Saturday, November 5, 2016

வதந்திகளின் வாசல் எது?

மதுக்கூர் இராமலிங்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்.22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு சில மணி நேரங்களில் வீடு திரும்புவார் என்றும் அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர்  தொடர்ந்து சுவாச சிகிச்சை, இதய சிகிச்சை, பிசியோதெரபி சிகிச்சைகள் பெற்று வருவதாகச் செய்திகள் வருகின்றன. முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு  முரண்பட்ட தகவல்களை அதிமுகவினரே கூறிவருகின்றனர். அவர் தொடர் சிகிச்சை பெறவேண்டியிருக்கும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறும் நிலையில், அவர் அன்றாடப் பணிகளை கவனிப்பதாகவும் நாளேடுகளை படிப்பதாகவும் காவிரிப் பிரச்சனை, உள்ளாட்சித் தேர்தல் உட்பட பல்வேறு விஷயங்களில் ஆலோசனை கூறுவதாகவும் அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் மருத்துவமனை வாசலில் நின்றபடி
பேட்டியளிக்கின்றனர்.

இதனிடையே முதல்வர் குறித்து வதந்தி பரப்பியதாக அன்றாடம் கைது படலங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன. வங்கி ஊழியர்கள் இருவர் முதல்வரின் உடல்நிலை குறித்து தவறாகப் பேசியதாக அவர்களுக்கு வேண்டாத ஒருவர் போலீசில் போட்டுக்கொடுக்க வங்கிக் கவுண்டரில் அமர்ந்து பணம் எண்ணிக்கொண்டிருந்த ஊழியர்கள் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் முதல்வர் குறித்த செய்திகளை ஷேர் செய்தால் கூட காவல்துறை அவர்கள் மீது பாய்ந்து கைது செய்து சிறையில் தள்ளுகிறது. இவ்வாறு  கைது செய்யப்படுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று மிரட்டப்படுகிறது. 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் ஒரு பிரிவான 66-ஏ அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் 2015-ஆம் ஆண்டில் ரத்து செய்துவிட்டது என்றும், தற்போது கைது செய்யப்படுபவர்கள் எந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள் என்று கூடத் தெரியவில்லை என்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கூறுகிறார். வெளிப்படையான அரசு மட்டுமே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், மாறாக பழிவாங்கும் நடவடிக்கைகள் மேலும் அதிக வதந்திகளுக்கே வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

முதல்வருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் மருத்துவர் குழு, சிங்கப்பூர் மருத்துவர் குழு என பலரும் சிகிச்சையளிப்பதாகக் கூறப்படுகிறது, இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது நான்கு வாரங்களுக்குப் பிறகு அவர் எழுந்து உட்கார்ந்து விட்டார், முழு நினைவோடு இருக்கிறார், சைகை மூலமாகப் பேசி வருகிறார் என்ற செய்திகள் வருகின்றன. அவர் பூரண நலம் பெற்று இல்லம் திரும்பி மக்களால் வழங்கப்பட்ட முதல்வர் பணியை செவ்வனே நிறைவேற்றட்டும்.

பொதுவாக ஒருவருக்கு ஏற்பட்டுள்ள நோய் மற்றும் சிகிச்சை குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஒருவர், ஆளுங் கட்சியின் தலைவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேரும்போது அது தனிப்பட்ட பிரச்சனையாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. மாநிலத்தின் நிர்வாகத்தோடு தொடர்புடைய ஒன்றாகவே கருதப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனைக்கு  ஆளுநர் உட்பட பலரும் சென்றுவந்துள்ளனர். ஆனால், முதல்வரை நேரில் சந்தித்ததாக யாரும் கூறவில்லை. மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாகவே கூறுகின்றனர்,

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூட லண்டன் மருத்துவரின் விசிட்டிங் கார்டைப் பெற்று வந்ததாகவே தெரிவித்தார். அரசியல் சாசனத்தின்படி நியமிக்கப்பட்டுள்ள முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கக் கூடிய ஆளுநர் கூட முதல்வரைச் சந்திக்கவில்லை. ஆனால், முதல்வரின் ஒப்புதலோடு அவரது துறைகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாற்றப்படுவதாக அறிவித்தார். இத்தகைய முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகள்தான் வதந்திகளின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன.

அண்மையில், நண்பர் ஒருவர் சொன்னார். என்னுடைய சொந்த அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். ஆனால், இதை தொலைபேசியில் உறவினர்களுக்கு சொல்லக்கூட பயமாக இருக்கிறது. இதை உளவுத்துறை ஒட்டுக்கேட்டு என்னையும் சிறையில் போட்டுவிட்டால் என்ன செய்வது? என்றார். முடிந்தவரை இந்தத் தகவலை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் என்னாலும் கூறமுடிந்தது. மாநில நிர்வாகப் பணிகளில் ஏற்பட்டுள்ள தேக்கம் ஒருபுறமிருக்க, ஆளுங்கட்சியை மையமாக வைத்து பல்வே று சர்ச்சைகள் நடந்து வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரை அந்தக் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தனி நபரை, அவருடைய பிம்பத்தை அடிப்படையாக வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா அவருடைய இடத்தை பூர்த்தி செய்தார். அந்த பிம்பத்தையும் காப்பாற்றி வருகிறார். இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே கூட்டுத் தலைமை அடிப்படையில் இயங்குகின்றன. முதலாளித்துவக் கட்சிகள் பெரும்பாலும் தலைவரின் தடம் பற்றியே செல்கின்றன. தலைவருக்கு ஒரு பாதிப்பு வரும்போது அந்தக் கட்சியே தடுமாறிவிடுகிறது. அதிமுகவில் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இது ஒன்றும் மன்னர் ஆட்சிக் காலமல்ல. தகவல் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துவிட்ட நிலையில் எதையும் மறைப்பது சாத்தியமல்ல. மேலும், மக்களாட்சியில் மக்களே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். வெளிப்படையாக நடந்துகொள்வதே அனைவருக்கும் நல்லது. மூடிய கைக்குள் என்ன இருக்கும் என யோசிப்பது மனித இயல்பு.





0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.