என் மகன் ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு செல்கிறார் . கோடை விடுமுறைக்காக அவர் புனே சென்று ஒன்றரை மாதம் தங்கியிருந்தார். தினமும் காலையிலும் இரவிலும் ஃபோனிலும், வீடியோ காலிலும் குறைந்தது இருபது நிமிடமாவது என்னிடம் பேசிவிடுவார். அன்றைய தினம் என்ன சாப்பிட்டார்,
என்ன விளையாடினார், புது நண்பர்கள் யார் யாரைச் சந்தித்தார், அச்சரப்பாக்கத்தில் வெயில் அதிகமாப்பா.. புனே கிளைமேட் சூப்பர், ஐபிஎல் கிரிக்கெட் ரிசல்ட்,
ஷாப்பிங்,
அவர் விரும்பி தானாகவே செய்யும் கிராஃப்ட் ஒர்க் நிலவரம் இவையெல்லாம் அந்த இருபது நிமிட பேச்சின் அடக்கமாக
இருக்கும்.
எல்லாவற்றையும் பேசும் என் மகன் அவரது படிப்பைப் பற்றியும்,\ பள்ளியைப் பற்றியும், ஆசிரியர்களைப் பற்றியும் இந்த
ஒன்றரை மாதமாக சாங்கியத்துக்காககூட ஒரு வார்த்தை பேசவே இல்லை. நானும் அவரிடம் படிப்பைப் பற்றியும், பள்ளியைப் பற்றியும், ஆசிரியர்களைப் பற்றியும் பேசவில்லை. வெறுமனே
கவனித்துக் கொண்டே வந்தேன்.
கல்வி அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் மகனுக்கு விடுதலை
தரும் என்று மற்றவர்களைப் போல நம்பித்தான் நானும் படிக்க வைக்கிறேன். கல்வியே
அவருக்கு பிரச்சினையாக இருக்கிறது. கல்வி அனுபவங்கள் அவற்றைப் பற்றி விரும்பிப் பேச முடியாத அளவிற்கு என்
மகனிடம் அந்நியப்பட்டுக்
கிடக்கின்றன. குழந்தைகளுக்கான கல்வி அனுபவங்கள் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்பது நம் மகத்தான
கனவு அல்லவா?
குழந்தைகளுக்கு கல்வி அனுபவங்கள் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்கிற ஏக்கத்தை முன்னிறுத்தி முனைவர். என். மாதவன் எழுதியிருக்கும் அவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்புதான் ஆயுதம் செய்வோம். அவரது இருபதாண்டு கல்வி அனுபவங்களின் வழி எழுந்திருக்கும் மிகச்சிறந்த அனுபவ நூல். தேர்வு என்றாலே மாணவர்கள் மனதுக்குள் இறுக்கம் ஊற்றெடுப்பது வழக்கம். அப்படிபட்ட தேர்வை ஆசிரியர் மனது வைத்தால் எவ்வாறு ஓர் ஆனந்த அனுபவமாக மாற்றி மாணவர்களின் கற்றலுக்கு எவ்வாறு வழி செய்ய முடியும் என்பதை மிக எதார்த்தமாக விவரிக்கும் திருப்தியான தேர்வு என்ற கதையுடன் ஆரம்பிக்கிறது இப்புத்தகம்.
மாணவர்களை சாதாரண நிலையில் ஆசிரியர் பார்க்கும்போது அவரது மனதில் மாணவர்களின் தவறுகள் குவியலாய்க் காட்சி அளிக்கும். மாறாக மாணவர்களின் நிலையில் தன்னை வைத்து யோசிக்கும் ஆசிரியர்கள் மனதில் அன்பு மட்டுமே குவியலாகும் என்கிறார்
நூலாசிரியர்.
காலம் காலமாய் மாணவர்களின் தவறுகளுக்கு அடியை மட்டுமே மருந்தாகக் கொடுத்து வந்த குருட்டு சமுதாயத்தின்
கண்களுக்கு மாற்று
மருந்தை ஒரு கதையில் அறிமுகப்படுத்துகிறார். காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பள்ளியில் கல்வி அனுபவங்களை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்ற ஆயுதங்கள் புதிது புதிதாய்க் கண்டுபிடிக்கவும் கைவசம் இருக்கும்
ஆயுதங்களை ஒவ்வொரு நாளும் கூர்தீட்டவும் ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என ஒரு கதையில் அழைப்பு விடுக்கிறார்.
பழைய கட்டமைப்புகளை உடைக்கும் ஆசிரியர்களுக்கு எவ்விதமான எதிர்ப்புகள் எழும் என்பதைத் தாண்டி புதிய மாற்றங்களை
நிகழ்த்த விரும்பி
துணிவோடு களம் இறங்கும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு பற்றியும் எழுதியிருக்கும் பகுதி என்னுடைய ஃபேவரைட். முக்கியமான
கதையும் கூட.
இந்நூலைப் படிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் நாமும் நம் பங்கிற்கு நம் வகுப்பறையில் மகிழ்ச்சியான கல்வி அனுபவங்களை உருவாக்க வேண்டும் என்ற வேட்கையை இந்த புத்தகம் நிச்சயம் உருவாக்கும். அதன் மூலம் நம் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய குழந்தைகளின்
பேச்சில் என் பள்ளி, என் பாடம், என் ஆசிரியர்கள் என்ற பேச்சு மிகும். கல்வி அனுபவங்கள் குழந்தைகளின் நெஞ்சுக்கு நெருக்கமாகும்.
கல்வித் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் எவரொருவரும் ஒரு மேன்மையான பணி அனுபவம் பெற துணைபுரியும் மகத்தான ஆயுதம் இந்த நூல் என்பது எனது ஆழமான கருத்து.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.35
அ.ஜெயராஜ், லைஃப் ஷைன்
லீடர்ஷிப் பவுண்டேஷன்
(97881
35011)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.