Tuesday, August 1, 2017

தொலைந்து போனவர்கள் - பிரேமபிரபா



ஊரின் எல்லையில் அந்த முதியோர் இல்லம் இருக்கிறது. வார்டன் மூதாட்டியையும் சேர்த்து இருபது பேர்கள்தான் அங்கு தங்கியிருக்கிறோம். சுற்றிலும் நெடிய மரங்கள். பல வருடங்களுக்கு முன் பூசிய சுண்ணாம்புப் பூச்சு உதிர்ந்து ஆங்காங்கே செங்கல் வரிசைகள் பளிச்சென்று கண்ணை உறுத்தும்.

ராமண்ணா, ஊணு கழிக்கான் வரில்லே? இப்பவே மணி பத்தாவுது. சாப்பிட்டிட்டு மாத்திரை போட்டுக்க வேண்டாம்? மலையாளத்திலும் தமிழிலும் கலவையான ஒரு மொழியில் பேசிக்கொண்டே வந்த வார்டன் மூதாட்டி என் கையில் இருக்கும் மண்வெட்டியை உரிமையுடன் பிடுங்கிக் கொண்டு வேகமாக எனக்கு முன்னே நடந்தாள். நானும் அதற்கு மறுப்பேதும் கூறாமல் அவரைப் பின் தொடர்ந்தேன். நடுக்கூடத்தில் சிலர் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மூதாட்டி தன்னை மறந்து வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த நான் மெல்லச் சிரித்தேன். வார்டன் மூதாட்டியும் சிரித்தாள்.

பாவம் ஈ முத்தச்சி இங்கனே  சிரிச்கிட்டு எத்தறை கொல்லமாயி? வார்டன் மூதாட்டி என்னைத் திரும்பிப் பார்க்காமலேயே என்னிடம் கேட்டாள். பாவப்பட்ட ஜீவனானு.. இதற்கு என்னிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. ராமண்ணா என்பது என் உண்மையான பெயரில்லை என்பது மட்டும் எனக்கு நிச்சயம் தெரியும். ஒன்றிற்கு பல தடவை என் உண்மையான பெயரைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறேன். என்னைக் குறித்து வார்டனிடம் கேட்டால் என்ன என்று யோசிப்பதோடு சரி. காலை பத்து மணி வரை தோட்ட வேலை. பிறகு பவானி அம்மாவின் உடன் இருந்து விடுதியின் சமையல் வேலைகளுக்கு ஒத்தாசையாக இருப்பது, தண்ணீர் பிடிப்பது என்று ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். பன்னிரெண்டு மணிக்குள் மதிய உணவு தயாராகிவிடும். இரண்டு மணிக்கு என் மதிய உணவை கடைசியாக முடித்துவிட்டு இல்லத்தின் வாசலில் இருக்கும் வேப்ப மரத்தடியில் சிறிய தூக்கம். பிறகு வார்டன் மூதாட்டிக்கு அலுவலக வேலையில் உதவி. இரவு பத்து மணிக்கு விடுதிச் சிறுவர்களுக்குக் கதை சொல்லக் கிளம்ப வேண்டும்.

இடையிடையே என்னைப் பற்றி நினைத்துப் பார்ப்பேன். என் கடந்த காலம் பற்றி எதுவும் சரியாகப் பிடிபடாத நிலையில் முழுவதுமாக விடுதி வேலைகளில் வேண்டுமென்றே என்னை மூழ்கடித்துக் கொள்வேன். மற்றவர்களைப் போல எனக்கும் ஒரு கடந்த காலம் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். நான் யார்? இந்த இரண்டு வரிக் கேள்விக்கு எவ்வளவு முயன்றும் என்னால் அதற்குரிய பதிலை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

தாத்தா என்று கூவிக்கொண்டே என் பின்னே ஓடிவந்து என் கால்களைக் கட்டிக்கொண்ட குழந்தையை அப்படியே அள்ளித் தூக்கிக்கொண்டு உங்க பேர் என்ன என்று கேட்டேன். பாலபாரதி என்று மழலையில் கூறினாள். என்ன தாத்தா தெனமும் எங்கிட்டே என் பேரைக் கேக்கறீங்க? என்று கேட்ட குழந்தையை இறுக அணைத்துக்கொண்டு தாத்தாவுக்கு வயசாச்சாம், மறந்துபோயிடுக்சாம் என்று அவளைப் போல் அபிநயித்துக் காட்ட அவள் என் கழுத்தைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.

நான் இந்த விடுதிக்கு வருவதற்கு ஐந்து வருடங்கள் முன்பே ருத்ரம்மா, அனாதை என்ற முத்திரையோடு அரசு மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டிருந்தாள். இரண்டு கால்களும் செயல் இழந்த நிலையில், தன் நிலை மறந்தவளாக விடுதிக்கு அழைத்து வந்தார்கள். ருத்ரம்மாவிற்கு வயது எழுபதிற்கு மேல் இருக்கும். பருமனான உடல்வாகு. நல்ல சிகப்பு நிறம். வட்டமான முகம். கழுத்தில் கருப்பு மணி மாலை மட்டும் அணிந்திருப்பாள். மற்றபடி தனிமையின் சோகம் அவளின் முகத்தில் ஒட்டு மொத்த ரேகைகளாகத் தெரியும். ஆரம்ப நாட்களில் வார்டன் மூதாட்டியே தனி அக்கறையுடன் ருத்ரம்மாவை முழு நேரமும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு நான் ருத்ரம்மாவைக் கவனிக்கும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன். தினமும் ருத்ரம்மாவிற்கு தினசரியில் வரும் ஒரு கதையாவது நான் படித்துக் காட்டவேண்டும். நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கும் கதைகளை மீண்டும் ஒரு தடவை படித்துக்காட்டச் சொல்வாள். விடுதி நூலகத்தில் இருந்து பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி சீதாப் பாட்டியின் கதைகளை பல முறை ருத்ரம்மாவிற்காக படித்துக் காட்டியிருக்கிறேன். அன்றும் வழக்கம் போல ஒரு பத்திரிக்கையில் வந்த கதையை நான் படித்து முடித்தேன்.

சிறிது மௌனத்திற்குப் பிறகு நாமஏன் ஒரு கதை எழுதக்கூடாது, ராமண்ணா? அதிலே நாம ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கணும். நம்மைச் சுத்தித்தான் கதை நகரணும். நீதான் கதாநாயகன். நான் கதாநாயகி. நம்ம பேத்தி பேரு பால பாரதி. உன் அக்கா பவானி என்று என் ஒப்புதலுக்காகக் காத்திருந்தாள் ருத்ரம்மா. அந்த வாராந்திரப் பத்திரிக்கையின் பின் அட்டையையே பார்த்துக்கொண்டிருந்த என்னால் ருத்ரம்மாவின் நகைச்சுவையை முழுவதுமாக ரசிக்க முடியவில்லை.

நான் படித்த அந்தக் கதையின் கதையாசிரியரின் புகைப்படமும், அவரைப் பற்றிய சிறு குறிப்பும் அந்தப் பத்திரிக்கையில் இருந்தது. கலைந்த மேகங்கள் ஒன்று கூடுவது போல நினைவலைகள் என்னுடைய பழைய வாழ்க்கையை மங்கலாக அடையாளம் காட்டியது. நான் எழுதிய கதைதான் அது. பங்கஜம் என்று ஒரு முறை அந்தப் பெயரை கூப்பிட்டுப் பார்த்தேன். நான் இந்த விடுதிக்கு வந்து சேர்ந்து குறைந்தது ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்று வார்டன் மூதாட்டி கூறியது ஞாபகத்திற்கு வந்தது. பங்கஜம் இப்போது எப்படி இருப்பாள். மகனுடன் அமெரிக்காவிற்கே சென்றிருப்பாளா? இந்த ஐந்து வருட வாழ்க்கை அவளுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கும். வீட்டில் கோபித்துக்கொண்டு கடைசியாக ராமேஸ்வரத்திற்கு சென்றதாக நினைவு. பிறகு சுய நினைவில்லாமல் எங்கெங்கோ அலைந்து திரிந்து வந்த என்னை யாரோ ஒருவர்தான் இந்த விடுதியில் சேர்த்திருக்க வேண்டும்.

அடுத்த நாள் ஊருக்குக் கிளம்பத் தயாரானேன். விடுதி மூதாட்டியிடம் அனைத்தையும் கூறிவிடவேண்டும். என் பெயர் ராமண்ணா இல்லை, சங்கரன். என் குடும்பத்தினர் திருத்துறைப்பூண்டியில் இருக்கிறார்கள். என் ஒரே மகன் அமெரிக்காவில் இருக்கிறான். ஒரு பெரிய புதிர் அவிழ்ந்ததான திருப்தியில் என் மனது மிகவும் போராட்டமான மகிழ்ச்சியில் இருந்தது. பங்கஜம் மிகவும் வெகுளி. என்னைக் காணாமல் ஒரு பாடு தவித்திருப்பாள். என் இழப்பின் தவிப்பை மறைக்க குடும்பப் பொறுப்பினை முழுவதும் அவளே ஏற்றிருப்பாள். தனியாக இந்த உலகத்தில் போராடவும் கற்றுக் கொண்டிருப்பாள். ஐந்து வருடங்களில் அவளின் சோகமும் ஓரளவிற்கு மறைந்து நடைமுறை வாழ்க்கையை ஒப்புக்கொண்டிருப்பாள்.

என்னைக் கண்டவுடன் முதலில் என்ன சொல்வாள்? ஒரு வழியாக சிரமப்பட்டுத் தொலைத்த என் பிரிவின் துக்கத்தை மீண்டும் மீட்டெடுத்து தன்னிலை மறப்பாளோ? பாழும் மனது ஏன் இப்படித் தடுமாறுகிறது? அப்படியே நான் அவளை மீண்டும்\ சந்தித்து வாழ ஆரம்பித்தாலும் அதிக பட்சம் ஐந்தாறு வருடங்கள்தான். எனக்கோ வியாதியின் கடை நிலை. மீண்டுமொரு இழப்பிற்கு அவளை உட்படுத்த நான் துளியும் தயாரில்லை. ஒரே ஒரு தடவை அவளுக்கும் தெரியாமல் தூரத்தில் நின்று பார்த்துவிட்டு வந்தால்\ என்ன என்று மனம் ரகசியமாக ஏங்கியது. புங்கை மரத்திலிருந்த பறவைகள் துயில் கலைந்து இரை தேடக் கிளம்பிவிட்டன. விடுதி அடுக்களையில் பாத்திரங்கள் கழுவும் சப்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. திருத்துறைப்பூண்டிக்கு காலை பத்து மணிக்கு ரயில். ஒரு தவிப்பான காத்திருப்பு முடிவிற்கு வரப்போகிறது. பாரமாக ஏதோ ஒன்று நெஞ்சை அழுத்த மூச்சு திணறுவதைப் போல் இருந்தது. கையில் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. விடுதி மூதாட்டியிடம் என் நன்றியினைத் தெரிவித்துவிட்டு கிளம்பிவிட வேண்டும்.

நான் போவதை ஜன்னல் வழியாகப் பார்த்த ருத்ரம்மா ராமண்ணா, இங்கே வாயேன் என்று ஒரு பத்திரிக்கையை வலது கையில் பிடித்து குழந்தையின் உற்சாகத்துடன் ஆட்டினாள். ருத்ரம்மாவின் கண்களில் தெரிந்த அப்பாவித்தனமான எதிர்பார்ப்பு என் முடிவைத் தடுமாற வைத்தது. நான் திடமான ஒரு முடிவிற்கு வந்தேன். ருத்ரம்மாவின் அருகில் அமர்ந்து கதை படிக்க ஆரம்பித்தேன். ஆனால் இந்தத் தடவை பத்திரிக்கைகளில் இருந்து படிக்காமல், ஒரு கதை சொல்லியாக ருத்ரம்மாவின் செயலிழந்த கால்களை மெதுவாகத் தடவி விட்டுக்கொண்டே என்னை மறந்து கதை சொல்ல ஆரம்பித்தேன். ஊரின் எல்லையில் அந்த முதியோர் இல்லம் இருந்தது. வார்டன் மூதாட்டியையும் சேர்த்து இருபது பேர்கள்தான் அங்கு தங்கியிருக்கிறோம். சுற்றிலும் நெடிய மரங்கள். பல வருடங்களுக்கு முன் பூசிய சுண்ணாம்புப் பூச்சு ஆங்காங்கே உதிர்ந்து செங்கல் வரிசை பளிச்சென்று கண்ணை உறுத்தும். இரண்டு நாட்கள் கழித்து வழக்கம்போல பத்திரிக்கை அலுவலகத்தை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டாள் பங்கஜம். எந்த ஃபோனும் இந்தத் தடவையும் வரலைம்மா. இன்னும் ரெண்டு மூணு நாள் பாப்போம் தயக்கத்துடன் பேசினார் தலைமை எடிட்டர். எதிர்பார்த்ததுதானே சார். ஐஞ்சு வருஷமா போராடிக்கிட்டு இருக்கேன். என் காலம் முடியறதுக்குள்ளே அவரோட குரலையாவது நிச்சயம் ஒரு தடவையாவது கேட்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறதுஎன்று தலைமை எடிட்டருக்கு நம்பிக்கை வளர்த்தாள் பங்கஜம்.

-97909895631 – premaprabha.premkumar@gmail.com


0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.