Monday, September 5, 2016

நூல் அறிமுகம்

தனது புதிய கவிதைத் தொகுப்பு,

`அகவரிகள்  மூலம் பலர் மிகச் சாதாரணமாக கடந்து செல்லும் விஷயங்களுக்கு ஒரு முகவரியை தந்திருக்கிறார் முனைவர் என். மாதவன். தொகுப்பை நிறுத்தாமல் ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தது என்பது தொகுப்பின் சிறப்பு. அருகமைப்பள்ளியின் அவசியத்தை உணர்த்தும் முதல் கவிதையே நெஞ்சை வருடுகிறது. சென்னை வெள்ளத்தையும் ஆக்கிரமிப்பு கட்டடங்களையும் நம்முன் எழுப்பிவிட்டு செல்கின்றன சில கவிதை வரிகள்.பாட்டன் சொத்தை அழிப்போரை தட்டாமல் திட்டுகிறது சமூகம்; வாழ லாயக்கற்றதாய் மாறும் பூமியை மட்டும் கண்டுகொள்வதேயில்லை என பூமியைப் பாதுகாக்க இயலாத நம் தோல்வியை சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு சாடுகின்றார் மாதவன். யாரையும் தாக்கத்தான் நமக்கு அதிகாரம் வேண்டும். மற்றபடி அனைத்தையும் சாதிக்கவல்லது அன்பே! என நச்சென மண்டையில் அறைகின்ற கவிதைகள் சபாஷ் போட வைக்கின்றன.


அறிவியலில் தன் சமூகப் பார்வையை ஆழம் அதிகரிக்க, அழுத்தம் அதிகரிக்கும் என்று பதிவு செய்து, சமூகக் கொடுமைகளுக்கு ஒரு குட்டு வைக்கிறார். கனத்த கருத்துக்களை மட்டுமன்றி இறகு போல் மனதை லேசாக்கும் வரிகளும் உண்டு என்பதற்கு சாட்சி, ஹெல்மெட்டின் இம்சையை பகடி செய்யும் கவிதை! வாழ்வின் பல்வேறு பரிமாணங்களில் தடம் பதிக்கின்றன இவரது எழுத்துகள்! கோலங்களைக் கலைக்காமல் காலி செய்யும் எறும்புகளிடமிருந்து தான் தடயமே இல்லாமல் சுருட்டக் கற்றனரோ.... சுயநல அரசியல்வாதிகள்! இந்த ஒரு கவிதை போதும் முனைவரின் சாடலுக்கு உதாரணமாக!! கவிஞர் முருகேஷ் அவர்களின் அறிமுகமும் எழுத்தாளர் எஸ்.வி வேணுகோபாலன் அவர்களின் மதிப்புரையும் நூலுக்கு கூடுதல் மெருகூட்டுகின்றன. கல்வியாளர்கள், சமூக விரும்பிகள், ஆசிரியர்கள் என அனைவரும் விரும்பும் தொகுப்பாக இது அமைந்துள்ளது என்பதில் வியப்பேதுமில்லை.
விஜயலட்சுமி ராஜா, கண்ணமங்கலம், வேலூர் மாவட்டம்
அகவரிகள் - பக்கம் 64
விலை ரூபாய் 40
அகநி வெளியீடு 3,
பாடசாலை வீதி அம்மையப்பட்டு

வந்தவாசி 604 408 பேச 94443 60421

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.