Monday, September 5, 2016

தேவரனையர் - ச. சுப்பாராவ்

அவன் மடிக்கணினியில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும்போது, காயத்ரி வாசலில் யாரோடோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது. ஒருகணம் யாரென்று போய் பார்க்கலாம் என்று நினைத்தான். பிறகு, தான் வரவேண்டும் என்றால் காயத்ரியே அழைத்திருப்பாளே என்று விட்டுவிட்டான். அப்போது அவளே உள்ளே வந்து  உங்க பர்ஸ்ல நூறு ரூபாயா இருக்குமா? பீரோல எல்லாம் ஃபைவ் ஹண்ட்ரட்ஸாதான் இருக்கு என்றாள். சொல்லியவாறே ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்த அவனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து, அதிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றாள். அவன் எதற்கு என்று கேட்டதற்கு வந்து சொல்வதாகச் சொல்லிச் சென்றாள்.

அவள் வாசல் கதவைத் தாளிட்டுவிட்டு வரும் சத்தம் கேட்டது.
அவன் என்ன வாங்கின?” என்றான்.

ஒண்ணும் வாங்கல்ல, இது வேற விஷயம் என்றாள். அவனுக்குப் புரிந்தது. யாருக்கோ கடன் கொடுத்திருக்கிறாள்.

யாருக்கு என்ன அவசரச் செலவாம் என்று கேட்டான்.

நம்ம முத்தக்கா வீட்டுக்குப் பக்கத்து வீட்ல இருக்கா. முந்தி, பிள்ளையார் கோவில் வாசல்ல, தேங்கா, பழக்கடை வெச்சிருந்தா. இப்ப பாமா நகர்ல எங்கயோ ஒரு புது கட்டடத்துல ஷெட்டப் பாத்துக்கறாளாம். கொழந்தக்கி ஒடம்பு சரியில்லன்னு பணம் கேட்டா. அவாளுக்கு சனிக்கழமைதான் சம்பளம் தருவாளாம். சனிக்கழமை கரெக்டா தந்துருவேன்னு சொன்னாஎன்றாள்.

அவன் பார்வையைப் பார்த்ததும், பாக்க பாவமா இருந்தது என்று சேர்த்துச் சொன்னாள். ஏன் கொடுத்தாய் என்பதுபோல் அவன் பார்த்தான் என்றாலும், அவனும் அவளைப் போன்றவன்தான். அவள் தரும்போது அவனும், அவன் தரும்போது அவளும் இப்படிப் பார்த்துக் கொள்வார்கள். மற்றவர் அதற்கு பாக்க பாவமா இருந்தது என்று ஒரு விளக்கம் தருவார்கள். ஆனால் அவனுக்கு ஒரு விஷயம் மட்டும் எப்போதுமே ஆச்சரியமாக இருக்கும்.

அந்தப் புதிய புறநகர்க் குடியிருப்பில் அவர்களது தெருதான் கடைசி. அதற்குப் பின்னால், பழைய கிராமம் இருந்தது. முல்லையாற்றுப் பாசனத்தில் இன்னமும் விவசாயம் நடந்து வந்தது. அந்தத் தெருவில் நிறைய வீடுகள் இருந்தாலும், ஏனோ எல்லோரும் இவர்கள் வீட்டைக் குறி வைத்தே உதவிகள் கேட்டார்கள். வாங்கிச் சென்ற பணத்தை சமயங்களில் திருப்பித் தந்தார்கள். சமயங்களில் தராமல் இருந்தார்கள். எத்தனை விதம் விதமாக உதவிகள் கேட்டு வந்திருக்கிறார்கள்!

ஒரு ஞாயிறன்று காலை பதினோரு மணிக்கு மாமீ, மாமீ என்று அழைத்தபடி ஒரு நடுத்தர வயது மாமி, “போஸ்ட்டாபீஸ் மாமி இங்கதானே?” என்றாள் சகஜமாக.

ஆமா... என்ன வேணும்?

உள்ள வரலாமா? என்னமோ, ஆகஸ்ட் மாசத்துலயே வெயில் இந்தப் போடு போடறது.. உள்ளே வந்தாள். காயத்ரியிடம் நீங்க எந்த போஸ்ட்டாபீஸ் என்றாள்.

அம்மைநாயக்கனூர் போஸ்ட்மாஸ்டர் வீரசுப்புன்னு கேள்விப்பட்டிருக்கேளா என்றாள்.

இல்லை. என்ன விஷயம்?

மாமாவிற்கு பித்தப்பையை எடுத்து பெரிய ஆப்பரேஷன். பிழைத்ததே பெரும்பாடு. திருப்பதிக்கு நடந்து வருவதாகவும் வழிச்செலவிற்கு பிச்சையெடுத்து வருவதாகவும் வேண்டுதலாம்.

அதற்குத்தான் இப்படி வந்து கொண்டிருக்கிறாள். பென்ஷனுக்கெல்லாம் ஒரு குறையும் இல்லை. எல்லாரிடமும் கேட்கவும் கூச்சம். ஏதோ இப்படி தெருத்தெருவாகத் திரிகிறாளாம் . போஸ்டாபீஸ்காரா யாராவது இருந்தால் மட்டும் கேட்பாளாம். மாமி அசப்பில் கண்ணாம்பா போல் பளீரென்று இருக்கிறாள். காயத்ரி மாமிக்கு நூறு ரூபாயும், உண்டியலில் போடச் சொல்லி மற்றொரு நூறும்   கொடுத்தாள். இது ஏமாற்று வேலையா? உண்மைதானா? என்று அவனுக்குக் குழப்பம். அவளுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. சாமி பேரில் பொய் சொன்னால், அந்தப் பாவம் அவாளுக்குதான் என்ற எளிய லாஜிக்கில் இருநூறு ரூபாய் போனது.

இரண்டு வாரம் முன்பு சிம்மக்கல் பஸ்ஸ்டாப்பில் இப்படித்தான் ஒருவர்,
ஏண்டா, அம்பி, அப்பா எப்படி இருக்கார்? என்றார்.

அப்பாவா? அவர் போயாச்சே, என்றான்.

போற வயசே இல்லயேடா, என்றார்.

அவர் டா போட்டுப் பேசுவது அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்? என்றான் எரிச்சலாக.

வீடு மாறியாச்சா? அதே பழைய வீடுதானா? என்றார் அவர்.

எங்க பழைய வீடு எங்க இருந்ததுன்னு சொல்லுங்க பாப்போம் என்று அவன் கேட்க நினைத்தபோதே காயத்ரி, “நீங்க இவரோட அப்பாவோட பிரண்டா? என்ன வேணும்?” என்றாள்.

திருமங்கலம் போகவேண்டும். நாளை காலை வைகையைப் பிடிக்க வேண்டும். இங்கே பஸ்சில் பர்ஸ் தொலைந்து போய்விட்டது. திருமங்கலத்திற்கு ஒரு பஸ்சார்ஜ் தந்தால் போதும்.

இவன் எவ்வளவோ சந்தேகப்பட்டாலும்கூட, தரக்கூடாது என்று நினைத்தாலும்  கூட, அவளின் கெஞ்சும் பார்வைக்காக பணம் தர வேண்டியதாகப் போனது.

தங்களைப் பார்த்தால் மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறது என்று அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். எதிர்வீட்டு நரசிம்மன் ஸார் வீட்டிற்கு புதிதாய் ஒரு குடும்பம் குடிவந்திருந்தது. வந்த இரண்டாவது நாள் புதிதாய் வந்தவரின் மனைவி ஸார், ஸார் என்று கூப்பிட்டாள். நைட்டிக்கு மேல் ஒரு துண்டைப் போர்த்தி நைட்டிக்குத் தமிழ்த்தன்மையை ஏற்றியிருந்த அவள் ஒரு வினோதக் கோரிக்கையை வைத்தாள். அவர்கள் வீட்டிற்குச் சற்று தள்ளியிருந்த குப்பைத்  தொட்டிக்குள் யாரோ இறந்த நாய் ஒன்றை போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். நாளை மாலை குப்பை லாரி வரும் வரை தாங்காது. இப்போதே நாற்றம் குடலைப் பிடுங்கியது. எனவே சுகாதாரத் துறை ஊழியர் ஒருவரை இதற்காகவே வரவழைத்து அதை இப்போதே அப்புறப்படுத்த ஏற்பாடு செய்திருக்கிறாள். அவர் நூறு ரூபாய் கேட்கிறார். அவள் ஐம்பது ரூபாய் தரப்போகிறாள். பாக்கி ஐம்பது ரூபாயை நாங்கள் தரவேண்டுமாம். உண்மையில் இறந்த நாயின் நாற்றம் தெருவின் நான்கைந்து வீடுகளுக்குப் பொதுவாக வீசியது. இருந்தாலும், ஏரியாவிற்கு நேற்றுதான் வந்தவள், எங்களிடம் மட்டும் கேட்கிறாள்.

மனிதர்கள் என்று அல்ல. ஐந்தறிவு ஜீவராசிகளுக்குக் கூட தம் இருவரையும் பார்த்தால் அத்தனை இளக்காரமாக இருப்பதை நினைத்து அவனுக்கு துக்கமாக இருந்தது.

ஐந்து வயதுக் குழந்தைகூட தன்பாட்டிற்கு கீரைக்கட்டை வாங்கிக் கொண்டு   செல்கிறது. அவன் பை இல்லாமல் வெறும் கையில் கீரைக்கட்டை வாங்கிக் கொண்டு வந்தால் வன்னியக் கோனாரின் பொலிகாளைக்கு எப்படியோ மூக்கில் வேர்த்துவிடும். இவன் கையில் இருந்து பிடுங்கிக் கொண்டு போய்விடும். அது மாதிரியேதான் அந்த அஸ்வின் காப்பி பார் வாசலில் படுத்துக் கிடக்கும் கறுப்பு வெள்ளை நாய்க்கும் அவனைப் பார்த்தால் அத்தனை கேலி. எல்லோரும் பால் வாங்கிக் கொண்டு போகும் போதும் பேசாமல் படுத்திருக்கும் அந்த நாய், இவன் பால் வாங்கிக் கொண்டு வரும் போது மட்டும், பாய்ந்து வந்து கூடைக்குள் தலை விட்டு என்ன வாங்கிக் கொண்டு போகிறான் என்று பார்க்கும். தினமும் அந்தக் கடைக்காரர்தான் அதை விரட்டுகிறார். இல்லாவிட்டால், ஒரு பால் பாக்கெட்டை அது தூக்கிக் கொண்டு போய்விடும்.

ரூபா வாங்கிண்டு போனாளே, அவ பேர் என்னன்னு கேட்டயா?”

இல்ல, ஆனா அவள எனக்கு தெரியும்.

சப்போஸ் அவ திருப்பித் தராட்டா, அவள எப்படி தேடுவ? பாமா நகர்ல ஆயிரம் புது வீடு வேல நடந்துண்டு இருக்கு.

அவ தந்துடுவா. ஏமாத்தப் போறான்னு நாமளா ஏன் நெனச்சுக்கணும்?” அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

எல்லாருக்கும் நம்பளப் பாத்தா எப்படி இருக்குன்னு தெரியல்ல. தெருவுல அம்பது வீடு இருக்கு. யார்ட்டயும் கேக்காம, கரெக்ட்டா நம்மளத் தேடிதான் வரா என்றான் சற்று எரிச்சலாக.

அவள் மிக சாதாரணமாக, “இல்லாதவா பகவான் மாதிரி, அவாளுக்கு நல்லவாள கரெக்டா அடையாளம் தெரியும் என்றாள்.

அப்போது அவள் மிகவும் அழகாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

 94421 82038 –csubbarao7@gmail.com




4 comments:

Unknown said...

Hahaha.... It is hillarious and practically written... I guess it is from your real life, isnt it?? Enjoyed reading the whole sequence. Keep writing. Best wishes Mr Subbarao.

Unknown said...

Hahaha.... It is hillarious and practically written... I guess it is from your real life, isnt it?? Enjoyed reading the whole sequence. Keep writing. Best wishes Mr Subbarao.

thirumagal said...

Excellent. Entire world survives only for such Godly human beings

புதிய ஆசிரியன் said...

நன்றி Bagya Kamal மற்றும் திருமகள் அவர்களே. தொடர்ந்து பயணம் செய்யுங்கள்.உங்கள் கருத்துக்களால் நாங்கள் வளர்கிறோம்.

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.