தீவிரவாதிகளில் பலரகம் உண்டு. சிலர் வெடிகுண்டு
வைப்பார்கள். சிலர் தாமே மனித வெடிகுண்டாக மாறுவார்கள். இன்னும் சிலர் கவிதை எழுதுவார்கள். சில தீவிரத்
தீவிரவாதிகள் அக்கவிதைகளைப் பிரசுரிப்பதும் உண்டு. என்போன்ற சில தீவிரவாதிகள்
இசைக்கருவிகள் கற்றுக்
கொள்ள முடிவெடுப்பார்கள்.
நான் புல்லாங்குழல் கற்றுக் கொண்டதற்கு முக்கியக் காரணம் எதிர்காலத்தில்
மனைவியாக வரப்போகிறவளைத் துன்புறுத்த வேண்டும்
என்பதற்காக அல்ல. அது பின்னாளில்
நடந்த ஒரு பின்விளைவு. அது போன்றே குழலினிது யாழினிது என்ற குறளால் குழலோசையின் இனிமையால்
கவரப்பட்டும் அல்ல. இசைக்கருவி ஏதாவது கற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
திரு.சுந்தரம் என்பவரிடம் அடிப்படைகளைக் கற்கச் சென்றபோது கீபோர்டு அல்லது வயலின் கற்க
வேண்டுமென்றால் அவற்றைக் கட்டாயம் வாங்க வேண்டும் என்று தெரிய வந்தது. அப்போது
கீபோர்டு ஐயாயிரம் ரூபாய், வயலின் ஆயிரம் ரூபாய். அன்று ஜி.எஸ்.டி. இல்லை.
இருந்திருந்தல் என் போன்றோர் வாங்கும் இசைக் கருவிகளுக்கு `இம்சை வரி எனப் புதிதாக ஒரு
வரியைச் சேர்த்திருப்பார்கள். எனக்குச் சைக்கிளில் காற்றடைப்பதே
அதிகபட்ச பட்ஜெட் செலவாக இருந்த சமயம்
அது. ஆகவே இருப்பதிலேயே சீப் எது எனக் கேட்டேன்.
புல்லாங்குழல் ஐம்பது ரூபாய்தான்
எனத் தெரிய வந்தது. அதைவிடக் குறைந்த விலையில் என்ன
இருக்கிறது என்று கேட்டேன். மௌத் ஆர்கன் உள்ளது அதில்
ஏழு ஸ்வரங்களெல்லாம் வராது.. ஓரிரண்டு
மனது வைத்தால் வரும்.
அதைவிட மலிவாக வேண்டுமென்றால் விசில்தான் உள்ளது.. அதில் ஒரே ஒரு ஸ்வரம்தான் வரும். கல்யாணி, காம்போதி என்றெல்லாம் வாசிக்க முடியாது. வேண்டுமானால் ரிவர்ஸில் வரும் வாகனங்கள் சுவரில் முட்டாமல் இருக்க ஒரு எச்சரிக்கைக்\ கருவியாகப் பயன்படுத்தலாம் எனப் பதில்
வந்தது. ஆகவே ஒரு சுபயோக சுபதினத்தில் புல்லாங்குழல் கற்பது என முடிவு செய்தேன்.
பிறகுதான் பெரும் பிரச்சினைகள்.
மற்ற இசைக்கருவிகளில் எளிதில் இசை ஸ்வரங்கள் வரும். கீ போர்டு மேல்
ஒரு பெருச்சாளி குதித்தாலும் ஸா பா ஸா எனச் சத்தம் வரும். ஆனால் புல்லாங்குழலில் பிரம்மப் பிரயத்தனம் செய்தாலும் தேவர்மகனில் ரேவதி சொல்வதுபோல் வெறும் காற்றுதான் வரும். கூடவே நமது எச்சிலும் கலந்து வரும். அதிலும் சிலர் வந்து வீட்டில் எல்லாம் புல்லாங்குழல் ஊதக்கூடாது. வீட்டுக்கு ஆகாது என்றார்கள், இதற்காகச்
சுடுகாட்டுக்குப் போய் வாசிக்கும் தைரியம்
எனக்கு இல்லாததால் வீட்டிலேயே
தொடர்ந்தேன். சதிலீலாவதி
திரைப்படத்தில் சொக்கலிங்க
பாகவதரிடம் `பொடி போடாதீங்க கான்ஸர் வரும் என்று சொல்வார்கள்.
அதற்கு அவர் `இப்ப வர பொடியைப் போட்டா தும்மலே வரமாட்டேங்குது.
கான்சராம் என்று காசுவலாகச்
சொல்வார். அதுபோல் என்னிடமும்
புல்லாங்குழல் ஊதினால்
ஆஸ்துமா வரும் என அச்சுறுத்தினார்கள்.
அவர்களிடம் `யோவ்!
நான் ஊதினா ஸரிகமாவே சரியா வரமாட்டேங்குது. இதுல ஆஸ்துமா எப்படி வரும்?
எனக்
கேட்கத் தோன்றும்.
இன்னும் சிலர் பாம்பு வரும்
என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். அதெல்லாம்
கிருஷ்ண பரமாத்மா ஊதினால்தான் வரும் எனப் பின்னாளில் தெரிந்து கொண்டேன் . நான் ஊதுவதைக் கேட்டு பயந்து வீட்டில் சாதுவாகச்
சுற்றிக்\ கொண்டிருந்த
ரெண்டு ஜோடிப் பல்லிகளும்
தலைதெறிக்க ஓடி தனிக்குடித்தனம்
போய்விட்டன.
புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகள் கற்றுக்கொள்வது
மிகக் கஷ்டமான செயல் – அண்டை அயலாருக்கும், வீட்டு மனிதருக்கும். ஒருமுறை நான் கஷ்டப்பட்டு சாதகம் பண்ணிக்
கொண்டிருந்தபோது என் அப்பா `ரொம்ப நேரமாக் குக்கர் விசிலடிக்கிறது. வெயிட் போட்டியா? என அம்மாவைக் கடிந்து கொண்டார். சாதகம் பண்ணுவது சாதம் பண்ணுவதாக
மற்றவர்களுக்குத் தோன்றுகிறது.
அதிலும் அனைவரும் தூங்கப் போன பின்பே நமக்கு இசையார்வம் பொங்கி வழியும். கேட்பவர்கள் நீலாம்பரி
ராகம் வாசித்தாலும் அது ஒப்பாரி போல் காதில் விழுந்து
நித்திரையிலிருந்து திகைத்து எழுந்து
கொள்வார்கள். ஒரு முறை
`ஏன்
கூர்க்கா ரொம்ப நேரமாக அதிகாலையில் விசிலடித்துக் கொண்டே இருக்கிறார்
என அக்கம்பக்கத்தில் ஒரே பரபரப்பு.
பூபாள ராகத்தை நான் வாசித்தது நேபாள கூர்க்காவின் விசிலோசைபோல் கேட்டிருக்கிறது\ அவர்களுக்கு.
இதனால் சில நன்மைகளும்
விளைவதுண்டு. ஒழுங்காத் தூங்கறயா.. இல்லே, அப்பாவைப் புல்லாங்குழல் வாசிக்கச் சொல்லவா?
எனக் குழந்தையைத் தூங்க வைக்க உதவியது இப்பயிற்சிதான்.
ஒருநாள் பக்கத்து வீட்டுக்காரர் வந்து
`நீங்க
புல்லாங்குழல் கத்துக்கறது ரொம்ப சந்தோஷம் என்றார். ஆமாம்
எப்பேர்ப்பட்ட இசை என நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே `நீங்க
நாதஸ்வரம் கற்றுக் கொள்ள நினைத்திருந்தால் எங்கள் கதி
என்னாவது?
எனச் சொல்லிவிட்டுக் காதைக்
குடைந்து கொண்டு சென்றார்.
ஒருவழியாகத் தட்டுத் தடுமாறி
இசை போன்ற ஒன்று வெளிவரத் தொடங்கினாலும் அகால வேளைகளிலும்
அதிமுக்கியமான நேரங்களிலும்
நீரோ மன்னன் போல்
புல்லாங்குழல் வாசித்தால் யாருக்குத்தான் டென்ஷன் வராது?
ஒரு முறை நண்பர் ஒருவர் சொன்னார் உங்க மனைவி டென்ஷனானா நீங்க புல்லாங்குழல் வாசித்தே ரிலாக்ஸ் பண்ணிடுவீங்க! என. பாவம் அவருக்குத் தெரியாது அவள் டென்ஷன் ஆவதே நான் புல்லாங்குழல்
வாசிப்பதைக் கேட்டுத்தான்
என.
எல்லோருக்கும் இம்சை கொடுத்தாலும் அமைதியாக
இருக்கும் இரவில் இளையராஜாவின் பாடல் ஒன்றை வாசிக்கும் இன்பம் இருக்கிறதே ..அதற்காக நாலு பேருக்குக் கெடுதல் செஞ்சா தப்பே இல்லை.
9443321004 – ramsych2@gmail.com
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.