அச்சமும் பெரும் பதட்டமும் நித்தமும் நம்மைச் சூழ்கிறது. பகல் பொழுதுகளை பயமின்றி கடப்பது இனி இயலாமலே போய் விடுமோ எனும் பெரும் துக்கம் நம்மை வாட்டுகிறது. இரவை நெருங்கிட மனம் விரும்புகிறது. இரவில் கண்மூடித் தூங்கி விடலாம்.. வேறு எந்த சிக்கல்களும் நம்மை வந்து சேராது எனும் நம்பிக்கையில்தான் இப்போதெல்லாம் இரவினில் தூங்கப் போகவேண்டியிருக்கிறது. விழித்துக் கொண்டதும் கண்கள் பார்க்கும் முதல் காட்சி இன்று ஒரு குரூரக் கொலையாகிவிடக் கூடாதே என மனம் பதைக்கிறது. பிறகு வேறு எதுவோ முன்னுக்கு வர சகஜமாகி விடுகிறோம்.
பதட்டமடைவதும் கொஞ்சநேரத்தில் சகஜமாவதும் நம்முடைய வெகு இயல்பான விஷயமாக உருமாறிவிட்டது. ஏதாவது நடந்தால் மட்டுமே விவாதிக்கப்படுகின்ற விஷயமாக கல்விக்கூடங்களில் அறநெறிகளைக் கற்பதற்கான வகுப்புகள் வேண்டும் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. கல்விக்கூடங்களின் கையறுநிலை மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான்.. விவாதிப்பவர்கள் பதறிப்போவார்கள்.
அந்த மாணவனை மெதுவாக அழைத்து வந்த ஆசிரியர் காதோரத்தில் ரகசியத்தைக் கசியவிட்டுக் கடந்து போனார். அவனை உற்றுப் பார்த்தேன். எட்டாம் வகுப்பு மாணவன் அவன். பேசிப் பார்க்கலாம் என்று முயற்சித்தேன். மாணவர்கள் ஆசிரியர்களின் தொடுதலுக்கு ஏங்குகிறவர்கள் என்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். மெதுவான அவனைத் தொட்டு அழைத்து பொய் சொல்லாத நெசமாவாடா?
என்றேன்.
ஒரு நொடி கூட காத்திருக்கவில்லை. “இல்ல சார் சத்தியமா இல்லவே இல்லை” என்றான். எதுக்கு மறைக்கிற?
“நீதான் எழுதுனதுன்னு அந்தப் பொண்ணே சொல்றாடா” என்றேன்.
இப்போதும் அந்தப் பையனின் குரலில் உறுதி குறையவில்லை. கொஞ்சம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினான் உரையாடலை. ”சார் நான் ஆஞ்சநேயர் பக்தன். எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டேன். சத்தியமா நான் இந்த லெட்டர எழுதல சார்” என்ற அவனுடைய குரலின் உறுதியில் நான் திகைத்தேன். விசாரணை வளையத்திலிருந்து வெளியேறிடும் வித்தையா.. அல்லது நிஜமா.. என்பதை அறிந்திடும் பக்குவத்தை இருபது வருட கல்விப்பணி எனக்குத் தரவில்லை.
சாட்சிகளான சக மாணவர்கள் தினசரி நடந்து கொண்டிருக்கிற காட்சிகளை ஒரு திரைப்படத்தின் சுவாரசியத்துடன் சொல்லிக் கொண்டிருந்தனர். மற்றவனின் சுயத்திற்குள் நுழைந்து ரகசியத்தைக் கண்டறிவதில் உள்ள மனித மனதின் குரூரத்திற்கான விதையும் கூட நம்முடைய பள்ளிக்கூடங்களில்தான்
விதைக்கப்படுகிறது போல.
“எட்டாம் வகுப்பு படிக்கிறப்ப இதெல்லாம் உனக்குத் தேவையா? படிக்கிற வயசுல படிக்காம விட்டுட்டா அவ்வளவுதான்” என போலிச் சம்பிராதய வார்த்தைகளால் அவனை நெருக்கினேன். வேறு வழியே இல்லாமல் அந்தக் கடிதத்தை எடுத்து அந்த மாணவனிடம் காட்டினேன். “இப்ப என்ன சொல்ற? இது உன்னோட பெயர்தான.. எழுதினது நீதான.”. என்றேன். இனி நான் பள்ளிக்கூட விதிகளின்படி அவனை தலைமையாசிரியர் வசம் ஒப்படைத்து விட்டால் என் வேலை முடிந்தது. உஷ் அப்பாடி... என மூச்சை இழுத்து விட்டுக் கொண்டேன்.
மாணவன் அழுதபடி “சார் என்னைய மன்னிச்சுருங்க. இந்த லெட்டர நான்தான் எழுதுனேன். தெரியாம செஞ்சுட்டேன். இனிமேலு இது மாதிரியான தப்பு எதையும் செய்ய மாட்டேன் இந்த ஒரு தடவ என்னை மன்னிச்சிருங்க சார்” - இது நான் எதிர்பார்த்துக் காத்திருந்த மாணவனின் பதில். சட்டென வெளிப்பட்ட அந்த பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.
“நான் அதை எழுதலை சார்.. ஏன்னா எனக்கு எழுதவே தெரியாது
சார்”
“என்னடா சொல்ற?” என்றேன்
“சத்தியமா சொல்றேன் சார். எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது சார்” என்று சாதித்தான்.
எட்டாம் வகுப்புக்கு வந்து விட்ட பையனுக்கு எழுதவும் தெரியாது,
படிக்கவும்
தெரியாது என்பதற்கு வாய்ப்பில்லை எனத் தோன்றலாம். ஆனால் இது ஒன்றும் அதிர்ச்சியளிக்கும்
விஷயமில்லை என்பதை சமகால பள்ளிக்கூடத்திற்குள் என்ன செய்வதெனத் தெரியாது கைபிசைந்து நிற்கும் ஆசிரியர்கள் அறிந்திருப்பார்கள். பள்ளிக்கூடம் போயும் கூட எழுதப்படிக்கத் தெரியாத ஒரு படை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த சிக்கலை என்ன செய்து சரிசெய்வது என தடுமாறிக் கொண்டிருந்தேன்.
பிரச்சினையை என் பார்வைக்கு கொண்டு வந்த ஆசிரியர் வேறொரு பையனை தரதரவென அழைத்துக் கொண்டு வந்து சேர்த்தார்.
“சார்ட்ட சொல்றா என்னடா நடந்துச்சு?
“
“வந்து சார் இந்த லெட்டர நான்தான் எழுதுனேன் சார். ஆனா இவன் எழுதுறதுக்கு
முப்பது ரூபா கொடுத்தான் சார். இவனுக்காகத்தான் சார் எழுதினேன். இனிமே இப்படி செய்ய மாட்டேன் சார்.. “
இதுவரை உறுதியாக நின்றிருந்த மாணவனும் மெல்லிய குரலில் “இனிமே இப்படி செய்ய மாட்டேன்.. இனிமே இப்படி செய்ய மாட்டேன் சார்” என அழத் துவங்கினான்.
என்ன நடந்தது என்று எனக்கு புரியத் துவங்கியது. “ரெண்டு பேரும் வகுப்புக்கு போங்க. இதப் பிறகு பேசிக்கிடலாம்” என்று அனுப்பி வைத்தேன். இதை அந்த ஆசிரியர் எதிர்பார்க்கவில்லை. “என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க?
“ என்றார். “வேறு என்ன சார் செய்யிறது?
சின்ன பசங்கதான விட்டுப்பிடிப்போம்” என அவரைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன்.
பள்ளிக்கூடங்களில் நன்னெறிக் கல்விக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.. மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க வேண்டும்... நன்றாக விளையாட அனுமதிக்க வேண்டும்... மொழியிலும்
கணக்கிலும் உள்ள அடிப்படைத்
திறன்களை எப்படியாவது கற்றுக் கொள்ள வகைசெய்ய வேண்டும். எனப் பல்வேறு சிந்தனைகள் என்னை அலைக்கழித்தன.
6, 7, 8 வகுப்புகளில் தமிழ் எழுத வாசிக்கத் தெரியாதவர்களின் பெயர்ப் பட்டியலை உடனே தயாரித்திடச் சொல்லி கல்வித்துறை கேட்டிருக்கிறது. என்ன செய்து சரிசெய்யப் போறோம் எல்லாத்தையும் .. குற்ற உணர்ச்சியிலிருந்து மீள முடியாது துக்கித்துக் கிடக்கிறது மனது.
- 9443620183 - maran.sula65@gmail.com
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.