Thursday, August 10, 2017

ஸ்மார்ட் வகுப்பறை எனும் மாயை


இது ஒரு மிடுக்கான விரைவூக்க வகுப்பறை. பேராசிரியர் கையில் மடிக்கணினியுடன் நுழைகிறார். பாடத்தை வீழ்த்தியில் படத்துடன் விளக்குகிறார். வேறு தேவையான படங்களையும் திருத்தங்களையும் கணினியின் உதவியுடன் திரையில் செய்கிறார். மாணவர்களின் தேர்ச்சியை உடனே சோதிக்க வினாக்கள் தரப்படுகின்றன. மாணவர்கள் கைக்கணினியில் விடை தருகிறார்கள். உடனே அது மதிப்பிடப்படுகிறது. பாதி மாணவர்கள்தான் சரியான விடை தருகிறார்கள். மீண்டும் ஆசிரியர் விளக்கம் தருகிறார். இது ஒரு மாதிரி மிடுக்கான (ஸ்மார்ட்) வகுப்பறை, அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றின் வகுப்பறை. அங்கும் எல்லா வகுப்புகளும் இப்படி நடப்பதில்லை. கண்டிப்பாக, தொடக்க உயர் பள்ளிகளில் நடப்பதில்லை.

சரி, நமது ஊரிலும் சில பள்ளிகளிலும் மிகச்சில கல்லூரிகளிலும் மிடுக்கான வகுப்பறைகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். மிடுக்கான வகுப்பறையில் ஆசிரியருக்கு ஒரு உரை மேடை இருக்கும். அதில் கணினி ஒன்றும் அதனோடு தொடர்புடைய பிற சாதனங்களும் இருக்கும். மிகவும் உயர்தர வகுப்பு அறைகளில் ஆசிரியர் எழுதுவது திரையில் விழும். எல்சிடி வீழ்த்தி ஒன்று இருக்கும். முன் ஆயத்தம் செய்த மென்பொருளையோ ஆசிரியர் தயாரித்த பவர்பாயிண்டையோ பயன்படுத்துவார்.

இது ஆசிரியர் உரையாற்றிப் பயிற்றுவிக்கும் முறைக்குத் துணையாக இருக்கும். ஆர்வமூட்ட, எளிதில் விளக்கமுடியாத பாடப்பொருளை விளக்க, உரையாற்றும்போது ஏற்படும் சலிப்பைக் குறைக்க இந்த முறைகள் பயன்படும். குறிப்பாக வகுப்பில் காட்டமுடியாத அறிவியல் சோதனைகள், புவியியல் உண்மைகள் முதலியவற்றை மாணவர்க்குச் சொல்லப் பயன்படும். கதைகள் சொல்லவும், பாடல்களை மாணவர் கேட்கச் செய்யவும், தாவர இயலில் செல்களைக் காட்டவும் உதவியாக இருக்கும். மாணவர்களை, குறிப்பாக குழந்தைகளை, மகிழ்ச்சிப்படுத்தும். அவர்களுக்குப் பாடத்தின்பால் ஈடுபாட்டை ஏற்படுத்தும்.

ஆனால் நமது பள்ளிகளில் மிடுக்கான வகுப்பறையில் நடப்பதென்ன?

சி.பி.எஸ்.சி வகுப்புகளுக்கு முழுப்பாடத்தையுமே மென்பொருளாக்கி விற்கிறார்கள். நமது மாநிலத்தில் சமச்சீர் பாடத்திட்டத்திற்கு ஏற்ற மென்பொருளும் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனை ஆசிரியர் திரையில் காட்டுகிறார்.. திரைப்படம் பார்ப்பது போல மாணவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு யார் யாருக்குப் போய்ச் சேர்ந்தது என்று தெரியாது. மாணவர்கள் பங்களிப்பே இல்லை. ஊடு உரையாடல் (interaction) கிடையாது.

ஆசிரியரால் வரைய முடியாத படங்கள், காட்சிகள் ஆகியவற்றைக் காட்ட எல்சிடி வீழ்த்தியைப் பயன்படுத்தலாம். அல்லது பாடத்தலைப்பு, கருப்பொருள் ஆகியவற்றை அறிவிக்கவும், இறுதியில் பாடத்தினைத் தொகுத்துச் சொல்லவும் பயன்படுத்தலாம். சில வண்ணப்படங்களை அதன் மூலம் காட்டுவது குழந்தைகளை உற்சாகப்படுத்தும். ஆனால் ஆசிரியரோ மாணவரோ ஒரு படத்தைக் கரும்பலகையிலோ, தாளிலோ வரையும்போது உருவம் உயிர் பெறும் அனுபவம் இதில் கிடைக்குமா?

கல்வியில் அரிச்சுவடி படித்தவர்களைக் கூடக் கேளுங்கள், எந்த வகையான கல்வி கற்பிக்கும் முறை சிறந்தது என்று. உடனே`மாணவரை மையப்படுத்தும் கல்வி என்று விடை வரும். நமது மிடுக்கான வகுப்பறையில் மாணவர் மையப்படுத்தப்படுகிறாரா?

மாணவரை மையப்படுத்தும் கல்வி என்றால் என்ன?

பியாஜேயின் காலத்தில் இருந்தே மாணவரை மையப்படுத்தும் கல்வி முறை வற்புறுத்தப்பட்டு வருகிறது. பியாஜேயின் இந்தக் கோட்பாடு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆசிரியரை மையப்படுத்துவதில் ஆசிரியர் பாடத்தை முன்மொழிவார். பேசி, காட்டிப் (tell and show) பாடம் நடத்துவார். இதில் மாணவர் பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பார். சில வேளைகளில் ஆசிரியருடைய கேள்விக்கு விடை தருவார்.

ஆனால் மாணவரை மையப்படுத்தும் கல்வியில், மாணவர் ஆடுவார், பேசுவார், வாசிப்பார், எழுதுவார், சிக்கல்களைக் கண்டுபிடித்துத் தீர்வு காண்பார்.. சோதனைகள் செய்வார்.. தானே முயன்று தனது கற்கும் வேகத்தில் கற்பார். கணினியின் உதவியால் தானே ஒரு பாடப் பொருளைக் கற்பார். அதற்கு உதவும் மென்பொருள்கள் இருக்கின்றன. இல்லாவிட்டால் தயாரிக்க முடியும். அந்தப் பயன்பாட்டிற்கு ஸ்மார்ட் வகுப்பறை தேவையில்லை. இப்படிப் பார்க்கும்போது, நாம் பார்த்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் மிடுக்கான வகுப்பறையில் வெள்ளைப் பலகைதான் மையப்படுத்தப்படுகிறது ஆசிரியருக்குப் பதிலாக வேறு யாரோ பேசுகிறார்; காட்டுகிறார். இங்கும் மாணவர் பங்களிப்பு இல்லை. இதுவும் ஆசிரியரை மையப்படுத்தும் கல்வி முறைதான்.

மிடுக்கான வகுப்பறைக்குச் செல்வழிக்கும் பணத்தில் பள்ளியின் நூலகத்தை வலுப்படுத்தலாம்.. மேலை நாடுகளில் வகுப்பறையிலேயே நல்ல நூலகம் இருக்கிறது. எத்தனை பள்ளிகளில் குழந்தைகள் லென்சைப் பார்த்திருக்கிறார்கள், சாதாரண ஆடியைக் கொண்டு பிரதிபலிப்பு விதியைக் கற்றிருக்கிறார்கள்? காப்பர் சல்பேட்டு கரைசலைச் சோதனைக் குழாய்களில் ஊற்றியிருக்கிறார்கள்? நமது பள்ளிகளில் மாணவர் பயன்படுத்தக் கூடிய சோதனைச் சாலைகளை அமையுங்கள். மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய நூலகங்களை உருவாக்குங்கள். பிறகு மிடுக்கான வகுப்பறைகளைப் பார்க்கலாம்.




0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.