Saturday, November 5, 2016

தென் இந்திய ஆசிரியர் சங்கம்(எஸ்.ஐ.டி.யூ)

தென் இந்திய ஆசிரியர் சங்கம்(எஸ்..டி.யூ)

நான் பள்ளிப் பணியில் சேர்ந்தபொழுது தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கென்று மாஸ்டர் ராமுண்ணி தலைமையில் ஒரு சங்கமும், தொடக்கப் பள்ளி முதல் கல்லூரி வரையில் பணி புரியும் ஆசிரியர்களுக்கென்று சௌத் இந்தியன் டீச்சர்ஸ் யூனியன்(எஸ்.ஐ.டி.யூ) என்ற அமைப்பும் மட்டுமே இருந்தன. முதல் அமைப்பு போராட்டங்கள் மூலமே உரிமைகளைப் பெற முடியுமென்ற கருத்தை முன் வைத்து இயங்கியது. மற்றது ஆசிரியப் பணி அறப் பணி, அதில் போராட்டத்திற்கு இடமில்லை என்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் கோரிக்கைகளை வென்றெடுக்கலாமென்றும் நம்பியது. பின்னர் பல்வேறு சங்கங்கள் உருவாகின. இன்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்க்கு மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட சங்கங்களும், உயர்நிலை, மேநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கென்று இருபதுக்கு மேற்பட்ட அமைப்புகளும், கல்லூரி ஆசிரியர்க்கு ஏறக்குறைய பத்து அமைப்புகளும் இருக்கின்றன. இவ்வாறு பிரிந்ததால் ஒட்டு மொத்த கூட்டுபேர சக்தியை ஆசிரியர்கள் இழந்திருக்கின்றனர். முதல் ஆசிரிய இயக்கமாகத் தோன்றிய எஸ்.ஐ.டி.யூ இன்று மறைந்து விட்டபோதிலும்,. அதன் செயல்பாடுகள் நினைவுகூரத்தக்கவை.

1920-ன் தொடக்கத்தில் சென்னை கிறித்துவக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு  பேராசிரியர்களும் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரும் ஆசிரியர்க்கென்று ஒரு தளம் வேண்டுமென்று கருதினர். இதே போன்ற கருத்துடையவர்களை இணைத்து  தென் இந்திய ஆசிரியர் சங்கத்தினை நிறுவினர். விந்தியமலைக்குத் தென்புறத்தில் தோன்றிய முதல் ஆசிரியர் சங்கம் இது. பின்னர் பம்பாய், மத்திய மாகாணங்களில் அப்பகுதி ஆசிரியர்களுக்கென்று சங்கங்கள் தொடங்கப்பெற்றன. எஸ்.ஐ.டி.யூ.வின் எல்லை சென்னை மாகாணத்திற்குள் சுருங்கியது. இதற்கு முன்னரே ஆங்காங்கே சில அமைப்புகள் உள்ளூர் அளவில் இயங்கிவந்தன. அவற்றில் ஒன்று இந்து உயர்நிலைப் பள்ளியின் போற்றுதற்குரிய தலைமையாசிரியாகப் பணிபுரிந்த (ரைட் ஹானரபிள்) வி.எஸ். சீனிவாச சாஸ்திரி அவர்கள் தொடங்கிய சென்னை டீச்சர்ஸ் கில்ட் என்ற அமைப்பு. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் அரணாக அவ்வமைப்பு இருந்தது. வீட்டு வசதி செய்து தர கிளை நிறுவனத்தையும் பதிவு செய்தது அதன் சிறப்பு. இன்றும் சென்னையின் பல பகுதிகளில் டீச்சர்ஸ் கில்ட் குடியிருப்புகளைக் காணலாம். அவரது நண்பரான என் தந்தை தஞ்சை மாவட்டத்திலும், பின்னர் கோவை மாவட்டத்திலும் ஆசிரியர் கில்ட் அமைப்புகளை உருவாக்கினார். பல மாவட்டங்களிலும் கில்ட் அமைப்புகள் உருவாகி அவை அனைத்தும் எஸ்.ஐ.டி.யூ.வின் இணைப்புச் சங்கங்களாகச் செயல்பட்டன. எஸ்.ஐ.டி.யூ.வின் தலைவர், செயலாளர், பொருளாளர்,   இதழ் ஆசிரியர் நால்வரும் சென்னை நகரைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்கள் மாநிலத்தில்  எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். செயற்குழு, காரியக்
கமிட்டி என்று இரு உள்ளமைப்புகள் சங்க நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்ளும். காரியக் கமிட்டியில்  ஒவ்வொரு மாவட்டமும் இரண்டு பிரதிநிதிகளை அனுப்பலாம். நான் கோவை மாவட்டப் பிரதிநிதியாகச் செயல்பட்டேன்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆண்டு மாநாடு மூன்று நாட்களுக்கு நடைபெறும். மாவட்ட கில்டின் அழைப்பின் பேரில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மாநாடு நடக்கும். முதலமைச்சர் சில சமயங்களிலும், கல்வி அமைச்சர்கள் தவறாதும் மாநாட்டில் கலந்து கொள்வதோடு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள். எனது தந்தை மாநாடுகளில் கலந்து கொள்வதால் நான் மாணவப் பருவத்திலிருந்தே அவரோடு மாநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை விவாதிக்க அமர்வுகள் இருக்கும். சிலர் கட்டுரைகள் வாசிக்க, அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும். கடைசி நாளன்று ஆண்டு பேரவைக் கூட்டம் நடைபெறும் பொழுது புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், கிறித்துவர் என்று மூன்று பிரிவுகளாக இயங்குவர். மற்றதொரு பிரிவினரின் ஆதரவு வேண்டுமென்பதால் முந்தைய இரவு பேரங்கள் பிரமாதமாக நடைபெறும். மதத் தலைவர்களின் ஆதரவும் நாடப்படும். எனது தந்தைக்கு இது பிடிக்காது. இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர் என்ற போதிலும் ஒரு முறை கூட எந்த பொறுப்பையும் வேண்டாதவராகவே இயக்கப் பணியாற்றினார்.

அரசு மட்டத்தில் எஸ்.ஐ.டி.யூ. விற்கு மிக்க மரியாதை உண்டு. அதன் கருத்து கேட்காமல் எம்மாற்றமும் கொண்டுவர மாட்டார்கள். இடைநிலைக் கல்விக் குழு ஆண்டிற்கு 1000 மணி நேரம் கற்பித்தல் இருக்க வேண்டுமென்று பரிந்துரைக்க நாளுக்கு 5 மணி நேரம் வீதம் 200 நாட்களா, 180 நாட்களை அதிகரிக்காது பள்ளி நேரத்தைக் கூட்டுவதா என்பது பற்றி கல்வி அமைச்சரோடு மூன்று நாட்கள் விவாதம் நடைபெற்றது என்னால் மறக்க முடியாது. எல்லாக் குழுக்களிலும் இயக்கத்திற்கு இடம் உண்டு. எஸ்.ஐ.டி.யூ.வின் தலைவர்களாக இருந்த எஸ்.நடராஜன், டி.பி.சீனிவாசவரதன் ஆகிய இருவரும் பொதுக் கல்வி இயக்குநர் மற்றும் கல்விச் செயலர் ஆகியோரைப் பெயர் சொல்லி அழைப்பது கண்டு வியந்துள்ளேன். உரத்த குரலில் கோபமாக அதிகாரிகளிடம் அவர்கள் பேசுவார்கள்.

இயக்க இதழ் மாதம் தவறாது வெளிவந்தது. இயக்கச் செய்திகள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்குப் பயன் தரும் கல்விப் பிரச்சினைகள் பற்றிய கட்டுரைகளும்,  வகுப்பறை அனுபவங்களும் இதழில் இடம் பெற்றன. கல்வி விதிகளுக்குச் சட்ட அடிப்படை இல்லையென்று ஆசிரியர் வழக்குகள் பலவும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. அச்சமயம் தஞ்சை கலியாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திரு. வி.சாரங்கபாணி நாயுடு நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இயக்கம் அவரது வழக்கினை மோகன் குமாரமங்கலத்திடம் எடுத்துச் சென்று. அரசியல் சட்டம், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வாதிட்டு நியாயம் பெற்றுத் தந்தது. இந்த நிகழ்வு, இயக்கத்திற்கு ஆசிரியர் வழக்கு உதவி நிதி ஏற்படுத்தத் தூண்டுகோலாகியது. ஆசிரியர்கள் மாதம் 25 பைசா வீதம் செலுத்தினர். இந்நிதியினின்று பல ஆசிரியர்களும் பயன் பெற்றனர்.

இயக்கம் ஒரு காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்கியது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். ஆசிரியர்களுக்காக, ஆசிரியர்களால், ஆசிரியர்களே இயக்கிய ஒரு நிறுவனம் இது. சிக்கனம், நேர்மையான நிர்வாகம் ஆகியவற்றின் காரணமாக மிகச் சிறப்பாக இயங்கியது.

பத்மஸ்ரீ எஸ்.நடராஜன் தலைவரானதும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். உலக ஆசிரியர்கள் கூட்டமைப்புடன் இணைத்தார். (நான் தனிப்பட்ட முறையில் இடதுசாரி சம்மேளனத்தில் இணைந்தேன்). ஒரு கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கினார். அந்நிறுவனம் புதுமைத் திட்டங்களைச் செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கவும் உதவியது. ஒரு நூல் வெளியீட்டு நிறுவனமும் கம்பெனி விதிகள்படி பதிவு செய்யப்பட்டது. மாணவர்களது வாசிப்புத் திறனை வளர்க்க ஆசிரியர்களே தயாரித்த  நூல்கள் வெளியிடப்பட்டன. இவை மாணவரால் மிகவும் விரும்பப்பெற்றன. மேலும் வகுப்பாசிரியரது கற்பித்தல் திறனை மேம்படுத்த ஆங்கிலம், கணிதம், அறிவியல், புவியியல் ஆகியவற்றிற்குத் தனி அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

எஸ்.நடராஜன் அவர்களது தொடர் வற்புறுத்தலால் நடுவணரசு கல்வி அமைச்சகத்தில் இடைநிலைக் கல்வியில் செயல் திட்டங்களை ஆசிரியர்கள் மேற்கொள்ளவும் அவர்களுக்கு ஊக்கப் பரிசும் அளிக்கவும் என்ற DEPSE என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் ஊதியமில்லா இயக்குநராக நடராஜன் பொறுப்பேற்றார். அப்பிரிவே பின்னர் என்.சி.ஈ.ஆர்.டி. என்று மேம்படுத்தப்பட்டது. இயக்க நிறுவனர்களில் ஒருவரான எம்.எஸ். சபேசன் பெயரில் ஒரு குழந்தைகள் பள்ளியைத் தொடங்கி மிகச் சிறப்பாக நடத்தி வந்தது. இன்றும் அப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.

1968-ஆம் ஆண்டில் விருதுநகரில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டின் பொழுது சென்னை ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இயக்கத்தில் சில பொறுப்புகளைச் சென்னை  ஆசிரியர்களே வகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டது. பேரா.ஜி.ஆர்.தாமோதரன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலவையில் ஆசிரியர் தொகுதி உறுப்பினராக இருந்த திரு கே.எஸ். கணபதி செயலரான பிறகு இயக்கம் தொய்வை நோக்கிச் சென்றது. குற்றாலத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் இயக்க விதிகளில் உள்ள குறைபாட்டைப் பயன்படுத்தி அனைத்துப் பொறுப்பாளர்களும் அவரது ஊரான திருச்சியைச் சேர்ந்தவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்குப் பின்னர் ஆண்டு மாநாடோ, பேரவைக் கூட்டமோ எதுவும் நடத்தப்பெறவில்லை. இயக்கத்தின் பல்லாயிரம் மதிப்புள்ள சொத்துகளை விற்றுக் கிடைக்கப்பெற்ற பணமும் கரைந்தது. ஜனநாயக நெறிகளில் நம்பிக்கையில்லாதவரால் ஒரு இயக்கம் செத்துவிட்டது. இது எல்லா இயக்கங்களும் அறிய வேண்டிய படிப்பினை.  இக்கட்டுரையின் முதன்மை நோக்கமே இயக்கவாதிகளுக்கான எச்சரிக்கை. இயக்கம் நிரந்தரம், பொறுப்பாளர்கள் காலம் விதிகட்குட்பட்டது.
                                                             {-044-23620551 – rajagopalan31@gmail.com }


0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.