Saturday, November 5, 2016

புதிய கல்விக் கொள்கை – ஆதாரமான இரண்டு இலக்குகளைக் காணோம்!

வாழ்க்கைத் திறன்கள் (Life Skills), மதிப்புக் கல்வி (Value Education) என்று இந்தக் கல்விக் கொள்கை பேசும்போது, இவ்வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது என்ன என்ற சந்தேகம் வருவது இயல்பானது. Value, Moral, Ethics, Culture, என்று கல்விக்கொள்கை முழங்குகையில் – இவற்றைப் பாடத்திட்டத்தில் இணைப்பதாகச் சொல்லுகையில்- சிலர் மத்தியவர்க்கப் புளகாங்கிதங்களுக்கு ஆளாகலாம். வார்த்தைகளுக்கு ஒற்றை அர்த்தமா என்ன?...

Moral -என்பது சிலருக்குச் சமூக சிந்தனை; வேறு சிலருக்கு அது கடவுள் நம்பிக்கை. Moral Education என்றால் சாமி கதைகளைச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

பண்பாடு என்பது மானுடவியலாளர்க்கு- கூடி வாழும் வாழ்க்கை; அவ்வாழ்க்கை வழி  உருவாகும் உறவுகள்; உரையாடல்கள்; பழக்க வழக்கங்கள். வர்ணாசிரமவாதிகளுக்குப் பண்பாடு என்பது - பேதங்கள்; பிரிவுகள்; வன்மங்கள்!

தேசப்பற்று என்பது சிலருக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சேவை; வேறு சிலருக்கு- தேசப்பற்று என்பது மதம் சார்ந்த வன்முறை; வன்முறைக்கான வாய்ப்பு.  ஒவ்வொருவருக்கும் ஓர் அர்த்தம்; மகாத்மாவுக்கு ஓர் அர்த்தம்; கொலைகாரனுக்கு வேறோர் அர்த்தம். அரசின் கையில் இருப்பது யாருடைய டிக்ஷனரி என்று நமக்குத் தெரியாதா?.....

இக்கல்விக் கொள்கையில் பாடத்திட்டம் பற்றி எத்தனை கூப்பாடு?... யாருடைய பாடத்திட்டம்? ஏற்கனவே சில மாநிலங்களின் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் நேருவை நீக்கி காந்தியின் கனத்தைக் குறைத்தாயிற்று. இந்த லட்சணத்தில் சமூக அறிவியலில் ஒரு பகுதி இந்தியா பூராவும் பொதுப் பாடத்திட்டத்தில் வருமாம். எந்தப் பகுதி?

சுதந்திரப் போராட்ட வரலாறா?...

வேதக் கல்வியையும், குருகுலக் கல்வியையும் கொண்டாடித் தொடங்கும் போதே கல்விக்கொள்கையின் கோணல் பாதை தெரிந்து விடுகிறது. Rich Heritage, Glorious Past, Great Tradition என்று கல்விக்கொள்கை திரும்பத் திரும்பக் கூத்தாடுகிறது. காலங்காலமாய், பாகுபாடுகளைச் சுமந்து அழுந்தியவர்களுக்குத்தானே Glorious Past இன் லட்சணம் தெரியும்! இந்தியாவின் பழம்பெருமை வேறு; அதை வைத்து அரசியல் பண்ணும் உங்கள் பழம்பெருமை வேறு. கோவில்களும் கலைகளும் இந்தியாவின் பழம்பெருமை என்றால் அங்கெல்லாம் சாதியைக் கொண்டு போய் பலரையும் விலக்கி வைத்தது உங்களின் பழம் பெருமை. தமிழகத்தின்  பழம்பெருமை திருக்குறள் என்றால் திருவள்ளுவருக்கு ஒரு சாதி கற்பித்து அவர் சிலையைச் சாக்கில் கட்டி வீதியில் எறிவது உங்கள் பழம்பெருமை!

வேதக்கல்வியில் தொடங்கும் கல்விக்கொள்கை இந்தியக் கல்வியைச் சர்வதேசமயமாக்கும் (internationalization) திட்டத்தில் போய் முடிகிறது. சர்வதேசம் என்ற வார்த்தையைத் திருப்பிப் போட்டால் வியாபாரம்! ஆக, வேதத்தில் தொடங்கி  வியாபாரத்தில் முடிகிறது கல்விக்கொள்கை. பழமைவாதத்துக்கும் வர்த்தகத்துக்கும் இடையே கூட்டு! அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து அதன் கல்விக்கொள்கை வேறுபட்டிருக்காது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?,,,

கல்விக்கொள்கை 13 நோக்கங்களை முன்வைக்கிறது. இந்தியா இன்று அதிகம் எதிர்நோக்கும் இரு நோக்கங்கள் அவற்றில் இல்லை.
1) பொதுப்பள்ளிகள்- அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் நோக்கம்
2) தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கொள்ளையைத் தடுக்கும் நோக்கம்.

இவை இரண்டும் ஆதாரமானவை.

அக்கறையையும் அரசியல் உறுதியையும் கோருபவை. இவை அரசின் இலக்குகளில் இல்லை!

(aruvi.mli@gmail.com – 9444164836 )

(ஜூலைஆகஸ்ட் விழுது இதழில் பேரா.. மாடசாமி எழுதிய கட்டுரையிலிருந்து சில வைரவரிகள்)


0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.