Monday, September 5, 2016

வடகிழக்கு மூலை - பிரேம பிரபா

இதுதான் என் வாசக சாலை, மனமகிழ் மன்றம், தற்காலிக சயன அறை, பதுங்கு குழி, சில சமயங்களில் எனக்கு நானே தேர்ந்தெடுத்துக்கொண்ட தனிமைச் சிறைச்சாலை. எட்டிற்கு ஆறடி நீள அகலம். உயரம் குறைந்தது எட்டடிக்கு மேல் இருக்கும். என் உயரத்தை விட தரையிலிருந்து ஓரடிக்குக் குறைவாக சுவற்றில்  நீல நிற சலவைக் கல் பதிக்கப்பட்டிருக்கும். தென் கிழக்கு மூலையில் இருக்கும் கைகழுவும் பீங்கான் கோப்பைக்கு மேல் ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் பாதரசம் போன ஒரு பெல்ஜியம் கண்ணாடி. அதற்கு மேல் ஆஸ்ட்ரிச்சின் முட்டையைப் பார்க்கிலும் இரண்டு மடங்கு பெரிதான ஒரு வாட்டர் ஹீட்டர். அதன் மேல் சரி பாதி புழுதி படிந்து மிகவும் அழுக்காகவும், கீழ் சரி பாதி அதை வாங்கும்போது இருந்த வெண்மை நிறத்தில் ஒரு மட்டு குறைவாகவும் இருக்கும். வட கிழக்கு மூலையில் பருத்தி வெள்ளை நிறத்தில் மேற்கத்திய டாய்லெட். அதில் உட்காருவதற்கு ஏதுவாக அடர் நீல நிறத்தில் மிருதுவான இருக்கை. என் கை எட்டும் உயரத்தில் தங்க நிறத்தில் ஐம்பத்தி இரண்டு சிறு துளைகள் கொண்ட வட்டமான ஷவர் ஹெட். ஒன்றிற்கு பல தடவை நான் எண்ணிப் பார்த்துவிட்டேன். நிச்சயம் ஐம்பத்தி இரண்டு துளைகள்தான். சில சமயம் ஐந்து அல்லது ஆறு துளைகள் அடைபட்டுப் போனாலும் எந்த சமயத்திலும் என் சுகமான  குளியலிற்கு ஆகப் பெரிய எந்த ஒரு பெரிய இடைஞ்சலும் இருந்ததே இல்லை. என் உயரத்திற்கு அரை அடிக்கு மேல் ஒரு சிறிய வெண்டிலேட்டர். இந்தக் கனவு அறையில்தான் எனக்கு மிகவும் பிடித்த போனி எம்மின் ரஷ்புட்டீன் பாட்டையும், செகுவாராவின்  ஸ்பானியப் பாடலான ஹஸ்தா சியம்பரே கோமண்டாண்டேவையும் அடிக்கடி உரத்த குரலில் பாடியிருக்கிறேன். வீடா என்ன இது, இப்படிக் காட்டுக் கத்தலா இருக்கே? என்ற என் மனைவியின் பேரிரைச்சலை என் தொடர் இசை சுவடின்றி அழித்துவிடும்.


இந்தக் கழிவறையைக் கட்டும்போது முதிய தலைமைக் கொத்தனார் கூறியது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. வடகிழக்கு மூலையிலே இந்த கக்கூஸ் இருக்கக் கூடாதுய்யா. குடும்பத்துக்கு ஆகாது. இந்த ஏரியாவிலே இருக்கற வாத்தியார் வூடும் நான் கட்டினதுதான். யாரு கிட்டே வேணும்னாலும் கேட்டுப்பாருங்க என்று அரைக் கலவரத்துடன் என்னிடம் கூறினார். அவரின் குரலில் இருந்த அச்சத்தைத் தூண்டும் தயக்கம் என்னை ஒரு மயிரிழை அளவு கூட அதிர வைக்கவில்லை என்பதை அறிந்த அந்த முதியவர் என்னிடம் எதுவும் கூறாமல் விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தார்.

புது வீட்டிற்குள் குடியேறிய பிறகு நடந்த அனைத்து நல்ல விஷயங்களுக்கும் என் மனைவியின் ராசிதான் என்பதை ஒத்துக்கொண்டவர்கள், இடையிடையே ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு என் கழிவறையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார்கள். என் மனைவியின் சொந்தங்களும் என்னை ஒரு ஆயுள் தண்டனைக் கைதியைப் பார்ப்பது போல பார்க்க ஆரம்பித்தார்கள்.
ஐந்து நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காகங்களைக் காணவே இல்லை. சிறிது நேரம் மழை நிற்கும் பாவனையில் மேகங்கள் விலகி வானம் வெளுத்தது. அடர்த்தியான நெல்லி மரத்தில் மட்டும் இரண்டு தவிட்டுக் குருவிகள் சொட்டச் சொட்ட நனைந்து ஜோடியாகக் கிளையில் உட்கார்ந்திருந்தன. இது போன்ற அடை மழை பல வருடங்களுக்கு முன் வந்ததாகப் பலர் பேசிக்கொண்டார்கள். வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்கியிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே மனைவியை கிராமத்திற்கு அனுப்பி விட்டேன்.

அன்று இரவு நான் உறங்க வெகு நேரமானது. எங்கள் வீட்டுக் கழிவறையைத் தவிர வீட்டின் அனைத்து அறைகளிலும் பொருட்கள் தாறுமாறாகக் சிதறிக்கிடந்தன. ஒரு மணி வாக்கில் மக்களின் குரல் கேட்டு எழுந்தேன். கதவினைத் திறக்கவும், தேங்கிய மழை நீர் வாசல் வழியாக மெல்லக் கசிந்து வீட்டினுள்ளே நுழைந்தது. என் பதுங்கு குழிக்குள் அடைக்கலம் தேடினேன்.  வீட்டிற்குள் புகுந்த வெள்ளம் அலையடிப்பது போல முதலில் என் பதுங்கு குழியைத் தட்டிப்பார்த்து, பிறகு நீண்ட இடைவேளி விட்டு என் இருப்பை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள மீண்டும் பல முறை தட்டிப்பார்த்தது. காலை இரண்டு மணியிருக்கலாம். கதவினைத் தொட்டுப் பார்த்தேன். குளிர்ச்சியாக இருந்தது. நிச்சயம் வெள்ளம் ஓரடிக்கு மேல் தொட்டிருக்கவேண்டும். கழிவறையின் கோப்பையினில் இருக்கும் நீரின் அளவு உயர்ந்து வெளியே வழிய ஆரம்பித்தது. அதன் மேல் நின்று கொண்டு வெண்டிலேட்டர் வழியாகப் பார்த்தேன். மக்களின் சப்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. மூன்று நான்கு ஐந்து அடியென்று வெள்ளம் உயர்ந்து கொண்டே போனது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு மாத விடுப்பில் பெற்றோர்களைக் காண வந்த புதுத் தம்பதியர்களான சுசீந்தரனும், அமெரிக்கப் பெண்ணான ஜான் ஏஞ்சலும் மாடியில் நின்று கொண்டு மீட்புப் பணியாளர்களப் பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தார்கள். தோளின் அளவிற்கு வெள்ளம் தளும்பி நின்றது. அப்போதுதான் அந்த இளைஞனைப் பார்த்தேன். வெண்டிலேட்டர் வழியாகப் பார்த்தவன் இங்கே ஒருத்தர் இருக்கார்டா என்று குரலை உயர்த்தி தன் நண்பர்களை உதவிக்கு அழைத்தான்.அவர்களின் ஒருவன் வெண்டிலேட்டரில் குறுக்காக இருக்கும் கண்ணாடிப் பட்டிகளை மெதுவாக எடுத்தான். என் இடுப்பிற்குக் கீழே மரத்துப் போய் கால்கள் செயலிழக்க நான் நிற்கத் தடுமாறினேன். இடையிடையே அந்த இளைஞன் பயப்படாதீங்க சார், ஒரே நிமிஷம். நீங்க வெளியே வந்திடலாம் என்று குரல் கொடுத்துக்கொண்டே ஒவ்வொரு கம்பியாக எடுக்க ஆரம்பித்தான். முதல் இரண்டு கம்பிகளை அகற்றப் போராடியவன் அடுத்த மூன்று கம்பிகளை சுலபமாக எடுத்துவிட்டு தன் இரண்டு கைகளால் என்னை அப்படியே மெல்ல வெளியே இழுத்து தற்காலிக மிதவையில் சாய்மானமாக உட்கார வைத்தான்.  கண்கள் இருண்டு வர வானத்தைப் பார்த்தேன். எனக்கும் என் பதுங்கு குழிக்குமான இடைவேளி நீண்டு கொண்டே போனது.

அடுத்த தெருவிலே வாத்தியார் அய்யா கக்கூஸு கதவை தொறக்க முடியாம அங்கேயே வெள்ளத்துலே மாட்டிக்கிட்டு செத்து போயிட்டாராமே, உனக்குத் தெரியுமா?.. பாடியைக் கூட வெளியே எடுக்க முடியலே.. அந்த இளைஞன் தன் சக நண்பனிடம் சொல்வதை நான் கேட்டு அதிர்ந்தேன். நான் உறைந்ததைப் பார்த்தவன் நீங்க ரொம்ப ராசிக்கார ஆளு சார் என்று அவன் கைகளில் இருந்த குடிநீர் பாக்கெட்டை என்னிடம் நீட்டினான்.
9790895631 – premaprabha.premkumar@gmail.com





0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.