Saturday, November 5, 2016

வகுப்புவாத அச்சுறுத்தல்கள் இந்தத் தருணத்தில் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

அண்மையில் இடமாற்றலில் எனது சக ஊழியராக வந்து இணைந்திருக்கும் நண்பர் முன்னாள் இராணுவப்படை வீரர்.  எளிமையான மனிதர். சார், கூடிய விரைவில் ஒரு யுத்தம் வரும் போலிருக்கிறதே? என்று என்னிடம் ஒரு நாள் கேட்டார். எல்லைப்புறத்தில் உரி எனுமிடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 19 பேர் கொல்லப்பட்ட செய்தி வந்திருந்த மூன்றாம் நாள் அவர் இந்தக் கேள்வியை முதன்முறை வைத்தார். பின்னர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கேட்டுக் கொண்டிருந்தார். இராணுவத்தை விட்டுவந்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் அவருள் பரவிக்கொண்டிருந்த வெப்பத்தை, இருப்புக் கொள்ளாமையை என்னால்   புரிந்து கொள்ள முடிந்தது.


அப்புறம், சங் பரிவாரத்தின் தொண்டர் படையைக் கேட்பானேன். பாரத் மாதா கீ ஜெய் என்று அவர்கள் எண்ணற்ற சிற்றூர்களில் வாள்களைச் சுழற்றிக் கொண்டிருந்ததில் வியப்பில்லை. தேசபக்தி என்ற பெயரில் அண்மைக்காலத்தில் ஊட்டப்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வு உள்ளபடியே ஆபத்தான வெறுப்புணர்வும், பகைமை சிந்தனையும்தான்! ஒரு போர் என்றால் என்ன, அது எப்படி எங்கே தொடங்கி எங்கே போய் முடியும் என்றெல்லாம் யோசிக்கக் கூட வாய்ப்பற்ற நிலையைத் திணிக்கும் மிக மிக அபாயகர ஆட்டம் இது. பாகிஸ்தானுக்கு எதிரான போர் தொடங்கவேண்டும் என்று கேட்காதவர்கள் தேசத் துரோகிகள். பேச்சு வார்த்தைகளை ஒரு கட்டத்தில் தொடங்கி அண்டை நாடுகளுக்கு இடையே சுமுக நல்லுறவு நீடிக்க வேண்டும் என்ற திசையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்பவர்கள் திராணியற்றவர்கள், கோழைகள்.

எல்லைப்புறத்தில் நமது வீரர்களை பலிகொடுப்பது விளையாட்டன்று. வேதனையும், துயரமும், ஆவேசமும் சூழவைக்கும் அத்தகைய தாக்குதல்களை ஒரு சுதந்திரக் குடியரசு  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், ஒரு வரலாற்றுத் துயரமாக அண்டை நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் பரஸ்பர அவநம்பிக்கையும், எதிர்ப்புணர்வும், கசப்பும் இறுதியில் யாருக்கு லாபமாகப் போய் முடியும் என்ற கேள்விகள் முக்கியமானவை ! இங்கே வலுப்பெறும் வகுப்புவாதம் எல்லைக்கு அப்பால் பயங்கரவாதத்திற்கு மேலும் உரம் போட்டு வளர்க்கவே உதவும் என்பதையும் மறந்துவிட முடியாது.


காஷ்மீரில் இரண்டு மாதங்களாக ஏற்பட்ட பதட்ட நிலைமையின்போது, ஏராளமான சிவில் மக்கள் பாதிப்புக்கு உள்ளானபோது, இராணுவத்தினர் அப்பாவி மக்கள்  மீது பெல்லட்களை வைத்துத் தாக்குகையில், அங்கே மருத்துவர்களை அனுப்புங்கள், துருப்புகளை அல்ல என்று சொன்னதற்காக மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியை விமர்சித்தது சங் பரிவாரம்.

காஷ்மீர் நடப்புகளையும், இராணுவ வீரர்கள் மீதான தாக்குதலையும் அவர்கள் தங்களது இலட்சியத்தை முன்னெடுக்க மிக இலகுவாகப் பயன்படுத்திக் கொள்ள இறங்கிவிட்டனர். சிறுபான்மையினர் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சேர்ந்து வாழத் தகுதியற்றவர்கள் என்ற நச்சுக் கருத்தோட்டத்தை வலதுசாரி பிற்போக்குக் கருத்தியலாளர்கள் ஓயாமல் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

பசுவை பாதுகாப்போம் என்ற பெயரில் அவர்கள் உயர்த்தும் கொடியின் உண்மையான நோக்கம் சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்தி, உணவுப்பழக்க ரீதியான வெறுப்புணர்வை வளர்த்தெடுத்துப் பழிவாங்குவதுதான். அவர்களது இந்தத் தாக்குதலில் தலித் மக்களும் சேர்த்தே குறிவைக்கப்படுகின்றனர்.

தலைநகர் தில்லிக்கு மிக அருகில் பிஜ்னோர் (உத்தரபிரதேசம்), பரத்பூர் (ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையை சங் பரிவாரம் நடத்தியது.  தாத்ரி முகம்மத் அக்லாக் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவர் கொட்டடிக்குள் மரணம் அடைந்ததை ஜனநாயக சக்திகள் யாவரும் கேள்விக்கு உட்படுத்தினர். ஆனால், சங் பரிவாரம் அதையும் தங்களது வெறுப்பு அரசியலுக்காகப் பயன்படுத்த முனைந்தது.

கேரளத்தில் பல நூற்றாண்டுகளாக மாவலி திரும்ப வருவதை ஓணம் எனும் பெயரில் ஒரு சமூகத் திருவிழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்க, அதை வாமனன் திருவிழா என்று பாஜக தலைவர் அமித் ஷா சமூக ஊடகத்தில் பண்பாட்டு ஊடுருவலைச்  செய்ய முயன்றதையும் கவனிக்க வேண்டும்.

உரி தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவம் செப்டம்பர் 29 அன்று எல்லைக் கோட்டைக் கடந்து சென்று பெருந்தாக்குதல் நிகழ்த்தியதில் ஐம்பதுக்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்பட்டனர். இப்படியான துல்லியத் தாக்குதல் தங்கள் ஆட்சியில்தான் முதன்முறை நிகழ்த்தப்பட்டது என்று பெருமை பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், நமது படையை அனுமான் சேனை என்று வருணித்தார். இதற்குமுன்பும் இப்படியான துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதை நாடாளுமன்றக் குழுவினரது கேள்விகளுக்கு விடையளிக்கையில் உறுதி செய்த வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர், ஆட்சியாளர்களது வகுப்புவாத வெறித்திட்டங்களை மறைமுகமாக வெளிப்படுத்திவிட்டார்.

விஜயதசமி விழாவை, பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கமாகவே வடிவமைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. உத்தரபிரதேச தேர்தலை, பாஜக, எந்த நலத்திட்டங்களையும் உறுதி கூறாமல், ஸ்ரீ ராமனுக்கு மியூசியம் அமைப்போம் என்ற குரலை முன்னெடுக்கிறது. தங்களுக்கு எதிரான கட்சிகள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்ற பிரச்சாரத்தைக் கூசாமல் பரப்புகிறது.

முத்தலாக் (தலாக் என்ற சொல்லை கணவன் மூன்றுமுறை சொன்னாலே விவாகரத்து முடிந்துவிடும்) என்ற முறைக்கு எதிராக இஸ்லாமியப் பெண்கள் தொடர்ந்து குரலெழுப்பி வந்துள்ளனர். இடதுசாரிகளும், ஜனநாயக இயக்கங்களும் பெண்ணுரிமைக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது தேசமறிந்தது. ஆனால், பாஜக ஏதோ பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பதுபோல் காட்டிக்கொண்டு, இதையும் உள்ளடக்கி எல்லோர்க்கும் பொதுவான சிவில் சட்டம் என்ற தனது முழக்கத்தை முன்வைக்கிறது. இந்துச் சட்டத்திலேயே பெண்ணுரிமைக்கு பாதகமான அம்சங்கள் இருக்க, அதைப்பற்றிப் பேசாது தவிர்க்கின்றனர். இவர்களது பொது சிவில் சட்டத்திற்கான பேச்சு, இஸ்லாமிய சட்டத்திற்குள் மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கும் இஸ்லாமிய பெண்களது போராட்டக் குரலை அடக்கத் துடிக்கும் இஸ்லாமிய பழமைவாதத்தின் கரங்களை பலப்படுத்தவே துணை நிற்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா பிறந்த தினத்தை அதன் உரிய பொருளில் மத நல்லிணக்க அடையாளமாக யாரும் முன்வைப்பதை ஒழித்துக் கட்ட வேண்டுமென்றே ஸ்வச் பாரத் என்ற புதிய கோஷத்தை முன்வைத்தார் மோடி. குப்பைகளை அகற்றுவோம் என்ற அந்தக் குரல், அரசு செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் மூட்டை கட்டி வைக்கப்பட்டுக் குப்பையாகக் கிடப்பதை மறைப்பதற்கும் சேர்த்தே பயன்பட்டது.

மனித வளர்ச்சிக் குறியீட்டு எண்ணிலோ, உலக பட்டினி நாடுகளின் தர வரிசையிலோ,  முதல் பிறந்த நாள் கொண்டாடக் கூட உயிர் தரித்திராத குழந்தைகளின் எண்ணிக்கையிலோ, மகப்பேறு நேரத்திலோ மரித்துப் போகும் தாய்மார்கள் விகிதத்திலோ எந்த அளவுகோளிலும் இந்தியா பெருமைக்குரிய இடத்தில் இல்லை. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றிய தன்னுணர்வு மரத்துப்போன ஆட்சியாளர்கள் பேச்சில் இவை எதுவுமே ஒரு பொருட்டில்லை.

மாற்றங்களுக்கு எதிராகக் குடிமக்கள் திரண்டுவிடக் கூடாதென்ற எச்சரிக்கையில் அவர்களது வகுப்புவாத, சாதிய தத்துவப் பார்வையும், தங்களது அமைப்பின் துணை இயக்கங்களது வெறிச் செயல்களைக் கண்டுகொள்ளாத திமிர்த்தனப் போக்குமே ஜனநாயக சிந்தனையாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது. தேச மக்கள் குறித்த கவலையில் ஆழ்த்துகிறது. யாருக்கோ, எந்த இடத்திலோ, ஏதோ காரணத்திற்கோ நடப்பதல்ல இந்த வன்முறைகளும், வெறியாட்டங்களும். ஒன்றுபட்ட தேசத்தின் உயிர்க்கண்ணிகள் மீது செலுத்தப்படும் நச்சுத் தாக்குதல்கள் இவை என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு எதிரான தீர்மானமான குரலெழுப்ப முன்வர வேண்டும். ஏனெனில், இப்போது இல்லை எனில் இனி எப்போதும் தலையிட்டு பாதுகாக்க இயலாத கொடிய நிலைக்கு விஷயங்கள் மோசமாகும் வரை காத்திருக்க முடியாது. இதுவே இந்தத் தருணத்தின் அறிவிப்பு மணி!

{9445259691 –sv.venu@gmail.com}



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.