கருத்துப் பிரச்சாரமே கூடாதா?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் கருத்து சுதந்திரத்தை
உத்திரவாதப் படுத்தும் உன்னதமான சட்டம். ஆனால், சமீப காலமாக தமிழக அரசு உரிமைகளுக்காப் போராடுபவர்களை எல்லாம் குண்டர் சட்டம் எனப்படும் கருப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து விசாரணையின்றி சிறையிலடைக்கிறது. மத்திய மாநில அரசுகள் குண்டர் சட்டம் போன்ற தடுப்புக் காவல் சட்டங்களை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது போன்ற காலனிய காலச்
சட்டங்கள் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் விற்போர், பாலியல் குற்றவாளிகள்,மணல்-கிரானைட் கடத்துவோர் போன்ற
பயங்கரக் குற்றவாளிகளுக்கும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்போருக்கும் எதிராக
மட்டுமே பயன்படுத்திடக் கொண்டுவரப்பட்டது குண்டர் சட்டம். இச்சட்டத்தின்படி ஒருவரை
விசாரணைகள் ஏதுமின்றி, பிணையில் வெளிவரமுடியாமல், ஓராண்டுவரை சிறையிலடைக்கலாம். இச்சட்டத்தை கருத்துரிமைப் போராளிகளுக்கு
எதிராகப் பயன்படுத்துவது இயற்கை நீதிக்குப் புறம்பானதாகும். ஈழப் போரில் உயிரிழந்த
தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திட மெரினாவில் திரண்டிருந்த மே பதினேழு இயக்கத்தைச் சேர்ந்த
திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர்
சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன்
திட்டத்தை எதிர்த்து அறவழியில் போராடிய பேராசிரியர் ஜெயராமனும், சேலத்தில் இத்திட்டத்திற்கு எதிராகத் துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த
காரணத்திற்காக மட்டுமே கல்லூரி மாணவி வளர்மதியும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி 2009-ல் போடப்பட்ட வழக்கு ஒன்றில்
தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். போராட்டத்தைத் தூண்டுவோர் மீது குண்டர்
சட்டம் பாயும் என்று மிரட்டுகிறார் தமிழக முதல்வர். இந்தித் திணிப்புக்கும் சனாதன
அதர்மங்களுக்கும் எதிராகப் போராடிய பெரியார், அண்ணா போன்ற திராவிட இயக்க முன்னோடிகள் மக்களிடையே போராட்டத்தைத் `தூண்டியவர்கள்தாம் என்பதை யாராவது அவரிடம் எடுத்துச் சொன்னால் நல்லது. அவரது இலக்கணப்படி
ஊழியர் களிடையே போராட்டத்தைத் `தூண்டிவிடும் தொழிற்சங்கத்
தலைவர்கள் அனைவருமே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டியவர்களே.
குற்றவாளிகளுக்கும், மனித உரிமைப் போராளிகளுக்கும்
இடையிலிருக்கும் வேறுபாட்டை விளக்கி நீதிமன்றம் தமிழக அரசுக்கு பாடம் கற்பிப்பது
நல்லது.
-ஆசிரியர் குழு
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.