கௌரவப்பிரச்சனையா, வாழ்வாதாரப்
பிரச்சனையா?
`நடந்தாய் வாழி காவிரி என்ற
தலைப்பில் தி.ஜானகிராமனும்,
சிட்டி சுந்தராஜனும் இணைந்து ஒரு பயண நூல்
எழுதியிருக்கிறார்கள். காவிரியின் பிறப்பிடத்திலிருந்து அது கடலில் கலக்குமிடம்
வரை அவர்கள் மேற்கொண்ட பயணத்தை அழகுடன் விவரித்திருப்பார்கள். மலையில் பிறந்து, நிலத்தில்
பாய்ந்து, கடலில் கலப்பதுதான் நதியின் இயல்பு. அதன் குறுக்கே எப்போது அணையைக்
கட்டுகிறோமோ அப்போதே பிரச்சனை தொடங்கிவிடுகிறது. உலக நாடுகள் பலவற்றிலும்
நதிநீரைப் பகிர்ந்துகொள்வதில் எந்தப் பிரச்சனையும் எழுவதில்லை. பாகிஸ்தானுடனும்
வங்காள தேசத்துடனும் கூட நம்மால் நதிநீரைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால்
இரண்டு மாநிலங்களுக்கு இடையில் மட்டும் இத்தனை சர்ச்சைகள் ஏன்? காவிரிப்
பிரச்சனை பலவழிகளிலும் அரசியலாக்கப்பட்டதே காரணம். காவிரிப் பிரச்சனையில் அரசியல்
ஆதாயம் தேடுவதுதான் கர்நாடக அரசியல் கட்சிகளின் நோக்கம் என்றாலும் கூட அனைவரும் பேதங்களை
மறந்து ஒன்றாக குரல் கொடுக்கின்றனர். இங்கே அதே அரசியல் ஆதாயம் தேடுவதுதான்
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் நோக்கமானாலும் ஒன்றுபட்டு நிற்காமல், ஒருவரையொருவர்
குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர். காவிரிப் பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம்
நல்லதொரு தீர்ப்பை வழங்கி,
பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படவிருந்த நேரத்தில் மோடி அரசு
பல்டி அடித்தது. வழக்கு முடியும்வரை வேடிக்கை பார்த்த அரசுக்கு திடீரென
நாடாளுமன்றம் என்ற ஓர் உயர்மட்ட அமைப்பு இருப்பது நினைவுக்கு வந்துவிட்டது. ஜல்லிக்கட்டுப்
பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீற முடியாது என்ற பாஜக, தற்போது
பிளேட்டை மாற்றிப் போடுகிறது. காவிரிப் பிரச்சனை பாஜக, காங்கிரசிடையே
பகடைக்காயாக உருட்டப்படுகிறது. இவ்விரு கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக நதிநீர்
பங்கீட்டுப் பிரச்சனை கர்நாடாகா-தமிழக மக்களின் நேரடி மோதலாக மாறிவிட்டது. இரு
மாநிலங்களிலும் இருக்கும் இனவெறி அரசியல் கட்சிகள் வன்முறையைத் தூண்டி வேடிக்கை
பார்க்கின்றன. காவிரிப் பிரச்சனையை கௌரவப் பிரச்சனையாகப் பார்க்காமல் இரு மாநில மக்களின்
வாழ்வாதாரப் பிரச்சனையாகப் பார்க்கும் விவேகம் அரசியல் கட்சிகளுக்கு என்று
வருகிறதோ அன்றுதான் இந்தப் பிரச்சனை தீரும். தகராறு ஒருபுறம் இருக்க, கிடைக்கின்ற
நீராதாரத்தைச் சேமித்துப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டியதும்
உடனடி முக்கியத்துவம் பெறுகிறது.
ஆசிரியர்
குழு
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.