Friday, August 4, 2017

ஒரு ஊர்வலத்திற்கு 17 நிபந்தனைகள் - மதுரை சொக்கன்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தின் மீது சமூகவிரோதிகள் மண்ணெண்ணெய் குண்டு வீசி தாக்குதலை நடத்தியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் காவல்நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. அனுமதி கோரப்பட்ட இடம் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள அய்யர் பங்களா கடைவீதி. ஆனால் அனுமதி தரப்பட்டதோ மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத உச்சபரம்பு மேடு சந்திப்பு எனும் இடம்.

இதுதவிர, ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை தரப்பில் 17 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. முதலாவது நிபந்தனையே விசித்திரமானதாகவும், படித்தவுடன் சிரிக்கக்கூடியதாகவும் இருந்தது. ஆர்ப்பாட்டத்தை முழுமையான அமைதியுடன் நடத்த வேண்டும் என்பதுதான் அது. ஆர்ப்பாட்டம் என்றாலே முழக்கம் எழுப்புவதுதான். ஆர்ப்பாட்டத்தை மவுனமாக நடத்த முடியுமா? அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்துவது எப்படி என்று காவல்துறை கற்றுத்தருமா?

அந்த நிபந்தனையிலேயே ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் சாமியானா மற்றும் சேர்கள் போட அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மதுரை மாநகரைப் பொறுத்தவரை மாலையில் மட்டுமல்ல, காலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் கூட நாற்காலி மற்றும் பந்தலுக்கு அனுமதி இல்லை என்று மறுக்கப்படுகிறது. நிழலில் நாற்காலியை போட்டு அமர்ந்தால் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிடுமா? அந்தளவுக்கு சட்டத்தை நிலை நிறுத்துகிறார்களாம்!

அடுத்த நிபந்தனை என்னவென்றால், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு இரு சக்கர வாகனங்களிலோ அல்லது வேறு எவ்வித வாகனங்களிலோ வரக்கூடாது என்பது. எந்த வாகனத்திலும் வரக்கூடாது என்றால் பிறகு எப்படித்தான் அந்த இடத்திற்கு வந்து சேருவது? வீட்டிலிருந்து கால்நடையாக நடந்தே வர வேண்டுமா? அப்படி நடைப்பயணமாக வந்தால் கூட தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடைப்பயணத்தை தடுத்து கைது செய்கிறார்களே... பிறகு எப்படித்தான் வருவது? வானத்தின் வழியாக ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் குதிக்க முடியுமா? அப்படி குதிக்கும்போது  சத்தம் ஏற்பட்டு அமைதி குலைந்து விட்டால் அதற்கும் நடவடிக்கை எடுப்பார்களோ? தனிப்பட்ட நபர்களையோ தலைவர்களையோ இழிவுபடுத்தும் வகையில் விமர்சிக்கவோ கருத்துக்களை தெரிவிக்கவோ கூடாது என்பது ஒரு நிபந்தனை.

கோவை சிபிஎம் அலுவலகத்தில் குண்டுவீசியவர்களைக் கூட விமர்சிக்கக் கூடாதா?
கண்டிக்கக்கூடாதா? பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு நிபந்தனை கூறுகிறது. பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தும் யாரும் காவல்துறையின் அனுமதியைப் பெற்று அதைச் செய்வதில்லை. அப்படி செய்கிறபோது இவர்கள் கண்டு கொள்வதும் இல்லை.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திலிருந்து வெகுதூரத்திற்கு ஒலிபெருக்கி அமைக்கக்கூடாது என்று ஒரு நிபந்தனை. வெகுதூரம் என்பது எந்த அளவு என்று தெரியவில்லை. பொதுமக்கள் காதில் விழக்கூடிய வகையில் ஒலிபெருக்கி அமைக்கக்கூடாது என்றுகூட கூறுவார்கள். அடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த ஒலிபெருக்கி அமைக்காமல் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு அவர்களாகவே
வெளியில் தெரியாமல் கத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினாலும் ஆச்சரியப்பட
ஒன்றுமில்லை.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு மாடுகளையோ, மாட்டிறைச்சியையோ கொண்டுவரக் கூடாது என்று கடைசியில் நிபந்தனை ஒன்று போடப்பட்டது. என்னவோ இந்தியக் குடிமக்கள் அனைவரும் எந்த நேரமும் மாட்டிறைச்சியோடு அலைந்துகொண்டிருப்பது போல சமீபகாலமாக இந்த நிபந்தனை புகுத்தப்படுகிறது. இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.

உண்மையில், ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் மாடுகள் தன்னிச்சையாக பெருமளவில் திரிந்துகொண்டிருந்தன. இந்த மாடுகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டுமானால் அந்த மாடுகளையே விசாரித்துக் கொள்ளுங்கள் என்று கூறவேண்டியதாயிற்று. அதில்சில மாடுகள் எப்படியாவது சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வந்தன.

17வது நிபந்தனையாக பாதுகாப்பு அலுவலில் இருக்கும் அதிகாரிகள் ஏதேனும் அறிவுரை கூறினால் அதையும் கடைப்பிடித்தல் வேண்டும் என்று முடிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு அலுவலில் இருக்கும் அதிகாரி அந்த நேரத்திற்கு என்ன அறிவுரை கூறுவார் என்று யாருக்குத் தெரியும்? போராட்டம் நடத்துவதா அல்லது காவல்துறையினர் கூறும் அறிவுரையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்பதா என்று தெரியவில்லை. மதுரையில் ஆளுங்கட்சியினருக்கு நினைத்த இடத்தில் சாலையை மறித்து கூட்டம் போடுகிறார்கள். பால்குடம் எடுப்பதாகக் கூறி சாலையை மறைத்துச் செல்கிறார்கள். பிரியாணி பொட்டலம் மற்றும் குவாட்டர் சப்ளை செய்து அந்தப் பகுதியையே ரணகளமாக்குகிறார்கள். அமைச்சர் பெருமக்கள் நினைத்தால் வைகை அணைக்குச் சென்று தெர்மாகோல் படகு விட்டு விளையாடுகிறார்கள். அதற்கெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மறுபுறத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி, சங்கிலி பறிப்பு என அன்றாடம் காவல்துறையின் அனுமதியையோ, அறிவுரையையோ கேட்காமல் ஏதாவது நடந்துகொண்டே இருக்கிறது.

ஆனால் மக்கள் நலனையே உயிர்மூச்சாகக் கொண்ட ஒரு இயக்கம் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் அடுக்கடுக்காக 17 நிபந்தனைகள். நல்லவேளை இனிமேல் ஆர்ப்பாட்டத்தை சுடுகாட்டில்தான் நடத்த வேண்டும்\ என்று சொல்லாமல் விட்டார்களே...

(நன்றி : தீக்கதிர்)

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.