Tuesday, December 6, 2016

ரஷ்யப் புரட்சியும் சோசலிசமும்


உலக வரலாற்றின் முக்கியமான திருப்பு முனையாக அமைந்த ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு தொடங்கியிருக்கிகிறது. 1917ல் லெனின் தலைமையில் ரஷ்யாவின் பொல்ஷ்விக் கட்சி நடத்திய புரட்சி ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்து மக்கள் ஆட்சியை மலரச் செய்தது. பின்னர் ஐக்கிய சோவியத் சோசலிஸ்ட் குடியரசாகப் பரிணமித்து, அளப்பரிய சாதனைகளைச் செய்து உலகைப் பிரமிக்க வைத்தது ரஷ்யா. குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு என்றும் யுகப்புரட்சி என்றும் ரஷ்யப் புரட்சியை வரவேற்று வாழ்த்திப் பாடினார் பாரதியார். சோசலிசத்தின் கீழ் உலகிலேயே முதன்முறையாக குடிமக்கள் அனைவருக்கும் உணவு, உடை, கல்வி, இருப்பிடம், வேலை போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டன. இலக்கிய உலகில் ரஷ்யப் படைப்புகள் உருவாக்கிய வரலாறு ஈடு இணை இல்லாதது. இலக்கியம் மட்டுமல்ல, நாடகங்கள், கலைகள், திரைப்படங்களும் வளம் பெற்றன. அறிவியல் வளர்ந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் பிரமிக்கத்தக்க சாதனைகள் அரங்கேறின. மக்கள் நல அரசுக்கு ஓர் எடுத்துக் காட்டாக இருந்த ரஷ்யாவில் மலர்ந்தது புதிய உலகம் மட்டுமல்ல, புதிய மனிதனும்தான். இரண்டாம் உலகப் போரில் இரண்டு  கோடி மக்களைப் பலி கொடுத்து ரஷ்யாவின் செஞ்சேனை ஆற்றிய  வீரஞ்செறிந்த தியாகத்தினால் ஹிட்லரின் பாசிசம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இது உலக நாடுகளுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது. காலனிய நாடுகள் புத்துயிர் பெற்றுப் போராடி தங்களின் சுதந்திரத்தைப் பெற்றனர். பனிப்போர் காலத்தில் வளரும் நாடுகளுக்கு ரஷ்யா பாதுகாவலனாக இருந்து அவற்றின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவிகள் செய்தது. ரஷ்யாவின் உதவி பெற்று முன்னேறிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஏகாதிபத்திய நாடுகளின் தொடர்ந்த சதியாலும், சோவியத் ரஷ்யாவில் பின்னர் பொறுப்புக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் செய்த தவறுகளினாலும் சோவியத் யூனியன் வீழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த சோசலிச அரசுகளும் சரிந்து விழுந்தன. இத்துடன் வரலாறே முடிவுக்கு வந்துவிட்டது. சோசலிசம் வீழ்த்தப்பட்டு விட்டது. இனி முதலாளித்துவத்திற்கு மாற்று இல்லை என்று சில வரலாற்றாசிரியர்கள் இன்றும் சித்தரிக்கின்றனர். முதலாளித்துவத்தின் இன்றைய நெருக்கடிக்கு சோசலிசம்தான் தீர்வு என்பதைக் காண மறுக்கின்றனர். கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்திக்கொண்டு சோசலிசம் முன்னேறும் என்பதில் மனிதசக்தியில் நம்பிக்கை கொண்டோருக்கு ஐயம் இல்லை.

ஆசிரியர் குழு

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.