இந்தியச் சுதந்திரப் போரின் ஒருபகுதியான ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாடு முழுவதும் பற்றி எரிந்த போர்த்தீ. மகாத்மா காந்தியடிகள் விடுத்த செய் அல்லது செத்துமடி அறைகூவலின் விளைவாக நாடு முழுவதும் சாதி மதம் இனம் மொழி பிரதேச வேறுபாடுகளைக் கடந்து தேசபக்தர்கள் கிளர்ந்தெழுந்தனர். கோவை நகரின் ஒதுக்குப் புறமாக உள்ள தோட்டத்தின் புகையிலைக் கிடங்கில் 1942 ஆகஸ்டு 12ஆம் நாள் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் இரகசியமாகக் கூடினர். அக் கூட்டத்திற்குத் தலைமையேற்று உணர்ச்சிமிகு உரையாற்றினார் என்.ஜி.ராமசாமி. மறுநாள் காலை ஒரு வீட்டில் தங்கியிருந்த என்.ஜி.ராமசாமி காவல் துறைக்கு உளவு தருபவரால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரைக் குதிரை வண்டியில் ஏற்றிச் செல்ல முயன்றனர் காவல் துறையினர். ஆனால் அதை அவர் மறுத்துவிட்டுக் கால்நடையாகவே ஒண்டிப்புதூரிலிருந்து சிங்காநல்லூருக்குக் காவல் துறையினருடன் சென்றார். அதையறிந்த மக்கள் வெள்ளமெனத் திரண்டனர். வெள்ளை அரசுக்கு மக்கள் எவ்வித ஒத்துழைப்பும் தரக்கூடாதென முழக்கமிட்டபடியே சென்றார் என்ஜிஆர். அன்றிரவு ஊட்டி அரவங்காடு துப்பாக்கித் தொழிற்சாலையிலிருந்து
இராணுவத் தளவாடங்களை ஏற்றி வந்த கூட்ஸ் இரயிலைக் கவிழ்த்தனர் சிலர். தண்டவாளங்களைத் தகர்த்தனர். ஆகஸ்டு 26 அன்று சூலூர் இராணுவ நிலையத்திற்கு தீ வைத்தனர். விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ லாரியை எரித்தனர். சிங்காநல்லூர்,
பள்ளிப்பாளையம் கள்ளுக்கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பல ஊர்களில் ஆகஸ்டு புரட்சித் தீ கொழுந்து விட்டெரிந்தது. கோவை சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். சிறையில் காவல் துறையினர் நடத்திய கொடூரத் தாக்குதலால் அவரது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது. உடல்நலம் கெட்டு 1943 பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் காலமானார்.
இத்தகைய வீரர்களின் தியாகத்தினால் பெற்ற சுதந்திரத்தின் அருமை மக்களுக்குத் தெரிந்தால்தான் அந்த சுதந்திரத்தைக் கண்போல் காப்பாற்றும் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
- பெரணமல்லூர் சேகரன் 9442145256-sekernatesan@gmail.com
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.