பள்ளி முறையின் ஒரு முக்கிய அங்கம் பயிற்சி பெற்ற ஆசிரியர். பயிற்சி பெற்ற ஆசிரியர் இருவகைத் தகுதிகளைப்
பெற்றிருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் மூலம் பொதுத் தகுதியையும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள்
மூலம் தொழிற்தகுதியையும் பெற வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. கல்வி உரிமைச் சட்டம் தகுதித் தேர்வு என்று ஒன்றையும் கட்டாயத் தகுதியாக்கியுள்ளது. வெறும் காகிதச் சான்றிதழ்கள் மட்டும் ஒரு ஆசிரியரை உருவாக்கிவிடாது. சென்னை மாகாணத்தின் முதல் கல்வி அமைச்சர் தி.சு.அவினாசிலிங்கம் கல்லூரி ஆசிரியர்களும் பி.டி.( தற்கால பி.எட்) பெற வேண்டுமென்று ஆணையிட்டார். பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டது. சமீப காலங்களில் தேசிய தகுதித் தேர்வு(என்.ஈ.டி) அல்லது மாநிலத் தகுதித் தேர்வு(எஸ்.ஈ.டி) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெறுவது கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதியாயிற்று.
1962-ஆம் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி
ஆசிரியர்களும் பயிற்சி பெற்றவர் என்ற நிலையை தமிழ்நாடு அடைந்து வரலாறு படைத்தது. ஆனால் மெட்ரிக் பள்ளிகளில் இந்நிலை இன்றுவரை இல்லை. அப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதாகக் கூறிக் கொள்வதும்
அதனை நம்பி பெற்றோர் தம் குழந்தைகளை அப்பள்ளிகளுக்கு அனுப்புவதும் ஒரு புதிரே. உயர்நிலைப் பள்ளிகளில்
அனைவரும் பயிற்சி பெற்றவர் என்ற நிலையை 1970-க்குப் பின்தான் அடைய முடிந்தது. மேனிலைப் பள்ளிகள் தோன்றிய பொழுது பெரும்பான்மையான
ஆசிரியர்கள் பயிற்சி பெறாதவரே. அவர்கள் பணியிலிருந்துகொண்டே தொலைநிலைக் கல்வி மூலம் தகுதி பெற்றனர்.
எம்.ஈ.ஆர். எனப்படும்
கல்விவிதிகளின்படி பயிற்சி பெறாத ஆசிரியர் தவிர்ப்பு பெற வேண்டும். முதலாமாண்டு மாவட்டக் கல்வி அலுவலரும் பின்னர் இயக்குநரும் தவிர்ப்பாணை வழங்குவார்கள். பயிற்சி பெற்ற ஆசிரியர் கிடைக்கவில்லை என்பதை பள்ளிகள் உறுதி செய்தால்தான்
தவிர்ப்பு வழங்கப்படும். இவ்விதியை ஏன் மெட்ரிக் பள்ளிகளில்
நடைமுறைப்படுத்தவில்லை?
டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு கல்வி அமைப்பு சங்கிலியில்
ஆசிரியர் பயிற்சியே ஆக பலவீனமான கண்ணி என்று கூறியுள்ளது. இடைநிலைக் கல்விக் குழுவும் ஆசிரியர் பயிற்சியை வலுவுடையதாக
ஆக்கிட பரிந்துரைகள் கொடுத்தது. கோத்தாரி கல்விக் குழு ஆசிரியர் கல்வி பிற கல்வி அமைப்புகளினின்று விலகித் தனித் தீவாக இயங்குகின்றது என்பதைச் சுட்டிக்காட்டி எவ்வாறு கல்வி அமைப்பின் பிற நிறுவனங்களுடன்
இணைந்து செயல்பட வேண்டுமென்பதற்கு ஆக்கபூர்வ பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்
விளைவாக மாவட்டந்தோறும் ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.
நம்மிடம் ஒரு நினைப்பு உண்டு. நமது காவல்துறையை விட சி.பி.ஐ மேம்பட்டது,
மாநில
வாரியப் பாடத்திட்டத்தை விட சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டம் சிறந்தது, நமது பல்கலைக் கழகங்களை விட ஏ.ஐ.சி.டி.ஈ,
என்.சி.டி.ஈ. போன்ற நடுவணரசு அமைப்புகள் மேம்பட்டவை
என்று பரவலாக நம்புகின்றோம். ஏன் நமது காவல்துறையை மேம்படுத்த முடியவில்லை
என்று சிந்திப்பதில்லை. ஒரு பொறியியல் கல்லூரியோ, ஆசிரியர் கல்வி நிறுவனமோ தொடங்க வேண்டுமென்றால் பல்கலைக்கழகம்
வல்லுநர் குழுக்களை அமைத்து அவற்றின் பரிந்துரைகளின்படிதான் இணைப்போ அங்கீகாரமோ
வழங்கும். விடுதலைக்குப் பின் முப்பது ஆண்டுகளில் மூன்றே மூன்று தனியார் பொறியியல்
கல்லூரிகளுக்குத்தான் சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதியளித்தது. அவை உதவிபெறும் கல்லூரிகளே. ஆனால் ஏ.ஐ.சி.டி.ஈ. 500-
க்கு மேற்பட்ட தன்நிதிப்
பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதியளித்துள்ளது. அவற்றில் 400-க்கு மேற்பட்டவை தரமற்றவை. அது போல 21 பி.எட். கல்லூரிகளும், 51 ஆசிரியர் கல்வி பட்டய நிறுவனங்களும்
சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்க, என்.சி.டி.ஈ,
666 தன்நிதி பி.எட். கல்லூரிகளுக்கும், 365 தன்நிதிப் பட்டய ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்து ஆசிரியர் கல்வியையே
கேலிக்கூத்தாக்கிவிட்டது. தரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட இந்த அகில இந்திய அமைப்புகள் தரத்தை படுபாதாளத்திற்குத் தள்ளிவிடும்
வேலையைத்தான் செய்தன.
நான் மூன்று தன்நிதி பி.எட். கல்லூரிகளுக்குச் சென்றுள்ளேன். கல்விக் குழுக்களின் அறிக்கைகள்
எதுவும் அந்தக் கல்லூரிகளில் இல்லை. கல்வி இதழ்களும் பெறப்படவில்லை. பள்ளிகளைப்
போல தேர்விற்கு ஆயத்தப்படுத்த வினா-விடை நூல்களையே
நம்பியிருந்தனர். ஒரு கல்லூரியில் பெரும்பாலோர் மெட்ரிக் பள்ளிகளில்
முழு நேர ஆசிரியர்கள். இங்கு முழுநேர மாணவர்கள். இது பல புதிய பி.எட். கல்லூரிகளில்
இருக்கும் நடைமுறையே என்று அறிந்து அதிர்ந்தேன். எந்தக் கல்லூரிக்கும் மாதிரிப் பள்ளிகள் இல்லை. அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில்தான் மாணவர் பயிற்சி பெற்றனர். நான் சைதை ஆசிரியர் கல்லூரியில் படிக்கும்
பொழுது அத்துடன் இணைந்த மாதிரிப் பள்ளியில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்
மிக மூத்த ஆசிரியர்கள்தான் பயிற்சியளித்தனர். ஆசிரிய மாணவர்க்கு நல்ல வழிகாட்டிகளாக
இருந்தனர். இன்றைய தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் தொடங்கிய முதலாமாண்டிலேயே
போட்ட பணத்தை நன்கொடைகள் மூலம் எடுத்துவிடுகின்றன. இந்த வணிகமையக் கல்லூரிகளினின்று
வெளிவரும் ஆசிரியர்கள் எத்தகையவராயிருப்பர்? அனுமதி வழங்கிய என்.சி.டி.ஈ. வாரியமோ,
இணைப்பினை
வழங்கிய தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகமோ இத்தகைய விதிமீறல்களையும்,
தரமற்ற கல்வியையும் கண்டு கொள்வதில்லை.
ஆசிரியர்க்கான ஆண்டுத் தேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் நிறைவு செய்யும். எனவே தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்களைத் தீவிர ஆய்விற்கு
உட்படுத்தித் தரமற்றவையாக நடைபெறும் நிறுவனங்களின்
அங்கீகாரத்தைத் திரும்பப் பெறவேண்டும். மற்றும் கோத்தாரி கல்விக் குழு சுட்டிக்காட்டியுள்ள
விலக்கல்களைத் தவிர்த்து ஆசிரியர் கல்விக் கூடங்கள் மீத்திறனுள்ள
ஆசிரியர்களை உருவாக்க முன்வர வேண்டும். பணி புரியும்பொழுது
பெறுகின்ற அனுபவம் ஆசிரியர்களை மேம்படுத்துகின்றது. பேரா.ச.மாடசாமி,
ஆயிஷா
நடராஜன், ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்ற சிறந்த ஆசிரியர்கள் பணி புரியும்பொழுது கிடைக்கப்பெற்ற
அனுபவத்தினின்று கற்ற பாடங்களினால் உருவானார்கள் என்பதை அறிய வேண்டும்.
(044-23620551 –rajagopalan31@gmail.com)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.