குஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்
2002 ஆம் ஆண்டு
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இஸ்லாமியர்கள் குஜராத்தில் கொன்று
குவிக்கப்பட்டார்கள் என்பது உலகம் அறிந்த செய்திதான். அந்த வன்முறை குறித்த சில மறைக்கப்பட்ட உண்மைகளை தனது இந்த
நூலின் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார் ரானா
அயூப் என்ற ஒரு முஸ்லிம் இளம் பெண்.
இந்த
நூல் வெளிவந்த விதமே சுவையானதாகும். தெஹல்கா, ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அதிகார
வர்க்கத்தினரின் ரகசிய பேரங்களை அம்பலப்படுத்திய ஒரு புலனாய்வுப் பத்திரிக்கை.
குஜராத் படுகொலைகள் குறித்து இரண்டு ஸ்டிங் ஆபரேஷன்களை தெஹல்கா நடத்தியுள்ளது. இப்பத்திரிக்கையின்
ஆசிரியர் குழுவைச் சார்ந்த அஷிஷ் கேதன் ஒரு சங்பரிவார் ஆதரவாளர் போல் நடித்து
வன்முறைகளில் ஈடுபட்ட பஜ்ரங்தள் தலைவர்களையும், மற்ற அடியாட்களையும்
சந்தித்து, அந்த உரையாடல்களை வெளியிட்டார். இதன் தமிழாக்கத்தை பேரா.அ.மார்க்ஸ், குஜராத்
2002: தெஹல்கா அம்பலம் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
ரானா
அயூப் தெஹல்காவின் மற்றுமொரு ஸ்டிங் ஆபரேஷனை 2010ஆம் ஆண்டில் (அப்போது
அவருக்கு வயது 26தான்) வெற்றிகரமாக நடத்தி குஜராத் கோப்புகள்-மறைக்கப்பட்ட கோர வடிவங்கள் என்ற
இந்த நூலினை எழுதியுள்ளார். இந்த இடைவெளிக்குள் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானதும், தெஹல்கா
பத்திரிக்கை இந்த நூலினை வெளியிடத் தயங்கியது. பா.ஜ.க.வையும், சங்
பரிவாரங்களையும் பகைத்துக் கொண்டு நூலினை வெளியிட வேறு எந்த நிறுவனமும்
முன்வராததால்,
ராணா அயூப் தன் சொந்தப் பொறுப்பில் நண்பர்களிடம் கடன்
பெற்று இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளார் என்பது அவரின் தீரத்திற்கு மற்றுமொரு
சாட்சியாகும். காயஸ்தர் என்ற மேல்சாதி இந்து வகுப்பைச் சேர்ந்த பெண்போல் வேடமிட்டு
தன்னுடைய பெயரை மைதிலி தியாகி என்று மாற்றிக் கொண்டு களமிறங்கினார் ரானா. தான் அமெரிக்காவில்
வாழும் ஒர் இந்தியப் பெண்மணியென்றும் குஜராத் மாநிலத்தின் அருமை பெருமைகளைக்
குறும்படமாக எடுப்பதற்காக குஜராத் வந்திருப்பதாகவும் கூறி, அமெரிக்க
உச்சரிப்பில் ஆங்கிலத்தில் பேசி திறம்பட நடித்துள்ளார். அவர் படம் எடுப்பதற்குத் துணையாக ஒரு பிரான்சு நாட்டு
இளைஞனை அமர்த்திக் கொண்டார். அகமதாபாத் நகரில் பல மாதங்கள் தங்கி மிகுந்த
சிரமங்களுக்கு இடையே காரியத்தைக் கச்சிதமாக முடித்துள்ளார். உடலெங்கும் ரகசியக் காமெராக்களைப்
பொருத்திக் கொண்டு இவர் சந்தித்த நபர்கள் எல்லாம் வன்முறைகள் நடந்த காலத்தில்
அதிகாரப் படிகளின் உச்சத்தில் இருந்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும்
ஐ.பி.எஸ். அதிகாரிகள். அதிகாரிகள் மோடி அரசுக்கு எப்படி அடிவருடிகளாக இருந்தார்கள்
என்பதை இந்த நூல் அம்பலப்படுத்துகிறது. இறுதியில் அன்றைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர
மோடியை ரானா சந்தித்தது நாடகத்தின் கிளைமாக்ஸ். ஒரு துப்பறியும் நாவல் போல்
புத்தகம் விறுவிறுப்புடன் விரிந்து செல்கிறது. உரையாடல்களை உரையாடல் வடிவத்திலேயே கொடுத்திருப்பது
மேலும் சுவையூட்டுகிறது. இவர் உளவு பார்க்கும் ரகசியம் இடையில் தெரிந்து
போயிருந்தால் அவரை அப்போதே தீர்த்துக் கட்டியிருப்பார்கள். இவ்வளவு ரிஸ்க் எடுத்து
காரியத்தில் இறங்கியதால் சமயங்களில் மன அழுத்தத்திற்கு ஆளானார் ரானா. அந்தத் தருணங்களில்
எல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்தது அவரது பெற்றோர்கள்தாம்.
இந்த
ஆபரேஷனுக்குக் கொஞ்சம் முன்னர் சொராபுதீன், கவுசர் பீவி, பிரஜாபதி
ஆகியோர் போலி என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்த
அமித்ஷாவின் பங்கினை அம்பலப்படுத்தி அவர் கைதாகக் காரணமாக இருந்தவரும் இந்த ரானாதான்.
கலவரத்தைக்
கட்டுப்படுத்திட மிகவும் மெதுவாகப் போகுமாறு முதல்வர் மோடி உங்களைக் கேட்டுக் கொண்டாரா
என்ற ரானா அயூபின் கேள்விக்கு உள்துறைச் செயலர் அசோக் நாராயணனின் பதில் முக்கியமானது.
எப்போதுமே அவர் நேரடியாக வரமாட்டார். விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள், காவல்துறை
அதிகாரிகள் என்று அவர் கட்டளையிடுவதைச் செய்வதற்கு ஆட்கள் இருந்தார்கள்.
குஜராத்தில் இத்தகு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டவர் தான் இன்று இந்தியப்
பிரதமராகப் பொறுப்பேற்று நமக்கு மதச்சார்பின்மை, தேசபக்தி குறித்து
உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் ரானா அயூபைக் கொண்டாட வேண்டிய ஊடகங்கள் கள்ள
மௌனம் சாதிக்கின்றன. ஊடகங்களை அம்பலப்படுத்த ரானா அயூப் மற்றொரு அவதாரமா எடுக்க முடியும்?
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.