Monday, September 5, 2016

நானே நானா? யாரோ தானா? - டாக்டர் ஜி.ராமனுஜம்


நகுலனின் புகழ்பெற்ற கவிதை ஒன்று உள்ளது.
ராமச்சந்திரனா என்றேன் /
ராமச்சந்திரன்தான் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று /
நானும் கேட்கவில்லை
அவரும் சொல்லவில்லை

இக்கவிதை அடையாளம் கண்டுகொள்வதன் சிக்கலைக் கூறுகிறது. ஒவ்வொரு முறையும் தொலைபேசி உரையாடலின்போது இக்கவிதையை நினைவு கூருகிறேன்.

நம் மக்களுக்கு ஒரு நினைப்பு. உலகில் உள்ள எல்லோருக்கும் தங்களது பெயரை அல்லது குரலைக் கேட்டவுடன் அடையாளம் தெரிந்து விடும் என்று. குரலைக் கேட்டவுடன் தெரிந்து கொள்ள வேண்டுமானால் கே.ஜே.யேசுதாஸோ அல்லது பி.சுசீலாவோ பேசினால்தான் முடியும். அதேபோல் பெயரைக் கேட்டவுடன் கண்டுபிடிக்க வேண்டுமானால் பாரக் ஒபாமா, விளாடிமர் புடீன் போன்ற பேர்களாக இருந்தால் ஓரளவுக்குக் கண்டுபிடிக்கலாம். தமிழ்ப் பெயர்களாக இருந்தால் பழுவேட்டரையர் , நரிவெரூஉத்தலையர் இது போன்ற பெயர்களாக இருந்தால் பரவாயில்லை. ராஜா, அம்பி, சுப்ரமணியன், முருகன், கணேசன் என்பது போன்ற வீட்டுக்கு ஒருவர் வைத்திருக்கும் பெயராக இருக்கும் பட்சத்தில் அவ்வளவுதான். நாந்தான் சுப்பிரமணியன் பேசுகிறேன் என்றால் தொலைபேசி டைரக்டரியில் உள்ள எல்லா சுப்பிரமணியன்களும் நினைவுக்கு வருவார்கள்.

இது போன்ற காமன் பெயர்கள் (ரதியின் வீட்டுக்காரர் அல்ல - பொதுவான பெயர் உள்ளவர்கள்) தங்களைப் பற்றிக் குறைந்தபட்சம் ஒரு பத்தியாவது முன்னுரை கொடுத்துவிட்டுப் பேசினால் நல்லது. அல்லது நாய்சேகர், ஸ்நேக் பாபு என்பது போல் ஒரு அடைமொழியாவது கொடுத்துவிட்டுப் பேச வேண்டும்.

தொலைபேசியில் ஒரு பெயரைத் தேடும்போதும் அதே குழப்பம். நான்கு செந்தில்கள் இருப்பார்கள். அதில் யார் நாம் தேடும் செந்தில் எனத் தெரியாது. பிளம்பர் செந்திலுக்குப் பதிலாக டாக்டர் செந்திலுக்கு அடித்து குழாயில் தண்ணி வரவில்லை எனக் குழப்புவோம். யாரிடம் பேசுகிறோம் எனத் தெரியாததால் முதல் சில நிமிடங்கள் நல்லா இருக்கீங்களா? வீட்டில் எல்லோரும் சுகமா? (கல்யாணம் ஆனவரா என்று தெரியாதே) என்றெல்லாம் ஜெனரல் நாலெட்ஜாகப் பேச வேண்டும். ஆட்டோ ஓட்டுநரா ஆடிட்டரா என்று தெரியாததால் வேலையெல்லாம் எப்படி இருக்கு என்று கேட்கலாம். பல சமயம் அவர்களும் நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பொதுப்படையான பதில்களைக் கூறிக் குழப்பத்தின் டி.ஆர்.பி ரேட்டிங்கை எகிறவிடுவார்கள்.

அதே போல் யாரையோ அழைப்பதற்கு பதில் நம்மை அழைத்துத் திகைக்க வைப்பதும் உண்டு. என் பெயரைக் கொண்ட வேறொரு மனநல மருத்துவரும் மதுரையில் இருக்கிறார். அடிக்கடி அவரிடம் பேசுவதாக நினைத்து என்னிடம் பேசுபவர்கள் உண்டு. அவருக்கும் அந்த அனுபவம் கிடைத்திருக்கும். ஒரு முறை எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் ராமானுஜம் என்பவருக்குப் பேசுவதற்குப் பதில் என்னிடம் பேசி என்னைப் பாராட்டியவரும் உண்டு.

ஒரு முறை என்னை அழைத்த  ஒருவர் அப்பா பேசறேன். அக்கவுண்ட் நம்பர் சொல்லு பணம் போடுகிறேன் என்றார். என் தந்தைக்குத் தொண்டை கட்டிக் கொண்டாலும் குரல் இப்படி மாறாதே எனக் குழம்பி ஹலோ என்றேன். எதிர்முனையில் இருந்தவர் தனது பெண்ணுடைய குரல் ஆண்குரலாக மாறியதைக் கேட்டுத் திகைத்திருப்பார். பிறகு அவர் டாக்டரா? சாரி சார். நான் டாட்டர் என்று என் மகள் பேரைப் பதிந்திருந்தேன். அதற்குப் பதிலாக டாக்டர் என்று பதிந்திருந்த உங்க நம்பருக்கு அடித்து விட்டேன் என்றார்.

ஒரு நம்பர் மாற்றி அழுத்திவிட்டு அகால வேளையில் நமக்குப் போன் செய்து டெலிவரி ஆகி விட்டதா? பாடி எடுத்தாச்சா? என்றெல்லாம் திகைக்க வைப்பவர்கள் எப்பவுமே இருப்பார்கள். ( இந்த ராங் நம்பர்கள் எல்லாம் பெரும்பாலும் நாம் தூங்க ஆரம்பித்து ஐந்து நிமிடங்களுக்குள் வருவது தனியாக ஆய்வுக்குரியது).

எல்லாவற்றையும் விட அதிகபட்சத் திகிலைக் கொடுப்பவர்கள் நான்தான் பேசறேன்  என இன்ட்ரோவே இல்லாமல் என்ட்ரி கொடுப்பவர்கள். கடைசிவரை தான் யார் என்பதைச் சொல்லவே மாட்டார்கள்.

ஆதியும் அந்தமும் இல்லாத பிரம்மமே மெய். `நான் என்பது வெறும் மாயை எனச் சொல்லும் அத்வைத விசிஷ்டாத்வைத தத்துவங்களெல்லாம் நினைவுக்கு வருமளவுக்கு தொலைபேசியில் அழைத்த அந்த `நான் பேசிக் கொண்டிருப்பார்.

நகுலன் இன்றிருந்திருந்தால் இப்படி எழுதியிருப்பாரோ?
யார் பேசுவது? என்றேன் /
நான்தான் என்றார்.
எந்த நானென்று / நான்
கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை
- டாக்டர் ஜி.ராமானுஜம் (9443321004 - ramsych2@gmail.com )





0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.