என்னை அந்த அம்மாவுக்குப் பிடித்துப் போயிற்று. எண்பது வயது
சேது ச்சி வங்கிக்குள் நுழைந்து விட்டாலே
போதும்..ஒரே களேபரமாய் இருக்கும்.
“ஏம்மா..நல்லா இருக்கீகளா..? எய்யா..வளந்த தம்பி...நீ நல்லா இருக்கியாய்யா..?...
ஏ..ராசாத்தி...ஒனக்கு போன
புரட்டாசிலதான கலியாணம்
ஆச்சு..ஏதும் விசேஷம் உண்டுமா..?”
எல்லாரையும் ஒரு ரவுண்டு விசாரித்து விட்டுத்தான் என்னோட
சீட்பக்கம் வருவாள் ஆச்சி.
ஆச்சி `தாலியறுத்து அம்பது வருஷம் இருக்கும் என்பாள். புள்ளைகுட்டிகள்
எதுவும் கிடையாது. தம்பி மகன் வீட்டில் இருக்கிறாள். பெருமாள்புரம் ஏரியாவில் உள்ள
சில வீடுகளில் சமையலுக்கு ஒத்தாசையாய் சில வீட்டு வேலைகள் செய்து கொடுப்பதுதான் வேலை.
தோளில் சுருக்கு விழுந்து போயிருக்கும். வெள்ளை
சேலைன்னுதான் பேரு. எப்போதும் பழுப்பு நிறத்தில்தான் இருக்கும். தனது இடுப்பில் உள்ள பர்சில் பொதிந்து வைத்திருக்கும் பத்து ரூபாய், அம்பது ரூபாய் நோட்டுகளை எடுத்து எனது மேஜையில் பரப்புவாள் ஆச்சி. சிலவற்றில் திருநீற்றின் வாடை இருக்கும். அவற்றைப்
பிரித்து நோட்டுவாரியாக
அடுக்கி, பிறகு எண்ணி ரப்பர் பான்ட் போட்டு செல்லானில் எழுதுவதுவரை என்னோட வேலை..
“எவ்வளவு இருக்குய்யா..? “என்று கண்களை இடுக்கியபடி கேட்பாள்.
“முன்னூத்தி இருபது... “என்பேன்.
“ஆங்..நல்லா பாரு...முன்னூத்தி அம்பது இருக்கும்..ஒரு தரைக்கு இருதரமால்ல எண்ணிட்டு வந்தேன்.. “ என்று நம்மிடம்
போட்டு வாங்குவாள்.
மூணு வட்டம் எண்ணி சொன்னபிறகு, “இருக்கும்.. இருக்கும்..வரும்போது கந்தையா பிள்ளை கடைல பாக்கி சில்லறை கொடுத்த யாபகம் வருது..”. என்று சொல்வாள்.
கவுண்டரில் பணத்தைக் கொடுத்து பாஸ்புக்கில் வரவு வைத்தபிறகு மீண்டும் என்னிடம் வந்து “இப்ப எவ்வளவுயா மொத்தம் இருக்கு...? “என்று கேட்பாள். பார்த்து சொன்னபிறகுதான் நிம்மதி.
“எனக்கு...நீ சொன்னாதான் ஒரு திருப்தி வரும் பாத்துக்க... “என்று வாயைக் கோணியபடி சிரிப்பாள் ஆச்சி.
ஆச்சி சமயத்தில் என் பக்கத்தில் உள்ள மர ஸ்டூலில் அமர்ந்து வீட்டுக் கதைகளை எல்லாம் சொல்வாள். வீட்டில் ஒருவரும் சரியாக சாப்பாடு போடாத கதை.. ஒரு நல்லது கெட்டதுக்கு
அவளை எங்கும்
அழைத்து செல்லாதது பற்றி ஆவலாதி...என அவள் கவலைப்பட நிறைய விஷயங்கள் உண்டு.
“நான் சம்பாதிக்கறத எல்லாத்தையும் இவுகளுக்குத்தானையா கொடுக்கேன்.. நாளைக்கு நான் செத்துப்போனா நாலு பேருக்கு ஒருவாய் காப்பித்தண்ணி கொடுப்பாளாய்யா..நீயே சொல்லு.. “
ஆச்சி இப்படி சொல்லும்போது கண்ணில் இருந்து கண்ணீர் ஆறாய் பெருகும்.
“ஆச்சி..நீ ஏன் கவலைப்படுறே...நீ செத்துப்போனா உனக்கு வார ஆளு, போற ஆளுக்கு எல்லாம் நான் காப்பித்தண்ணி வாங்கித் தாரேன் ஆச்சி.. கவலைப்படாத..உன்னை ஜாம் ஜாம்னு வழியனுப்பி வச்சிருவோம்.. என்று நான் சொன்னது ஆச்சிக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
“நம்ம ஆஃபீஸ்ல உள்ளவுக புள்ளைக எல்லாரையும் வரச்சொல்லி நெய்ப்பந்தம் பிடிச்சுருவோம்..என்ன மணி சரிதானே” என்று நான் மணியிடம்
ஒப்புதல் வாங்கியது ஆச்சிக்கு ஏக சந்தோசம்.
“நீ மகாராசனா இருக்கணும்யா... ஆச்சி இடுப்பில் இருந்த சுருக்குப்பையை எடுத்து திருநீறு பூசி விட்டாள்.
அன்று முதல், ஒவ்வொரு முறை வரும்போதும், “எய்யா..காப்பித்தண்ணி மறந்துராதீக... என்று
சிரித்துக் கொண்டே சொல்வது
வழக்கமாகிப் போனது.
உடன் பணிபுரிபவர்கள் கூட கேலி செய்யும் அளவிற்கு
காப்பித்தண்ணி பிரபலம்
ஆகி விட்டது. எல்லாம் வங்கி கணினிமயம் ஆகும் வரைதான்.
அதன்பிறகு, முகத்தைத் தூக்கி வாடிக்கையாளர்களை பார்க்கும் பழக்கமே போய்விட்டது. சேது ஆச்சி எப்போதும் போல
வந்தாள், போனாள்.
வங்கி முழுதும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தியதும், ஆச்சிக்கு குளிரில் தொடர்ந்து உட்கார முடியவில்லை. விறைக்குது விறைக்குது என்று
சொல்வாள்.
எனக்கு இந்த நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போய் சென்னை அப்போல்லோ மருத்துவமனை சென்று திரும்பினேன். வரும்போது அரை ஆளாக இருந்ததைப் பார்த்து சேது ஆச்சி கலங்கிப்
போனாள்.
“என்னைய்யா..இப்படிக்கு கரைஞ்சு போயிட்டிகளே... என்று கையைப் பிடித்து மூசு மூசென்று அழுதாள்.
“ஆச்சி..உனக்கு காப்பித்தண்ணி கொடுக்காம நான் போயிருவேனா..” என்றேன்.
ஆச்சி எனது வாயைப் பொத்தினாள். “வேண்டாம்யா.. அந்த வார்த்தையெல்லாம் சொல்லாதேயா..
“நேத்துதான் பழனிக்கு போயிட்டு, அந்த பழநியாண்டவரை பார்த்துட்டு வரேன்..நெத்தியக் காட்டு..”. என்று சொல்லி பூசி விட்டாள் ஆச்சி.
அதிலிருந்து ஒரே மாதத்தில், என்னை நெல்லையில் உள்ள வண்ணாரப் பேட்டை கிளைக்கு மாற்றல் செய்து
விட்டார்கள். சேது ஆச்சியைப்
பார்த்து சொல்ல முடியவில்லை.
இங்கே வந்தபிறகு, அடிக்கடி பழைய கிளைக்கு போய் வர இயலவில்லை. ஒருமுறை வங்கியில் இருந்து வங்கிக்கு பணம் கொண்டு செல்லும் முறை எனக்கு வந்தது ( 570 கோடி கன்டெய்னர் லாரி மாதிரி )
பழைய கிளைக்கு சென்றேன். கிளையில் ஒரே கூட்டம்.. யாருமே முகம் நிமிர்த்தி பார்க்க முடியாத அளவு
கூட்டம். நவீன இருக்கைகளில்
வாடிக்கையாளர்கள் அமர்ந்திருந்தனர். ஒரு ஓரத்தில் வெள்ளை சேலை கட்டிய ஆச்சி.. சேது ஆச்சியாக இருக்குமோ.. வேகமாக அருகில் சென்றேன்.
“சார்..சேது ஆச்சி போனவாரம் இறந்து போயாச்சு..எல்லாரும் உங்களைத்தான் நினைச்சோம்.. நீங்க வெளியூர் போயிருந்ததாக சொன்னாங்க.. அதான் விட்டுட்டோம்..”
சரோஜா மேடம் என்னைப் பார்த்து சொன்னதும் அதிர்ச்சியில் நின்று விட்டேன்.
“காப்பித்தண்ணி யாராச்சும் வாங்கிக் கொடுத்தாங்களா.. என்று கேட்க நினைத்து கேட்காமலே திரும்பி விட்டேன்.
ஆச்சியின் தம்பி மகன் வாங்கிக் கொடுத்திருப்பான் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
(9629487873-narumpu@gmail.com)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.