வந்திருக்கிறது

ஆய்வாளர் அறிவுக்கரசி:
வர்க்கப் போராட்டம் மேலெழுந்துவிடாமல் தடுக்க சாதி-மத அரசியல் கையாளப்படுவதற்கான ஆதாரங்களை இந்தப் புத்தகம் தருகிறது. தலித் மக்களுக்கு அதிகாரம் தரமாட்டோம் என்கிற பிற்படுத்தப்பட்ட சாதிகள், மேல்வர்ண சாதிகள் அரசியலையும் ரானா சுட்டிக்காட்டியிருக்கிறார்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் தீபா:
ரானா பேட்டிகளுக்காகச் சென்றபோது பல தடைகளை ஏற்படுத்த முயன்றவர்கள் புத்தகம் வெளியான பிறகு மவுனமாக இருப்பது, புத்தகத்திற்கு விளம்பரம் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமல்ல, உண்மைகள் வெளிப்படுகின்றன என்ற அச்சத்தாலும்தான்.

புத்தகத்தை வெளியிட்ட, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் :
26 வயதுப் பெண் ஆபத்து மிக்க பேட்டிகளை எடுக்கச் சென்று பாதுகாப்பாகத் திரும்பி வந்தார் என்பது வியப்புக்குரிய அற்புதம். ரானா இந்த முயற்சியில் ஈடுபட ஊக்கமளித்துத் துணிச்சலாக அனுப்பி வைத்த அவரது தாயாரை ஒரு பாரதமாதாவாக நான் போற்றுகிறேன். குஜராத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டு வந்த தாக்குதல் தற்போது தலித்துகள் மீதும் திருப்பிவிடப்பட்டிருக்கிறது.  தமிழகத்திலும் இது போன்ற தாக்குதல்கள் வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. சனாதன ஆர்எஸ்எஸ் தலைவர்கள், நரேந்திர மோடியை பிரதமராக்க ஒப்புக் கொண்டதன் அரசியல் நுட்பத்தை ரானாவின் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது.

புத்தகத்தின் முதல் படியைப் பெற்றுக் கொண்ட காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை தலைவர் தாவூத் மியாகான் :
இந்தப் புத்தகம் கூறும் உண்மைகள் மக்களிடையே பரவினால், இன்று அதிகாரத்தில் இருக்கிற பலர் சிறையில் இருக்க நேரிடும். ஜனநாயக சக்திகளை அழித்து மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரத்தை ஏற்படுத்துவதே ஆதிக்க மதவாதிகள் நோக்கம். அதற்கு ஆர்எஸ்எஸ் வழிகாட்டுகிறது. ஆனால் பாசிச சக்திகள் தற்காலிக வெற்றிகளைப் பெற்றாலும் இறுதியில் அழிந்துபோனார்கள் என்பதே வரலாறு.

ஏற்புரையாற்றிய ரானா அயூப் :
இந்திய மொழிகளில் தமிழில்தான் முதல் முறையாக இப்புத்தகம் வருகிறது என்பது மகிழ்ச்சி தருகிறது. புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உண்மைகளுக்காக அரங்கில் எழுந்த கரவொலிகள், அதிகாரத்திற்கெதிராகத் துணிந்து எழுவதற்கான ஆதரவுகளாக மாற வேண்டும். ஒரு முஸ்லிம் என்பதால்தான் இதைப் பற்றி எழுதினீர்களா என்று கேட்கிறார்கள். விளம்பரத்துக்காக எழுதினீர்களா என்றும் கேட்கிறார்கள். ஆனால் இது நீதிக்காக எழுதப்பட்ட நூல். முஸ்லிம் பெண்ணாக அல்ல, உண்மைகளை வெளிப்படுத்துவது ஒரு ஊடகவியலாளரின் கடமை என்ற உணர்வோடு நீதியைத் தேடி நான் மேற்கொண்ட பயணத்தின் விளைவுதான் இந்த நூல். தற்போது நாட்டில் ஒரு அவசர நிலை ஆட்சி போன்ற நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்ப்புக் குரல்களை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது. ஜனநாயகம் என்பது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் நீதியும்தான். இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. நீ ஏன் மோடியைத் தாக்கி எழுதியிருக்கிறாய் என்றும் சிலர் கேட்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநில முதல்வரும் பிணங்களை வைத்துக்கொண்டு, செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடத்தி, தன்னை முன்னிறுத்திக் கொள்ள வில்லையே..? மோடி மட்டும்தானே அதைச் செய்தார்? - இந்தக் கேள்வியோடு தன் உரையை நிறைவு செய்தார் ரானா.


பல்வேறு அரசியல் கட்சிகளையும்  அமைப்புகளையும் சேர்ந்தோர் திரளாகக் கலந்துகொண்ட ஒரு வித்தியாசமான அற்புதமான நூல் வெளியீட்டு விழாவாக நிகழ்ச்சி அமைந்தது.



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.