Monday, September 5, 2016

கேள்விகள் நிறைய - இரா.சீத்தா வெங்கடேஷ்

மனசு வலிக்கிறது...கேள்விகள் பதில்கள் தெரியாமல் தவிக்கின்றன... இரண்டு நாட்களுக்கு முன்.... மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. பள்ளி நேரம் முடிந்து வெகு நேரமாகியும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை அழைத்துச் செல்ல அவன் தாய் வரவில்லை.

பையன் அழுதபடி.. எங்களால் சமாதானம் செய்யமுடியவில்லை.. பால், பிஸ்கட், எதுவும் வாங்க மறுத்துவிட்டான். வீட்டின் செல்பேசி இரண்டும் அணைக்கப்பட்டிருக்க... என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் தவித்துக்  கொண்டிருந்தோம்.. எங்களுக்கும் நேரமாகிக் கொண்டே இருந்தது.

காலையில் சரியான நேரத்திற்கு குழந்தையை பள்ளிக்கு அனுப்பி, மதியம் உணவு கொண்டு வந்து கொடுத்து, மாலையும் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு அழைத்துச்  செல்ல வந்துவிடும் அவனது அம்மாவிற்கு இன்று என்னவாயிற்று?

கணவர், இந்தியாவின் எல்லைக்கோட்டில் நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கஆறு வயதிலும், மூன்று வயதிலும் இரண்டு மகன்களையும், தனியாய் இங்கே வளர்த்துக் கொண்டிருந்தாள். குழந்தைகள் இருவரும் சரியான சுட்டிகள்... படிப்பிலும், விளையாட்டிலும், தனித்திறமைகளிலும் தங்களை நிருபித்துக் கொண்டிருந்தனர்.

இருபது வயதே நிரம்பிய பெண், தனி ஆளாய் குழந்தைகளை மிகச் சரியாய், திறமையாய் வளர்த்து வருவது எங்களுக்கும் ஆச்சரியமான விஷயங்களில் ஒன்றாக இருக்கும். எந்த சலுகைக்காகவும், அவளது குழந்தைகளுக்காகவும் அவள் எங்களிடம் வந்து நின்றதே இல்லை. பாராட்ட மட்டுமே சந்தித்துக் கொள்வோம். அப்போது எங்களை உறுத்தும் ஒரே விஷயமாக இருந்தது அவளுக்கும் அவளது கணவருக்கும் உள்ள 15 வயது வித்தியாசம்தான்.

சரி விஷயத்திற்கு வருவோம்....

இன்னும் அந்த குழந்தையின் அழுகை நிற்கவில்லை. எங்கேயாவது வெளியே சென்று, மழையில் மாட்டிக் கொண்டுவிட்டாளோ? மறுபடியும் போனில் கூப்பிட்டோம். போன் அணைக்கப்பட்டிருந்தது. எங்கள் பள்ளியில் படிக்கும் அவனது வீட்டருகே இருக்கும் மற்றொரு மாணவியின் எண்ணைத் தேடி, அழைத்து, விஷயத்தைச் சொன்னோம். அவனது வீடு பூட்டி இருக்கிறது என்றும், தான் வந்து அழைத்துப் போவதாகவும் அந்த மாணவியின் தந்தை சொன்னபிறகுதான் எங்களுக்கு நிம்மதியாய் இருந்தது. அவனை அவரிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.

மறு நாள் காலை பள்ளிக்குச் சென்றால், பெரிய கதை ஒன்று காத்திருந்தது.
அந்த பெண் தன் பக்கத்து வீட்டு இளைஞனோடு எங்கோ போய் விட்டாள்.. கொடுமை என்னவென்றால், தன் இரு குழந்தைகளைப் பற்றியும் கவலைப்படாமல், தெருவில் விட்டுவிட்டுப் போய்விட்டாள்.. தகவல் சொல்லப்பட்டு, கிராமத்தில் இருக்கும் அவளது மாமியார் வரும்வரை அம்மாவைக் காணாமல் அழும் குழந்தைகளை தெருக்காரர்கள் இரவு முழுதும் வைத்துக்கொண்டு தவித்துக் கொண்டு இருந்திருக்கின்றனர். இராணுவத்தில் இருக்கும் அவளது கணவனுக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். காவலர்கள் அவளைக் கண்டுபிடித்து, காவல் நிலையத்தில் வைத்திருக்கின்றனர்.

அவள், தன்னை விட அதிக வயதான , சந்தேகப்பிராணியான தன் கணவரும், அவரது இரண்டு குழந்தைகளும் வேண்டாம் என்றும், அந்த இளைஞனோடு தன் புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போவதாகவும் பிடிவாதமாய்க் கூறிக் கொண்டிருக்கிறாளாம்... காவல் துறையும், உறவினரும், அவளுடைய கணவரின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவளது குழந்தைகள் இருவரும்,   விவரம் தெரியாமல் அம்மாவைத் தேடி அழுதவண்ணம் இருக்கின்றனர். பள்ளிக்கு வரவில்லை. சாப்பிடவும் பிடிவாதமாய் மறுத்து வருகின்றனராம். அம்மா தங்களைப் பார்க்கக்கூட விரும்பவில்லை என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

இரண்டு குழந்தைகளுக்கு சரியான அம்மாவாக இருந்து வந்த அந்த பெண், இப்படித் திடீரெனச் செய்தது யார் குற்றம்? யாரைச் சொல்வது?

பணம் காசுக்கு ஆசைப்பட்டு, அதிக வயது வித்தியாசத்தில் தன் ஒரே மகளைத் திருமணம் செய்துக் கொடுத்த அந்த பெண்ணின் தாயின் குற்றமா?

தன்னை விட 15 வயது சிறிய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, எங்கோ இருந்தபடி அவளை எல்லாவற்றுக்கும் சந்தேகப்பட்டுக் கொடுமைப்படுத்திய அவளது கணவனின் தவறா?

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண்ணின் மனதை மாற்றி, தன் குடும்பத்தையும் ஏமாற்றிவிட்டு அந்தப் பெண்ணோடு வாழ திட்டமிட்ட அந்த இளைஞனின் குற்றமா?

எப்போதாவது பத்து நாட்கள் வீடு வரும் தன் கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், தான் பெற்ற குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு, இப்போது பார்க்கக் கூட விரும்பாமல் உதறித் தள்ளிவிட்டு, தன் புதிய காதலனோடு வாழ இருக்கும் தாயின் குற்றமா?

எந்த விவரமும் புரியாமல், தாயை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும் அந்த குழந்தைகளுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது அந்தக் குடும்பம்? அந்தப் பெண்ணால் தன் குழந்தைகளை மறந்து, தன் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்ள முடியுமா? அந்த இளைஞனுடன் அவள் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறுமா?

திருமணமாகாத தன் ஒரே மகன் இப்படி செய்துவிட்டானேயென்ற அவனின் வயதான பெற்றோரின் தவிப்பை யார் புரிந்துகொள்ளப் போகிறார்கள்? கணவனையும், குழந்தைகளையும் உதறிவிட்டு, புதிய வாழ்க்கையைத் தேடிக் கொண்ட அந்தப் பெண்ணை நிம்மதியாய் வாழவிடுமா இந்தச் சமூகம்?

தாயன்பும், தந்தையின் அரவணைப்பும் இல்லாத இந்த குழந்தைகளின் வாழ்க்கை?
8870524977-seethavenkat5@gmail.com




0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.