Sunday, August 13, 2017

150 கிலோ சோப்புக்கட்டியின் கதை


குஜராத்திலிருந்து புறப்பட்டு, உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவை நோக்கி ரயிலில் சென்று கொண்டிருந்த சுமார் 45 பேரை, ஜான்சி ரயில் நிலையத்திலேயே மடக்கி சிறைப்படுத்தி நிறுத்திவிட்டனர் காவல் துறையினர். அவர்கள் யாரும் தீவிரவாதிகள் அல்ல. எந்த அராஜக சதித்திட்டத்தோடும் அவர்கள் போய்க்கொண்டிருக்கவில்லை. நீதிக்காக அவர்கள் எழுப்பிய குரலே போதுமானதாக இருந்தது அவர்களை ஒடுக்கத் துடிக்கும் ஆளும் வர்க்கத்திற்கு. குஜராத் மண்ணிலிருந்து சென்றிருந்த தலித் போராளிகளான அவர்கள் மிகுந்த கவனமெடுத்து தயாரித்த சோப்புக்கட்டியும் சரி, அதில் அவர்கள் அக்கறையோடு செதுக்கியிருந்த புத்தர் உருவமும் சரி உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கையில் கொண்டு சேர்க்கத்தான் கொண்டு செல்லப்பட்டது.

எளிய சந்நியாசி என்று புகழப்படும் யோகி ஆத்தியநாத், முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டபிறகு, கடந்த மே மாதத்தில் குஷி நகர் அருகே உள்ள தலித் பிரிவு மக்கள் வாழிடத்திற்கு அவர் செல்வதற்கு முன்னதாக அரசு தரப்பிலிருந்து குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் சோப்புக்கட்டி, ஷாம்பூ எல்லாம் வழங்கப்பட்டு, சுத்த பக்கமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு நெத்தியடி கொடுப்பதற்கு குஜராத்திலிருந்து புறப்பட்டு வந்த தலித்துகள், புத்தர் உருவம் பொறித்த மிகவும் கனமான சோப்புக் கட்டியை எடுத்து வந்திருக்கின்றனர். அவர்களது முழக்கம் என்னவாக இருந்தது என்றால், இந்தா சோப்பு.. உன் உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக் கொள் என்பதாகும்.

துணி வெளுக்க மண்ணுண்டு,
தோல் வெளுக்க சாம்பலுண்டு,
மணி வெளுக்க சாணையுண்டு
என்று எழுதிய மகாகவி பாரதி,
மனம் வெளுக்க வழியில்லையே
எங்கள் முத்துமாரி ...
என்று இழைத்தான். சாதியத் திமிர்த்தனம் கவிந்திருக்கும் உள்ளத்தின் இருட்டை விரட்டியடித்து ஒளியைக் குடியேற்றத்தான் புத்தனின் உருவம் பொறித்த சோப்புக்கட்டியை இவர்கள் கொண்டு சென்றனர். ஊடக உலகம் இதை உரிய அளவில் நாடு நெடுகக் கொண்டு செல்லாமல் உள்ளூர் செய்தியாகப் பேசிக் கதையை முடித்து விட்டது.
எஸ்.வி.வேணுகோபாலன்
(கலை இலக்கிய இதழ் மக்கள்

வீதியில் எழுதிய கட்டுரையிலிருந்து)

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.