Saturday, November 5, 2016


                                                                                              பிரேம பிரபா
பி.ஏ பொருளாதாரம் படித்த உடனே எனக்கு வேலை கிடைக்கும் என்று கம்பீரத்துடன் இருந்த நாட்கள் அவை. பொருளாதாரம் எனக்கு மிகவும் பிடித்த பாடம். ஒரு ஏக்கர் புஞ்சையையும் இரண்டு கறவை மாடுகளையும் காவு கொடுத்துத்தான் என்னால்  மேற்படிப்பு படிக்க முடிந்தது. எஞ்சியது ஏரிக்கரையில் இருக்கும் ஒரு குடிசை வீடு மட்டும்தான்.

பிறகு தொடர்ந்தது வேலை தேடும் போராட்டம். இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. குடிசை வீடும் அதை ஒட்டியிருந்த அரை வேலி நிலமும் மயிரிழையில் தடுமாறிக்கொண்டிருந்தன. என் வாழ்க்கை குறித்தான முக்கியமான தீர்மானம் எடுக்கும் நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தேன். குடிசை வீட்டை வைத்து வங்கியில் கடன் வாங்கி ஏதாவது தொழில் செய்யலாம் என்ற என் பரிந்துரையை அப்பாவும் அம்மாவும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள்.

நீங்க கேக்கற ஒரு லட்சத்தை இந்த கூரை வீட்டை வைச்சு எங்களாலே நிச்சயமா கொடுக்க முடியாது. ஐம்பதாயிரம் தரலாம். வேறு ஏதாவது அசையா சொத்து இருக்கா? என்ற வங்கி மேலாளரின் கேள்விக் குறி தலைகீழாக மாறி ஒரு கொக்கி போல என்னைத் தூக்கி அந்தரத்தில் நிறுத்தி கதற வைத்தது. :அது சரி, என்ன பிசினஸ் செய்யப் போறீங்க? என்ற வங்கி மேலாளரின் அடுத்த கேள்விக்கு நான் தயங்காமல் உடனே பதில் அளித்தேன்: கொள்கைகளை விற்கப்போகிறேன் சார்.

அவரும் துளியும் சளைக்காமல் ஒரு மாதத்திற்கு எவ்வளவு விற்பீர்கள்? என்று கேட்டார். ஆரம்பத்தில் வாரத்திற்கு ஒன்று என்று நிச்சயம் விற்றுவிடுவேன். தேர்தல் காலத்தில் உங்கள் முழுக் கடன் தொகையையும் கொடுத்து விட்டு சொந்தமாக பெரிய அலுவலகம் ஒன்றை அண்ணாசாலையிலேயே வைத்திடுவேன் சார் என் நம்பிக்கையான பதிலால் வங்கி மேலாளரின் கண்களில் தெரிந்த ஒளி என் நம்பிக்கைக்கு வழி காட்டியது. அவரின் இதழில் வரத்துடித்த ஒப்புதல் புன்னகை அதை மேலும் ஊர்ஜிதப்படுத்தியது.


இப்படியாகத்தானே ஆரம்பத்தில் வாரத்திற்கு ஒரு கொள்கை என விற்கத் தொடங்கிய என்னால் இப்போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு கொள்கையை சுலபமாக விற்பனை செய்ய முடிகிறது. முதலில் கொள்கைகளை நான் தரவாரியாகப் பிரித்துக்கொண்டேன். முதலாவதாக அமுல்படுத்தக் கூடிய கொள்கைகள். விற்பது கடினம் என்றாலும் என்னிடம் ஏராளமாக இருந்தன. பல சமயங்களில் இலவச இணைப்பாகவே கொடுக்க வேண்டியிருந்தது. இதற்கு அரசியல் வட்டாரத்தில் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பதை என் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்.

இரண்டாவதாக அமுல்படுத்த இயலாத கொள்கைகள். தோற்றத்தில் அமுல் படுத்தக் கூடியவையாக மக்களுக்குத் தெரிந்தாலும், நிச்சயம் நிறைவேற்ற முடியாது என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும். இவற்றுக்கு எப்போதும் அதிக தேவை இருந்தது. புதிது புதிதாக என் ஆராய்ச்சி மையத்தில் இதற்கான பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டிருந்தன.

மூன்றாவதாக தற்காலிகக் கொள்கைகள். அவசரத் தேவை அடிப்படையிலோ அல்லது எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களில் இருந்து தற்காலிகமாகத் தப்பிப்பதற்கோ இந்த வகைக் கொள்கைகள் மிகவும் உதவும். தேவை கருதி இவை வடிவமைக்கப்படுவதால், விலை சற்று அதிகம்.

நான்காவதாக தேர்தல் காலக் கொள்கைகள். இவற்றுக்கான தேவை ஐந்து வருடத்திற்கு  ஒரு முறை வருவதால், ஆட்சியைப் பிடிப்பதும், ஆட்சியைக் கவிழ்ப்பதும் எங்கள் வேலையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. இதற்கான விலையை நாங்கள் ஏலத்தில்தான் ஆரம்பிப்போம்.

கடைசியாக ஜனரஞ்சகமான கொள்கைகள். இதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேற்றுமை எல்லாம் கிடையாது. முக்கியமாக அமுல்படுத்த இயலாத கொள்கைகளுடன் இந்தக் கொள்கைகளை இலவச இணைப்பாக இல்லாமல் சந்தை விலையை அனுசரித்தே கொடுப்போம். வியாபார யுக்தியில் முதல் படி நிலை இது. பொதுவாக சாலையில் இருக்கும் பேனர்கள், அரசுப் பேருந்துகளில் காணப்படும்   வாசகங்கள், இலவச இணைப்புகளில் எழுதப்படவேண்டிய வாசகங்கள் என மக்கள் மனதில் ஆழமாகப் பதியவேண்டிய கட்சி விளம்பரச் சொற்களாகத்தான் இந்தக் கொள்கைகள் இருக்கும். முதலில் கொள்கைகளை அப்படியே விற்க ஆரம்பித்தாலும், புதுப்புதுக் கொள்கைகளை கண்டு பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்பதை நாளடைவில் உணர ஆரம்பித்தோம். முன்பு போல கொள்கைகளை அப்படியே விலை பேசி விற்றுவிடாமல், அவற்றுக்கான காப்புரிமையை எங்களிடம் தக்க வைத்துக்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றின் உபயோக உரிமையை மட்டும் கொடுக்க ஆரம்பித்தோம். அதிகபட்ச காலக் கெடு நான்கு வருடங்கள் ஆறுமாதம். கட்சிகள் தம் கொள்கைகளை உடனே புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு நெருக்கடியை இதன் மூலம் நாங்கள் ஏற்படுத்தினோம். அது மட்டும் அல்லாது எதிர்க்கட்சிகளை மனதில் வைத்துக்கொண்டு எங்கள் பேரத்தை சாதகமாக நடத்தவும் முடிந்தது.

இப்படியாக எங்கள் தொழிலும் மிகவும் நல்ல முறையில் போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் எங்களுக்குப் போட்டியாக ஒரு வெளி நாட்டுக் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அமுல்படுத்த முடியாத கொள்கைகளை அவர்கள் மலிவு விலைக்குக் கொடுத்தது மட்டும் இல்லாமல், கொள்கை விற்பனைப் படிவத்தில் வாக்குறுதியும் கொடுக்க ஆரம்பித்தார்கள். எங்கள் பங்குச் சந்தை குறியீடும், உயிருக்குப் போராடும் ஒரு முதியவரின் இ.சி.ஜி. கிராஃப் போல தடுமாற ஆரம்பித்தது. எங்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள் போட்டிக் கம்பெனிக்கு ஆதரவைத் தெரிவித்ததால், எங்களது கொள்கைகளின் விலை வேகமாகச் சரிய ஆரம்பித்தது.

கொள்கைகளின் மொத்தக் கையிருப்பையும் ஒரு குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்வதாக சில நிறுவனங்கள் முன்வந்தது என்னவோ உண்மைதான். ஏதோ வந்த விலைக்கு விற்றுவிடலாம் என்று என் கடையை 24 X 7 திறந்தே வைத்திருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது கொள்கைகள் வேண்டுமென்றால் நானே நேரில் வந்து இலவசமாக செய்முறை விளக்கமும் கொடுக்கிறேன். ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம். அதற்கான முழு உரிமையையும் உங்களுக்கே எழுதிக் கொடுத்து விடுகிறேன். நான் எப்போது உங்களைத் தொடர்புகொள்ள?? இது வரை நீங்கள் என் நிலைமையை மிகவும் அக்கறையுடன் தெரிந்து கொண்டதால், உங்களுக்கு ஒரு கூடுதல் செய்தி. மத நிறுவனம் சார்ந்த கொள்கைகள் குறித்து என் கைவசம் பிராஜெக்ட் X இருக்கிறது. ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் உறுதி. ஒரு பங்கின் விலை ரூபாய் பத்து மட்டுமே. உங்களுக்கு நிச்சயம் 10 சதம் கழிவு உறுதி.

9790895631 – premaprabha.premkumar@gmail.com



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.