இங்கிலாந்தில்
வாழும் ஒரு இந்தியர் சென்னையில் நடத்தும் சர்வதேசப் பள்ளியில் முதல்வரும், இரண்டு
ஆசிரியர்களும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, எக்காரணத்தையும் கூறாது பணி
நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். இரண்டு ஆண்டுகட்கு முன் அடையாரில் உள்ள ஒரு
சி.பி.எஸ்.ஈ. பள்ளியிலும் இதே போன்ற நிகழ்வு ஏற்பட்டது. ஆனால் பெற்றோர்கள், மாணவர்களது
ஒன்றுபட்ட போராட்டத்தால் நிர்வாகம் தன் ஆணையைத் திரும்பப்பெற்றது. தனியார் உதவி
பெறும் பள்ளியில் ஒரு கடைநிலை ஊழியரைக் கூட இவ்வாறு பணி நீக்கம் செய்ய இயலாது.
அவர்களுக்கு அரணாக அமைந்திருப்பது தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தல்)
சட்டமாகும்.
மெட்ரிக், சி.பி.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ
இன்னோரன்ன பல இந்நாட்டு,
வெளி நாட்டு வாரியங்களோடு இணைந்த பள்ளிகளில்
பணியாற்றுவோர்க்கு எவ்விதப் பணிப்பாதுகாப்பும் கிடையாது. தலைமேல் தொங்கும்
கத்தியுடன் ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகின்றனர். அந்தந்த வாரியங்களோ, அரசோ, பெரும்பாலான
ஆசிரியர் இயக்கங்களோ இப்பள்ளிகளில் நடைபெறும் அத்துமீறல்களைக் கண்டு கொள்வதில்லை.
இப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கென்று அமைப்பேதும் கிடையாது. கிட்டத்தட்ட
கொத்தடிமைகளாகத்தான் பணியாற்றுகின்றனர். மெட்ரிக் பள்ளிகள் ஆய்வுக் குழுவின் பொது
விசாரணையின் பொழுது நிர்வாகங்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களை அனுப்பித் தாங்கள் நல்ல
சூழலில் மகிழ்ச்சிகரமாகப் பணியாற்றுவதாகக் கூற வைத்தனர். ஒரு பெண் ஆசிரியர்
அளவிற்கதிகமாக தன் நிர்வாகத்தைப் புகழ்ந்து தள்ளினார். உங்கள் சம்பளம் என்ன என்று கேட்டதற்கு
ரூ.2000 என்றார். அரசுப் பள்ளியில் எவ்வளவு என்று தெரியுமா என்ற கேள்விக்கு ரூ.6000
என்றார். அரசுப் பள்ளியில் வேலை கிடைத்தால் அங்கு செல்வீர்களா என்று கேட்டதற்கு
இல்லை போகமாட்டேன் என்றார். நிர்வாகிதான் அங்கிருந்தாரே!
மேலும்
வினவியதற்கு வேலையில்லாமல் இருந்த எனக்கு ஒரு வேலை கொடுத்ததற்கு நன்றியுடையவராக
இருப்பேன். என் குடும்பச் செலவிற்கு என் ஊதியம் ஓரளவு உதவுகின்றது என்றார். இந்த
மன நிலையைப் பரவலாக அவ்வாசிரியர்களிடம் பார்க்க முடிந்தது. இத்தருணத்தில் தமிழ்நாடு
தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தல்) சட்டம் வந்த பின்னணியைப் பார்ப்பது பயன்தரும்.
ஆங்கிலேயர்
காலந்தொட்டு அரசு,
உள்ளாட்சி, தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு
வெவ்வேறு பணிநிலைகள் இருந்தன. ஊதிய விகிதங்களும் வேறுபட்டன. அரசு ஆசிரியர்களின்
ஊதிய விகிதங்கள் அதிகமாகவும், அதற்கடுத்து உள்ளாட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கும், கடைநிலையில்
தனியார் பள்ளி ஆசிரியர்களும் இருந்தனர். ஊதிய விகிதம் மட்டுமல்ல, விடுப்புவிதிகளும்
மாறுபட்டன. உள்ளாட்சி,
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.
உள்ளாட்சிப் பள்ளிகளும்,
எல்லா தனியார் பள்ளிகளும் அரசு மானியம் பெறுபவை. இவ்வேறுபாடுகள்
களையப்பட வேண்டுமென்பது ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்தது. 1955-ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆனால்
அரசு ஊழியர்க்கான ஓய்வூதியத்தை விட மிகக் குறைவு. மேலும் உச்ச வரம்பு வைத்ததால் கிடைக்கப்பெற்ற
ஓய்வூதியம் வாழ உதவாது.. ஒரு ஓய்வு பெற்ற உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஓய்விற்குப்
பின் ஒரு விடுதியில் கணக்கெழுதி வாழ்ந்தார் என்றால் அத்திட்டத்தின் குறையை அறிந்து
கொள்ளலாம். இரண்டாம் ஊதியக் குழு (1971) அனைத்து ஆசிரியர்
களுக்கும் ஒரே ஊதியம்,
விடுப்பு விதிகள், ஓய்வூதியம் எனப்
பரிந்துரைத்தது. சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்கும் முனைப்பில் இருந்த
கலைஞர் அக்குழுவின் அறிக்கையை முழுமையாக ஏற்றார். தேர்தல் வாயிலாக உள்ளாட்சி, தனியார்
பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு விழுந்த லாட்டரிச் சீட்டு கிடைத்தது.
ஊதிய
சமத்துவம் கிடைக்கப்பெற்றது இரண்டாம் ஊதியக் குழு கொடுத்த பரிசே. அதனைக் கேட்டு எப்போராட்டமும்
நடைபெற்றதில்லை. ஆனால் பணிப் பாதுகாப்பிற்காகத் தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டே
இருந்தன. தனியார் உதவி பெறும் பள்ளிகள் சேவை நிலையினின்று வெகுவாக விலகிவிட்டன. ஊதியத்தைக்
குறைத்துக் கொடுத்தல்,
மகப்பேறு விடுப்பு எடுத்தால் பதிலி ஆசிரியரது ஊதியத்தைத் தர
வேண்டியது ஆசிரியர் பொறுப்பு (முறைப்படி பதிலி ஆசிரியர் நியமனம் செய்திருந்து அரசு
மானியம் கிடைத்தாலும்),
பணி நீக்கம் செய்தல் போன்ற பல்வேறு உரிமை மறுப்புகளுக்கும்
உள்ளாகினர். பெண் ஆசிரியர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. எம்.ஈ.ஆர் என்ற கல்வி
விதிகளில் ஆசிரியர்- நிர்வாகம் இடையிலான பணி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால்
அதற்குச் சட்ட அடிப்படை இல்லாததால் பல
வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையிலிருந்து
விடுபட மாஸ்டர் ராமுண்ணி தலைமையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன எஸ்.ஐ.டி.யூ. வழக்கம் போல வேண்டுகோள்கள்
விடுத்துக் கொண்டிருந்தது. மேலவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியப் பிரதிநிதிகள்
எழுப்பிய குரலைத் தொடர்ந்து இயக்குநர் முனைவர் எம்.டி.பால் தலைமையில் ஒரு குழுவை
அன்றையக் கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அமைத்தார். அக்குழு தமிழகம் முழுவதும்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கேட்டது. ஒவ்வொரு
கூட்டத்திலும் பெண் ஆசிரியர்களின் அவலக் குரல் ஒலித்தது.
எங்களைக்
காப்பாற்றுங்கள் என்ற அவர்களது ஒருமித்த வேண்டுதல் குழுத்தலைவரை உலுக்கியது என்று
சொன்னால் மிகையாகாது. அக்குழு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கென தனிச் சட்டம்
இயற்றப் பரிந்துரைத்தது. அதன் விளைவு தான் மேலே கூறப்பட்ட சட்டம். இச்சட்டம் உதவி பெறும்
பள்ளிகளுக்கு மட்டுமின்றி உதவிபெறாப் பள்ளிகளுக்கும் பொருந்தும். பல்கலைக்
கழகத்துடன் இணைந்த மெட்ரிக் பள்ளிகளுக்கு விலக்களிக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தினின்று
மெட்ரிக் பள்ளிகளை அரசு மேற்கொண்டதால் அவற்றிற்கும் பொருந்தும். இது குறித்து பா.ம.க.வைச்
சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சர் ஆர்.வேலு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த
மனுவினைத் திரும்பப்பெற்றது மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளின் சக்தியை எடுத்துக் காட்டுகின்றது.
34 மெட்ரிக் பள்ளிகளை
எடுத்துக் கொண்ட அரசு மாநில வாரியத்தோடு இணைக்காது தனி வாரியம் அமைத்தது ஒரு
பெரும் தவறு. அவற்றைத் தனித்து வைத்திருந்தால் பல்கலைக்கழகத்தின் இணைப்பு விதிகளையே
பின்பற்றியிருக்கலாம். தனி வாரியத்தில் புதிய பள்ளிகளை இணைத்தது தனியார்
ஆங்கிலவழிக் கட்டணப் பள்ளிகள் பெருகிடவே உதவியது. மெட்ரிக் வாரியத்திற்கான விதிகளை
உருவாக்கும் பொறுப்பும் அப்பள்ளிகளுக்கே விட்டது ஒரு வினோதம். அவர்கள் உருவாக்கிய
விதிகளையே மீறி பள்ளிகள் செயல்படுவதைத் தடுக்க இயலவில்லை. ஆசிரியர் ஊதியம், விடுப்பு, ஓய்வுகாலப்
பயன்கள் ஆகியவை மாநில அரசு ஊழியர்க்கு உள்ளதற்குக் குறையாமல் இருக்க வேண்டுமென்ற
விதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
மெட்ரிக்
பள்ளி ஆய்வுக் குழுவும் அவ்விதிகளை வற்புறுத்தாது நீர்க்கச் செய்தது. அதனால் அதன் உறுப்பினராக
இருந்த நான் அவ்வறிக்கையை ஏற்க மறுத்துக் கையெழுத்திட மறுத்துவிட்டேன். மெட்ரிக்
ஆசிரியர்கள் தமக்கென்று ஒரு அமைப்பினை ஏற்படுத்தும் சக்திபடைத்தவர்கள் அல்லர்.
எனவே அவர்களுக்காகக் குரல் எழுப்ப வேண்டிய கடமை பிற ஆசிரியர் சங்கங்களுக்கு உண்டு.
முதலில் தம் சங்க உறுப்பினர் தகுதியை அவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
ஒவ்வொரு மெட்ரிக் பள்ளியிலும் ஒரிரு ஆசிரியர்களாவது இயக்க உணர்வோடு இருப்பார்கள். ஏற்கனவே
உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சங்க விதிகளில் மெட்ரிக், சி.பி.எஸ்.ஈ.
பள்ளி முதல்வர்களும் உறுப்பினராகத் தகுதி உண்டு. மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள்
சார்பாக அரசிற்கும் கல்வித் துறைக்கும் விதிகளைப் பின்பற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை மெட்ரிக் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த
அறிவிக்கை வெளியிட அரசை வற்புறுத்த வேண்டும். சட்டத் திருத்தம் தேவையில்லை.
மெட்ரிக் பள்ளி விதிகளைச் செயல்படுத்த பள்ளிக் கல்விச் செயலரையும், மெட்ரிக்
இயக்குநரையும் தொடர்ந்து கேட்டுக் கொள்வதோடு அத்துமீறல்களை அவர்களிடம்
எடுத்துரைக்க வேண்டும்.
திரு.
வேலு கைவிட்ட மனுவைப் உயிர்ப்பித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். இதே
போன்று சி.பி.எஸ்.ஈ. மற்றும் பிற வாரியங்களோடு இணைந்த பள்ளி ஆசிரியர்களுக்கும்
பணிப் பாதுகாப்பு பெற்றுத் தர வேண்டும். இவை நம் இனத்தவர்க்கு ஆற்றிட வேண்டிய
அடிப்படைக் கடமை என்பதை ஆசிரிய சங்கங்கள் உணர்ந்து செயல்பட்டால் மெட்ரிக் பள்ளி
ஆசிரியர்களை கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க முடியும்
(044-23620551
– rajagopalan31@gmail.com)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.