Tuesday, December 6, 2016

சும்மா(வா) இருக்கா! --- செல்வகதிரவன்

தினேஷ் ஸ்கூலுக்கு நேரமாச்சு. அப்பாவுக்கு டாடா சொல்லிட்டுக் கிளம்பு!

அப்பா, டாட்டா!

டாட்டா..

ஒண்ணாம் வகுப்புப் படிக்கும் பையனின் புத்தகப் பையை வலது கையில் எடுத்துக் கொண்டு பையனின் பிஞ்சு விரலை இடது கையால் பிடித்தபடி தெருவில் இறங்கினாள் பிரேமா. எதிரே வருகிற தெரிந்த பெண்மணிகளைப் பார்த்து புன்முறுவல் பூத்தவாறு மகனுடன் நடந்தாள்.

அரசாங்க ஆபீசுல கிளார்க்குன்னு பேரு.. ஒரு டூவீலர் வாங்க முடியல.. சாண் ஏறினா முழம் வழுக்கிற கதையாத்தான் நெலம இருக்கு. தெனமும் இவன ஸ்கூல்ல கூட்டிக் கொண்டி விடுறதும் திரும்பக் கூட்டி வர்றதும் பெரிய வேலையா இருக்கு. டூவீலர்  இருந்தா காலையில மட்டுமாவது அவரக் கொண்டிவிடச் சொல்லலாம். சாயங்காலம் நாம சமாளிச்சுக்கிடலாம்.

இப்ப காலைல பையன ஸ்கூல்ல நீங்க விட்டிட்டு வாங்கன்னு பல தடவ சொல்லியாச்சு. மனுசன் அசையமாட்டேங்கிறாரு.. எண்ண அலைகள் பிரேமாவின் மனதுக்குள் மோதிக் கொண்டிருந்தன.

பள்ளிக்கூடம் வந்ததும் மத்தியானம் மிச்சம் வைக்காம சாப்பிடு என்று வழக்கமான அறிவுரையைச் சொல்லி மகனை பள்ளிக்குள் அனுப்பிக் கையசைத்து அவன் வகுப்பறைக்குள் நுழையும்வரை பார்த்துவிட்டுப் புறப்பட்டாள் பிரேமா. செய்தித்தாளை வரி விடாமல் வாசித்துக் கொண்டிருந்த கணேசன் இவள் வீட்டுக்குள் வந்தவுடன் பிரேமா.. நேரமாச்சு இன்னக்கி சீக்கிரம் ஆபீஸ் போகணும் என்று அவசரப்படுத்தினான். உஷ் என்று ஒரு நிமிட நேரம் கூட உட்காராமல் வேலைகளைத் தொடர்ந்தாள் பிரேமா.

கணேசன் குளிப்பதற்கு விளாவிய வெந்நீர் வாளியை குளியலறையில் வைத்து குளித்த பிறகு உடுத்த கைலி, பனியன், ஜட்டி வகையறாக்களை எடுத்துக் கொடுத்து காலை டிபன் தயார் செய்து லஞ்சுக்கு கேரியரில் சாப்பாடு நிரப்பி அலுவலகம் போகும்போது போட வேண்டிய பேண்ட் சட்டை முதலியனவற்றை தேர்வு செய்து வைத்து பம்பரமாகச் சுழன்றாள்.

மொபைல எடுத்துக்கிட்டிங்களா? ஆபீஸ் சாவிய மறந்திடாதிங்க..

ம்ம்..

லோன்லயாவது டூவீலர் வாங்கப் பாருங்க. இங்கருந்து காந்தி சிலை பஸ் ஸ்டாப்புக்கு நடந்து.. பஸ்ஸைப் பிடித்து காலேஜ் ஸ்டாப்ல இறங்கி அங்கிருந்து ஆபீசுக்குப் போக எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கு?

வாங்கலாம், வாங்கலாம்.. மாதப் பட்ஜட் இடிக்குமேன்னு யோசிக்கிறேன்.. சரி பிரேமா போய்ட்டு வாரேன். அயர்ன் பண்ண பேண்ட் சர்ட் ஒண்ணுதான் இருக்கும் போல.. இன்னக்கி சாயங்காலம் ஒரு ரிசப்சனுக்குப் போகணும். ரெண்டு உருப்படியத் துவச்சு அயர்ன் பண்ணி வை. மறந்திடாதே..

சரிங்க பண்ணிடுறேன். யாருக்கு ரிசப்சன்..?

ஆபீசரோட தங்கைக்கு கல்யாணம். இன்னக்கி ரிசப்சன்.. நீயும் வர்றியா..?

இல்லங்க. தினேசை வீட்டுப் பாடம் எழுத வைக்கணும் நீங்க போயிட்டு வாங்க..

கணேசனை வழியனுப்பிவிட்டு கதவைச் சாத்திவிட்டு வந்தாள் பிரேமா. இடைவிடாத  வேலைகளால் களைப்பு அவளைக் கவ்விப் பிடித்திருந்தது. குளிப்பதை ஒத்தி வைத்துவிட்டு அடுப்படிக்குள் போய் இட்லிகளை எடுத்து வைத்து சாப்பிடத் தொடங்கினாள். சாப்பிட்டு முடிந்ததும் உடம்பிலும் மனதிலும் ஒருவிதத் தெம்பு வந்து ஒட்டியது. ஃபேனை முழு வேகத்தில் சுழலவிட்டு சேரில் அமர்ந்தவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டு பாமா தினேசம்மா ரேசன்ல சீனி போடுறாங்க வாங்க வாரிங்களா? என்று குரல் கொடுத்தாள். இதோ வந்திட்டேன்.. ரேசன் கார்டையும் பிளாஸ்டிக் வாளியையும் எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு பாமாவுடன் ரேசன் கடைக்குப் புறப்பட்டாள். ரேசன் கடையில் பெண்கள் வரிசை நீளமாக நின்றது. நிற்க சோம்பல்பட்டால் அவ்வளவுதான். அப்பறம் சீனி என்னக்கி போடுவாங்கன்னு சொல்ல முடியாது. அதனால் மெல்ல மெல்ல நகர்ந்த வரிசையில் தானும் நகர்ந்து ஒரு வழியாக சீனி வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர ஒன்றரை மணிநேரம் ஓடிப் போயிற்று. நேரம் ஒன்றரை போனாலும் இந்த மாத சீனி வாங்கிட்டோம் என்று மனதுக்குள் சந்தோசப் பூ பூக்கத் தொடங்கும்போது அடுத்த அழைப்பு காதுகளில் விழுந்தது.. என்ன பிரேமா இன்னக்கி சந்தைங்கிறத மறந்திட்டியா? சந்தைக்கு வரலையா..? எதிர்த்த வீட்டு சித்ரா குரல் கொடுத்தாள். அன்று சந்தை நாள் என்கிற நினைவு அப்போதுதான் அவளது நினைவிற்கு வந்தது.

வெயில் வெளுத்து வாங்குது.. சந்தைக்குப் போய்ட்டு வந்து குளிக்கலாம் என்கிற முடிவோடு கட்டைப்பை, மணிபர்சு, செல்ஃபோன் இத்தியாதிகளுடன் சந்தைக்குக்  கிளம்பினாள். சந்தையில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து காய்கறி, பழம் வாங்கிக்கொண்டு வீடு வருவதற்கும் மணி ஒன்றைத் தொடுவதற்கும் சரியாக இருந்தது. குளித்துவிட்டு மதிய உணவை உண்டு முடித்தாள். அடுப்படியை சுத்தம் செய்யும் போதுதான் சரியாக எரியாத கேஸ் அடுப்பை இன்று சர்வீஸ் செய்யக் கொண்டு வரச்சொன்ன சங்கதி ஞாபகத்திற்கு வந்தது. சமையலறையைச் சரி செய்து விட்டு கேஸ் அடுப்பைத் தூக்கிக் கொண்டு போனாள். சர்வீஸ் சென்டர் அடுத்த தெருவில் என்ற போதிலும் ஒற்றை ஆளாக அடுப்பை எடுத்துப் போவது சிரமமாகத்தான் இருந்தது. நல்லவேளை, சர்வீஸ் சென்டரில் வேறு வாடிக்கையாளர்கள் இல்லை. ஒரு மணி நேரம் கடையிலேயே காத்திருந்து சர்வீஸ் செய்த அடுப்போடும் ஒருவிதமான அலுப்போடும் வீடு வந்தாள்.

தினேசின் பள்ளி நான்கு மணிக்கெல்லாம் விட்டுவிடுவார்கள். பள்ளியில் இருந்து அவன் வெளியில் வரும்போது வாசலில் அம்மா நிற்க வேண்டும். ஐந்து நிமிடம் தாமதமானாலும் அழுது விடுவான். அதனால் வீட்டைவிட்டு மூன்றரைக்கே புறப்பட்டு விடுவாள். இப்போதும் மணி மூன்றரை ஆகிவிட்டது. கதவைப் பூட்டிவிட்டு மகனைக் கூட்டிவரக் கிளம்பினாள். நான்கரை மணி வாக்கில் வீட்டுக்கு வந்து தினேசுக்கு பிஸ்கட் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது கணேசன் வந்துவிட்டான். எப்போதும் ஆறு மணிக்கு வருகிற கணேசன் இன்று வரவேற்பு நிகழ்ச்சிக்கு போவதற்காக பெர்மிசனில் சீக்கிரம் வந்துவிட்டான்.

பிரேமா பேண்ட் சர்ட் தொவச்சு அயர்ன் பண்ணி வச்சிட்டியா?

இல்லிங்க இன்னைக்கி ஒரே வேல..

என்ன வேல வெட்டி முறிச்ச? நாந்தான் காலையிலேயே சொல்லிட்டுப் போனேனே..  இப்ப ஃபங்சனுக்கு எதப் போட்டிட்டுப் போறது?

அதான் ஒரு பேண்ட் சாட் அயர்ன் பண்ணி ரெடியா இருக்கில்ல?

நாளைக்கும் அதையே ஆபீசுக்குப் போட்டிட்டுப் போகச் சொல்றியா.. கோபத்தில் வெடித்தான்.

ரெண்டு பேண்ட் சர்ட்ட இப்ப தொவச்சிடுறேன்.. ஃபேனுக்கு கீழ சேர்ல போட்டா காஞ்சிடும். காலைல அயர்ன் பண்ணித் தர்றேன்.

வர வர நீ சொல்றதக் கேக்கிறதே இல்ல.

ஏற்கனவே அயர்ன் செய்து வைத்திருந்த உடையை அணிந்துகொண்டு கொடுத்த தேநீரைக் கூடக் குடிக்காமல் கோபமாக வெளியேறிவிட்டான் கணேசன்.

மகன் தினேசை வீட்டுப் பாடம் எழுத வைத்துவிட்டு கணவன் காலையில் உடுத்துவதற்காக பேண்ட் சர்ட்டை துவைக்கத் தொடங்கினாள் பிரேமா.

அதே நேரம் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில்..

என்ன கணேசன் ஒங்க ஒய்ஃபைக் கூட்டிட்டு வரலையா?

இல்ல சார்..

அவுங்க என்ன ஒர்க் பண்றாங்களா?

இல்ல சார், வீட்டுல சும்மாதான் இருக்காங்க..

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை

ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை

என்ற கந்தர்வனின் கவிதை வரிகள் ஆண்களின் மனங்களில் தைப்பதெப்போ?

(99445 09530 –selvakathiravan54@gmail.com)
 

 

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.