Saturday, November 5, 2016

பேரிடர் மேலாண்மைக்குழு செயல்படுமா?

சென்னையில் கடந்த ஆண்டு கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. பல பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பொதுமக்கள் தங்கள் சேமிப்பை இழந்தனர். கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தப் பாதிப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் தானாக முன்வந்து வழக்கை விசாரித்தது. அப்போது தமிழக அரசு இது போன்ற வெள்ளச் சேதங்களின் போது ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க பேரிடர் மேலாண்மைஆலோசனைக் குழுவை அமைக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் நீதிமன்றமே பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 143 கோடி அறிவிக்கப்பட்டது. நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல்,  கால்வாய் தூர்வாருதல் பணிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டன. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 15 ஏரிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் 44 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. தற்போது மழைவெள்ளநீரை கால்வாய்கள் மூலம் கடலில் சென்று கலக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் வருகின்றன. இவ்வாண்டுக்கான வடகிழக்குப் பருவ மழை தீவிரமடையும் சூழ்நிலையில் அரசு நீதிமன்றம் வலியுறுத்திய அடிப்படையில் பேரிடர் மேலாண்மைக் குழுவை உடனடியாகக் கூட்டி பணிகளை முடுக்கிவிட வேண்டும். அப்படி அரசு செயல்படுகிறதா என்பதை மக்கள் கண்காணித்து உரிய இயக்கங்களை முன்னெடுப்பது மிக அவசியம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஐ.வி. நாகராஜன் (தொடர்புக்கு 94421 26516 )


0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.