Monday, September 5, 2016

மாற்றங்களுக்கான காலம்


செத்துப்போன மாட்டின் தோலை உரிக்கும் வேலையை, காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாய்ச் செய்து கொண்டிருக்கின்றனர் அந்தப் பகுதி தலித் மக்கள். பாலாறும் தேனாறும் பொங்கிப் பாய்வதாக ஊடகங்களால் நம்ப வைக்கப்படும் குஜராத் மண்ணில் இத்தகைய பணிகளை எந்த மரியாதை இல்லாவிட்டாலும், தங்கள் பாட்டைத் தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவும் இனி உரிமை கிடையாது என்று அவர்களை அந்தச் சிற்றூரிலிருந்து உனா நகருக்கு இழுத்து வந்து அடித்து உதைத்துச் சொல்லி இருக்கிறது சங் பரிவாரத்தின் வெறிக்கும்பல் ஒன்று.

புரியவில்லை என்றால், உத்தரபிரதேசம் தாத்ரி கிராமத்தில் மாட்டுக்கறி தின்றதாகக் கொல்லப்பட்ட முகமத் அக்லாக் கதையை மீண்டும் எடுத்துக் படித்துப் பார்த்துக் கொள்ளலாம். அது மாட்டுக் கறி இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பின்னும், வேறொரு சாம்பிளை சங் பரிவார ஆட்கள் மதுரா ஆய்வுக்கூடத்தில் கொடுத்து அவர்களுக்குத் தேவையான அறிக்கையை வாங்கிவந்து அக்லாக் குடும்பத்தில் மீதி இருப்போரையும் எரித்துக் கொல்லவேண்டும் என்று பிரச்சாரமும், அவர்கள் மீது எப்ஐஆர் போடவேண்டும் என்று ஒரு நீதிமன்றத்தையே உத்தரவிடச் செய்தும் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பிரச்சனை, பசுவைக் காப்பது அல்ல. கோசாலைகள் என்று வருணிக்கப்படும் பசு  பாதுகாப்பு மையங்களில் தக்க தீவனமோ, தண்ணீரோ, தூய்மையான சூழலோ இன்றி கணக்கற்ற மாடுகள் இறைபக்தியோடு முக்தி அடைந்து கொண்டிருக்கும் அவலத்தை பத்திரிகை செய்திகள் அதிகம் பேசுவதில்லை. கறவைக் காலம் முடிந்து தன்னால் வைத்துப் பராமரிக்க முடியாத மாடுகளை ஒரு சம்சாரி என்னதான் செய்ய முடியும் என்பதற்கு பா தலைவர்களிடம் பதில் கிடையாது. பசு ஓர் அரசியல் விலங்கு அவர்களுக்கு.

இன்னொரு பக்கம், காஷ்மீர் நடப்புகள். இரண்டு மாதங்களாகியும் இன்னும் நிலைமை சீரடைவதாகத் தெரியவில்லை. துப்பாக்கிகளைக் கொண்டே தேச மக்களுக்குப் பாடம் புகட்டிவிடப் பார்க்கின்றனர் ஆட்சியாளர்கள். அப்பாவி மக்கள் துடிதுடித்துக் கொண்டிருக்க, இஸ்லாமிய இளைஞர் யாராக இருந்தாலும்  தீவிரவாதியாக முத்திரை குத்தப்படும் கொடுமையும், இராணுவத்தின் தொடர் தாக்குதலும் தொடரும் அந்தப் பூமியில் துப்பாக்கி ரவையின் நெடியும்,   பெல்லட்களால் துளைக்கப்படும் வாழ்க்கையின் குமுறல்களும் அதிரவைக்கின்றன. மருத்துவர்களை அனுப்புங்கள், சிப்பாய்களை அல்ல என்று மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி மன்றாடிக் கேட்கும் குரல் புது  தில்லியின் அதிகார வளாகத்திற்குள் கேட்பாரின்றி அலை மோதிக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் ஒரு நரகம் என்று வருணிக்கிறார் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர். அது நரகமல்ல, நமது அண்டை நாடு, அங்குள்ள மக்களும் நம்மைப் போன்றவர்களே, பண்பாட்டுச் சுவடுகள் உள்ளவர்களே என்று அண்மையில் இஸ்லாமாபாத் சென்று திரும்பிய அனுபவத்தைப் பேசியதற்காக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகையுமான ரம்யா மீது தேச துரோக குற்றம் சுமத்த உத்தரவிடுமாறு கர்நாடக நீதிமன்றத்தில் பாஜக தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை டி வளாகத்தில் இந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி பேச அழைக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் ககன்தீப் பக்சி, பாகிஸ்தானுக்கு எதிரான வெறுப்புணர்வு நஞ்சு நிரம்பிய உரையை நிகழ்த்தியதை (எங்கள் காலத்தில் பாகிஸ்தானை இரண்டாகப் பிளந்தோம், நீங்கள் அதை நான்காக உடையுங்கள்... என்பது அவரது தெறித்த முத்துக்களில் ஒன்று!) மாணவர் அபிநவ் சூர்யா இதை கண்டித்து நேரடியாக ஐஐடி இயக்குநருக்கே கடிதம் எழுதி இருக்கிறார்.

ஒற்றை திசைவழி கட்டமைக்கப்படுகிறது. வரலாறு திருத்திச் சொல்லப்படுகிறது. தேசம் இத்தனை காலம் அறிந்திருந்த விடுதலை இயக்கத் தலைவர்களது முகவரிகள் மாற்றப்பட்டு, அவர்களது தத்துவமே அகற்றப்பட்டு, போலி தேசபக்தி வெறிக்கூச்சலுக்கு ஏற்றவாறு புதிய கதைகள் பரப்பப்படுகின்றன. சந்தைப் பொருளாதாரத்தின் நிர்பந்தத்தில் வேகமாக நிறைவேற்றப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்களோ, உரையாடலோ, எதிர்ப்போ பதிவாக வேண்டிய இடங்களை (space) வேறு செய்திகள், வேறு புனைவுகள், வேறு சண்டைகள், வேறு மோதல்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

தேசப்பிதாவைக் கொன்றவர்கள் அந்தப் பழியை மேலுக்கு மறுத்தாலும், அதே  மூச்சில் கோட்ஸேயை வெளிப்படையாகப் புகழ்ந்து கொண்டே தேசியக்கொடியை ஏற்றும் கொடுமை! இறுக்கமான முகமும், தேச பக்திக்கான புதிய இலக்கணமும், தாங்களே எப்போதும் சரியானவர்கள் என்ற அடையாளமும் புனையப்படும் அபாயத்தை இன்னதென்று அறியாமல் கடந்து கொண்டிருக்கிறோம் அன்றாடம்.

ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) என்று முழக்கமிடும் ஆட்சியாளர்கள் மனத்தில் சாதிய, மத, குறுகிய தேசியவாத மற்றும் அழித்தொழிப்புத் தத்துவக் குப்பைகள் மண்டிக் கிடப்பதை தேச சுதந்திரத்தின் எழுபதாம் ஆண்டில் கவலையோடு பார்க்கின்றனர் உண்மையான தேச பக்தர்கள். அவர்களுக்கான ஆறுதலாக நம்பிக்கை கீற்றுகள் ஒளிவீசுவதையும் இதே காலம் நமக்கு பிரதிபலித்துக் காட்டுகிறது. ராணா அயூப் எனும் நேர்மையும், துணிவுமிக்க பெண், குஜராத் கோப்புகள் என்ற புலனாய்வுத் தொகுப்பை வெளியிட்டிருப்பது சாதாரண செய்தியன்று. மைதிலி தியாகி என்ற பெயரில் அவர் சவால் மிகுந்த களத்தில், எந்த நேரமும் உண்மை அடையாளம் வெளிப்பட்டுவிடும் அபாயங்களை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு மதவெறியர்கள் சதியை அவர்கள் தரப்பிலிருந்தே பதிவு செய்துவந்து தேச மக்களுக்கு வழங்கி இருக்கிறார்.

தாங்கள் நினைத்ததை எல்லாம் அவ்வளவு எளிதில் சாதித்துவிட முடியாது என்பதை, புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான காட்டமான விமர்சனங்கள் முன்னெழுந்து வருவதில் எதிர்கொள்கின்றனர் ஆட்சியாளர்கள்.

உனா நகரில் வைத்துத் தாக்கப்பட்ட குஜராத் தலித் மக்கள் மாபெரும் பேரணியாகத் திரண்டதை நாடு முழுவதும் பார்த்திருக்கிறது. தலித் சுயமரியாதையை நிறுவும் இயக்கமாக மாநிலத் தலைநகர் அகமதாபாத் தொடங்கி உனாவில் நிறைவடைந்தது அது.

தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் அந்த மாநிலத்தில் ஐந்து  ஆண்டுகளுக்குமுன் தாமே நியமித்த முதல்வரை எதிர்வரும் தேர்தல் அச்சத்தில் மாற்றிவிட்டுப் புதியவரை முதல்வராக்கி இருந்தனர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும். உனா தலித் மக்களின் போராட்டக்குரலின் எதிரொலி இப்போது உத்தரபிரதேசத்தில் கேட்கத் தொடங்கி இருக்கிறது. பாஜக அடுத்து பெரிய எதிர்பார்ப்போடு வகுத்திருக்கும் தேர்தல் களம் அது.

தாங்கள் கொண்டுவரத் துடிக்கும் சீர்திருத்தங்களுக்கு மாநிலங்களவையில்  போதிய வலு இல்லாததால் அடுத்தடுத்த மாநில சட்டமன்றத் தேர்தல் களங்களை  மிகப்பெரிய திட்டங்களோடு சந்தித்து வரும் பாஜக, எதிர்வரும் செப்டம்பர் 2 அன்று நாடு நெடுக பத்து கோடி தொழிலாளர்கள் மேற்கொள்ள இருக்கும் வேலைநிறுத்தத்தை பெரிய நெருக்கடியாகவே உணர்ந்திருக்கிறது. தங்களது பாரதிய மஸ்தூர் சங்கத்தை எப்படியாவது கடந்த முறைபோலவே அதிலிருந்து விலக்கி வைத்து சங்கடத்தைக் கடந்து போகப் பார்க்கிறது. வங்கிகள், இன்சூரன்ஸ் உள்ளிட்டு நிதித்துறை முழுவதும் ஸ்தம்பிக்க இருக்கும் அந்த வேலைநிறுத்தம் அனைத்துத்துறை தொழிலாளர் பங்கேற்க உள்ள மாபெரும் போராட்டமாக அமைய இருக்கிறது. புதிய வரலாறுக்கு நாடு தயாராகிறது. முற்போக்கு இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கு எப்போதையும்விட வேலைகள் கூடுதலாகவும், கடுமையாகவும் உருவெடுத்துள்ள காலமிது. ஆனால் நம்பிக்கை  வெளிச்சத்தில் அது உற்சாகமாக நிறைவேற்றப்படக் கூடிய கடமைதான்.

 sv.venu@gmail.com




0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.