அதிகாரத்தின்
வலு எத்தனை நுட்பமானது,
ஆழமிக்கது, ஈவிரக்கமற்றது என்பதை வரலாறு திரும்பத்
திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் திராணியை அது எத்தனை மூர்க்கமாகத்
தாக்க முடியும் என்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றனர் நமது
ஆட்சியாளர்கள்! உட்கார வைத்தோம், நிற்க வைத்துவிட்டனர் என்ற (மானா
பாஸ்கரன் - தமிழ் இந்து) கவிதை வரி மிக எளிமையான சொற்களில் நவம்பர் இரண்டாம் வாரம் மக்கள்
மீது தொடுக்கப்பட்டிருக்கும் போரைச் சுட்டிக்காட்டுகிறது.
ஏன்
எதற்கு என்ற எந்தக் கேள்வியும் எழுப்பக் கூட சிந்தனையின்றி, நேரமின்றி
நவம்பர் பத்தாம் தேதியன்று காலை நாடு முழுவதும் வங்கிகள் முன்பாக மைல் கணக்கில்
மக்கள் வரிசையில் காத்திருக்கத் தொடங்கிய கணம், சுதந்திர இந்தியா இதுவரை
பார்த்திராதது. நிலத்தை விற்ற பெரும் பணம் எல்லாம் ஐநூறு, ஆயிரம்
ரூபாய்க் கற்றைகளாக வைத்திருக்கிறோமே, பாவி இப்படி சொல்லிட்டானே
என்று பதறிப்போய் தற்கொலை செய்து கொண்ட விதவை மூதாட்டி தொடங்கி, அடுத்த
பத்து நாட்களில் இந்தத் துல்லியத் தாக்குதலில் எத்தனை பேர் கியூ வரிசையில்
நிற்கையில், வங்கிக்குள் காத்திருக்கையில், செல்லாத நோட்டுக்கள் காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட
மருத்துவமனை வாசலில்,
காய்ச்சலில், மாரடைப்பில் உயிரைப்
பறிகொடுத்தனர் என்ற துல்லியக் கணக்கு அரசிடம் மட்டுமே இருக்கக் கூடும். அதில், அராஜக
வேலைச் சுமையின் கூடுதல் வலியினால் மரித்துப் போன, விபத்தில் சிக்கி
உயிரிழந்த வங்கி ஊழியரும் அடக்கம்.
வேறு
எந்த பிரதமரும் செய்யத் துணியாத நடவடிக்கை என்று ஆர்எஸ்எஸ் ஆடிட்டர் குருமூர்த்தி புகழாரம்
சூட்டும் இந்தத் திட்டம் போல, அன்றாடம் புதிய புதிய அறிவிப்புகளும், முன்னுக்குப்பின்
குழப்பமான கெடுபிடிகளும்,
வேகவேக மாற்றங்களும் வேறு எந்த நடவடிக்கைக்கும் வேறு
பிரதமர் யாரும் துணிய முடியாதுதான்! அவ்வளவு துணிச்சலான பிரதமர்தான், நாடாளுமன்ற
அவையில் விவாதங்கள் தொடங்கியபோதும் நேரடியாக சந்திக்கவோ, கேள்விகளுக்குப்
பதில் சொல்லவோ துணியாது வேறெங்கோ ஓடிக் கொண்டிருந்தவர். தமது சொந்தப பணத்தை தமது வங்கிக்கணக்கிலிருந்து
எடுத்துக் கொள்ள வாடிக்கையாளருக்கு அனுமதி மறுக்கும் ஒரே ஒரு நாட்டையாவது எனக்கு
காட்டுங்கள் என்று மாநிலங்களவை விவாதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேட்ட கேள்விக்கு, இன்னும்
டுவீட்டரில் கூட பதில் சொல்லாதவர்.
நாட்டில்
ஒட்டுமொத்த புழக்கத்தில் இருக்கும் 17 லட்சம் கோடி ரூபாய்
மதிப்பில் 86 சதவீதம் உயர் மதிப்பான ஐநூறு, ஆயிரம் ரூபாய்த் தாள்கள் என்று
ஆட்சியாளர்களே ஒப்புக் கொள்கின்றனர். ஒரே நொடியில் அதைச் செல்லாக் காசாக்கிவிட்டு, ஒப்புக்கு
வெளியிடப்பட்ட குறைவான எண்ணிக்கையிலான புதிய இரண்டாயிரம் ரூபாய்த் தாள்கள் மற்றும்
கையிருப்பில் இருக்கும் நூறு ரூபாய்த் தாள்களை வைத்து எப்படி நிலைமையைச் சமாளிக்க முடியும்
?
மூன்றே
நாட்களில் நிலைமை சீராகிவிடும் என்று சொல்லப்பட்டது. டிசம்பர் 30 வரை
செல்லாத நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்றவர்கள், பின்னர் ஒரே ஒரு
முறைதான் மாற்றிக் கொள்ளலாம், அதுவும் இரண்டாயிரம் வரைக்கும்தான் - அதற்கும்
கையில் மை வைத்துப் புள்ளி குத்தி அனுப்புவோம் என்றனர். இப்போது, தேதி
(நவம்பர் 24)
முடிந்துவிட்டது, இனிமேல் வங்கிக்கணக்கில் போட்டுவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருங்கள் என்கிறது அரசு. எந்த வங்கியிலும்
அரசின் அறிவிப்புப்படியே கேட்பவர்களுக்குக்
கூட வழங்கத்தக்க பணம் கையிருப்பில் இல்லை! எந்த முன் தயாரிப்புமற்ற இந்த
அறிவிப்புக்கு யார் பொறுப்பேற்பது?
கணக்கில்
காட்டப்படாத பணம்,
வரி செலுத்தாமல் ஏமாற்றிய பணம் உள்ளிட்ட வகையிலடங்கும்
கறுப்புப் பணம்,
ரொக்கமாக இருப்பது 5 முதல் 6
சதவீதம் வரைதான் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலும் தேர்ச்சியான கறுப்புப்பண
விற்பன்னர்கள் அதை நிலமாக,
நகை ஆபரணங்களாக, அந்நிய வங்கிகளில் சேமிப்பாக, பல்வேறு
புனைப் பெயர்களில் பங்களிப்பு பத்திரங்களாக இன்னபிற விதங்களில் மாற்றி
விட்டிருப்பார்கள். அந்நிய தீவிரவாதக் கும்பல்கள் கள்ளநோட்டைப் புழக்கத்தில்
இறக்கி உள்ளதை இந்த நடவடிக்கை அதிரடியாக மடக்கி ஒழித்துக் கட்டிவிட்டது
என்கின்றனர். அதன் மதிப்பே ரூ 400 கோடியளவில் இருக்கலாம் என்னும் தேசிய புலனாய்வு
அறிக்கை விவரங்களை எடுத்துப் பார்த்தால் 0.028 சதவீதமே அது.
எதிர்காலத்தில் கள்ள நோட்டு அபாயம் வேறு புதிய கரன்சி நோட்டில் வருவதை எப்படி இது முன்னெச்சரிக்கையாகத்
தடுத்துவிடும் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
கண்ணுக்கு
எதிரே, பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கிக்கடன் நிலுவையில் வைத்திருப்போர் பட்டியல் அரசிடம்
இருக்கிறது. அந்நிய வங்கிகளில் கணக்கில் காட்டப்படாத பணம் பதுக்கி வைத்திருப்போர்
பெயர்கள் அரசின் வசம் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் நிதி நிலை அறிக்கையில் அநியாயத்திற்கு
சில லட்சம் கோடி ரூபாய் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கொட்டி
அழப்படுகிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு, இந்த நடவடிக்கை ஏன் என்று
கேட்போர் மீது தேசவிரோத குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.
தேசிய
கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்திய ஆட்சியாளர்கள் திணிக்க நினைக்கும் ஆபத்தான கொள்கை
நாடு நெடுக கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு
எதிராக வன்முறை வெறியாட்டத்தில் இறங்கும் சங் பரிவாரத்தின் பண்பாட்டுக் காவலர்களது
அபாயகரமான வகுப்புவாத - சாதிய அரசியல் கடுமையான விமர்சனத்திற்கு ஆட்பட்டுள்ளது.
வாக்களித்த எந்த முன்னேற்றகரமான திட்டத்தையும் நிறைவேற்றும் நேர்மையற்ற அரசின்
நெறியற்ற செயல் பாடுகள் மக்கள் மன்றத்தில் சூடு பட்டுக்கொண்டிருக்கிறது.
எல்லாவற்றையும்
விட ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித உருவமாகத் தீட்டப்பட்ட நரேந்திர மோடியின் சித்திரத்தில்
இப்போது வண்ணம் சிதறத் தொடங்குகிறது – சஹாரா நிறுவனத்தில் நடைபெற்ற புலனாய்வு
சோதனைகளை அடுத்துக் கண்டெடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்களில், குஜராத்
முதல்வராக இருந்த காலத்தில் மோடி ஜிக்கு இன்னார் மூலம் இன்னின்ன தொகைகள்வழங்கப்பட்டன
என்ற குறிப்புகள் அடங்கியுள்ளன. இந்தப் பின்னணியில் நடவடிக்கை பெரிய திசை
திருப்பும் நடவடிக்கையே இந்தத் தாக்குதல் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
கடன்
அட்டை வாங்கிக்கொள்,
இணைய வங்கி முறைக்கு மாறிச் செல் என்றெல்லாம் சொல்லும் அபார
அறிவுஜீவிகளுக்கு,
அவர்களது ஆதர்ச அமெரிக்க தேசத்திலேயே ஐம்பது
சதவீதத்திற்கும் குறைவான மக்களே நவீன வங்கிக்கணக்கு முறைகளைப் பயன்படுத்துகின்றனர்
என்பதைச் சொல்ல வேண்டி இருக்கிறது. நமது நாட்டின் கல்வி வளர்ச்சி பற்றி இப்போதாவது
மண்டையில் உறைக்கிறதா என்று கேட்க வேண்டி இருக்கிறது.
நோட்டுக்கள்
செல்லாது எனும்அறிவிப்பு,
கார்பொரேட் நிறுவனத் தலைவர்கள் நால்வரையும் உறுப்பினர்களாகக்
கொண்ட ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் வைத்து எடுக்கப்பட்டு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டதாக
செய்தி வந்திருக்கிறது. அப்படியெனில் ரகசியத் தன்மைக்கு என்ன பொருள் இருக்கிறது? பெருமுதலைகள்
வசதியான இடம் தப்பிப்போக அப்பாவி மீன்களை சாகடிக்கும் சாகச நடவடிக்கை இது என்று
மாநிலங்களவையில் சாடி இருக்கிறார் மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி. நாடாளுமன்றத்தில்
பேசப்படாமல்,
மக்களுக்குப் போதிய முன் அறிவிப்பும் தராமல் சாதாரண மக்களைச்
சொல்லொணாத கஷ்டங்களுக்கு உள்ளாக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் தந்தது என்ற
கேள்வி உள்பட இப்போது அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின்முன் தொடுக்கப்பட்ட வழக்கில்
எழுப்பப்பட்டுள்ளது.
திடீர்
அறிவிப்பால் தங்களது அன்றாட வாழ்வாதாரம் இப்படி சிக்கிப் போகும் என்று தெரியாமல் மாட்டிக் கொண்டு திண்டாடுவோர் பற்றிய
சிந்தனை அற்ற திமிர்த்தனம் மேலோங்கிய பேச்சினூடே எனக்கு இன்னும் 50
நாட்கள் கொடுங்கள் என்று கேட்கிறார் பிரதமர். அதிகாரத்தின் போதை ஆபத்தானது.
ஆணவமிக்க ஆட்சியாளர்களது அதிகாரத்தை மக்கள் சக்தியே வரலாறு நெடுக முறியடித்திருக்கிறது.
இன்னொரு நெருக்கடி நிலை நோக்கி தேசத்தை நகர்த்தும் ஆட்சியாளர் குறித்த
மாயையிலிருந்து விடுபட்டு,
எதிர்ப்பியக்கங்களில் பெருந்திரளாக மக்கள் ஒன்றுபட்டு எழவேண்டிய
காலம் இது என்பதையே இப்போதைய நடப்புகள் தெளிவாக்குகின்றன.எப்போதும் மக்களுக்காகப்
போராடும் இடதுசாரி இயக்கங்கள் இதையே முன்வைக்கின்றன.
(94452 59691 – sv.venu@gmail.com)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.