பள்ளிகளில் பேசக் கிடைக்கும் வாய்ப்புகளில் இப்படிச்
சொல்வதுண்டு.
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா / சின்னக் குழந்தையும் சொல்லும் / ஆனா, சுப்பிரமணிய சிவா யாருன்னு கேட்டா / பெரியவங்களுக்குக்கூட
தெரியாது...
எந்தக் கூட்டத்திலாவது ஒரு குழந்தை எழுந்து, சுப்பிரமணிய சிவா யாருன்னு எங்களுக்குச் சொல்லிக்
கொடுக்காதது யாரோட தப்பு என்று கேட்டிருந்தால்,
என்னவாயிருக்கும் என் நிலை என்று
பலமுறை நினைத்திருக்கிறேன்.
நாட்டின் முன்னேற்றத்திற்கும் உழைக்கும் மக்களின்
உரிமைக்கும் வறுமையின்
பிடியிலிருந்து மக்கள் மீண்டெழவும் தன்னையே எண்ணையாய் வார்த்து ஒளி கொடுத்த எண்ணற்ற தலைவர்களை இன்றைக்கு நாம் மறந்துவிட்டோம்; இல்லையில்லை.. நாம் மறந்துபோகும்படி அவர்கள்
இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறுவயதில் என் அப்பா எனக்குக் கொடுத்த “நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்” எனும் சிறு நூலை என்னால் மறக்கவே
முடியாது. அந்த
நூலின் வழியாகத்தான் பல தலைவர்களைப் பற்றி நான் அறிந்துகொண்டேன்.
இன்றைய தலைமுறை இளைஞர்களும் பள்ளிக் குழந்தைகளும் பாடப் புத்தகங்களைத் தாண்டிய பிற
நூல்களைப் படிப்பதில்லை என்கிற பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது. அப்படியே அவர்கள்
படித்தாலும் பொது
அறிவு, தன்னம்பிக்கை
தொடர்பான நூல்களைத்தான் மிகுதியாக படிக்கிறார்களே யொழிய,
உலகத் தொழிலாளர்களின்
ஒற்றுமைக்கும் மக்கள்
புரட்சிக்கும் வித்திட்ட தலைவர்களைப் பற்றி இளைஞர்களைப் படிக்கத் தூண்டும் வகையிலான நூல்கள் ரொம்பவே குறைவு.
இக்குறையைப் போக்கும் வண்ணமாக,
நவம்பர் புரட்சியின் சிறப்பு
சிறார் நூல் வரிசையில் வெளிவந்திருக்கிறது `லெனின் கதை எனும் குறுநூல். ஆதிவள்ளியப்பனின் அழகான மொழிபெயர்ப்பில்,
இதுவொரு மொழிபெயர்ப்பு நூல் என்கிற உறுத்தல் சிறிதுமின்றி, கையெலெடுத்தால் சரசரவென வாசித்து முடிக்க வைக்கும் சுவாரசியத்தோடு
வெளிவந்துள்ளது. நூலில்
ரசனைமிக்க ஓவியங்களைத் தீட்டியமைக்காக ஓவியர் விக்டர் கிரிலோவைப் பாராட்டத்தான் வேண்டும்.
சிறுவயதில் சேட்டை செய்ததால்,
`குட்டிச் சாத்தான் என்றழைக்கப்பட்ட சிறுவன்,
தனது எட்டு வயதில் தெரியாமல் உடைத்துவிட்ட கண்ணாடி கூஜாவை, நான் உடைக்கவில்லை... என்று சொல்லிய பொய்க்காக,
இரண்டு மாதங்கள் மன உளைச்சலில் இருந்ததோடு, நான்தான் உடைத்தேனென்று அத்தைக்கு கடிதம் எழுதுமாறு அம்மாவிடம் சொன்ன அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி இருந்திருக்கும்..?
புரட்சிக்கு ஆதரவு தெரிவித்தான் என்பதற்காகவே பல்கலைக்கழக மேற்படிப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை, தன் மன பலத்தாலும் தீவிர வாசிப்பாலும் கடந்துவந்த ஒரு கல்லூரி மாணவனின் மன உறுதியை எதனால் அளவிடுவது..?
தடை செய்யப்பட்ட புத்தகங்கள் இருக்கும் தனது நூலகத்தை சோதனையிட வந்த போலீஸ்காரரிமிருந்து வெகு இயல்பாகத் தப்பிய அந்த சாமர்த்தியத்தை எவ்விதம்
ரசிப்பது..?
கடும் பஞ்சம் நிலவிய காலத்திலும் ரஷ்ய அதிபருக்குக் கிடைத்த பதப்படுத்தப்பட்ட மீனை உண்ணாமல், இதை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்புங்கள் என்று சொன்ன ஒரு மக்கள் தலைவனின் பண்பை என்னெவென்று சொல்ல..?
இத்தனை உயரிய பண்பிற்கும்\
உரியவராய் திகழ்ந்தவர் தோழர் லெனின். அவரது இயற்பெயர் விளாதிமீர் இலியீர் உல்யானவ். அவரது புனைப்பெயரான லெனின் எனும் பெயரால்தான் உலகம் அவரை அறிந்துகொண்டது.
நான் சொல்லோவியம் தீட்டுவதில் வல்லவன் என்றாலும், லெனினுடைய உருவத்தை உங்கள் முன்
சித்தரிக்கச் சரியான சொற்கள் கிடைக்காமல் தவிக்கிறேன்... என்று உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மக்ஸிம் கார்க்கியால்
பாராட்டப்பெற்ற உலக
புரட்சியின் நாயகன் லெனின்
பற்றிய சில வாழ்க்கை நிகழ்வுகளையும், எட்டு பக்க அவரது வாழ்க்கைக் குறிப்போடும் வெளியாகியுள்ள இந்த நூல்,
லெனின் எனும் மாமேதையைப் பற்றி குழந்தைகள் மட்டுமல்ல; அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
நூலை அழகுற பதிப்பித்திருக்கும் புக்ஸ் ஃபார் சில்ரன்,
மொழிபெயர்த்த ஆதிவள்ளியப்பன் இருவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
-
மு.முருகேஷ் ( 94443 60421)
குழந்தைகளுக்கு லெனின் கதை -மிக்கெயில் ஜாஷ்சென்கோ
புக்ஸ் ஃபார் சில்ரன், 7, இளங்கோ வீதி,
தேனாம்பேட்டை, சென்னை - 600
018.
விலை : ரூ. 50/-
செல்: 044 – 24332424
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.