Saturday, November 5, 2016

எப்படியாவது சொல்லுங்க


மனதின் ஆழத்தில் தேங்கியிருக்கும் ஞாபகக் குளத்தில் தங்கிவிட்ட நிகழ்வொன்றினை பலவருடம் கழித்து இப்போது காட்சிப்படுத்திட முயல்கிறேன்.

அது ஒரு ஆசிரியர் பயிலரங்கு. அருகமை மாவட்ட ஆசிரியர்கள் பலரும் கூடியிருந்தார்கள். முதல் நாள் இரவெல்லாம் விழித்திருந்து பயிலரங்கின் பயிற்சிக் குறிப்புகளை உருவாக்கியிருந்தேன். சரிபாதிக்கும் மேலே பெண் ஆசிரியைகள்  நிறைந்திருந்தனர். என்னுடைய தலைப்பு பாலின பாகுபாடும் – ஆண் பெண் சமத்துவமும். பெரும் தடையை எதிர்கொள்ளும் தலைப்பு இது.

துவங்கும்போதே மூத்த ஆசிரியரொருவர் குறுக்கிட்டார். சார் இப்பவே சரிபாதிக்கும் மேலே லேடி டீச்சர்ஸ்தான் இருக்காங்க. கொஞ்ச நாள்ல பெண் சமத்துவம்ங்கிறதுக்கு பதிலா ஆண் சமத்துவத்திற்காகப் பேச வேண்டியிருக்கும் போலத் தெரியுது சார். பேசாம தலைப்பை இப்பவே மாத்திருங்க என்றார். ஆண் ஆசிரியர்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.

பெண் ஏன் அடிமையானாள்?.. மனித குல வரலாற்றில் தாய் வழிச் சமூகத்தில் பெண் பங்களிப்புகள்.. இப்படியாகவும் இன்ன பிறவாகவும் நான் தயாரித்திருந்த குறிப்புகள் கைகளிலிருந்தும் மனதிலிருந்தும் நழுவத் துவங்கின. மிகக் கடுமையாக பெண் ஆசிரியைகள் தலையிடுவார்கள் என எதிர்பார்த்தேன்.. ஆனால் அந்தப் பகுதி பெரும் கனத்த மௌனத்தால் மூடிக் கிடந்தது. ஆண்கள் பகுதியில் பேச்சும் கிண்டலும் கேலியும் விரிந்து கொண்டேயிருந்தன. இப்பல்லாம் எத்தனை ஆம்பளைங்க பொண்டாட்டிக்குப் பயந்துக்கிட்டு வீட்டு வேலையெல்லாம் இழுத்துப் போட்டு செஞ்சு சாவுறான் தெரியுமாங்கிற பாணியில நகர்ந்த பேச்சை மூலையில் அமர்ந்திருந்த பெண் ஆசிரியரின் கணீர்க் குரல் தடுத்து நிறுத்தியது.

என்ன சார் பேசுறீங்க எனத் துவங்கி, பெண்ணின் இடம் இந்தச் சமூகத்தில் என்னவாக இருக்கிறது என்பதையும் வீட்டில் கோவில்களில் பொது இடங்களில் அவளுக்கான இடம் எது.. பணி செய்யும் பள்ளிக்கூடங்களிலும் அவள் எப்படிப் பார்க்கப்படுகிறாள் என்பதையும் கொட்டி முழங்கினார் அந்த ஆசிரியை. இப்போதாவது பெண்கள் கைதட்டி அந்த ஆசிரியையை உற்சாகப்படுத்துவார்கள் என்ற என்னுடைய எதிர்பார்ப்பு
ஈடேறவில்லை. மாறாக கனத்த மௌனமே நீடித்தது.

இடைவேளையில் தேநீரும் கையுமாக அந்த ஆசிரியை என்னை நோக்கி வந்தார். இப்படித்தான் பொருத்தமான நேரத்தில தயங்காம தலையிடணும். சபாஷ், நல்லாப் பேசினீங்க என்றேன்.

என்ன சார் என்னைய மறந்துட்டீங்களா? நான்தான் சார் செய்யதலி பாத்திமா, உங்க
ஸ்டூடண்ட் என்றார்.

நான் இப்பத்தான் சார் வேலைக்குச் சேர்ந்திருக்கேன். நீங்க மட்டும்அன்னைக்கு  தலையிட்டுப் பேசலேன்னா எப்படி எப்படியோ ஆகியிருக்கும் சார். இப்பக்கூட நான் பேசுனதெல்லாம் அப்பப்ப நீங்க பேசுனதலயும் நீங்க படிக்கச் சொன்னதுலயும் இருந்துதான் சார். அடிக்கடி நானும் எங்க சாரும் உங்களைப் பத்திப் பேசிக்குவோம். சார்.. உங்கள மாதிரி நல்ல டீச்சரா இருக்கிறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன் சார்
என்றார்.

ஞாபகப் பரப்பில் இருந்து துளித்துளியாக காட்சிகள் வெளிப்படத் துவங்கின. செய்யதலி பாத்திமா துடிப்பான மாணவி. வகுப்பறைக்குள் அவளுடைய கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய ஆசிரியர்கள் நிறைய பேர் உண்டு. பாடங்களைக் குறித்து மட்டுமல்ல சமூக விஷயங்கள் மீதும் அவளின் சந்தேகங்களும் கேள்விகளும் தினந்தோறும் எழும். அவளுக்காகவே பாடப் புத்தகங்களுக்கு வெளியே உள்ள கருத்துக்களை தேடிப் படித்திருக்கிறேன்  நான். மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் அறிவிக்கப்படாத தலைவியாக பள்ளிக்குள் வலம் வந்து கொண்டிருப்பாள். பிளஸ் 2 தேர்வில் கணிதப் பாடத்தில் 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தாள்.  எல்லோரும் தொடர்ந்து படித்திட அவளை உற்சாகப்படுத்தினோம். அவளுக்கும் கூட படிப்பில் ஆர்வம் இருக்கவே செய்தது. ஆனால் அவள் கல்லூரிக்குப் போகவில்லை. திடீரென கல்யாணப் பத்திரிக்கையோடு வந்து என்னைப் பார்த்தாள். உடன் அவளுடைய தந்தையும் வந்திருந்தார்.

சந்தோஷம், கட்டாயம் வந்துருவேன்.. என்றபடி என்னாச்சு ஏன் தொடர்ந்து படிக்கல என்றேன். குபுக்கென அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. எங்க அப்பாகிட்ட கேளுங்க சார்.. என்றபடி எழுந்தாள். வெளியேறினாள். அவளுடைய தந்தை நடந்ததையெல்லாம் சொல்லி முடித்தார். வேறு வழியில்லை சார், அதான் சார் கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டோம் என்றார். பள்ளிநாட்களில் அவளுடைய வசீகரத்தினால் ஈர்க்கப்பட்ட சக மாணவன் அவளை நிர்பந்தித்திருக்கிறான். தன்னைக் காதலித்தே தீரவேண்டும் எனக் கட்டளையிட்டிருக்கிறான். மிகக் கடுமையாக தன்னுடைய மறுப்பை அவள் சொன்னபிறகும் அவன் விடத் தயாரில்லை. இப்படியான சிக்கல்களை எதிர்கொள்ள இருக்கும் ஒரே வழி பெண்ணுக்குத் திருமணம் என்கிற முடிவை அந்தக் குடும்பம் எடுத்துவிட்டது.

சரியாக பத்துநாள் கழித்து என்னை மறுபடியும் பார்க்க வந்தாள். உடன் வந்திருந்த இளைஞனை அவள் அறிமுகப்படுத்தினாள். சார் நானும் எடுத்துச் சொல்லியிருக்கேன்.   நீங்க பேசுனா கரெக்டா இருக்கும்னுதான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன். எப்படியாவது நீங்க எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைங்க சார். நான் தொடர்ந்து படிக்க ஏற்பாடு பண்ணுங்க சார் என்றாள். விரட்டி வந்த பையனால் சிக்கல் எதுவும் வந்துவிட்டதோ என்கிற பயம் கரைந்து நிம்மதி வந்ததால் உற்சாகமாக அந்த இளைஞனிடம் பேச்சைத் துவங்கினேன். ஏற்கனவே சரிபாதி சம்மதத்தை அவள் பெற்றிருந்தாள். நிச்சயம் படிக்கச் சொல்லிடுறேன் சார்என வாக்கு தந்து விட்டு இருவரும் வெளியேறினார்கள்.

அந்த பாத்திமாதான் குவளையுடன் எனக்கு முன்பாக நின்றிருந்தாள். தேநீர் இடைவேளைக்குப் பிறகு என்னுடைய பழைய மாணவியின் கதையைச் சொல்ல ஆசைப்படுகிறேன் என பெயரை மட்டும் மாற்றி அவளின் அக்கறையையும் ஆற்றலையும் படிப்பதில் அவளுக்கு இருந்த ஆர்வத்தையும் வரிவரியாக சொல்லி முடித்தேன். நிஜத்தின் சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் வலிமை அசாத்தியமானதுதான். பேசப்படாத குறிப்புகள் என்னை முறைத்துக் கொண்டேயிருக்கின்றன.

-     {9443620183 –maran.sula65@gmail.com)



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.